பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்

மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க

சின்ன வயதில் படித்த ஒரு நிகழ்வு. தகழி சிவசங்கரப் பிள்ளை வைக்கம் முகமது பஷீரிடம் சொன்னார். “நான் ஒரு காதல் கதை எழுதப்போகிறேன்.”

பஷீர் பீடியை ஆழ இழுத்தபடி சொன்னார். “நாற்பத்தைந்து வயது கடக்காத எவர் எழுதிய காதல்கதையையும் நான் படிப்பதில்லை… காதல்கவிதை இளமையில் எழுதலாம். காதல் கதை எழுத ஒரு வயதுமுதிர்வு வேண்டும்.”

நாற்பத்தைந்து கடந்ததும் தகழி ‘செம்மீன்’ எழுதினார். பஷீர் அதன்பின்னர்தான் ’அனுராகத்தின்றே தினங்கள்’ என்னும் காதல் கதையை எழுதினார். பஷீரின் புகழ்மிக்க காதல்கதையான ’மதிலுகள்’ அதன்பின் எழுதப்பட்டது.

சென்ற ஆண்டு எனக்கு 60 ஆனபோது இயக்குநர், நடிகர், நண்பர் அழகம்பெருமாள் ஒரு வாழ்த்து அனுப்பியிருந்தார். கூடவே சொன்னார். “வாழ்த்தி வாழ்த்தி உங்கள வயசானவனாக்கிப் போடுவானுக பாத்துக்கிடுங்க… நல்லா காதல்கதைகள் நாலு எளுதி விடுங்க.”

அது ஒரு நல்ல எண்ணம் என்று தோன்றியது. ஆகவே எழுதலாமென எண்ணினேன். சென்ற அக்டோபரில் எழுத தொடங்கி இப்போது எழுதி முடிந்திருக்கிறது 12 காதல் கதைகள். இவற்றில் மூன்று கதைகள் மட்டுமே இணையத்தில் வெளியானவை. எஞ்சியவை எல்லாம் புதியவை.

காதல் என்று சொல்கிறேன். ஆனால் இவை ஒரு கணத்தின் கதைகள் மட்டுமே. ஆண் பெண்ணை கண்டடையும் கணம். ஆணும் பெண்ணும் அகம் தொட்டுக்கொள்ளும் கணம். ஒரு மாயக்கணம் அது. பின்னர் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க நினைத்துக்கொள்ளப்போகும் வாழும்தருணம்.

அது அடிப்படையில் ஒரு மனித உள்ளம் இன்னொரு மனித உள்ளத்தை அணுகியறியும் ஒரு தருணம். ஆசிரிய மாணவ உறவை விட்டால் முற்றிலும் அயலான இருவர் அணுகி இணையும் தருணங்களில் மிக மிக நுட்பமானதும், ஆழமானதும் அதுவே. அதைத்தான் எழுத முயன்றிருக்கிறேன்.

இன்று என் பிறந்தநாள். இன்று அந்நூல் வெளியாகிறது. நல்லதுதான், நான் எங்கே சாமியாராகிவிடுவேனோ என்று சதா அஞ்சிக்கொண்டிருக்கும் அருண்மொழிக்கு மிக ஆறுதலளித்த நூல் இது. இப்போது அருண்மொழியுடன் எர்ணாகுளத்தில் இருக்கிறேன்.

தமிழில் மிக நுண்ணிய சில மானுடத்தருணங்களை எழுதிக்காட்டிய வண்ணதாசனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல் இது.

ஜெ

முந்தைய கட்டுரைடி.என்.சேஷாசலம்
அடுத்த கட்டுரைஇவான் இல்யிச்சின் மரணம், கடிதம்