இமையம் சொல்லும் அவதூறு…கடிதங்கள்

இமையம் சொல்லும் அவதூறு…

அன்பிற்குரிய திரு ஜெயமோகன்,

தங்களுடைய பதிலில் நீங்கள் மிக தெளிவாக, துல்லியமாக சுந்தர ராமசாமி, இமையம், மற்றும் பதிப்பகம் அதன் உரிமையாளர்கள் பற்றிய உங்களுடைய விமர்சனம் எனக்கு மிக நல்ல புரிதலை வழங்கியது. மேலும் நான் இமையம் அவர்களின் கோவேரி கழுதைகள் படித்து அடைந்த உவகை சொல்லில் கூற முடியாதவை. ஆனால் வாசிக்கும்போது என் மனதில்  எந்த வித சாதிய எண்ணமும் எழவில்லை. நான் ஒரு வாசகனாக கதையை வாசித்து ஒரு அரிய அனுபவத்தை பெற்றேன்.

உங்கள் பதிலில் இருந்து உங்களின் திறந்த மனதை உணர்ந்தேன். எனக்கு தோன்றுபவை, இலக்கியத்தில் இருப்பவர்கள் ஏன் அரசியலை தங்களுடைய அழகிய படைப்புகளின் விமர்சகர்கள் மீது திணிக்க எத்தனிக்கிறார்கள் என்பது பெரும் வியப்பாக இருக்கும் நிலை. அதுவும் தாங்கள் மிக அன்புடன் பழகி அவருடைய படைப்புகளை நல்ல திறந்த மன நிலையில் விமர்சனம் செய்த பிறகு, இத்தகைய உங்களைப் பற்றிய விமர்சனங்களை வைப்பது மிகவும் கீழ்மையான செயலாகவே எண்ணுகிறேன்.

ஒன்று மட்டும் மிக தெளிவாக புரிகிறது, வணிகம் என்ற ஒரே நோக்கில், தங்களை மதிக்காவிடிலும் அவர்களின் படைப்புகளை பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டும் அமைப்புகளை எண்ணும் போது வியப்பாக இருக்கிறது. உங்களின் வாசகர்களின் கேள்விகளுக்கு அளிக்கும் தெளிவான விளக்கமான ஆழமான பதில்களிலிருந்து நான் பலவற்றை உணரவும் கற்கவும் எத்தனிக்கிறேன்.

இலக்கியத்தை வைத்து, பல நல்ல படைப்புகளை தந்த பிறகு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி என்பது எனக்கு முற்றிலும் புரியாத புதிராக இருக்கிறது.நான் ஒரு எழுத்தாளரின் பெயரை கூற விரும்பவில்லை, அவர் இலக்கியவாதிகளை பேசும்போதெல்லாம் உங்கள் பெயரை கூறி, அவதூறு செய்வது வழக்கமாக இருந்தது. இப்போது ஏனோ அமைதியாக இருக்கும் நிலை.

இந்த எழுத்தாளர்களுக்கு ஒன்றை கூற விழைகிறேன், நல்ல படைப்புகள் மூலம் வாசகனை அடைய எத்தனியுங்கள். இங்கும் வந்து அரசியல் பண்ணாதீர்கள். இந்த அரசியல் என்ற அமைப்பால் நல்ல பண்புள்ளவர்கள் அனைவரும் அதீத அருவருப்புடன் நமது மாநிலத்தில் வாழும் நிலை.

அன்புடன்

பழனியப்பன் முத்துக்குமார்

அன்புள்ள ஜெ

இமையம் செய்த அவதூறு பற்றிய கட்டுரை படித்தேன். நான் ஒன்றை கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுக்கான ஒரு narrative ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தனிப்பட்ட முறையிலும் பலர் கூட்டாகவும் அந்த narrative வழியாகவே தங்களை முன்வைக்கிறார்கள். ‘என்னை எல்லாரும் ஒதுக்குகிறார்கள்’ என்பது ஒருவரின் narrative என்றால் அவர் நீங்கள் என்ன சொன்னாலும் அதை மாற்றிக்கொள்ள மாட்டார். ஏனென்றால் அது அவருடைய asset. அதில் அவர் நீண்டகாலமாக invest செய்து வந்திருக்கிறார். ‘நான் ஒடுக்கப்பட்ட சாதி’ என்பது ஒரு பெரிய அடையாளம். நீங்களே பார்க்கலாம். இன்னொருவர் நான் ஒடுக்கப்பட்ட சாதி என்று சொன்னாலுடனே இவர்கள் சண்டைக்குப் போய்விடுவார்கள். அது இவர்களுக்கான credit அதை பங்குபோட விரும்ப மாட்டார்கள். இமையம் செய்திருப்பது இதுவே. இன்னும் சொற்பநாட்களில் சுந்தர ராமசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோரால் அவர் தான் ஒடுக்கப்பட்டதாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்.

என்.ஆர்.ராமகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகோயில் யானையின் திமிர்
அடுத்த கட்டுரைஆ. சிவசுப்ரமணியன்