இரு முகில்களின் கதை, கடிதம்

அந்த முகில் இந்த முகில் வாங்க

அந்த முகில் இந்த முகில் மின்னூல் வாங்க

படத்தை உருவாக்கும் எறும்பு புற்று:

எப்படி ஒரு படப்பிடிப்பு இருக்கும் என்பதைச் சொல்லும் போது, அது கிட்டத்தட்ட ஒரு கார்பொரேட் குழுமம் எப்படி இயங்கும் எனச் சொல்லுவதைப் போல இருந்தது. ஒருவன் செய்யும் பணி எப்படி முழு product ஆக ஆகிறது எனத் தெரியாமலே வேலை செய்வான். ஓர் எறும்பு புற்று போல. எறும்புகள் என்ன செய்கின்றன எனத் தெரியாது, ஆனால் எல்லா எறும்புகளும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும். அப்படித் தெரிந்து கொள்ள யாருக்கும் விருப்பமும் இல்லை ராமராவ் போல. பாதி முகம் தெரிந்தவையாய் இருக்கும் ஆனால் அறிமுகம் ஆனவர்கள் ஓரிருவர்தான். ஒவ்வொருவரும் எப்படி அடுத்தவர்களைப் பார்க்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தயாரிப்பாளர் தான் மன்னன், அவர் வரும் போது அலை சுருண்டு பின்வாங்கி கடல் மிகத்தொலைவுக்கு நகர்ந்து சென்றுவிட்டது போலத் தோன்றும். மற்றவர்கள் பேசுவதெல்லாம் உடல் உறவுகளைப் பற்றித்தான். நடன பெண்கள் தங்கள் உடலைப் பற்றியே சுரனையே இல்லாமல் இருக்கிறார்கள். டீ கொண்டு வருபவன் கூட ஆபாசமாகத் தான் பேசுகிறான். ஒருவேளை அவர்கள் சமூகத்திற்காக அணிந்துகொண்டிருக்கும் சட்டையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக இருப்பார்களோ என்னவோ? ஆனால் எல்லோருக்கும் அதன் மேல் வெறுப்பும் இருக்கத்தான் செய்கிறது. யாரும் மகிழ்ச்சியாய் இருப்பதாய் தெரியவில்லை. அரசமாளிகையில் இருந்த மஞ்சள் பை போல தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். ஒருவகையில் பார்த்தால் இது எறும்பு புற்றுதான்.

அந்த முகில் இந்த முகில்

ஒரு குறிப்பிட்ட கோணத்தில், அந்த கண நேரத்தில் ஒரு பெண்ணை பார்க்கும் ஒருவனுக்கு அவள் தேவதையாகத் தெரிகிறாள். அதில் பிடித்த பித்து என்பது ஒருவகையில் தப்பிவிட முடியாத ஒன்று. அவளை அதற்குப் பிறகு எவ்வளவு தடவை பார்த்தாலும் அவனுக்குத் தெரிவது அந்த கணத்தில் தெரிந்த தேவதையைத் தான். மற்றவர்களுக்கு அவள் சாதாரணமான மானுடப்பெண். ராமராவ் அப்படிப்பட்ட ஒரு கணத்தில் தான் ஸ்ரீபாலா வைப் பார்க்கிறான்.

நடனப்பெண்களை காதலிப்பவர்களை, மணப்பவர்களைப் பற்றி கேவலமான வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தார்கள் அங்கிருந்தவர்கள். அவனது துறையிலிருந்தவர்கள், நடனக்காரிகளை மாயக்காரிகள் என்றும் மயக்கிவிடுவார்கள் எனவும் எச்சரிக்கை கொடுத்திருந்தனர். தான் எல்லாம் அப்படி மாட்டிக்கொள்பவன் கிடையாது என நினைக்கும் அவன் அவ்வண்ணமே மாட்டிக்கொள்கிறான். அவளுக்கு இருந்த பிரச்சனையே வேறு. துணி பட்டுப் பட்டு தன் தோல் புண்ணாக்கிப் போய்விட்டது என்பது தான். தான் துணி தைக்கும் துறையில் இருப்பவன் என்பதால் தேடி வந்திருக்கிறாள் என நினைத்து, அவளை ஒருவகையில் புண்படுத்த நினைத்தவன் கடைசியில் சரி என ஒத்துக்கொள்கிறான்.

ராமராவ் ஒருவகையில் காடு நாவலில் வரும் கிரி போலத் தாய்மாமனால் வேலைக்குள் அழைத்து வரப்படுகிறான். கிரியும் ராமராவ் போலக் கவிதையில் ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான், பாடுகிறான். காம இல்லாத காதலும்தான்.

ஆனால் ஸ்ரீ பாலா புத்துயிர்ப்பில் வரும் மாஸ்லவா போல இருக்கிறாள் . அவனுடன் அறையில் தங்கும்போது ஸ்ரீ பாலா ராமராவ் கால் மேல் தன் காலைத் தூக்கிப் போடும் போடுவது, மாஸ்லவா நெஹ்லுவ் பார்த்து மகிழ்விக்க விரும்பும் ஆடவர்களைப் பார்த்துப் புன்னகை புரியும் அதே முறையில் புன்னகைப்பதை போல. ஒரு சமயம் நிர்வாணமாக அவன் முன்னாள் குளிக்கிறாள். தனது உடலை அவனுக்கு காட்டுவது ஒருவகையான திருப்பி அளிக்கிறது என நினைத்துக்கொண்டாள். ஆனால் அவன் அதை விரும்பவில்லை எனக் கண்டுகொண்டாள்.

அடியாட்கள் அவளைத் தேடும் போது அவள் ராமராவ் அறையில் எந்த கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியில் இருக்கிறாள். இது ஒருவகையான முரண். ஒரு ஆணுடன் முதல் முறையாக இருக்கிறேன் என்பதால் அந்த மகிழ்ச்சி என சொல்லுகிறாள். ஆனால் அவனோ ஒரு சமயம் திகிலில் அதே சமயம் மகிழ்ச்சியிலும் இருக்கின்றான். அவர்கள் இருவரும் தார்ச் சாலையில் முகிலைப் பார்த்துக்கொண்டு பாடல் பாடுவது ஒரு வகையான உச்சம் என்றே சொல்லலாம்.

இரு பக்கமும் இருக்கும் காதலை வெளிப்படுத்தாமல் ஆனால் இருவரும் அதனை உணர்ந்துகொண்டு அருகருகே இருப்பது என்பது ஒருவகை சொர்க்கம்.

அந்த முகில் இந்த முகில்
ஆகாயத்தின் நடுவினிலே
அதுபோல உள்ளம் இணையவேண்டும் நாம்.

தன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்காது என அவள் நினைத்தாலும், அவன் தன்னை காதலிக்கிறான் எனச் சொல்ல வேண்டுமென நினைக்கிறாள். இவனும் சொல்ல நினைக்கிறான். மலைவிளிம்பில் என்ற கதையில் தன் தந்தையைக் கொன்றவன் (சுந்தரம்) மலைவிளிம்பில் நிற்கும் போது அவனைக் கொன்று விடலாமென நினைக்கும் அதே சமயம் அதன் பின் விளைவுகளை எண்ணி பயத்தில் மயங்கி நின்று இருக்கும் நாயகன் தான் ராமராவ். இமயம் சொன்னது போல ஆண் பெண் உறவை ஏன் இந்த சமூகம் இப்படிச் சிக்கலாகி வைத்திருக்கிறது. காலம் அவர்கள் இருவரையும் பிரிக்கிறது.

ஆகாய நடுவினிலே இரண்டு முகில்கள் மெல்லக் கரைகின்றன
அன்பே வானில் அவை பரவுகின்றன
வானம் மட்டும் எஞ்சுகிறது.

வானம் மட்டும் எஞ்சுகிறது என்பதைப் பல முறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். சற்று ஏறக்குறைய சமூகத்தின் பெரும்பான்மையான காதல்கள் முறிந்து போகிறது. எல்லோரும் அவர்களுக்கான வாழ்க்கையைத் தேடிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். ஒருவேளை அவர்களின் அடியாழத்தில் அந்த நினைவு உறங்கும் போல. ஆனால் லட்சத்தில் ஒருவன்/ஒருத்தி தான் இப்படி காதலில் சிக்குண்டு வெளிவர முடியாமல் கிடப்பார்கள். தேங்கிப் போன நினைவுகள் அப்படியே கரைகின்றன, வானில் பரவுகின்றன, பின்பு அவை எங்கே போகின்றன? அந்த நினைவுகளுக்கு அவ்வளவுதான் வாழ்க்கையா?

கடைசியில் அவளைக் கண்டுவிடுகிறான் ராமராவ். ஆயிரம் முறை திரையில் அவளைப் பார்த்து விட்டு இப்படி நேரில் பார்க்கும் தருணம் வாய்க்கும் என்பதை அவனே நம்பாமல் போயிருந்தான். காலம் மறுபடியும் அந்த வாய்ப்பை உருவாக்குகிறது. தன்னை அவன் காதலிக்கிறான் என்பதை அவன் மூலமே அறிந்துகொள்கிறாள். காதலிக்கிறான் என்பதே போதும் எனச் சொல்லிவிட்டு அவனை விட்டு விலகிச்செல்கிறாள். சாதாரண மனிதனுக்கு இப்படி ஒரு காதல் இருக்குமா எனச் சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இலக்கியம் ஒருவகை லட்சிய காதலை மனிதனுக்கு அளிக்கிறது. காலகாலமாய் அது காமத்திலிருந்து காதலுக்கான ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டு இங்கு வந்து நிறுத்தி இருக்கிறது. காமம் பாவம் காதல் புனிதம் எனப் புரிந்து கொள்ளவேண்டியதில்லை. ராமராவ் ஸ்ரீ பாலாவையும் அவனது மனைவியையும் மூளையின் தனித் தனி இடங்களில் பதிந்து வைத்திருக்கிறான். ஒருபோதும் குழப்பம் வந்தது இல்லை என நினைத்துக்கொள்கிறான். அதே சமயம் அவனது மனைவிதான் தனது நிலைகொள்ளாமை ஆற்றுப்படுத்தினால் என்கிறான். குறிப்பாக அவளுடனான உறவில் தான் அப்படி உணர்ந்தான்.கடைசியில் ஸ்ரீபாலவைப் சந்திக்கும் போது அவனது காதலில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

காமம் விலங்குக்கானது காதல் மனிதனுக்கானது. காமம் உடலையும் மனத்தையும் பாதிக்கும் ஆனால் காதல் ஆன்மாவையும் பாதிக்கும். ஒரு படம் படம் என்பது காலத்தை அப்படியே உறைய வைக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அற்பங்கள் சேர்ந்து அற்புதங்களை உருவாக்கியிருக்கிறது. ஒருவகையில் சினிமாவில் பார்க்கும் அந்த முகில் இல்லை நேரில் பார்க்கும் முகில்.அது சினிமாவால் காட்டப்படும் ஒன்று. உண்மையான வாழ்க்கையை திரைத்துறையில் நடித்துப் பதிவு செய்து வைத்துக்கொள்கிறார்கள். அந்த வாழ்க்கையைப் பார்க்க வேண்டும் என்றால் அந்த படத்தைப் பார்த்துக்கொள்கிறார்கள் போலும்.

கடைசியில் படம் வேண்டாம் ஒரு பாடல் போதும், ஒரு பாடல் கூட வேண்டாம் ஒ வரி போதும்.”அந்த முகில் இந்த முகில்”

கே.மகேந்திரன்

முந்தைய கட்டுரைஅனந்தமூர்த்தியின் ‘பிறப்பு’
அடுத்த கட்டுரைஞாயிறு போற்றுதல், கடிதம்