அன்புள்ள ஜெ
பிறந்தநாள் குறிப்பு கண்டேன். (இன்னொரு பிறந்தநாள்)
அதில் என்னை மகிழ்ச்சியடையச் செய்தது பிறந்தநாளை ஒட்டி வெளிவரும் 12 காதல்கதைகள் என்னும் தொகுப்புதான். நான் பெருங்கை கதையை வாசித்தபோதே இத்தகைய இனிமையான சில கதைகளை நீங்கள் எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அந்தக்கதை மிகமிக நுட்பமானது. ‘அழுத்தமான’ கதைகளை தேடும் வாசகர்களுக்கும், கதைகளில் சிடுக்குகளைத் தேடுபவர்களுக்கும் அது அவ்வளவு உவப்பாக இருக்காது. ஆனால் அந்தவகையான கதைகள் காலத்தைக் கடந்து நிலைகொள்பவை. பலருக்கும் அது தெரிவதில்லை.
அத்துடன் எழுத்தாளர்களின் இளம் வயதில் அவர்கள் கொந்தளிப்பான கதைகளை எழுதுகிறார்கள். அதன்பின்னர் அவர்கள் வாழ்க்கை என்பது ஒரு சின்ன பூவின் தேன் போல (அஜிதனின் ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் கதையில் அந்த உவமையை எடுத்துக்கொண்டேன்) அழகானது என்று புரிந்துகொள்கிறார்கள். சின்னவிஷயங்களில் வெளிப்படும் பெரிய தரிசனங்களை நோக்கிச் செல்கிறார்கள். அந்தச் சின்னத்தேனை எழுதுவதுதான் கலையின் உன்னதமான தருணம். சின்ன விஷயங்களை எழுத ஒரு கனிந்த பார்வை வேண்டும். அதை அடைய ஒரு வயசும் தேவை.
அந்த கதைகளை வாசிக்கக் காத்திருக்கிறேன்
செ.ராஜகோபாலன்
அன்புள்ள ஜெ
பிறந்தநாள் அன்று துர்க்கனேவின் மூன்றுகாதல்கதைகள் என்ற அழகான ரஷ்ய புத்தகம் உங்கள் வாசிப்பில் இருப்பதை கண்டேன். நீங்கள் இருக்கும் மனநிலையை காட்டுகிறது. 12 காதல்கதைகள் என்ன, நூறு கதைகள் எழுத உங்களால் முடியும். மிக எளிய, மிக நுட்பமான கதைகளாக அவை இருக்கும். புனைவுக்களியாட்டு கதைகளிலேயே பல கதைகள் அழகான காதல்கதைகளாக இருந்தன
செல்வகுமார்