இன்றைய முதற்பெருங்கலை

பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க

பொன்னியின் செல்வன் விவாதங்கள் நூலை நான் சிவா அனந்த் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தது பற்றி சில கடிதங்கள் வந்தன. அது ஒரு எளிமையான நிர்வாகவேலை தானே என்பதே கடிதங்களின் சாரம். அப்படத்தின் உருவாக்கத்தில் அவருக்கு அத்தனை முக்கியமான இடமுண்டா?

நீங்கள் வெட்டி முகநூல் அரசியல் பேசிக்கொண்டிருப்பவரல்ல என்றால் இங்குள்ள நடைமுறை யதார்த்தம் உங்களுக்குத் தெரியும். இந்தியாவின் மிகப்பெரிய சிக்கலே இங்கே ஒருங்கிணைந்து வேலைசெய்யும் பயிற்சி நம் மக்களிடமில்லை என்பதுதான். நிர்வாகம் என்பது இந்தியாவில் ஒரு மிகமிகப்பெரிய சவால்.

பிரபல சிற்பி லாரி பேக்கர் இந்தியா வந்தபோது இரண்டுபேர் வேலைபார்க்க அதை மேஸ்திரி வேலைபார்க்க ஒருவர் இருப்பதைக் கண்டு திகைத்து எவ்வளவு மானுட நேரம் வீணடிக்கப்படுகிறது என எண்ணி அதை மாற்ற முயன்றார். வேறுவழியே இல்லை என கண்டுகொண்டார். அதை அவர் பதிவுசெய்துள்ளார்.

என்ன பிரச்சினை? இங்கே, வேலைகளுக்கு எவரும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. ஒரு வேலையை ஒப்படைத்தால் அதை சிறப்பாகச் செய்து முடிக்கவேண்டும், அதில் நிறைவடையவேண்டும் என்னும் எண்ணம் மிக அரிது. சமாளிக்கும் மனநிலைதான் பொதுவாக இருக்கும். ஏன் வேலை முடியவில்லை, ஏன் வேலை சரியாக இல்லை என கேட்டால் மிக எளிதாக வேறு சிலரைக் குற்றம் சாட்டுவார்கள். எந்த அலுவலகத்திலும் இரவுபகலாக நடைபெறுவது இந்த குற்றம்சாட்டும் அரசியல்தான். அதற்கு பஞ்சாயத்து செய்தே நிர்வாகிகள் ஓய்வார்கள்.

பொறுப்பேற்றுக் கொள்ளாமையின் முகங்கள் பல. முதன்மையாக நேரப்பொறுப்பு. சென்ற முப்பதாண்டுகளில் நான் பழகியறிந்த ஒன்றுண்டு. இங்கே ஒருவர் ஏழுமணிக்கு வருகிறேன் என்றால் அவர் வருவது பாதிப்பாதிதான் சாத்தியம். ஏதாவது சாக்கு சொல்வார். ‘வரமுடியலை சார்’ என்பதையே ஒரு காரணமாகச் சொல்வார். ஆச்சரியமென்னவென்றால் அது அவருடைய தேவையாகவேகூட இருக்கும். நாம்தான் காத்திருக்கவேண்டும்.

அத்துடன் ஒரு வேலையை மேலும் மேலும் கற்றுக்கொள்ளும் வழக்கம் மிகமிக அரிது. ‘அதெல்லாம் வேலைக்காவாது’ என எந்த வகையான புதிய விஷயத்தையும் எளிதாகத் தவிர்த்துவிடுவார்கள்

இந்தியாவில் அறவே இல்லாமலிருப்பது நிர்வாகவியல். நிர்வாகவியல் படிப்புகள் இந்தியா அளவுக்கு உலகளவில் எந்த நாட்டிலும் இருக்காது. ஆனால்  பெரும்பாலும் எவருக்கும் நிர்வாகத்தின் அடிப்படைகள் தெரிந்திருக்காது.

சில நாட்களுக்கு முன் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி அவருடைய தேவைக்காக என்னிடம் நேரம் கேட்டிருந்தார். காலையில் வருவதாக இருந்தது, அவர் வந்தது மாலையில். அவர் சொன்ன காரணம் ”இன்னொரு அவசர வேலையா போய்ட்டேன்.” அதற்கு அடுத்து சொன்னார் ”இப்ப நான் ஃபைல் எடுத்திட்டு வரலை… நாளைக்கு பாக்கலாமா?” நான் அவரிடம் “இனி எப்போதுமே நாம் சந்திக்கக்கூடாது” என்றேன்.

ஆகவே இங்கே பலரை ஒருங்கிணைத்து ஒரு காரியத்தைச் செய்வதென்பது எளிய விஷயமல்ல. மிகக்கறாரான நெறிகளுடன் மட்டுமே எதையாவது ஒருங்கிணைத்து நிகழ்த்தமுடியும். நீங்கள் ஒரு கட்டிடம் கட்டிப் பார்த்திருந்தால் தெரியும். கண்ணில் ரத்தம் வந்துவிடும். இங்கே வட இந்தியத் தொழிலாளர் இல்லையேல் கட்டுமானமே நிகழாது என்பதே நடைமுறை உண்மை.

நிர்வாகவியல் என்பது ஒரு திறமை அல்ல. ஒரு தொழில் அல்ல. அது ஒரு கலை. இந்தியா அடுத்த இருபதாண்டுகளில் கற்றுக்கொண்டே ஆகவேண்டிய கலைகளில் அதுவே முதன்மையானது என்பதே என் எண்ணம்.

சினிமா மற்ற வேலைகளைப் போல அல்ல. அதில் குறைந்தது பத்து தொடர்பற்ற துறைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவை இணைந்து பணியாற்றவேண்டும். ஒரு நாள் வேலை கூடினால்கூட லட்சக்கணக்கில் இழப்பு உருவாகிவிடும். ஆகவே அது தன் நிர்வாகவியலை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது.

நான் கஸ்தூரிமான் படப்பிடிப்புக்குச் சென்றபோது எண்ணிக்கொண்டேன். அங்கே வேலைநடக்கும் ஒத்திசைவுடன் தொலைபேசித்துறையில் நடந்திருந்தால் ஐந்திலொரு பங்கு ஊழியர்களே போதும் என்று. அன்று அதை எழுதியிருந்தேன். லோகி வெடித்துச் சிரித்தார்.

சினிமாவின் படப்பிடிப்பு நிர்வாகிகள் நீண்ட கள அனுபவம் கொண்டபின்னர்தான் அப்பொறுப்புக்கு வரமுடியும். ஒவ்வொரு நாளும் அதற்கு முன்னர் எப்போதும் எங்கும் எழாத சிக்கல்கள் எழும். எழுந்தபடியே இருக்கும். எந்த சாக்கும் சொல்லமுடியாது, தீர்த்தே ஆகவேண்டும்.

பொன்னியின் செல்வன் மிகப்பிரம்மாண்டமான படம். வெறும் வரைகலைப்படம் அல்ல. எல்லாமே அசல். பல நூறுபேர், விலங்குகள் பங்கெடுத்த படப்பிடிப்பு நாட்கள். வெளிநாட்டில், இந்தியாவில் பல ஊர்களில் படப்பிடிப்பு. கூடவே கோவிட். தொடர்ந்து படப்பிடிப்பின் இடங்கள் மாறின.

கோவிட் கால படப்பிடிப்புக்காக ஒரு செயல்முறையையே பொன்னியின் செல்வன் உருவாக்கியது. இந்தியாவில் எந்த தொழிற்சாலையும் அப்படியொன்றை உருவாக்கியதாக நானறியவில்லை. ஒவ்வொரு துறையும் தன் பங்களிப்பைச் செய்தபின் இடம்  தூய்மையாக்கப்பட்டது. அடுத்த துறை அவ்விடத்தை கையகப்படுத்திக்கொண்டது.  ஒரு துறை இன்னொரு துறையை சந்திக்காமலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு மாபெரும் இயந்திரம் அதன் ஒரு பகுதி இன்னொன்றை தொடாமலேயே இயங்கியது. மூன்றுமுறை இதயச்சிக்கல் வந்த மணி ரத்னம் படப்பிடிப்பை நடத்தினார். பெரும்பாலும் எவருக்கும் கோவிட் வரவில்லை.

அந்த சாதனை என்னை பிரமிக்கச் செய்கிறது. நான் காட்ட விரும்பும் முன்னுதாரணம் சிவா போன்றவர்கள்தான். நடிகர்கள், பாடகர்கள் எல்லாம் திறமையான கலைஞர்கள்தான். ஆனால் அவர்களுக்கு புகழும் உள்ளது. பலகோடிப்பேர் அவர்களை முன்னுதாரணமாகக் கொள்கிறார்கள். ஆனால் மாபெரும் நிர்வாகிகளை நாம் அப்படிக் கொண்டாட, முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டிய காலம் வந்துவிட்டது.

முந்தைய கட்டுரைஅந்தகக்கவி
அடுத்த கட்டுரைஒரு சொல்லுயிரி தந்த வாசிப்பு அனுபவம் – அமிர்தம் சூர்யா