பொன்னியின் செல்வன், இன்று

இன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பகுதி வெளியாகிறது.இந்த ஆண்டின், இந்த மாதத்தின் இரண்டாவது படம் இது. விடுதலை இன்னும் திரையரங்குகளில் அதே விசையுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்று நான் நாகர்கோயிலில்தான். அருகே எங்காவது சென்று படத்தைப் பார்க்கலாமென்று எண்ணம். படம் வெளியாகி  மூன்றுமணிநேரத்தில் அதன் ரசிகவெளிப்பாடும், வணிகமதிப்பும் தெரிந்துவிடும். அதன்பின் விமர்சனங்கள் பற்றி  உடனடியாகத் தெரிந்துகொள்ள ஏதுமில்லை. இணையக் ’கருத்தாடல்’களில் என்னென்ன பேசப்படும் என முன்னரே தெரியும்.

ஆகவே 29 அன்று கிளம்பி வழக்கமான மலைத்தங்குமிடத்துக்கே சென்று அங்கே இருக்கலாமென திட்டமிட்டிருக்கிறேன். அங்கே மின்னஞ்சல்கள் மட்டுமே பார்க்கமுடியும். ஒரு வாரம் கழித்து மீண்டும் சினிமா உலகில் நுழையலாமென்று திட்டம்.

சினிமா உருவாக்கும் இந்த பதற்றத்தில் சினிமாக் கலைஞர்கள் திளைப்பதைக் கண்டிருக்கிறேன். சினிமாவில் தையல்கலைஞர், சமையற்கலைஞராக பணியாற்றுபவர்களுக்குக் கூட இந்தப் பதற்றம் இருக்கிறது. ஏனென்றால் மக்கள்ரசனை என்பது சமகாலம் என்பதன் இன்னொரு பெயர். என்னென்ன விரும்பப்படுகிறது, எப்படி ரசிக்கப்படுகிறது என்று முன்னரே சொல்லிவிடமுடியாது. ஏன் என்பதை எவராலும் விளக்கமுடியாது.

’பொன்னியின் செல்வன், விவாதங்கள்’- ஒரு நூல்

பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க

முந்தைய கட்டுரைமலர்த்துளியின் பொருள்?
அடுத்த கட்டுரைமலம், வெண்முரசு- கடிதம்