வெண்முரசின் மூன்றாம் பாகமான வண்ணக்கடல் ஒரு பயணப் புத்தகமாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஏழ்பனை நாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் மேற்கொள்ளும் பயணம் போல் வண்ணக்கடல் எழுதப்பட்டிருக்கிறது.
முன் காலங்களில் தகவல் பரிமாற்றங்கள், அரச நிகழ்வுகள் போன்றவை நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு பாணர்கள், சூதர்களின் வாய்மொழிப் பாடல்களாகவும், கவிதைகளாகவுமே அறிந்து கொள்ள முடியும் என்ற சூழலில் நாடோடிகளான அவர்கள் மூலம் தான் கதைகளை புனையவும், பரப்பவும் செய்திருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கைமுறைக்குள்ளும் அன்றாட வாழ்க்கைக்குள்ளும் சென்று பார்க்க முடிகிறது இந்த புத்தகத்தில்.
அஸ்தினாபுரியின் கதைகளைக் கேட்டு அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் அங்கு செல்லப் புறப்படுகிறான் இளநாகன். இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பகுதிகளும் ஒவ்வொரு ஊர்களின் பெயராக இருக்க அவன் அவ்வூர்களைக் கடந்து அஸ்தினாபுரி செல்ல விழைகிறான். அவனுடன் நாமும் பயணிக்கிறோம்.
வழிநெடுக அவன் கடந்து வரும் பாதைகள், ஊர்கள், அவன் சந்திக்கும் மனிதர்கள் என இதுவரை மாமதுரை, பெருந்துறைப்புகார், கலைதிகழ்காஞ்சி, வெற்றித்திருநகர், நெற்குவைநகர், அரசப்பெருநகர், கலிங்கபுரி என அவனுடன் கதையும் நாமும் பயணித்து கதிரெழுநகர் வரை பயணித்திருக்கிறேன். வழியில் அவன் சந்திக்கும் பாணர்கள், சூதர்கள் வாய்மொழிக்கதையாக மகாபாரதக் கதை தொடர்கிறது.
அரச வாழ்க்கையை பற்றி மட்டுமே இதுவரை வாசித்து வந்த நமக்கு இந்த புத்தகத்தில் எளிய, அன்றாட மனிதர்களின் வாழ்க்கையும் காண முடிகிறது.மகாபாரதம் என்ற நெடுங்காவியம் வாசிக்கும் எண்ணம் தோன்றாமல், ஒரு பாணனின் பயணக்குறிப்பு போல் வித்தியாசமான ஆசிரியர் எழுதி இருக்கும் விதம் வாசிப்பில் சலிப்பு தோன்றாமல் ஒரு மாறுபட்ட நடையாக உள்ளது. ஆசிரியரின் அதே கவிதையான கற்பனை எழுத்துநடையில் பண்டைய வாழ்க்கை முறையையும் இந்த புத்தகத்தில் காண முடிகிறது.
கௌரவர்கள் சிறு வயது முதல் பாண்டவர்களை வெறுத்தார்கள் என்று இதுவரை நாம் கேட்ட கதைகளுக்கு மாறாக அவர்கள் அனைவரும் மிகுந்த அன்புடன் இருந்தார்கள், துரியோதனனும், பீமனும் மிகுந்த இணைபிரியாத பாசத்துடன் இருந்தார்கள் என வாசித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களுக்குள் பகை மூண்டது என்பது போன்ற கதையோட்டம் எதார்த்தமாக தோன்றுகிறது.
இளவயது யாக்னசேனன் பின்நாளின் துருபத மகாராஜாவாக மாற, துரோணருக்கும் துருபதருக்கும் முதலில் இருந்த நல்லுறவு பின்னர் பகைமை உணர்வாக மாறியதன் காரணங்கள் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தூரோணரின் சிறுவயது முதல் உள்ள கதையை வாசித்த போது,அவரின் திறமைகளையும், மனவோட்டங்களையும், அவர் சந்தித்த பிரச்சனைகளையும் அறியும் போது, கதையின் பின் பகுதியில் அவர் நடந்து கொள்ளும் விதங்களுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்திரவிழாவும், பின் அர்ஜுனனின் வில்வித்தை திறன் வளர்ந்து வருவதும், அவன் தனக்கான ஆசிரியர் தேடிவருவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் வரை வாசித்திருக்கிறேன். அவன் விரைவில் துரோணரை தன் ஆசிரியராக கண்டடைவான் என்று தெரிந்தாலும், கதையில் ஆசிரியர் அதை எப்படி எழுதியுள்ளார் என்று வாசிக்க ஆவல் மேலோங்குகிறது.
மேலும் இளநாகன் எவ்விதம் அஸ்தினாபுரியை. வந்தடைகிறான், இன்னும் வழியில் என்னென்ன ஊர்களை கடக்கிறான் என்று வாசிக்கவும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
அனிதா பொன்ராஜ்
வண்ணக்கடல் மின்னூல் வாங்க
வண்ணக்கடல் செம்பதிப்பு வாங்க
வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
வண்ணக்கடல் அனைத்து கட்டுரைகளும்