பொன்னியின் செல்வன் உருவாக்கக் காட்சிகள்

பொன்னியின் செல்வன் படத்தின் உருவாக்கம் பற்றிய வீடியோக்கள் வரத்தொடங்கியபோது எனக்கு வந்த கடிதங்களில் சில எங்கோ வாசித்தவற்றை முன்வைத்து ஒரு விமர்சனத்தைக் கூறின. ‘ஒரு சினிமாவின் உருவாக்கத்தில் அப்படி என்ன இருக்கிறது? நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சினிமாக்காரர்கள் கடுமையாக உழைத்தோம் என்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லாரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள்.”

அப்படி அவர்கள் சுட்டிக்காட்டும் ‘எவ்வளவோ’ விஷயங்கள் ஒன்றும் அறிவியலாய்வோ அறிவுச்செயல்பாடோ படைப்புநிகழ்வோ அல்ல. எளிமையான அரசியல் நிகழ்வுகள்தான். அதை பகலிரவாக, ஆண்டாண்டாக பேசிக்கொண்டிருப்பதில் சலிப்பில்லை. இது அவர்களுக்குச் சலிப்பூட்டுகிறது. இச்சலிப்பு பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்குரியது. அவர்கள் மிகச்சிறிய அளவிலேனும் அவர்களைவிட்டு கவனம் விலகுவதை விரும்புவதில்லை.

உண்மையில் ஒரு சினிமாவின் உருவாக்க காட்சிகளில் அப்படி என்ன இருக்கிறது? ஏன் லட்சக்கணக்கானவர்கள் அதைப் பார்க்கிறார்கள்? அது வெறுமொரு கட்டுமானச் செயல் அல்ல. அது கலை. ஒரு கனவை புறநிகழ்வாக ஆக்குகிறார்கள். இல்லாத ஒன்றை உருவாக்குகிறார்கள். சிற்பம், ஓவியம் ஆகியவற்றின் உருவாக்கமும் அதே அளவுக்கு ஈர்ப்பானவை.

ஆனால் சினிமா ஒரு படி மேல். அதில் எல்லா கலைகளும் உள்ளன. இலக்கியம், நாடகம், இசை, ஓவியம், சிற்பம். அனைத்துக் கலைகளையும் ஒருங்கிணைக்கும் மாபெரும் நிர்வாகமும் உள்ளது. ’சினிமா என்பது ஒரு தொழிற்சாலையின் ஓசையை இசையாக மாற்றும் கலை’ என்பார்கள். அத்தனை விதமான மக்கள், அத்தனை தனித்திறமைகளும் ரசனைகளும் கொண்டவர்கள், ஒத்திசைந்து ஒரு விஷயத்தைச் செய்து முடிப்பதே ஒரு சமூகச்சாதனைதான்.

அந்தவகையான ஒத்திசைவை எப்போதுமே சமூகம் கொண்டாடி வருகிறது. உலகமெங்கும் பலநூறுபேர் மேலே மேலே ஏறிநின்று மானுடக்கோபுரங்களை அமைப்பது போன்ற விளையாட்டுகள் உள்ளன. பல ஆயிரம் பேர் சுட்டுவிரலை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரிய கல்தூண்களை தூக்கும் விளையாட்டுகள் உள்ளன. அவை எல்லாமே ஒரு சமூகம் தன் ஒத்திசைவைக் கொண்டாடுவதன் சான்றுகள்.

ஒரு சமூகம் ஒன்றாகத் திரண்டு உண்டுபண்ணும் கலை என்பது ஒரு படி மேலான ஒத்திசைவு தேவையானது. தொழில், அல்லது விளையாட்டில் ஒத்திசையவேண்டியது உடல். இங்கே உள்ளம். கனவுகள் ஒன்றாகவேண்டும். ஒரு கனவை பலநூறுபேர் சேர்ந்து உருவாக்குறார்கள். பார்வையாளர்களும் அக்கனவுடன் இணைகிறார்கள்.

அத்தகைய கொண்டாட்டங்கள் முன்பு ஊருக்கு ஊர் இருந்தன. வடமாநிலங்களில் அர்ஜுனன் தபசு போன்ற கூத்துநிகழ்வுகளில் ஊர் முழுக்கவே ஈடுபடும். ஊரே அஸ்தினபுரி ஆகிவிடும். அத்தனைபேரும் மகாபாரதகால குடிமக்கள் ஆகிவிடுவார்கள். தென்தமிழகத்தின் கூத்துக்கலைகளில் ஊரிலிருக்கும் அனைவருக்குமே இடமிருக்கும். அந்த ஒத்திகைகளில் ஊரார் அனைவருமே பங்குபெறுவார்கள். கூத்து அளவுக்கே ஒத்திகைகளுக்கும் கூட்டமிருக்கும்.

இப்படித்தான் உலகமெங்கும் சமூகங்கள் திரண்டு கொண்டாடி தங்களை தொகுத்துக்கொண்டிருக்கின்றன. கனவுகளை கூட்டாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அக்கனவுகளே அவர்களை இணைக்கும் விசை. தங்கள் கடந்தகாலம் பற்றிய கனவுகள், வரலாற்று நினைவுகள், தொன்மங்கள், கதைகள், கலைகள் என அக்கனவுகள் பரந்துள்ளன. சோழர்காலம் என்பது அத்தகைய ஒரு கனவு. அதை தமிழ்ச்சமூகம் கூட்டாக சேர்ந்து உருவாக்குவதே பொன்னியின் செல்வன்.

’பொன்னியின் செல்வன், விவாதங்கள்’- ஒரு நூல்

பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க

முந்தைய கட்டுரைராஜ் கௌதமன்
அடுத்த கட்டுரைஇமையம், தலித் இலக்கியம் பற்றி மீண்டும்…