கதாநாயகி வாங்க
ஜெயமோகனின் கதாநாயகி குறுநாவல் உளவியல் அம்சத்தையும் சமூக மாற்றத்தையும் ஒருங்கே சொல்கிறது. மிகத் தெளிவாக கதையிலேயே சொல்லப்படும் உருவெளிக் காட்சிகள் கதை நாயகனின் உளச்சிதைவு என்று கூறப்படுகிறது ஆனாலும் மிகப் பூடகமாக ஒரு வேளை அவற்றுக்கு (நாயகனின் உருவெளி காட்சி அனுபவங்களுக்கு) உண்மை இருப்பு இருக்கிறது என்பது போலும் சுட்டப் படுகிறது. அவன் மெக்கின்சியையும் காப்மேனையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காண்கிறான்.
மனநோய்கள் முற்றிலும் தீர்க்கப்பட முடியாதவை என்னும் குறிப்புடனே இதை இணைத்துப் பார்க்க வேண்டும். இதுவும் இந்த குறுநாவலில் சொல்லப்படுகிறது. இந்த குறிப்பிட்ட (இறந்துவிட்ட) மெக்கின்சி சாப்மேன் இருவரையும் கதையின் நாயகன் காணும் நிகழ்வை வாசித்துக் கொண்டு இருந்த போதே தியாசஃபிகல் சொசைட்டி வெளியீடான astral phenomena குறித்த புத்தகத்தின் after death life principles பகுதியை வாசிக்க நேர்ந்தது. இறப்புக்குப் பின் சூட்சும உடலில் மனிதன் வாழும் வாழ்க்கையை விரிவாகக் கூறும் நூல்.
இதன் ஒட்டுமொத்த சாராம்சம் நாம் பூமியில் வாழும் வாழ்க்கை தான் உடலற்ற நிலையில் உள்ள அனுபவங்களையும் தீர்மானிக்கிறது. சட்டென்று தோன்றியது இந்த கோணத்தில் இந்த குறுநாவலை வாசித்தால் முற்றிலும் வேறு பொருள் தரும். அது பல்கிப் பெருகி விட்ட உடலற்ற அனுபவக் குவியலின் எண்ணங்களின் உணர்வுகளின் உணர்ச்சிகளின் ஒரே ஒட்டுமொத்த த் தொகுப்பு உடலுடன் இருக்கும் ஒருவனை தொடர்பு கொண்டால் என்ன நேரும்? மெய்யன் பிள்ளைக்கு இறுதிக்கட்டத்தில் நேர்வது தான். கதையின் நாயகனுக்கு எவ்வளவு பொருத்தமான ஒரு பெயர்!
மறைந்த மெக்கின்ஸி சாப்மேன் இருவரையும் பார்க்கும் மெய்யன்பிள்ளை ஏன் ஹெலினாவை அதன் பிறகு பார்க்கவில்லை? அந்த சூட்சும உடல் நிறைவடைந்து மறைந்து விட்டதாலா! புறவயமாக அறிவியல் பூர்வமாக மெய்யனுக்கு ஏற்பட்டது மனச்சிதைவு தான் என்றும் ஆன்மிக ரீதியாக astral projection என்றும் எடுத்துக் கொள்வதற்கு அப்பால் இதில் ஏதேனும் உள்ளதா? நிச்சயம் இருக்கிறது.
- மெய்யனின் விட்டு விடும் தன்மை (let go)அது அவனை வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.
- மனச்சிதைவு தான் என்றால் மெய்யன் யாருடனோ பேசுவது கோரனுக்கு எப்படி அவ்வளவு தூலமாகத் தெரிகிறது? கதையை வாசிக்கும் அந்த மின்சார அலுவலருக்கு ஏற்படும் அனுபவங்கள்?
- இறுதியாக ஏனோ தெரியவில்லை ஸ்மார்ட் ஃபோன் வந்த பிறகு இந்த பேய் ஆவி சமாசாரங்கள் வேற்று கிரக வாசிகள் போன்றவை எல்லாம் மிகவும் தமாசாகப் போய்விட்டதோ எனத் தோன்றுகிறது. காரணம் மேற்படி கதைகள் எல்லாமே செல்ஃபோன் இல்லாத எண்டமூரி வீரேந்திரநாத் ராஜேஷ்குமார் காலத்திலேயே நடக்கிறது.
மின்சாரம் கண்டுபிடிக்கப் படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் இத்தகைய அச்சங்கள் மனித சமூகத்தை பெரிய அளவில் ஆட்டிப் படைத்து இருக்கிறது. தனிமையும் இருளுமே இவற்றை உண்டாக்குவதில்லை என்றாலும் அவைதான் இதற்கெல்லாம் கச்சா பொருள். இதன் வேர் நம் முன்னோரின் குகை வாழ்விலிருந்தே தொடங்குகிறது. நம் சமகாலம் நாம் வந்தடைந்து இருக்கும் இடம் அனைத்தும் அதன் அனைத்து குறைகளுடனும் மகத்தானது. நாவலின் இறுதிப் பகுதியில் சொல்லப்படுவது போல் இது மனித சமூகத்துக்கே கூட பொருத்தமானது தான்.
’எது முன்னேற்றம் எது சரிவு என்றெல்லாம் உங்களைப்போன்றவர்க்ள் பேசலாம். நான் சொல்வேன், பட்டினி இல்லாத வாழ்க்கை, நோய் இல்லாத வாழ்க்கையே முன்னேற்றம். எவராலும் சுரண்டப்படாமல் வாழ்வது முன்னேற்றம். அது நிகழ்ந்திருக்கிறது’
துப்பனின் வளர்ச்சியைப் போல….
சிவக்குமார் ஹரி
சென்னை