இனிய ஜெயம்
இன்று வேலூரிலிருந்து ஒரு வாசகி அழைத்திருந்தார். உங்கள் தளத்தின் தொடர் வாசகி. அவர் மகள் பத்தாவது முடிக்க போகிறாராம். விடுமுறையில் மகளுக்கு பள்ளிக் கல்விக்கு வெளியிலான பிற பொது கல்வி குறித்து அறிமுகம் செய்ய விருப்பமாம். சில ஆண்டுகள் முன்பு உங்கள் தளத்தில் பத்தாவது முடித்த பருவம் என்பதை எல்லையாக கொண்டவர்கள் எங்கே எதில் பொது வாசிப்பை துவங்கலாம் என்று ஒரு புத்தகப் பட்டியல் பரிந்துரை பார்த்த நினைவு, அதை மீண்டும் எப்படி கண்டு பிடிப்பது என்று கேட்டார். (அந்த பரிந்துரைப் பட்டியலை அளித்தவன் நான்தான்) சுட்டியைக் கண்டடைந்து அவருக்கு அனுப்பி வைத்தேன்.
தமிழ் நிலம் முழுக்க புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெறுவதில் உள்ள முக்கிய முதன்மை அம்சம் என்று இதையே சொல்வேன். பெரிதாக எங்கும் செல்ல வாய்ப்பு இல்லாத, சென்னை கோவை போன்ற நகரங்களுக்கு வர இயலாத அந்தந்த மாவட்ட எல்லைச் சிறு நகரங்கள் கிராமங்களில் உள்ள இல்லத்துப் பெண்கள் பெருமளவு புத்தகத் திருவிழா எனும் கலாச்சார அசைவுக்குள் பங்கெடுக்க முடிவது.
வாசிப்பு எது எனினும் தமிழ் நிலத்தைப் பொறுத்த அளவில் அன்றும் இன்றும் வெளியே தெரியாத மௌன வாசகர்களான பெண்களால்தான் பொது வாசிப்பு எனும் சூழல் நிலைகொண்டிருக்கிரது. அந்த வகையில் அத்தகு பெண்களோ அவர்களின் அடுத்த தலைமுறையான மகள்களோ இன்றைய புத்தக விழாக்கள் சூழல் வழியே வாசிப்பு உலகுக்குள் உள்ளே நுழைகையில் அவர்கள் முன்னே நிற்கும் முதல் இடர் எங்கே துவங்குது என்பது. இரண்டாவது இடர் அவர்கள் மேல் மழை போல விழுந்து அவர்களை வெள்ளம் என அடித்து செல்லும் பரிந்துரை பட்டியல்கள்.
சும்மா 2023 புத்தகப் பரிந்துரை என்று சொடுக்கிப் பார்த்தால், பெருகி ஓடும் யூ டியூப் சானல்கள், முக நூல் சுவர்கள் என வெவ்வேறு வழிகளில் சென்னை புத்தக சந்தையின் 1000 அரங்குகளில் உள்ள எல்லா புத்தகங்களும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. பொது வாசிப்போ தீவிர இலக்கியமோ, எதன் பொருட்டு, எவரை இலக்காக கொண்டு, எவர் செய்யும் பரிந்துரைகள் இவை என்பதில் எந்த தெளிவும் இல்லை. அதிலும் உச்சம் விமர்சனம் எனும் தளம்.
https://vimarsanam.in/category/book-recommendations/
சென்னை புத்தக சந்தை நடந்த 20 நாளும் தினம் ஒரு ஆளுமை வழியே 5 புத்தகங்களை அது பரிந்துரை செய்தது. தள நிர்வாகி யாரென அறியேன் ஆனால் நிச்சயம் அவர் ஒரு மாமா பெரும் மேதையாகவே இருக்க வாய்ப்பு. எழுத்தாளர் எனும் தகவலுடன் அவரது பெயர் புகைப்படம் மட்டும் இருக்கும். அவர் என்ன நூல் எழுதி இருக்கிறார் இன்ன பிற தகவல் இதுவும் இருக்காது. அவர் பரிந்துரை செய்ததாக 5 நூல் இருக்கும். பெயர் இருக்கும் பதிப்பக விவரம் இருக்கும். மற்றபடி அந்த நூல்கள் எந்த விதத்தில் முக்கியத்துவம் கொண்டது, அவை ஒவ்வொன்றின் தனித்தன்மை என்ன, எதனால் அது படிக்கப்பட வேண்டிய நூல் என ஒரு தகவலும் இருக்காது இப்படியே 20 நாள். அதில் பரிந்துரைக்க பட்ட நூல்களில் சில சப்பாத்திக்கள்ளி செடியை ஆலிங்கணம் செய்த அனுபவத்தை வாசிபின்பமாக அளிப்பவை
உதாரணமாக வழி கூறும் மூளை எனும் மொழி ‘பெயர்ப்பு’ நூல். பரிந்துரைத்தவர் அந்த நூலைப் புரட்டி நான்கே நான்கு பக்கம் வாசித்திருந்தால் கூட இந்த அபவாதத்தை நிகழ்த்தி இருக்க மாட்டார். ஆக அந்த பரிந்துரையில் பல நூல்கள் பரிந்துரைத்த அந்த ஆளுமைகளே இன்னும் வாசிக்காத நூலாகவே இருக்க வாய்ப்பு மிகுதி. பின்நவீன காலம் இல்லையா. அது அவ்வாறுதான் இருக்கும். இத்தகு நிலவரம் இன்னும் இன்னும் பெருகவே வாய்ப்பு. இத்தகு சூழலில்தான் உங்கள் தளமும் அதில் வரும் வாசிப்பு அனுபவங்களும், புத்தகப் பரிந்துரைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இனி வரும் காலத்தில் இந்த முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். அந்த வகையில் நான் அளித்த அந்த பட்டியலில் உள்ள முதன்மைத் தகுதி அந்த நூல்களின் முதல் தீவிர வாசகன் நானே என்பது.
புத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் – கடலூர் சீனு
அந்தப் பட்டியலலைக் கொண்டு வாசிப்பு நிகழ்த்தி, அதன் வழியே தனது பாதை இது என்று கண்டு கொள்ள, சாத்தியம் உள்ள எல்லா வழிகளையும் ஒரு வாசகன் உசாவி அறியலாம். ஒவ்வொரு துறை சார்ந்த நூலும் அந்த துறையின் சிறந்த ஆளுமைகள் வழியே உருவானது. இந்த பட்டியலில் உள்ள எந்த நூலுமே வாசிப்புக்கு, வாசகனின் மன வாசிப்பு ஓட்டத்துக்கு, எந்த இடரையுமே அளிக்காதது. இந்த பட்டியலில் உள்ள எந்த ஒரு நூலுமே நிச்சயம் வாசகனை ஏமாற்றும் போலி நூல் அல்ல. அனைத்துக்கும் மேலாக இந்த நூல்களில் எதுவும் வாசகனை நோக்கி இறங்கி வரும் நூல் அல்ல. வாசகனை ஏறி வரச் சொல்லும் நூல். வாசிப்பே அதற்காகத்தானே.
இனி வரப்போகும் பரிந்துரைப் பட்டியல்களின் புயல் மழை பேறூழிக் காலத்துக்குப் பின் என்றும் முக்கியத்துவம் கொண்ட பட்டியலாக ஏஞ்சப்போகும் என்று நான் யூகிக்கும் இந்தப் பட்டியலில் இப்போதும் எந்த மாற்றமும் தேவைப்பட வில்லை. சில நூல்களின் பதிப்பகங்கள் மட்டும் மாறி இருக்கின்றன. ஜெயமோகனின் எல்லா நூல்களும் விஷ்ணுபுரம் பதிப்பகம் எனும் ஒரே குடையின் கீழ் கிடைக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் வெளியான நூல்களில் சிலவற்றை இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் எனில் கீழ்கண்ட நூல்களை சேர்ப்பேன்
ஓவியங்கள்.
மேற்கத்திய ஓவியங்கள். இரண்டு பாகம். எழுத்தாளர் பி..ஏ. கிரிஷ்ணன். காலச்சுவடு பதிப்பகம்.
இந்திய ஓவியங்கள். எழுத்தாளர் அரவக்கோன். கிழக்கு பதிப்பகம்.
ஓவியங்கள், தேடுதல்கள் புரிதல்கள். இரண்டு பாகங்கள். ஓவியர் கணபதி சுப்ரமணியம். யாவரும் பதிப்பகம்.
தத்துவம்.
கீழைத் தத்துவங்கள். தொடக்க நிலையினருக்கு. எழுத்தாளர் ஜிம் பாவேல். தமிழில் பூர்ணசந்திரன். அடையாளம் பதிப்பகம்.
இலக்கியக் கலை.
படைப்புக் கலை. எழுத்தாளர் அசோகமித்திரன். காலச்சுவடு பதிப்பகம்.
எழுதும் கலை. எழுத்தாளர் ஜெயமோகன். விஷ்ணுபுரம் பதிப்பகம்.
வாசிப்பின் வழிகள். எழுத்தாளர் ஜெயமோகன். விஷ்ணுபுரம் பதிப்பகம்.
வாழ்க்கை வரலாறு.
தென்னாப்ரிக்காவில் காந்தி. எழுத்தாளர் ராமச்சந்திர குகா. கிழக்கு பதிப்பகம்.
சுதந்திரத்தின் நிறம். தொகுப்பு லாரா கோப்பா. தமிழில் B R மகாதேவன். தன்னறம் வெளியீடு.
சூழலியல் உலக இலக்கியம்.
ஓநாய் குலச் சின்னம். எழுத்தாளர் ஜியாங் ரோங். மொழியாக்கம் சி. மோகன். புலம் வெளியீடு.
சூழலியல் பயண இலக்கியம்.
டெர்சு உஸாலா. எழுத்தாளர் விலாதிமிர் ஆர்சென்யெவ். தமிழில் அவை நாயகன். ஓசை பதிப்பகம்.
அறிவியல்.
கிட்டத்தட்ட அனைத்தையும் பற்றிய சுருக்கமான வரலாறு. எழுத்தாளர் பில் ப்ரைசன். தமிழில் p s v குமாசரசாமி. மஞ்சுள் பப்ளிகேஷன்.
வரலாறு.
உப்பு வேலி. எழுத்தாளர் ராய் மாக்ஸம். தமிழில் சிரில் அலெக்ஸ். கிழக்கு பதிப்பகம்.
தே., ஒரு இலையின் வரலாறு.
எழுத்தாளர் ராய் மாக்ஸம். தமிழில் சிரில் அலெக்ஸ். கிழக்கு பதிப்பகம்.
பேரரசன் அசோகன். மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு. எழுத்தாளர் சர்லஸ் ஆலன். தமிழில் தருமி. எதிர் வெளியீடு.
சுயம் தெளிதல்.
தன் மீட்சி. எழுத்தாளர் ஜெயமோகன். தன்னறம் வெளியீடு.
இந்தப் பட்டியலில் சாதி, சமூக, அரசியல், உலக சினிமா போன்றவை குறித்த புனைவோ அ புனைவோ எதுவும் இல்லை. ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது சார்ந்த வாசிப்பு குப்பைகள் ஒருவர் தலையில் வந்து கவிழ்ந்தே தீரும். எனவே அதில் பரிந்துரைக்க வாசகன் என்ற ஒருவர் தேவை இல்லை.
கடலூர் சீனு