சதீஷ்குமார் சீனிவாசன் – மூன்று கவிதைகள்

தனதலகில் சூடி

காற்று வரும் என இருந்துவிட்டேன்
ஜன்னல்களை
நான் மூடுவதே இல்லை

சாளர விளிம்பில்
அமரும்
எந்தப் பறவையும்
ஒருகொத்து காற்றை
தனதலகில் சூடி வரவில்லை
இதற்கெல்லாம் யார் என்ன செய்ய முடியும்
செய்தாலும்
முழுதாக சூட முடியாத
கோடி அலகுகள்
கோடி காற்றுகள்
இருந்தும்
ஒரு வீம்பில்
காற்று வருமென வீற்றிருந்தேன்

*

இரவை எண்ணுதல்

எல்லாவற்றையும்
பாதியில் துறந்துவிட்ட
ஒருவரின் ஞாபகத்தைப்போல
வந்திருந்தது இரவு
நான் தலைவர்களை நம்பினேனில்லை
அவர்களால்
எனக்கு தரப்பட்ட பொற்காசுகளில்
எந்த மதிப்புமில்லை
அவை வெறுமனே
உருவை தாங்கி நின்றன
உள் நனையும்
ஒரு துளி நீரை
தருவாரில்லை
இரவை எண்ணலாமென்றால்
அதற்கும் மனமில்லை

*

பளிங்கு சொற்கள்

பளிங்குபோன்ற சொற்களை உருவாக்குகிறேன்
ஏதோ இருப்பதுபோல்
பார்வைக்கு தென்பட்டாலும்
அதில் எதுவும் இருப்பதில்லை
இப்படியாக
தீங்கற்ற சொற்களால் ஆன
ஒரு ஆட்டத்தில்
ஜெயிப்போரில்லை
தோற்போரில்லை
எல்லோரும் இருந்துகொள்கிறார்கள்
*

முந்தைய கட்டுரைநீலி- பெண்ணுலகம்
அடுத்த கட்டுரைமே.வீ.வேணுகோபாலப் பிள்ளை