ஜெயகாந்தன் இசை வடிவில்…வெளியீட்டு நிகழ்வு

ஜெயகாந்தன் தமிழ் விக்கி 

கொண்டபின் கொடுப்பவர் ஆகுக!

ஆஸ்டின் சௌந்தர்

கடந்த இரு நாட்களாக ஏப்ரல் 22, ஜெயகாந்தனின் கவிதைகளை இசைவட்டு வடிவில் வெளியிட்ட நிகழ்வு, நிறைவாக இருந்தது என்று வரும் செய்திகளை குனிந்த தலை நிமிராமல் வாசித்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  எழுத்தாளர்களின் எழுத்தாளரைக் கொண்டாட ஆளுமைகளின் நிரை ஒன்று – பவா செல்லத்துரை, ஜெயமோகன், பாரதி பாஸ்கர் மற்றும் ரவிசுப்பிரமணியன். ஜெயமோகனின் பிறந்தநாளும் என்பதால் வாசகர்களுக்கு அவரைக் காண்பதில் கூடுதல் மகிழ்ச்சி. அது ஒவ்வொரு ஆளுமைகளின் உரையிலும் வெளிப்பட்டது.

இலங்கை, சிங்கப்பூர் என தொடர் பயணங்களை இரு நாட்களுக்கு முன்னரே முடித்து வந்திருந்த பவாவிடம், களைப்பு எதுவும் இல்லை. அதே உற்சாகம்.  தமிழ் எழுத்தாளர்களின் கதைகளையும், அவர்களது சொந்த வாழ்வையும் அணுக்கமாக அறிந்த பவா, தலைப்பைக் கொடுத்த நிமிடத்தில் பேசமுடியும் என்றாலும், அவர் எப்படி யோசிப்பார், அதிகாலையில் எழுந்து தயார் செய்வார் என ஒரு கதைசொல்லலின் முதல் நாள் அவர் வீட்டில் தங்கியிருந்தவனாக அறிந்திருக்கிறேன். இந்த நிகழ்வில் அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்களில் ஜெகே-வைப்பற்றி புதிதாக இவ்வளவு இருக்கா என்று, அவரைத் தொடர்ந்து கேட்கும் வாசகனுக்கும் புரிந்திருக்கும். ஜெகே-வின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ ஹென்றியாக இருக்கவேண்டும் என ஆசைப்படும் பவாவை தெரிந்த வாசகனுக்கு, அவர் இருக்கும் மேடையிலேயே ‘ஜெய ஜெய ஷங்கரா’ என்ற நாவல் தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார் என்பது அதிர்ச்சியாக இருந்திருக்கும். பவாவின் உரையில், சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் லச்சம் இறந்த துக்கம் தாங்காத, புத்தகம் வாசிப்பது சங்கீதம் கேட்டபதைப்போல என்று சொன்ன வாசகர் ஜெகே-வின் அறிமுகம் கிடைத்தது..  ஜெயகாந்தனுக்கு இசையின் மீது உள்ள ஆர்வத்தை, நேரடிப்பழக்கத்தில் அறிந்தவர் அவர் பாடிக் கேட்டவர், இந்த இசைவட்டை வெளியிட்டது, மிகவும் பொருத்தமாக இருந்தது.

பயணம் முடிந்து பவா இந்த நிகழ்வில் கலந்துகொண்டார் என்றால், பாரதி பாஸ்கர் அவர்கள் தனது பயணத்தின் இடையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். அமெரிக்கப் பயணம் வந்துள்ள பாரதி பாஸ்கர் அவர்கள், அட்லாண்டா செல்லும் விமானத்தை பிடிக்கும் முன்னர், ஹூஸ்டனில் காத்திருக்கும் இடைவெளியில் இணையத்தில் இணைந்து பேசினார். கவிதைகளுக்கு இசையா என்று கேள்விகேட்டுக்கொண்டு, அவரே வரலாற்றிலிருந்து ஒரு பதிலை சொன்னார். 70-களில் Beatles குழுவின் பிரபலமான ‘Lucy in the sky with diamonds’ பாடலைப் பற்றி ஒரு கட்டுரையாளர் இளைஞர்களிடம் கேட்டபொழுது, “பாட்டைக் கேட்கும்பொழுது இசையைக் காணமுடிகிறது என்றும் வைரங்கள் மின்னும் வானத்தை எங்கள் காதுகளால் கேட்கமுடிகிறது என்றும் “ பதில் சொன்னார்களாம்.  நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் காளி குறிப்பிட்டதுபோல, ஜெகே கதைகளை வாசித்த வளர்ந்த அக்காக்கள் ஒருவர் பேசியதுபோல இருந்தது அவரது பேச்சு. ஜெகே பேசியதை ஒரே ஒரு முறை நேரில் கேட்டதாக கூறிய அவர், பயணத்தை முடித்துக்கொள்ளாமல் மேலும் தொடர்ந்து புதிதாக யோசிக்கும் வழியைக் கற்றுக்கொடுத்துவர் ஜெகே என்று நினைவு கூர்ந்தார்.

கவிஞர் / ஆவணப்பட இயக்குனர், ரவிசுப்பிரமணியன் சங்கப்பாடல்களுக்கும், அபி, ஞானக்கூத்தன் கவிதைகளுக்கும் மெட்டுப்போட்டு இசையமைத்து பாடல்களை வெளியிட்டவர். அவரிடம் இந்த ஒலிவடிவத்தை நிகழ்விற்கு முன்னரே பகிர்ந்திருந்து அவரின் விமர்சனத்தைக் கேட்கும் ஆவலில் காத்திருந்தோம்..  மேண்டலின் இசையுடன் ஆரம்பித்து நாட்டுப்புறத்தன்மையை கொடுத்ததை குறிப்பிட்டு, சத்யப்ரகாஷ் உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளார் என்று பாராட்டினார். சத்யப்ரகாஷின் ஆலாபனை ஆரம்பித்திலேயே ஒரு தளத்தை உருவாக்குகிறது என்றும், பாடல் முழுவதும் அவரது டெம்போ மாறவில்லை.என்றும் குறிப்பிட்டார். ராஜன், சத்யப்ரகாஷ் இருவரின் கடுமையான உழைப்பில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது என்றார். பிருந்தாவன சாரங்கா-வில் இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது, இதுவரை வந்த எந்த எந்த சினிமாப் பாடல்கள் இந்த ராகத்தில் பாடப்பட்டுள்ளன என்று ஒப்பிட்டுப் பேசுவதுபோல ஆரம்பித்து எங்கனம் வேறுபடுகிறது என்று சொன்னார். இந்த ராகம் எடுத்துக்கொண்ட பாடலின் பொருளுக்குப் பொறுந்துமா என்று யோசிக்கத்தேவையில்லை, இசையமைப்பாளர்கள் ராகத்தை தேர்ந்தெடுக்க எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை மேலும் சில உதாரணங்களுடன் விளக்கினார். எழுதிய பாட்டுக்கு மெட்டுப் போடுவதில் உள்ள கடினத்தை சொல்லி ராஜனின் இந்த முயற்சியை பாராட்டினார்.

ஜெயமோகன் உரையில் இருக்கும்பொழுதே, அவர் போட்டிருக்க சட்டை நல்லா இருக்கே என்று Mute போடாமல் பேசிய ஒருவரின் கமெண்ட் என் காதில் விழுந்தது. அவர் போட்டிருப்பது பிறந்த நாள் புதுச்சட்டை என்று நான் சொல்வது அவருக்கு கேட்டிருக்காது. நான் Mute-ல் இருந்தேன். புதுக்கவிதைகளை புதுக்கழுதைகள் என்ற சொன்ன புதுமைப்பித்தனையும், புதுக்கவிதைகளை ரசிக்காத ஜெயகாந்தனையும் அறிமுகப்படுத்தி, ஜெயகாந்தனுக்கு சந்தத்தின் மேல் உள்ள ஆர்வத்தை தொடர்புபடுத்தி, அவரது நாவல்களின் தலைப்பே கவிதைபோல் இருப்பதை சொல்லி, இந்த இசைவட்டு வெளியிட்டதின் முக்கியவத்தை கூறி தனது உரையை சுருக்கமாக முடித்தார். ராஜன் சோமசுந்தரத்தின் இதுவரை வந்துள்ள இசை படைப்புகளை கோடிட்டுக் காட்டி அவரது முயற்சிகளைப் பாராட்டினார்.

ஏற்புரையிலும், அதற்குப்பிறகு கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாகவும் பேசிய ராஜன் சோமசுந்தரம் பாடலை அமைத்த விதம், இசைக்கருவிகள், அதை வாசிப்பவர்களை தேர்ந்தெடுத்த விதம் என்று விளக்கமாக பதில் சொன்னார். அது காணொளி வடிவில் கிடைக்குமென்பதால், இந்தப்பாடலை வெளியிடும் முன் , தேர்ந்த இசைரசிகர்களுக்கு பகிர்ந்துகொண்டபொழுது எங்களுக்கு வந்த ஒரு விமர்சனத்தையும், ராஜனின் பதிலையும் இங்கே பதிவு செய்கிறேன்.

ஜா. ராஜகோபலன் : “இப்போதுதான் கேட்டேன். ராஜன் , நீங்கள் வரம் பெற்றவர். சத்யப்ரகாஷ் குரலில் இளமையும் பாவமும் சமமாக, வந்துள்ளன. பாடுபவன் இளம் சன்னியாசி தான். அந்த டொய்ங் டொய்ங் லாம் கேட்டு எவ்ளோ ஆண்டுகள் ஆகின்றன. வரிகளுக்குப் பொருந்தவில்லை எனில் அந்த இசை வெறும் நையாண்டி இசையாக  நிற்கும். வரிகளுக்குப் பொருத்தமான இசை. இசைக்குப் பொருத்தமான கருவிகள். ஒன்றே ஒன்று… சுடர் ஒன்று ஏற்றுக எனும் உச்சஸ்தாயியில் கண்மூடி ஒரு கணம். அனுபவிப்பதற்குள் வேர் என சரணம் ஆரம்பித்து விடுவதாகப்பட்டது. இசைக் கோர்ப்பில் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். எனக்குப்பட்டதால் சொல்கிறேன். “

ராஜன்: “நன்றி! அபாரமான அவதானிப்பு !

முதலில் சுடர்தனை ஏற்றுக  என்று முடியும் இடத்தில் இன்னும் சில நொடிகள் செல்லும் ஒரு சிறிய சங்கதியை வைத்திருந்தேன். பின்னர் பின்வரும் காரணத்துக்காக அது நீக்கப்பட்டது.

சொல்லுவன சொல்லுக என்று தொடங்கும் சரணம், ஜெகே கொஞ்சம் உரத்து , ஆணித்தரமாக சொல்லும் கவிதை. அது இசையில் தெரியும்படி கொட்டும் பறையும் இருக்கும். கொஞ்சம் வேகம் எடுக்கும்படியான உணர்வும் இருக்கும். அந்த வேகத்தை இந்த சிறு ஆலாபனை குறைப்பதாக தோன்றியதால் அது நீக்கப்பட்டது. இதை எப்படி நீங்கள் உணர்ந்தீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது “

பவா தனது உரையில் அந்ததத் தலைமுறைகளில் வருபவர்கள், ஜெகே-வின் கதைகளை வாசித்துவிட்டு எந்தவிதமான விமர்சனம் வைத்தாலும் தான் ஏற்றுக்கொள்வேன் என்று அவர் சொன்னதாக தனது உரையில் சொன்னார். நிகழ்வின் முடிவில் உரையாற்றிய சஹா, ஜெயகாந்தனின் கதைகளை, ரங்கன் (Andy Sundaresan) அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தில் வாசித்த அனுபவத்தை, அவரது புரிதலை, 2023-லும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பேசினார். இன்று இருந்திருந்தால் 89-வயதடைந்திருக்கும் ஜெகே, சஹாவின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்திருப்பார் என்று பவா கூறியதையும், சஹா பேசியதையும் இணைத்துப் பார்க்கிறேன்.

ஜெயகாந்தன் கவிதையில், “கொள்ளுவன கொள்ளுக, கொண்டபின் கொடுப்பவர் ஆகுக” என்று சொன்னதுபோல, ராஜன் சோமசுந்தரம், தமிழ்க் கவிதைகளை வாசித்து தான் பெற்றுக்கொண்டதை இசையின் வழி ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டுள்ளார்.

–          ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைஅழகியல்வாதம்
அடுத்த கட்டுரை’பொன்னியின் செல்வன், விவாதங்கள்’- ஒரு நூல்