ஞானி, கடிதங்கள்

ஞானி நூல் வாங்க

ஞானி மின்னூல் வாங்க

ஞானி – தமிழ் விக்கி

ஜெ,

கோவை ஞானி அவர்களைப் பற்றிய உங்களது நூலில் கீழ்க்கண்ட வரிகள் வருகின்றன.

‘அன்றாடத்தில் உள்ளது நம் மனம். ஆழ்மனம் தொன்மையில் உள்ளது. மனிதர்கள் அன்றாடத்தால் இழுக்கப்பட்டு தங்கள் தொன்மையில் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். அன்றாடத்தில் உழல்கிறார்கள். அன்றாடத்தை கடந்து தொன்மைக்குச் செல்வதே தியானம் என்பது. அந்த தொன்மை பலவற்றுடன் இணைந்தே உள்ளது. ஆனால் அடையாளம் காணமுடியாமல் அது மாற்றப்பட்டிருந்தால் எவரும் ஆழ்நிலைப் பயணத்தில் ஆழத்திற்கு திரும்பிச் செல்லவே முடியாதபடி ஆகிவிடும். ஆகவே தொன்மையை சென்றடைய தனித்தன்மை அவசியம்.

தமிழரின் மெய்யியலை வகுப்பது உரிமைக்காக மட்டும் அல்ல. பொருளியல் உரிமை, பண்பாட்டு உரிமை எல்லாம்கூட அடிப்படையில் மெய்யியல் உரிமைக்காகத்தான். வீடுபேறு என்று சொல்லப்படும் பெருநிலை மனிதர்களுக்கு உண்டு. அது இயற்கையுடன் இயைந்து மொத்தப் பிரபஞ்சமாகவும் தன்னை உணரும் பெருமனதை அடைதல். அதற்கு தொன்மைதேவை, அத்தொன்மையானது தனித்தன்மைகொண்ட தேசியத்தாலேயே பேணப்படமுடியும், அந்த தேசியம் தன் பொருளியலுரிமையை தக்கவைத்துக்கொண்டால் மட்டுமே நிலைகொள்ளமுடியும். அவ்வாறு தன்னுரிமை அடையும் தேசியத்திற்குள்ளே மட்டுமே உழைப்பாளர் உரிமைகொள்ள முடியும்’

பொதுவுடைமை என்பது பொதுவாக முழுக்க முழுக்க நடைமுறை உலகாயதம் சார்ந்ததாக கருதப்படும் சூழலில் ஞானியின் இந்த கருத்து பெரும் பாய்ச்சல்.  மெய்யியல் சார்பான தனிமனித தேடல் – தமிழர் மெய்யியல் – தமிழர் சுயநிர்ணயம் மற்றும் பொருளியல் சுயசார்பு என சரியான இணைப்பை அளிக்கிறார். செறிவான, தனித்துவமான சிந்தனை பாய்ச்சல்களை கொண்ட நூலை அளித்ததற்கு நன்றிகள் பல.

இ.ஆர்.சங்கரன்

***

அன்புள்ள ஜெ

ஞானி பற்றிய புத்தகத்தை வாசித்து முடித்தேன். பல நண்பர்களிடம் பேசினேன். எவருமே இந்நூலை வாசிக்கவில்லை. அவர்களெல்லாம் ஞானியை மறக்கவே விரும்புகிறார்கள். ஆகவே ஓர் அஞ்சலி செலுத்தியபின் அவரைப்பற்றிப் பேசவே இல்லை. உங்கள் நூலில் அவரைப்பற்றிய நினைவுகள் இருக்கும் என்று பலர் நினைப்பதாகத் தோன்றியது. இந்நூலில் நினைவுகள் குறைவு. ஞானி வாழ்ந்த காலகட்டத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனைகளும் இந்நூலில் உள்ளன. அவருடைய சிந்தனைகள் முழுக்கவே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 1960 முதல் 2020 வரையிலான அறுபதாண்டுக்காலத்தில் தமிழ்நாட்டில் சிந்தனையளவில் என்னென்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள மிக உதவியான நூல். சிந்தனைகளை கொள்கைகளாக வாசிக்கையில் உருவாகும் சலிப்பு இல்லை. சரளமான உரையாடல்களாக அவை வெளிப்படுவதனால் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கவும் முடிகிறது.

செல்வராஜ் அருள்

முந்தைய கட்டுரைஜெயக்குமார், ஆலயக்கலை- சாம்ராஜ் கடிதம்
அடுத்த கட்டுரைஆல்பர்ட் பௌர்ன்