அன்புள்ள ஜெ
மலர்த்துளி அழகிய தலைப்பு. ஆனால் அதன் பொருள் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. சின்னஞ்சிறிய மலரா? மலரின் ஒரு துளி என்றால் சிறிய இதழா? அல்லது மலரின் மகரந்தமா?
ஆர்.கருணாகரன்
மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க
அன்புள்ள கருணாகரன்,
போகிறபோக்கில் வைத்த பெயர். பெரிதாக யோசிக்கவில்லை. அதற்குள் உள்ள ஒரு கதை மலர்த்துளி. அதில் மலர்த்துளியாக ஆவதுதான் அட்டையிலும் உள்ளது. மலரின் ஒரு துளி அவ்வளவுதான். மலர் ஒரு மதுக்கிண்ணம் என்றால் அதில் இருந்து சொட்டுவது.
மலர்த்துளி என்றால் தேன் என்றும் பொருள் உண்டு. அருணகிரிநாதரின் திருப்புகழ் வரி இது
ஓடி யோடி அழைத்துவர சில
சேடிமார்கள் பசப்ப, அதற்குமுன்
ஓதி கோதி முடித்து, இலைச்சுருள் அது கோதி
நீடு வாசம் நிறைத்த அகிற்புழுகு
ஓட மீது திமிர்த்த தனத்தினில்
நேசமாகி அணைத்த சிறுக்கிகள் உறவாமோ?
நாடி வாயும் வயல் தலையில் புனல்
ஓடை மீதில் நிலத்ததில் வேட்கையின்
நாத கீத மலர்த்துளி பெற்று அளியிசை பாடும்
கோடுலாவிய முத்துநிரைத்த வைகாவூர்
நாடதனில் பழநிப்பதி கோதிலாத
குறத்தியணைத்த அருள் பெருமாளே.
ஓடி ஓடி அழைத்துவந்து சில சேடிமார்கள் பசப்ப
அதற்கு முன் கூந்தல்சுருளை கோதி
வெற்றிலைச் சுருளை நீவி எழுந்து வந்து
நீடிக்கும் வாசனை கொண்ட அகில்புகை பெற்று
திமிர்த்து எழுந்த முலைகளின்மேல்
அணைத்துக் கொள்ளும் சிறுக்கிகளின்
உறவு ஒர் உறவாகுமோ?
நாடி வளம் வந்துசேரும் வயல்வெளியும்
நீர் பெருகும் ஓடையும்
கொண்ட அழகிய நிலத்தில்
நாதம் நிறைந்த பாடலின்
மலர்த்துளியைப் பெற்று
வண்டுகள் இனிய இசைபாடும்
மலைத்தொடர்கள் அணிந்த
முத்தாரம் என திகழும் வைகாவூர் நாட்டில்
பழனி என்னும் ஊரில்
குறையற்ற குறத்தியை மணந்த
அருள்புரியும் பெருமாளே?
*
எளிமையாக இதை காமத்திற்கு எதிராக பக்தியை நிறுத்தும் பாடல், காமத்தை விடுத்து இறைவனை நாடச்சொல்லும்பாடல் என கொள்ளலாம். ஆனால் இதை கவிதை என எடுத்துக்கொண்டால், காமத்தில் இருந்து நுண்மையான உணர்வுகளை நோக்கிச் செல்லும் பயணம் இதிலுள்ளது என்று படுகிறது. உலகியல் காமத்தில் இருந்து காதலின் sublime நோக்கிச் செல்லும் கவிதை.
காமத்தை அளிக்கும் பெண்களின் உறவு ஓர் உறவாகுமா? அடுத்த பகுதி வெறுமே பழனி வர்ணனை அல்ல. வயல்கள், ஓடைகள், நிலம், மலை ஆகியவற்றின் மிகநுண்மையான வெளிப்பாடு அவற்றில் மலரும் மலர்கள். அம்மலர்களின் தேன். அத்தேனை நாதமும் கீதம் ஆக்கும் வண்டுகள்.
இப்பாடலில் நாத கீத மலர்த்துளி என்ற சொல்லாட்சி ஓர் அழகிய அனுபவம். நாதமும் கீதமும் இனிமையும் அழகுமான ஒரு துளி. நான் எழுத முயன்றது அத்துளிகளையே.
ஜெ