பூக்கள் எப்போது எப்படி மலர்கின்றன என்று எண்ணி வியக்காத குழந்தைப்பருவம் ஒன்று உண்டா சுசி? இன்று என் மீது படர்கிறது நீ விடிகாலையில் என் பிம்பம் தெரிந்த கண்ணாடிக்கதவைத்திறந்து நீரிலிருந்து எழும் பொன்மீன் போல வெளிவந்து மெல்ல விழிவிரிந்து புன்னகை செய்து ”அருண்?” என்ற அந்தக் தருணம்.
”யா” என்றேன்.
”ஐ கெஸ்டு…” என்றாய்.
நான் உன் மீதிருந்து கண்களை எடுக்கமுடியாமல் ”வெல்கம் டு சென்னை…” என்றேன். என்குரலையே வேறாகக்கேட்டேன்.
”தேங்க் யூ” என்று என்னருகே வந்து ”லக்கேஜ்லாம் வர லேட்டாகுமா?” என்றாய். பட்டுப்போல பளபளத்த இறுக்கமான நீலநிறப் பாண்டும் மார்புகள் திமிறும் வெண்ணிற டி ஷர்ட்டும் அணிந்து குட்டிக்குதிரை போல என்முன் நின்றாய். கலைந்த குட்டைக் கூந்தல். சிறிய பற்கள் தெரியும் சிரிப்பு. சுசி, அக்கணம் உன்னை நான் ஆரத்தழுவ எண்ணினேன். கன்றுக்குட்டியை, அம்மணக்குழந்தையை மார்போடு அள்ள எண்ணும் விழைவு போல. துள்ளியோடும் நீரோடையில் இறங்கி நீரள்ளி முகம் கழுவும் துடிப்பு போல.
”இங்கே எல்லாம் கொஞ்சம் லேட்டாகும்” என்றேன். ”பாதிவிஷயம் இப்பவும் மேனுவலாத்தானே நடந்திட்டிருக்கு…”
”அருண் நான் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடணுமே”
நான் ஆச்சரியத்துடன் ”ஏன்?” என்றேன்.
”நான் ·ப்ளைட்ல ஐஸ்கிரீமே சாப்பிடல்லை தெரியுமா? ஐஸ்கிரீம் கேட்டா கேண்டிதான் கொண்டாந்து குடுத்தா அந்த வெள்ளைகாரி….அவளும் அவ உருளைக்கெழங்கு மூஞ்சியும்…. ஐ வாண்ட் ஐஸ்கிரீம் நவ்”
”சரி…வா” என்று அழைத்துச்சென்றேன்.
தலையை சிலுப்பி ஒரு ஸ்பிரிங்கை எடுத்து நெற்றிவழியாக போட்டு முடியை அடக்கியபின் ”யூ நோ, நான் மூணுநாள் ஐஸ்க்ரீம் சாப்பிடாம இருந்ததே கெடையாது” என்றாய்.
”ஏன்?”
”ஏன்–னா?” என்றாய் புரியாமல்.
”இல்ல, ஐஸ்கிரீம் சாப்பிடாட்டி உனக்கு ஒடம்புக்கு ஏதாவது ஆயிடுமா?”
”இல்லியே….” என்றாய், நான் கேட்டதொனியை சற்றும் புரிந்துகொள்ளாமல். பெரும்பாலான கிண்டல்களை நீ புரிந்துகொள்வதேயில்லை என்று பின்பு தெரிந்துகொண்டேன். சுசி, ஆணுக்கும் பெண்ணுக்குமான அந்த வேறுபாடு அப்போது எனக்குப்புரியவில்லை– அவர்கள் சிரிப்பது வெவ்வேறு விஷயங்களுக்காக என்று.
”ரெண்டு ஐஸ்கிரீமுக்கு மேலே போனாத்தான் சளிபுடிக்கும்…” என்றாய்.
கடையருகே சென்றதும் உன்னிடம் ”என்ன ஐஸ்கிரீம்?” என்றேன்.
”வனிலாதான்… ஐஸ்கிரீம்னாலே வனிலாதான். மிச்சமெல்லாம் சும்மா”
நான் உனக்கு ஐஸ்கிரீமை வாங்கிக் கொடுத்தேன்.
”உனக்கு அருண்?”
”எனக்கு பிடிக்காது”
”வை?” என்றாய் கண்கள் விரிய. ”வை?”
”பிடிக்காது, அவ்ளவுதான்…”
”ஓ நோ…” என்று சொல்லி தலையாட்டிவிட்டு நக்கிவிட்டு ”சின்னவயசிலே கூட சாப்பிடமாட்டாயா?”
”ரொம்ப சாப்பிடுவேன்…அப்றம் ஒரு மாதிரி இருந்திச்சு”
”எப்டி?”
”நக்கியெல்லாம் சாப்பிடுறது… சின்னப்பிள்ள மாதிரி…”
”அதுசரி… யூ பிகம் மேன்லி….” தலையை சிலுப்பி சிரித்தாய்.
நான் உன் சிறிய உதடுகள் ஐஸ்கிரீமைச் சுவைப்பதை, சட்டென்று சிவந்த நாக்கு அந்தரங்கமாக வந்து மேலுதட்டை வருடிச்செல்வதை பார்த்தவாறிருந்தேன். ”யூ ஆர் ஸ்டேரிங் மி” என்றாய்.
கண்களை தழைத்து ”ஐ யம் ஸாரி” என்றேன்.
”இட் இஸ் ஓக்கே…” என்று நக்கியபின் ”இந்தியாவிலே ஆண்கள் எல்லாருமே நேரா பிரெஸ்டைத்தான் பாக்கிறாங்க. அப்றம் நாம கவனிச்சதுமே கண்களை திருப்பிக்கிறாங்க. அப்றம்கூட கள்ளத்தனமா பாத்துட்டே இருக்கிறாங்க… யூ பீப்பிள் ஆர் ஸோ அப்ஸெஸ்ட் வித் பிரஸ்ட்ஸ்…” என்றாய்.
”ஸ்டுப்பிட்” என்றேன் கோபத்துடன்.
”இல்லை நான் கண்டுபிடிச்சாச்சு.. இந்தியாவிலே எல்லாருக்கும் பெண்களோட மார்புகள்தான் ரொம்ப புடிச்சிருக்கு… ஐ நோ”
”சும்மா வரியா.. ஸில்லி”
”ஏன் கோவிச்சுக்கிறே?”
”இந்தியாவிலே இப்டியெல்லாம் பேசமாட்டாங்க?
”வை?”
நான் பேசாமல் வேறுபக்கம் பார்த்தேன்.
ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்து கப்பை மேலே தூக்கிப்போட்டு இன்னொரு கையால் அடித்து குறிபார்த்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு ஹை! என்று கைகொட்டி குதித்துச் சிரித்தாய்.
உன் இளமார்புகள் குலுங்குவதைப் பார்த்தேன். உன் கண்கள் என் கண்களைச் சந்தித்தன.
நான் முறைப்புடன் ”கமான்” என்றேன். ”லக்கேஜ் வந்திருக்கும்” என்று முன்னால் நடந்தேன்.
பின்னால் வந்தபடி ”அருண்…நான் ஒண்ணு சொல்லட்டுமா?”
”சொல்லு”
”நீ இப்ப என் பிரஸ்டைப் பார்த்தேல்ல?”
நான் மூச்சுத்திணறினேன்.
”பாக்கணும்னா பார்த்துக்கோ… ஏன் வெக்கப்பட்டு கண்ணை திருப்பிக்கிறே? தேட் வாஸ் நாட் மேன்லி”
நான் கடும் கோபத்துடன் ”நான் ஒண்ணும் பாக்கல்லை” என்றேன்.
”பார்த்தே… நான் பாத்தேனே.”
”ஸில்லி…ஸ்டுப்பிட்” என்று சீறிவிட்டு நான் முன்னால் ஓடினேன். நீ பின்னால் வந்தாய்.
நான்கு பெட்டிகள் மட்டும் சுழல்பாதையில் ஒன்றை ஒன்று பின்தொடர்ந்தன. இரண்டு வெள்ளையர்களும் ஒரு வயதான அம்மாவும் அருகே நின்று பெட்டிகளை எடுத்தார்கள். வயதான அம்மாவால் பெட்டிகளை எடுக்க முடியவில்லை. ஆனால் அவரே எடுக்க விரும்பினாரென்று தெரிந்தது.
”அந்த ரெட் சூட்கேஸ்…” என்றாய் கைநீட்டி, குதித்தபடி.
சிறியபெட்டிதான். அதை நான் தூக்கி வைத்தேன்.
”ஐ யம் ஸாரி” என்றாய்.
”தள்ளிப்போ” என்றேன்
அதை சக்கரவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றபோது நீ பின்னால் வந்தாய்.
”அருண், ஸாரி”
நான் ஒன்றும் சொல்லவில்லை. பெட்டியை வெளியே கொண்டுசென்று காரை நோக்கிச்சென்றேன்.
”அருண் நீ ரொம்ப மேன்லியா இருக்கே… ஓரக்கண்ணால பாக்கிறப்ப மட்டும் அப்டி இல்ல. அதான் சொன்னேன்…”
”சரி நான் இப்ப என்ன பண்ணணும்?”
”சூட்கேஸை காரில வை.. ஏன்?”
”இல்ல. உன் பிரஸ்டைப் பாக்கட்டுமா?”
”ஓகே…. இ·ப் யூ வாண்ட்”
நான் உன்னை நேரடியாகப் பார்த்தேன். நீ என் கண்களைப் பார்த்து சட்டென்று சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரித்துக் குலுங்கினாய் .”ஓகே ஓக்கே யூ ஆர் மேன்லி…ஐ அக்ரீட்”
நானும் சிரித்துவிட்டேன். ”கமின்”
”இந்தக்கார் ஜப்பான் மேடா?”
”இல்லியே. இந்தியாதான்” என்றபின் சிந்தித்து ”யெஸ், சரியாச்சொன்னா ஜப்பான் தான்.மாருதி சுஸுக்கி… கொலாபரேஷன்…”
”க்யூட்டா இருக்கு… இந்தியாவிலே அம்பாசிடர் கார் மட்டும்தான் உண்டு, கனமா நீளமா இருக்கும்னு டேட் சொன்னார்”
”அது அவரு சின்னப்பையனா இருக்கிறப்ப… இப்ப இங்க தெருவிலே பி.எம்.டபிள்யூ, ஃபெராரி எல்லாமே ஓடுது”
கார் சீறி சாலையில் சென்றது.
”ரோடெல்லாம்கூட பெரிசாத்தான் இருக்கு”
”உன்னை ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டுக்கு கூட்டிட்டு போறேன்… இந்தியாவைப்பத்தி உங்க அப்பா சொன்னதை மறந்திருவே…”
”எங்கப்பா உன்னோட மாமா…”
”ஆமா… ஆனா நான் அவரை நேரில மாமான்னு கூப்பிட்ட ஞாபகமே இல்லை…”
”யா… டேட் லண்டனுக்கு ரொம்ப அடாப்ட் ஆயிட்டார்…. அங்கதான் அவரால நிம்மதியா இருக்க முடியுது…”
”அம்மாதான் எப்ப பார்த்தாலும் அண்ணா அண்ணான்னு சொல்லிட்டே இருக்கா”
”அத்தை எப்டி இருக்காங்க?
”ஷி இஸ் நைஸ்…”
”இப்ப வேல பாக்கிறாங்களா?”
”போன வருஷம் ரிட்டயர் ஆயிட்டாங்க”
காரை நோக்கி வந்த பூத்த கொன்றை மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாலையே பூத்திருப்பது போலிருந்தது. புதிய வெயிலில் நீராடிய பெருநகரம் என்னை நோக்கி பெருகி வந்தது. ஸ்டீரிங்கில் கை இருக்கும்போது எனக்கு ஏற்படும் தன்னம்பிக்கை என்னை ஆட்கொண்டது. இசையை போட்டேன். மெல்ல தாளமிட்டபடி வேகத்தைப் பெருக்கினேன்.
”இப்ப நீ சொன்னியே ஐ கெஸ்ட் அப்டீன்னு… என்ன ஊகிச்சே?”
”நீதான்னு”
”எப்டி?”
”ம்ம்… பூனைமீசை… புகைபடிஞ்சதுமாதிரி தாடி… சிவப்பா உதடு, லேசா கலைஞ்ச தலை..ஓவல் மொகம்…நான் உன் ·போட்டோவையே பாத்திட்டேனே…”
”அம்மா அனுப்பினாங்களா?”
”ஆமா…நீதான் எங்க கிட்ட சேட்லயே வரதில்லியே…”
”நான்கூட உன்னை ·போட்டோவிலே பாத்ததுதான்…”
”யூ ஆர் மேன்லி, யூ நோ”
நான் புன்னகையுடன் ”தேங்க் யூ” என்றேன். ”அது இப்ப உன் பிரஸ்டைப் பார்த்தேன்ல அதிலேருந்துதான்….”
நீ ”யூ” என்று என் கையை அடித்தாய்.
நான் அக்ஸிலேட்டரை மிதித்தேன். கார் நூற்றுப்பத்து கிலோமீட்டர் வேகத்தில் பீரிட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தடுமாறின.
நீ, “அருண்… ரொம்ப ரேஷா ஓட்றே… இந்த ரோட்ல இந்த ஸ்பீட் ரொம்ப ஜாஸ்தி…” என்றாய்
”ஸ்பீடு மனசிலேதான் இருக்கு…. தெரியும்ல?” என்றேன். எதிரே வந்த லாரிக்கு வழிவிட்டு திருப்பியபோது கார் அலைபாய நீ என்மீது சாய்ந்தாய்.
”இப்ப நான் பாக்க வேண்டியதில்லை” என்றேன்” ·பீல் பண்ண முடியுது”
”எதை?” என்ற பின்பு ஊகித்து ”யூ நாட்டி”என்று என் கையை அறைந்தாய்
நான் உரக்கச்சிரித்தேன்.
அம்மா வாசலுக்கே ஓடிவந்து வரவேற்றாள். சுசி நீ காரை விட்டிறங்கி ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடித்து சுற்றி தூக்கி கூவிச்சிரித்த காட்சியை இப்போதும் காண்கிறேன். புதிய காலகட்டத்தின் ஓர் அலை வந்து அம்மாவை அடித்து சுழற்றியது போல அந்தக்காட்சி. ”அய்யோடி விடு விடுடீ… விழுந்திருவேண்டீ” என்று அம்மா சந்தோஷமாகக் கூவினாள்.
நான் காரை பூட்டிவிட்டு இறங்கி வந்தேன். நீ அம்மாவை மாறி மாறி முத்தமிட்டாய். ”அருண் யூ நோ அத்தை எவ்ளவு அழகா இருக்காங்க தெரியுமா?”
நான் திடுக்கிட்டு ”அப்டியா?” என்றேன்.
”போடா” என்று அம்மா சிரித்தபடி கையை ஓங்கினாள்.
”ஷி லுக்ஸ் ஸோ யங் யூ நோ”
”உள்ள வாடீ” என்றாள் அம்மா. நான் டிக்கியிலிருந்து பெட்டியை எடுத்துக்கொண்டு பின்னால் சென்றேன்
”என்னடி ஒரே பெட்டிதானா?”
”எதுக்கு பெரிய பெட்டி? டிரெஸ்லாம் வேணுமானா இங்கேயே வாங்கிக்கலாமே…” என்றாய் ”ஆண்ட் ஐ ஹேட் யூரோப்யன் காஸ்ட்யூம்ஸ்…”
”அது சரிதான், காலையும் கையையும் வெளிய காட்டிட்டு… பையன்க போடுறது மாதிரி நல்லாவா இருக்கு….உள்ள வாடி”
அவர்கள் உள்ளே சென்றதைப் பார்த்துவிட்டு நான் என் அறைக்குச் சென்று சட்டையைக் கழற்றினேன். கண்ணாடியில் தெரிந்த என்னைப் பார்த்து புன்னகை செய்தேன்.
லுங்கிக்கு மாறி டி ஷர்ட் போட்டுக்கொண்டு சமையலறைக்குச் சென்றேன். சமையலறையில் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு நீ செல்லம் கொஞ்சி பேசிக்கொண்டிருக்க அம்மா உன் தலையை அளைந்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.
நீ என் காலடி ஓசைகேட்டு எழுந்து அமர்ந்து சிரித்தாய்.
”என்னடா?” என்றாள் அம்மா.
”ஒண்ணுமில்ல… டிபன் ஏதாவது உண்டா, இல்ல ஓட்டலுக்குப் போகணுமா?”
”போகணுமானா போ… தோசை மாவு இருக்கு ஊத்தித்தர எவ்ளவுநேரம்?”
”அத்தை, நான் தோசை சுடவா?”
”வேண்டாண்டி கண்ணு… நீ என்ன கண்டே தோசையும் இட்லியும்…”
”நல்ல கதை…. அத்தை எங்கப்பா லண்டன்ல சைவ ஓட்டல் வச்சிருக்கார்னு ஞாபகம் இருக்கா இல்லியா? நான் சுடாத தோசையா? நான் வெங்காயச் சட்னி அரைச்சா எங்கப்பாவே நாக்கை சுழட்டிகிட்டு பின்னால வருவார்” நீ எழுந்து ”எங்க கிச்சன்?” என்றபடி உள்ளே சென்றாய்.
”உங்கப்பனாடி சமைக்கிறது?” என்று ஆச்சரியமாகக் கேட்டபடி அம்மா பின்னால் சென்றாள்.
”அப்பாவும் சமைப்பார். கணேசய்யரும் சமைப்பார். நானும் டைம் கெடைச்சா சமைப்பேன்…”
”பெரிய ஓட்டல்னு நெனைச்சேன்…”
”இல்ல அத்தை. சின்ன ஓட்டல்தான். ஸ்பெஷாலிட்டி ஓட்டல்னு சொல்லுவாங்க…. இந்தமாதிரி ஜப்பானீஸ் சயாமீஸ் ஓட்டல்லாம்கூட நெறைய இருக்கு அங்க… மாவு எங்க இருக்கு? ”
”·ப்ரிட்ஜிலடீ… இரு நான் எடுத்து தரேன்….” அம்மா உள்ளே சென்று ”உங்கப்பன் பெரிய கார் பங்களால்லாம் வச்சிருக்கான். ஊருக்குவந்தா நம்மவீட்டுல வசதி பத்தாதுன்னு ஸ்டார் ஓட்டலில தங்கறான்?” என்றாள்.
”ஏன் சின்ன ஓட்டல் வச்சா அவ்ளவு சம்பாதிக்க முடியாதா? லண்டன்ல ஸ்பெஷாலிட்டி ஓட்டலிலேதான் அத்தை நெறைய லாபம்…. மாவை ·பிரிட்ஜில வைக்கவே பிடாது…. டேஸ்ட் சேஞ்ச் ஆயிடும்… நாங்க எப்பவுமே ·பிரெஷ் மாவுதான்…”
அவர்கள் பேசியபடியே சமைப்பதை டைனிங் டேபிளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நீ லண்டனில் பிறந்துவளர்ந்தவள் போல தோன்றவில்லை. பட்டிக்காட்டுச் செல்லப்பெண் போலவே இருந்தது உன் தலையாட்டலும் செல்லமான உதட்டுச் சுழிப்பும். அம்மா ஏதோ சொல்ல நீ வெட்கப்பட்டு உதட்டைக் கடிக்கிறாய். அய்யோ என்கிறாய். உன் உடல் வழியாக ஒவ்வொரு கணமும் புத்தம் புதிதான பேரழகுடன் நிகழ்ந்துகொண்டிருந்தாய். ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு பெண்ணை உன் உடலில் கண்டபடி கண்கள் மட்டுமே நானாக பிரமித்து அமர்ந்திருந்தேன். சுசி, எத்தனை நூறு அழகுபாவனைகளின் தொகுப்பு பெண்!
”என்னடா முழிச்சிட்டிருக்கே?” என்றபடி அம்மா வந்து என் அருகே அமர்ந்தாள்.
”ஒண்ணுமில்லியே” என்று சுதாரித்தேன்
”எவ்ளவு தங்கமான பொண்ணு இல்ல? துருதுருன்னு இருக்கா… ஒரு பாசாங்கு கெடையாது…”
நான் புன்னகைத்தேன்
”இப்ப வாயப்பொளந்து பாத்துட்டே இருக்கல்ல…. லண்டன்லேருந்து வரா, கூட்டிட்டுவாடான்னு சொன்னப்ப ஒரேயடியா குதிச்சே…. அவ மூஞ்சியப்பாத்தா முஞ்சூறு மாதிரி இருக்குன்னு சொன்னே…”
நான் சற்றே வெட்கிச்சிரித்து ”இல்லம்மா… இப்டி வளந்திருப்பான்னு நெனைக்கல்லை” என்றேன்.
”பொம்பிளைபுள்ளை வளர்ச்சியே அப்டித்தானே” குரலைத்தாழ்த்தி ”அவ அப்பன் அங்க ஒரு வெள்ளைக்காரிய வச்சிருக்கானாம் . இப்ப சொல்றா” என்றாள்
”நிஜம்மாவா?”
”முன்னாடியே அவன் அப்டித்தானாமே. பாவம் ராஜி, மனசு நொந்துதான் போயிச்சேந்திருப்பா… என்ன சொல்றது.. அம்மா பேரைச் சொன்னாலே இப்பகூட அப்டியே கண்ணில தண்ணி வந்திருதுடா இவளுக்கு… பாவம்…. அனாதைப்பொண்ணா இதுவரை வளந்திருக்கா. இனிமே அவளை நான் லண்டனுக்கு விடப்போறதில்லை…. அண்ணா என்ன சொன்னாலும் சரி…”
”சொத்தை தரமாட்டேன்னு சொல்லிட்டா?”
”நல்லாருக்கே… சொத்துக்காகவா யோசிப்பாங்க?” அம்மா என் கண்களைச் சந்தித்து ”…சொத்தைப்பத்தி நான் யோசிச்சேன்… இல்லேன்னு சொல்லல்லை. ஆனா இப்ப இவதாண்டா பெரிய சொத்துன்னு தோணுது… தேவதை மாதிரில்ல இருக்கா…”
”அத்தை, தோசை..” என்றாய் உள்ளே.
தோசை மிக அற்புதமாக இருந்தது. மென்மையும் முறுகலும் சரியான விகிதத்தில் அமைந்து பொன்னிறமாக. நான் பிய்த்து தின்றேன்.
”எப்டிரா இருக்கு?”
”ம்ம்” என்றேன்
”வாயத்தெறந்து சொல்லாதே…நல்லாத்தான் இருக்கும். மணமே தூக்குதே” என்றாள் அம்மா.
வாசலில் ஸ்கூட்டர் வந்து நிற்கும் ஒலியைக் கேட்டேன். என் மனம் திடுக்கிட்டு படபடவென்றது. எஞ்சிய தோசையை பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு எழுந்தேன்.
”உக்காந்து இன்னொரு தோசை சாப்பிடுடா”
”போரும்” என்று கை கழுவினேன்.
”அவ வந்தாலே இப்டித்தான்… போய் ஒளிஞ்சுக்குவான்… என்ன வெக்கமோ”
சந்திரா கையில் ஹெல்மெட்டுடன் கறுப்புக்கண்ணாடி அணிந்தவளாக உள்ளே வந்து செருப்பைக் கழற்றியபடி ”என்ன ஜி.எஸ் மருமக வந்திட்டாளா?” என்றாள்.
”வாடி… இன்னைக்கு என்ன காலேஜ் போகலியா?”
”லீவு…. கொஞ்சம் வீட்டுவேலை இருந்தது… மத்தியான்னம் படுத்து ஒரு தூக்கம் வேற போடணும்…” என்றபடி ஹெல்மெட்டை டீபாயில் வைத்துவிட்டு கண்ணாடியைக் கழற்றினாள். அதையும் டீபாயில் வைத்துவிட்டு நடந்து வந்தபோது அவள் கண்கள் என் கண்களைச் சந்தித்தன. நான் பார்வையை விலக்கிக் கொண்டு என் அறை நோக்கி நடந்தேன்.
”அருண் என்ன ஒரே ஜாலியா இருக்கானா? மொறைப்பொண்ணுல்ல வந்திருக்கா?” என்றாள் சந்திரா
”ஆமா, இருக்கான்… எண்ணையக்குடிச்ச எருமைமாதிரி மூஞ்சிய வச்சுட்டு… உக்காருடீ” என்றாள் அம்மா
உள்ளிருந்து நீ வந்தாய். சந்திராவின் கண்கள் உன்னை அளவிடுவதை நான் நிலைக்கண்ணாடியில் கண்டேன்.
”இது சந்திரா… என் காலேஜ்லதான் வேலபாக்கிறா. என்னைவிட பதிமூணுவருஷம் ஜூனியர். ஆனா இவதான் எனக்கு ஒரே ·ப்ரண்டு…” என்றாள் அம்மா
”ஹாய் ஆன்டி”
”ஹாய்! யூ லுக்ஸ் வெரி க்யூட்”
”அதை நான் சொல்லணும்… நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… நெஜம்மா…அத்தை அவங்களோட ·ப்ரண்டுன்னு உங்களைப்பத்தி சொன்னப்ப ஆச்சரியமா இருந்தது… இப்ப உங்களுக்கு என்ன வயசாச்சு?”
”முப்பத்தொன்பது…” என்றாள் சந்திரா சிரித்தபடி
”வேணும்னே வயசைக் கூட்டிக்காட்டணும்னு கண்ணாடி போட்டு கொண்டை வச்சுக்கறா… இல்லேன்னா இருபத்தெட்டுன்னுதான் சொல்லுவாங்க… எங்க ரெண்டுபேருக்கும் காலேஜ்ல அப்டி ஒரு ஒத்துமை தெரியுமா… இவ இங்க்லீஷ் லிட்ரேச்சர் நான் காமர்ஸ்… போரும்னு நான் அம்பது வயசிலேயே விஆரெஸ் குடுத்துட்டேன்… இவதான் இப்ப டிபார்ட்மெண்ட் ஹெட். புரபஸர் சந்திரகலான்னு சொல்லி அறிமுகம் செஞ்சு வச்சிருக்கணும்…” என்றாள் அம்மா.
”நான்கூட லிடரேச்சர் ஸ்டுடெண்ட்தான் ஆன்டி”
”அப்டியா? இங்க ஸிலபஸ் ரொம்ப ஈஸி…”
”இவளை இங்கியே சேத்துடலாம்னுகூட தோணுது சந்திரா”
”ஜி எஸ்னா என்ன ஆன்டி?”
”ஜி.சிவகாமி… அக்காவோட பேரு அதான் காலேஜ்ல… அப்டியே வாய்ல நெலைச்சுப்போச்சு. அக்கான்னு கூப்பிடலாம்… வராது”
நான் கண்ணாடியில் அவர்களைப் பார்த்தபடி விலகிச் சென்றேன். அறைக்கு திரும்பும்போது என் கண்களை சந்திராவின் கண்கள் கண்ணாடியில் வந்து சந்தித்து மீண்டன.
நான் என் அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்தேன். மேலே ஓடும் மின்விசிறியையே பார்த்துக் கொண்டிருந்தேன். வெளியே சிரிப்பொலிகள். பேச்சுகள். ஓயாத பேச்சுகள்.
எழுந்து ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்து வைத்துக் கொண்டேன். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நான் எதையுமே வாசிக்கவில்லை. என் மனம் எதை நினைத்துக்கொண்டிருக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
நிழலாட்டம் கண்டதுமே தெரிந்துவிட்டது. நான் தலையை திருப்பவில்லை. என் உடலே கண்ணாகவும் காதாகவும் மாறிவிட்டது.
”பொண்ணு ரொம்ப அழகா இருக்காடா ”என்றாய் சந்திரா.
நான் மெல்ல சிலிர்த்தேன்.
”இவ்ளவு அழகா இருப்பான்னு நான் நெனைக்கவேயில்லைடா… அக்காதான் சொல்லிட்டே இருந்தா… நைஸ்”
”ம்” என்றேன்.
”முதல் பார்வையிலேயே அப்டியே சொக்கிப்போயிட்டே போலிருக்கு ?”
நான் திரும்பி ”அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றேன். அவள் கண்களைச் சந்தித்து மீண்டேன். அக்கணத்தின் அவள் முகத்தை மறுகணமே என் மனதுக்குள் இன்னும் துல்லியமாகக் கண்டேன். என் அகம் மெல்லிய அச்சத்தால் விரைப்படைந்தது.
”பேசாதே… உன் மூஞ்சியப்பாத்தாலே தெரியுதே…”
”சும்மா ஏதாவது சொல்லாதே… அவ ஒரு பாவம் பொண்ணு”
”மத்தியான்னம் வர்ரியா?” என்று என் கண்களை கூர்ந்து பார்த்தாள். அக்கேள்வியில் அவள் குரல் கனத்ததாக ஆகியது. அப்போது அவளில் இன்னொருவர் குடியேறுவது போல… அந்த இன்னொருவரை நான் நன்றாக அறிவேன். நான் மெல்ல தலையசைத்தேன்.
”எப்டி இருக்கான்னு பாத்துட்டு போகலாம்னுதான் லீவுபோட்டேன்… அதோட ஒரே தலைவலி. நேத்து நைட் சுத்தமா தூங்கவேயில்லை தெரியுமா?”
”ஏன்?”
சுசி, சொல்லத்தெரியாத நுண்கணங்களில் மட்டுமே நாம் நமக்குள்ளும் வெளியிலும் இருப்பனவற்றை அறிகிறோம். தீச்சுடும் கணங்கள். முள்முனையில் யானை அமரும் கணங்கள். பெருவெளி சுழன்று புளியாகும் கருந்துளைக்கணங்கள்.. சுசி…சுசி…நீ என்சொற்களை எப்படிப் புரிந்துகொள்வாய்…?
அக்கணத்தில் நீ கதவருகே வந்து சாய்ந்து நின்றாய் .”ஆண்டி…. டு யூ வான்ட் சம்திங் டு ஈட்?” என்றாய் நீ.
”நீயே பண்ணினியா?”என்றாள் சந்திரா
”யா”
”நெய்யோ எண்ணையோ இனிப்போ இல்லேன்னா சாப்பிடுறேன் ”
”யூ ஆர் டூ டயட் கான்ஷியஸ்…” என்று சிரித்தாள் ”இதிலே அதெல்லாம் இல்லை”
சுசி, நீ வேறெங்கோ இருந்தாய். சஞ்சலங்கள் எதுவுமே வந்து தீண்டமுடியாத அதிதூய வெளி ஒன்றில்…. சுசி,நான் இங்கிருந்து தப்பி ஓடி அங்கே உன்னிடம் வந்துஅடைக்கலம் தேட விரும்பினேன் அப்போது…
தட்டிலிருந்து ஆவிபறந்த அப்பத்தை எடுத்தபடி சந்திரா ”’உனக்கு ஒரு சின்ன கி·ப்ட் வாங்கிட்டு வந்தேன் சுசி” என்றாள்
”அய்யோ…எங்க அது?”
”கமான்… காட்டுறேன். என்னை ஆன்டின்னு அழைக்கவேண்டாம்.. சந்திரான்னே கூப்பிடு”
நான் எழுந்து வெளியே சென்றேன். ஒரு வார இதழை எடுத்தபடி கவனித்தேன்.
சந்திரா கொடுத்த பொட்டலத்தை நீ உடனே பிரிக்க ஆரம்பித்தாய். உள்ளே ஒரு சுடிதார்.
”மை குட்னெஸ்…. ஆன்டி — ஐ யம் ஸாரி– நிஜம்மாவே நான் சுடிதார் வாங்கணும்னு நெனைச்சிட்டிருந்தேன்… ஐ ஜஸ்ட் லைக் திஸ் டிரெஸ்…வாவ்…”
”டைம் கிடைக்கிறப்ப வீட்டுக்கு வா…” என்னை நோக்கி திரும்பி ”அருண் கூட்டிட்டு வருவான்” என்றாள் சந்திரா என்னிடம் ” என்னடா?” என்று செல்லமாக அதட்டினாள்.
சுசி, பெண்மையின் முடிவிலா ஜாலங்களில் சிக்கி அழிவதையே ஆணுக்கு இன்பமென வைத்திருக்கிறான் உலகியற்றிய முட்டாள்.
சந்திரா கிளம்பும்போது அம்மாவுடன் நீயும் பின்னால் சென்றாய். நான் கூடத்து சோபாவில் அமர்ந்து அந்த வார இதழைக் கவனமில்லாமல் புரட்ட ஆரம்பித்தேன். என் கண்கள் உன்னையே நோக்கின.
பற்களும் கண்களும் ஒளிரும் உங்கள் சிரிப்புகள், காதுகளில் தொங்கட்டான் ஆடும் தலையாட்டல்கள். கெக்கலிப்புகள். தழுவல்கள். கொஞ்சல்கள்… மூன்று பெண்கள். சுசி, மூவரில் யார் என் அகத்தை அலைக்கழிக்கும் பெண்? யாரை நான் உள்ளாழத்தில் ஒவ்வொரு கணமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்? யார் எனக்கு மிகமிக முக்கியம்? யாரை அதிகமாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்? யாரை அஞ்சிக்கொண்டிருக்கிறேன்? யாரை நேசித்துக்கொண்டே இருக்கிறேன்?
சுசி, அது என் அம்மாதான் என்று அப்போது அறிந்தேன்