சித்திரைக் கோடை ஒன்றின் ஞாயிறு தினம் தங்கள் தளத்தின் ”சதீஷ்குமார் சீனிவாசனின் மூன்று வெயில் கவிதைகளுடன்” தொடங்கியது அந்த நாளின் மிளிர்வை மேலும் கூட்டியது. தமிழகத்தின் பெரும்பாலான நிலப்பகுதி நாளவனின் ஒளிக்கதிர்கள் தடைகள் ஏதுமின்றி மண்ணைத் தொடும் பிரதேசம். இந்திய மண்ணின் பெரும்பகுதியும் அவ்வாறே. தமிழ்க் கவிதைகளில் கடல், மலை, சிகரம் ஆகிய படிமங்களைப் போல வெயிலும் கணிசமாக கையாளப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தின் ”ஞாயிறு போற்றுதும்”, திருக்குறளின் ”என்பிலதனை வெயில் போல,” தேவதேவனின் ”சூர்யமறைவுப் பிரதேசம்” ராஜ சுந்தர்ராஜனின் ”கொடுப்பினை” ஆகியவை நினைவில் எழுந்தன.
எல்லா பருவநிலைகள் மேலும் எனக்கு விருப்பம் உண்டு. இருப்பினும் வெயிலின் மேல் அது சற்று கூடுதல். வெயில் நிரம்பிய தஞ்சைப் பிரதேசம் எனது வாழ்நிலம் என்பதும் ஒரு காரணம். கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்பதை பதிவின் தமிழ் விக்கி இணைப்பின் மூலம் அறிய நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது.
வெயில், பறிகொடுத்த வெயில், இசையற்ற வெயில் ஆகிய மூன்று கவிதைகளுமே வாசித்ததுமே உள்ளிழுத்துக் கொண்டன.
”வெயில் ஒரு பிரிவுணர்ச்சிபோல
எங்கும் பரவியிருந்தது”
என்னும் வரி சிறப்பானது. பிரிவுணர்ச்சி நீங்குவதே இல்லை. இல்லாமல் ஆவதே இல்லை. ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு அளவில் எப்படியாவது இருந்து கொண்டே இருக்கிறது. வெயிலின் பரவலுடன் அது கவிதையில் இணைக்கப்பட்டிருந்தது சிறப்பானது. கவிஞன் ஏன் ”இந்த வெயிலில்” யாருக்கும் எந்த தீங்கும் நிகழ வேண்டாமென விரும்பாத எதுவும் நடக்க வேண்டாமென நினைக்கிறான். தீங்கு ஏதும் நிகழ்ந்தாலோ விரும்பாத எதுவும் நடந்தாலோ வெயிலின் மீது பழி வந்து சேர்ந்து விடுமோ எனத் தவிக்கிறானா கவிஞன்.
வெயிலின் மீது சிறு கடுஞ்சொல் விழுவதைக் கூட தாங்க முடியாத கவிஞன் வெயிலுடன் கொண்டுள்ள உறவு என்ன? அந்த உறவு எத்தனை நுட்பமானது என எண்ணும்போது கவிதை மேலும் ஒளி பெறுகிறது. யாருக்கும் எங்கும் நிறைந்திருக்கும் வெயிலைத் தவிர வேறு பற்றுக்கோல் ஏதும் இல்லை. வெயிலிடமே கவிஞன் வேண்டிக் கொள்கிறேன். அந்தி வரை காக்குமாறு. இரவில் அவன் என்ன செய்யப் போகிறான்? நாளவன் உதிக்கப் போகும் பொழுதுக்காக காத்திருக்கப் போகிறான்.
”பறிகொடுத்த வெயில்” கவிதையும் வெயில் கவிதையின் உணர்வுநிலை என்றாலும் இந்த கவிதை வெயிலுடனான கவிஞனின் உறவை கூடிய கறாரான மொழியில் சொல்லிப்பார்க்கிறது. இருப்பினும் கவிஞனால் அந்தியில் வெயில் பறிபோவதை தாள முடியவில்லை. அந்த துயரமும் மெல்லிய அரற்றலும் கவிதையில் உணர்வாக வெளிப்பட்டு விடுகிறது.
நாளவன் ஜீவன்களின் ஜீவிதத்தை அகமும் புறமும் முற்றும் அறிந்தவன். அவன் அறியாத ஏதுமில்லை. யாவும் அறிந்தவன் கண்டிப்பாக மௌனம் கொண்டு விடுவான். ’’ஆயிரம் மௌனங்களின் மனம்போல’’ நிலத்தின் மீது விழுவான். கவிஞர் ’’இசையற்ற வெயில்’’ கவிதையில் கூறியது போல.
அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை