சின்னஞ்சிறிய கிளி

இளங்கோ கிருஷ்ணன் தமிழ் விக்கி

பொன்னியின் செல்வன் 2 பாடல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. எனக்கு மிகப்பிடித்த பாடல் இது. இளங்கோ கிருஷ்ணன் போன்ற ஒரு கவிஞன் ஏன் சினிமாவுக்குத் தேவை என்பதைச் சுட்டுபவை இத்தகைய பாடல்கள். பாரதியின் சின்னஞ்சிறி கிளியே பாடலை நினைவுறுத்துகிறது. செவ்வியல் நடை, ஆனால் வரிகளைப்பார்த்தால் நவீனக்கவிதை

பொ.செ பாடல்களைப் பற்றி என்னிடம் ஊடகங்களில் அவ்வப்போது பலர் எதையாவது  கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பரவலான கருத்து முதல்பகுதியில் இருந்த இசை மேலையிசை, இரண்டாம்பகுதியில் அது சரிசெய்யப்பட்டுள்ளது, இது இந்திய இசையாக பொருத்தமாக உள்ளது என்பது.

நேற்று அதைச் சொன்ன ஊடகவியலாளரிடம் சொன்னேன். ‘பொசெ1 படத்திலுள்ள பாடல்களில் மேலையிசைச்சாயல் கொண்ட பாடல்  ‘பொன்னிநதி பார்க்கணுமே’ மட்டும்தான். அதுகூட கட்டமைப்பில் மேலையிசைச்சாயல் கொண்டது. மெட்டு தெம்மாங்குக்கு அணுக்கமானது. படம் ஏற்கனவே தமிழ்ப்பண்பாட்டில் ஊறியவர்களுக்காக எடுக்கப்படவில்லை. 5 வயது முதல் அதற்கு பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரங்குக்கு வரவேண்டும். படத்திற்குள் நுழையவேண்டும். ஆகவேதான் முதற்பாடல் அப்படி உள்ளது. பொசெ1 பெற்ற பெருவெற்றிக்கு பொன்னிநதி பாக்கணுமே சிறுவர்களிடம் அடைந்த மிகப்பெரிய வரவேற்பு ஒரு முக்கியமான காரணம்

ஆனால் அந்தப்படத்தில் எஞ்சிய பாடல்கள் எல்லாமே முற்றிலும் இந்திய இசை சார்ந்தவை. தேவராளன் பாடல், அமலையாட்டம் இரண்டும் நம்முடைய நாட்டார் மரபின் சாமியாடிகளின் மெட்டுகளுக்கு அணுக்கமானவை. சொல், ராட்சச மாமனே ஆகிய இரு பாடல்களுமே இந்திய ராகங்களின் அமைப்புக்குள் வருபவை.

பொசெ 2 நீளமான பாடல்களுக்கு இடமில்லாமல் விரைந்தோடும் படம். ஏராளமான நிகழ்வுகள். கதையே உண்மையில் இரண்டாம்பகுதியில்தான் நிகழ்கிறது. ஆகவே பலவகையான பாடல்கள் உள்ளன.”

இந்தப்பாடலை மீளமீள கேட்கிறேன். இளம் நந்தினியாக நடித்த அழகியைத்தான் கடல் படம் எழுதும்போது மனதில் கண்டிருந்தோம். இப்போது அமைந்துவிட்டது

பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க

முந்தைய கட்டுரைமலம் என்ற ஊடகம் – ஜெயராம்
அடுத்த கட்டுரைநா.பார்த்தசாரதி – இலட்சியக் கனவுகள்