குருகுலங்களை அணுகுதல்

அன்புள்ள ஜெ

எக்காலத்திலும் இருந்தது போன்றே இன்றும், இளமைப்பருவம் முடிந்து நடுவயதை தொடும் ஒருவருக்கு, ஆன்மீகம், துறவு ,வீடுபேறு, குருகுலம் போன்றவற்றின் மீது மெல்ல நாட்டமும் ஈடுபாடும் ஏற்படத்தொடங்கி, பல்வேறு இடங்களுக்கு செல்லுதல், ஆன்மீகத்தில் இருப்பவர்களை தொடர்பு கொள்ளுதல், தீர்த்தயாத்திரை செல்ல தயாராகுதல் என, வாழ்வின் அடுத்த கட்டத்திற்கான தயாரிப்புகள் துவங்குகிறது.

உங்களுடைய தளத்திலும் கூட, மரபு, குருமார்கள், தொன்மம், ஆன்மீகம், துறவு போன்ற சொற்கள் கொண்ட  பதிவுகளுக்கே அதிக ‘பார்வைகள்’ வந்திருக்கும் என நம்புகிறேன். கடந்த இருபது வருடங்களாக இந்தியாவின் பெரும்பாலான குருகுலங்களுக்கும் ஆன்மீக சாதனைப்பள்ளிகளுக்கும் சென்றுகொண்டிருப்பவன் என்கிற முறையிலும்,  இன்று அவற்றின் செயல்பாடுகளை ஓரளவு தொகுத்து புரிந்துகொண்டவன் மற்றும் சாதகன் என்கிற முறையிலும் இந்த கடிதத்தில் சிலவற்றை தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

இது போன்ற குருகுலங்கள், ஆஸ்ரமங்கள், பல்வேறு   வகைமைகளை கொண்டவை. முதல் வகை அனைவருக்குமானது. அங்கே சடங்கு சம்பிரதாயம், பொதுமக்கள் வழிபாட்டுக்கு ஒரு இடம், கற்றுக்கொள்ள ஏதேனும் ஒரு பயிற்சித்திட்டம். அனைத்து சாதி சமயத்தவருக்கும் பொதுவான நிகழ்வுகள், பண்டிகை காலங்களில் அதனோடு கூடிய விழாக்கள், என ஒரு கொண்டாட்டமான  நிலையும், அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் தன்மையும் எப்போதும் இருக்கும். ஆகவே இது போன்ற குருநிலைகளில் மூத்தவரும் முக்கியமான ஒருவரும் ‘குரு’ எனும் நிலையிலிருந்து இவற்றை வழிநடத்திக்கொண்டிருப்பார். எப்போதும் பொதுவெளியில்  உரையாடிக் கொண்டிருப்பார். மக்களை நோக்கி பேசுவார் விமர்சனம் செய்வார், செய்யப்படுவார். சத்சங்கங்கள் நடத்துவார், எனினும் இவர்கள் நீண்ட கால அளவில் ஏதேனும் ஒரு வலுவான அமைப்பை கட்டி எழுப்பியிருப்பார்கள். பெரும்பாலும் அந்த அமைப்பு,  சமூகத்திற்கு  பயன் தரக்கூடிய ஒரு செயலை செய்திருக்கும். இதில் மோசமான விதிவிலக்குகளும் உண்டு.

ஒருவர் தன் வாழ்வின் இரண்டாம்கட்ட தேடலை இங்கிருந்துகூட தொடங்கலாம். இதே குருகுலங்களில் அவருக்கான பிரத்யேக பயிற்சித்திட்டம் ஒன்று நிச்சயமாகவே இருக்கும். அந்த குருநிலையுடன் உரையாடி அவருக்கானதை அடையலாம். சாதகனாக தன்னை அந்த ஆஸ்ரமத்துடன் இணைத்துக்கொள்ளலாம் அல்லது வெறும் பார்வையாளனாக சென்று அமர்ந்து கொண்டாட்டங்களில் பங்கெடுத்துவிட்டு வரலாம்.சாதகன், பார்வையாளன் என்கிற இரண்டு தரப்பிற்கும் தங்கள் கதவுகளை திறந்து வைத்திருப்பவை இவ்வகை குருநிலைகள். உதாரணமாக :  ஈஷா யோகா, ஆர்ட் ஆப் லிவிங் .போன்ற இடங்கள். இவற்றில் முன்பதிவு செய்து ஓரிருமுறை சென்று பார்த்து பழகி உள்ளே செல்லலாம். தொடரலாம்.

அடுத்த,  ‘குருநிலைகள்’  தனித்தவை,  சாதகர்களுக்கானவை, தீவிரமாக ஒன்றை மாணவர்களை நோக்கி சொல்பவை. இவற்றை ஒரு கல்வி நிறுவனத்திற்கு இணையாக வைக்கலாம். இவை மரபார்ந்த பாடத்திட்டம் முதல் நவீன அறிவியலுடன் இணைத்து ஒன்றை சொல்லிக்கொடுக்கும் முறைமை வரை பல்வேறு வகையான பாடங்களும், ஆசிரியர்களும் கொண்டவை, இங்கே  களரி, யோகம், உளவியல், பக்தி, தாந்த்ரீகம், மந்திர சாதனை, துறவற சாதனை, நூல் பயில்தல், சமூக சேவை, கர்மயோக சாதனை, என நீண்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான குருநிலைகள்,பௌத்த மடாலயங்கள், சமண நிலைகள்,  இன்றும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இவ்வகை நிறுவனங்கள் மாணவர்களுக்காக தங்கள் கதவுகளை திறப்பவை, இங்கே பெரும்பாலும்  ஒன்றிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இருப்பர், கற்றுத்தருவதற்கான முகாம்களை நடத்துவர், மாணவர்களை ஒருங்கிணைப்பர், அடுத்தடுத்த பாடங்களை வருடந்தோறும் நடத்திக்கொண்டே இருப்பார்கள், இவர்கள் மாணவர்களையே பெரிதும் சார்ந்திருப்பதால், பொதுவெளியில் பெரிய நிகழ்வுகளை நடத்துவதில்லை, எப்போதேனும் அவ்வாறு நடந்தாலும் அது குறிப்பிட்டவர்களுக்கான அழைப்பாகவே இருக்கும்.

இவ்வகை குருகுலங்களில் சாதாரணமாக ஒருவர் பார்வையாளனாக சென்று வரலாமே தவிர அவர் பெறுவது என எதுவுமிருக்காது.  ஆர்வமிருக்கும் பட்சத்தில் சிறிது நாட்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்து , மாணவனாக  தன்னை இணைத்துக்கொள்ளலாம்.

அடுத்ததாக பார்வையாளர்களுக்கான ஆசிரமங்கள். இங்கே ஒரு துறவியின் சாமாதியோ, வழிபாட்டுக்கான இடமோ, அமைந்திருக்கும், அவரின் போதனைகள், எழுதிய நூல்கள், ஏற்படுத்திய பாதை என மையமாக அவரை அல்லது ஒரு கருத்தை சுற்றி இயங்குபவை. இவ்வகை குருகுலங்களை தொடர்பு கொண்டு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் சென்று தங்கி அந்த சூழலை அனுபவித்துவிட்டு வரலாம். நூல்களை வாங்கி படிக்கலாம். அவர்கள் நடத்தும் ‘உள்வட்ட’ விழா அழைப்புகளில் கலந்து கொள்ளலாம். எனினும் படிப்படியான பாடத்திட்டம் என ஒன்றை எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய நோக்கமும் பாதையும் அதுவல்ல.  பெரும்பாலான இறை தூதர்கள் மற்றும் ஞானியரின் சமாதிகள், சித்தர் பீடங்கள், என இதன் பட்டியல் மிக நீண்டவை, பாரதம் முழுவதும் காணக்கிடைப்பவை.

உதாரணமாக  தெற்கே ரமணாசிரமம்,  இமயத்தில் சிவானந்த ஆஸ்ரமம். இரண்டுமே காலை முதல் மாலை வரை திறந்திருக்கும் பகலில் ரமணரின் பக்தி பாடல்கள் பாடப்படும் சுற்றி அமர்ந்து கேட்கலாம், அல்லது ரமணருடைய சமாதியை சுற்றி அமைதியாக அமர்ந்து தியானிக்கலாம் , வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கலாம், கதவடைக்கும் போது எழுந்து செல்ல வேண்டும்.  ரிஷிகேஷ் சிவானந்த குருகுலத்தில் இதுவே முறை. உள்ளே சென்று அவருடைய சமாதிக்கு மலரிட்டு வணங்கலாம், அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்திருந்து எழுந்து வரலாம்.  அலுவலகத்தில் சொல்லி மதிய உணவருந்தலாம். என பார்வையாளர்களுக்கானவை.  இவ்வகை குருநிலைகளிலும் தீவிர சாதனைக்கான பாடத்திட்டங்கள் இருக்கும், எனினும் பலமுறை தட்டப்பட்டபின் திறக்கும் கதவுகள் அவை.

அடுத்து, தனித்த மிகச்சிறிய பெருநிறுவனமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள எத்தனிக்காத, ஆளுமைகள் நடத்தும் அல்லது அவர்கள் ஏற்படுத்திய ‘குருநிலைகள்.  இங்கே முதன்மை நோக்கம், உள்ளிருந்து சாதனை செய்துகொண்டிருக்கும் ஒருவருக்காக மட்டுமே இயங்குவது, வெளியிலிருந்து வந்து செல்பவர்களை எந்த விதத்திலும் கணக்கில் கொள்ளாதது.  தங்களை பெருந்திரலிலிருந்து துண்டித்துக்கொண்டவர்கள். அதே வேளையில் பெருந்திரலின் அளவுக்கே தீவிரமாக இயங்குபவர்கள். பக்தியோ , அத்வைதமோ , தத்துவமோ , சடங்கு சம்பிரதாயமோ, ஏதோ ஒன்றில் ஊன்றி அதில் நிலைத்து நிற்பவர்கள் ஆகவே இவர்கள் குறுங்குழுக்கள், இவர்களால் உந்தப்பட்டு தீவிரமாக வெளியுலகில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம், எனினும் அதை அவர்கள் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.

ஆகவே இவ்வகை குருநிலைகளுக்கு, சீக்கிரம் ‘புண்படும்’ இயல்புள்ளவர்கள் போகாமலிருப்பது நல்லது. பதினைந்து வருடமாக இப்படி ஒரு குருநிலைக்கு வருடம் ஒருமுறை சென்று பத்து நாட்கள் தங்குகிறேன். இன்று மீண்டும் அங்கே சென்றாலும், ஒரு சிறு புன்னகையுடன் ‘யார் நீங்கள்?  வருவதாக கடிதம் அனுப்பி இருந்தீர்களா ? என்பது தான் முதல் கேள்வியாக இருக்கும்.இதில் ஒருவர் ‘சுயம்’ புண்பட தொடங்கினால், இவ்வகை ஆசிரியர்களின் ஞானம் எதையுமே பெறமுடியாது என்பதால்.அவர்கள் கேட்பதற்கு நேரடியான பதில்களை சொல்லிவிட்டு அவர்களருகில் சிறிது நேரம் அமர முடிந்தால், நம்மை சாதகன் என சொல்லிக்கொள்ளலாம். இல்லையெனில் பார்வையாளனாகக் கூட இங்கே செல்லவேண்டாம் என்றே சொல்வேன்.

இவ்வகை ஆசிரமங்கள், ஞானக்கருவூலங்கள் என்பதால் தொடர்ந்து தட்டவேண்டியது ஒரு மாணவனின் கடமை, ஞானம் வேண்டி நிற்கும் ஒருவன் தொடர்ந்து தட்டி  திறக்கவேண்டிய கனத்த கதவுகள் அவை. உதாரணமாக நமது ஊட்டி குருகுலத்தில் சுவாமி வியாச பிரசாத், எனும் ஆசிரியர் குரு நித்யாவின் வடிவாக அமர்ந்திருக்கிறார், ஒருமுறை நமது நண்பர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் அவரும் கலந்துகொண்டார், நாம் அனைவரும் பரபரப்பாக விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருக்க, அவர் ”இப்படி பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தால் எப்படி மனம் அமைதி பெரும் எப்படி ‘மேலான’ ஒன்றுடன் தொடர்பு கொள்ள முடியும்?” என வினவினார்.

அதே போல ”பிஹார் யோக பள்ளி” கோவிட் நோய் தொற்று காலத்தில் பொதுமக்களுக்காக மூடப்பட்டு இன்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. என்றே வைத்திருக்கிறது. எனினும் வருடத்தில் பத்து முகாம்களாவது நடக்கிறது, முறைப்படி விண்ணப்பிக்கும் இருபது அல்லது முப்பது பேருக்கு மட்டுமே அந்த தீவிரக்கல்வி வழங்கப்படுகிறது. இதை பற்றி சுவாமி நிரஞ்சனானந்த சரஸ்வதியுடன் பேசுகையில், ”இந்த நான்கு ஐந்து வருட காலத்தில் நாங்கள் இன்னும் தீவிர சாதகர்களாக மாறி இருக்கிறோம், அடுத்த ஐம்பது வருடத்திற்கான யோக பாடத்திட்டத்தை ஏற்படுத்தி அட்டவணை செய்திருக்கிறோம், இனி யோகம் இந்த திசையில் தான் செல்லும்’ என ஆணித்தரமாக கூறுகிறார்.

ஆக இவ்வகை குருகுலங்கள் தங்களுக்கான தனித்த பாதையில் இயங்கிக்கொண்டிருப்பவை. நமது வெள்ளிமலை நித்யவனமும் இப்படியான ஒரு அமைப்பாகவே உருமாற வேண்டுமென விரும்புகிறேன். தீவிர மனம் கொண்டவர்கள், தேடலில் கண்டடைந்து , தொடர்பு கொண்டு, விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்டு  மாணவர்களாக வந்தமரவேண்டும்,  அவர்களை நோக்கியே நாம் உரையாடவேண்டும், ஆகவே நமது யோகமுகாமிற்கு பாடத்திட்டங்களை வடிவமைக்கும் பொழுது, சுவாமி நிரஞ்சன் சொன்னது போல அடுத்த ஐம்பது வருடங்களுக்கான, யோக -தியான பயிற்சிகளை வடிவமைத்தேன்.  இந்த முகாம்கள் அவர்களுக்கானவை.

மேலும் சிலவகை குருநிலைகள், கிட்டத்தட்ட தனி நபர்கள், அல்லது சிறு குழுக்கள் நடத்துபவை.ஒருமுறை கல்கத்தாவின்  புறநகர் பகுதியில் மூன்று நபர்கள் மட்டுமே இருக்கும், ஒரு ஆஸ்ரமத்தை கண்டேன், அதில் மூத்த துறவி பகலில் வேலைக்கு செல்கிறார், குறைந்தபட்ச உணவோ, பணமோ கிடைத்தவுடன் திரும்பி வந்து உணவு தயாரிக்கிறார், மற்ற இருவரும், மூத்தவர் வரும்வரை  தாந்த்ரீக பயிற்சியில் ஈடு படுகிறார்கள், அவர் வந்ததும் பயிற்சியை நிறுத்திவிட்டு அவருக்கு உதவுகிறார்கள், இரவில் மூவரும் ‘துஹ்ணீ ‘ எனும் சிறிய  குண்டத்தில் நெருப்பு மூட்டி மீண்டும் நடுநிசி வரை பயிற்சி செய்கிறார்கள். நான் சென்ற போது எனக்கும் உணவு தரப்பட்டது, காலையில் நான் கிளம்புகிறேன் என்றதும் ஒரு தேநீர் தயாரித்துக்கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

சமீபத்தில் நண்பர் சுபஸ்ரீ அருணாச்சல பயணம் மேற்கொண்டார், அங்கே தனித்த கட்டிடம் ஒன்று பெண் துறவிகளுக்காகவே இருப்பதை சுட்டிக்காட்டி, அந்த மடாலயத்தில்  நாற்பது, ஐம்பது பெண் துறவியர் இருப்பதையும் அவர்கள் பகலில் விவசாய வேலைக்கு செல்வதையும் குறிப்பிட்டார். இப்படியான முழுக்க முழுக்க தனித்தவையும் இங்கே உண்டு. இவ்வகை ஆசிரமங்களில் நாம் பார்வையாளனாகக் கூட சென்று எதையும் பெறமுடியாது. முழுவதும் துறக்கும் பட்சத்தில் இப்படி ஒன்று நமக்கு அமையலாம்.

இங்கே தீர்த்தமலையில் தனித்த ஒருவராக ”திராவிடாச்சார்யா” என்பவர் வேத வேதாந்த நூல்களில் புலமை மிக்கவராக, தன்னை தேடி வருபவர்களிடம் மட்டுமே உரையாடுபவராக அமர்ந்திருக்கிறார். { https://barnasalai.blogspot.com/ }

பெரும்பாலான சமண பள்ளிகளும், பெளத்த மடாலயங்களும் இவ்வகைமையை சார்ந்தவை.  ஒருமுறை நமது பயணத்தில், வட ஆற்காடு பொன்னூர் மலை சமண பள்ளிக்கு சென்றபோது, மலைமேல் ஐயன் அமர்ந்த குகையில் அமர்ந்து, எங்களை ஆளுக்கு ஒரு திருக்குறள் சொல்லச்சொன்னீர்கள், நீங்களும் உங்களுக்கான ஒன்றை சொல்லி, சற்று ஆழ்ந்த அமைதியில் இருந்து விட்டு படியிறங்கினோம். கீழே சமண பள்ளியுடன்கூடிய தர்மசாலை ஒன்று இருந்தது, அங்கே வேறு  யாருமே இல்லை ஒருவர் மட்டும் தனித்த ஆழத்தில் அமர்ந்து நம்மை  வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். நம்மில் யாரோ ஒரு நண்பர், ‘அவரை சுட்டிக்காட்டி , சும்மா உட்க்கார்ந்திருப்பதற்கு பதிலாக இந்த கட்டிடத்தை சுற்றிக்காட்டலாமே ‘ என கூறினார். உடனே நீங்கள் சுற்றிக்காட்ட இதென்ன சுற்றுலாத்தலமா ? என மென்மையாக கடிந்து கொண்டீர்கள். இவ்வகை பள்ளிகளில் அமைதியாக அமர்ந்துவிட்டு உணவருந்தி பாதம் பணிந்துவிட்டு கிளம்பிவிடுவது நல்லது.

மேலும் குருநிலைகள் அவர்களுக்கேயான சில நியதிகளை கொண்டவை, உணவு உடை, நேரக்கட்டுபாடு, சடங்குகள், முறைமைகள் என பல அடுக்குகளாக அவை நிலைபெற்று விட்டவை, ஆகவே எதையும் ஏற்றுக்கொள்ளும் பண்புள்ளவர்கள் முதலில் பார்வையாளர்களாக சென்று ,தேவையெனில் படிப்படியாக நீண்டகால அளவில்  உள்ளே செல்லலாம்.

சமீபத்தில் ஒரு நண்பர் மலேசியாவிலிருந்து வந்திருந்தார், இங்கே இருக்கும் குருநிலைகளுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்க  விரும்பினார் , தமிழகத்தில் உள்ள ஒரு பழமையான குருநிலைக்கு தகவல் தெரிவித்து நண்பரை அனுப்பி வைத்தேன், அது பெண் துறவிகள் நடத்தும் ஆஸ்ரமம் என்பதால், தனியாக வந்திருக்கும் நண்பரை இரவில் தங்க அனுமதிக்கவில்லை, அங்கிருந்து எனக்கு போன் செய்து அந்த துறவிகளை திட்டத்தொடங்கி விட்டார். மறுநாள் காலை அவர்கள் நம் நண்பரை அழைத்து அவர் கேட்ட ‘மந்திர தீட்சை’யை  முறைப்படி  வழங்கியுள்ளனர். மீண்டும் எனக்கு போன் செய்து அதே ஆஸ்ரமத்தை வானளாவ புகழத்தொடங்கி விட்டார்.

பெரும்பாலான குருநிலைகள் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது, அவர்களுக்கான முறைமைகளில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து செல்லும் நாம் சில செளகர்யங்களை எதிர்பார்க்காமல் இருப்பது இரு தரப்பிற்கும் நன்மை பயக்கும்.

இன்னும் பலவகையான குருநிலைகள் இருந்தாலும், இங்கே மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் முக்கியமான பங்காற்றிய சில ஆஸ்ரமங்களின் தகவல்களை கொடுத்துள்ளேன்.  இவற்றையெல்லாம் ‘சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்’ என மேலும் பரிந்துரைகள் வரலாம். நான் சென்ற ஐம்பது அறுபது குருநிலைகளிருந்து சிலவற்றை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளேன்.

சௌந்தர்

Sathya Sai International Organization

Anandashram – The Abode Of Bliss

NIthyananda Kanhangad Ashram – The Spiritual Hub of Bhagwan Nithyananda

Isha Yoga Programs – Isha Institute of Inner Sciences

https://www.artofliving.org/bangalore-ashram-campus-facilities

A Nunnery In Tawang: Brahma Dung Chung Ani Gompa (also known as Thukje Chueling)

Sri Lalitha Mahila Samajam

https://www.osho.com/osho-meditation-resort

Welcome to Bihar Yoga

https://shastranethralaya.org/

Swami Vyasa Prasad. Narayana Gurukulam, Fernhill, Ooty. 23rd Samadhi Day Guru Nitya Chaitanya yati

https://satsang-foundation.org/madanapalle-ashram/

https://rikhiapeeth.in/

https://www.dlshq.org/

Vanprastha Ashram – Baba Kali Kamli Pancheyt Kshetra, Kolkata, Rishikesh & Swargaashram

https://jainsite.com/jain-tirth/ponnurmalai-teerth/

The Oldest Scientific Yoga Research Institute in the World – Kaivalyadhama – KaivalyaDhama

The Madanapalle Ashram & Retreat Centre, founded by Sri M

https://www.vethathiri.edu.in/

Ashram – Sri Ramana Maharshi

Sri Aurobindo Society

அன்புடன்

சௌந்தர்.G

Thanks & Regards

SOUNDAR.G

SATYAM TRADITIONAL YOGA

11/15, south perumal Koil Lane

Vadapalani       – Chennai- 600026

+91 9952965505 

www.satyamtraditionalyoga.com

முந்தைய கட்டுரைகாதலின் நிலம்
அடுத்த கட்டுரைசுப்ரமணிய ராஜு, ரம்யா -கடிதங்கள்