அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4

வேருள்ள ஆய்வுமுறைமை

பத்து வருடங்களுக்கு முன்னால் நான் கேரள சிந்தனையாளர் எம்.கங்காதரனிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு,சாஸ்தாவைப்பற்றிச் சென்றது. சாஸ்தா என இன்று அழைக்கப்படும் இந்து தெய்வம் பல்வேறு வடிவங்களில் கேரளத்தில் உள்ளது. சபரிமலை அய்யப்பன்கூட ஒரு சாஸ்தாதான். இன்று, எண்பதுகளுக்குப் பின் படிப்படியாக, எல்லா சாஸ்தாக்களுமே அய்யப்பன்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். நாகர்கோயில் நகருக்குள்ளேயே இருபது வெவ்வேறு சாஸ்தாக்கள் உள்ளனர். பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா, எங்கோடி கண்டன் சாஸ்தா என. வரலாற்றாய்வாளனுக்குப் பலவகையான சிக்கல்களை அளிக்கும் தெய்வம் இது.

ஒன்று, சாஸ்தாவுக்கு என ஒரு பொதுத்தோற்றமே சிற்பங்களில் காணப்படவில்லை. கேரளத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாஸ்தா சிற்பங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இச்சிலைகளுக்குள் இருக்கும் தோற்ற வேறுபாடு ஆச்சரியமூட்டுவது. வஜ்ராயுதம் ஏந்திய சாஸ்தா,  தாமரை ஏந்திய சாஸ்தா, யானைமேல் அமர்ந்த சாஸ்தா,  அக்னிகிரீடம் அணிந்த சாஸ்தா, சடாமகுடம் அணிந்த சாஸ்தா என பலவகையான சாஸ்தாக்கள். அதாவது இது ஒரு தெய்வத்தின் பல வடிவங்கள் அல்ல. பல தெய்வங்களுக்குரிய பொதுப்பெயர்

இரண்டு, சாஸ்தா பற்றி புராணங்களில் விரிவாக ஏதும் இல்லை. அது ஒரு நாட்டுப்புற தெய்வம் என்றே கேரளக் கலைக்களஞ்சியம் சொல்கிறது. சபரிமலை சாஸ்தாவின் புராணக்கதை மிகமிகப் பிற்காலத்தையது. அந்த ஆலயம் அறிய வருவதே பதினேழாம் நூற்றாண்டுக்குப்பின்னர்தான். ஆனால் சாஸ்தாவின் சிற்பம் நாட்டுப்புற தெய்வத்திற்குரியதல்ல. அது ஒரு செவ்வியல் கலை வடிவம். நெடுங்காலமாக சிற்ப மரபில் தொடர்ந்து வடிக்கப்படுவதன் மூலம் உருவாகும் கலைமைதியும் கூடியது. மேலும் சாஸ்தாவின் ஆயுதங்கள் அணிகள் எவையுமே நாட்டார்தெய்வத்துக்குரியவை அல்ல.

[சாஸ்தா]

மூன்றாவதாக, சாஸ்தாவின் வழிபாட்டுமுறை. அது நாட்டார் வழிபாடு அல்ல. அதில் பலி கிடையாது. உயிர்ப்பலி மட்டும் அல்ல,குறியீட்டு ரீதியான பலி கூட இல்லை. வெள்ளைமலர்களைப் படைப்பதும், பன்னிரண்டு நாழி அரிசி பொங்கி அன்னதானம் செய்வதும் , சரணகோஷம் எழுப்புவதுமே சாஸ்தாவின் வழிபாட்டுமுறை.

நான்காவதாகக் கோயில் அமைப்பு. கேரளத்தில் இருவகை வழிபாட்டிடங்கள் உண்டு. காவு, ஷேத்ரம். ஷேத்ரம் என்றால் கோயில். ஆலயம் என்பதற்கான நேர் வடமொழிச்சொல். அதிகமும் இந்து பெருந்தெய்வங்களுக்குரியது. பகவதிகள், யக்‌ஷிகள், நாகப்பாம்புகளுக்குரியது காவுதான். சாஸ்தாவுக்கும் காவுதான். காவு என்றால் சோலை என்று பொருள். சோலையில் ஒரு மரத்தடியில் நிறுவப்பட்ட சிலையாகவே சாஸ்தா இருந்திருக்கிறார். அவற்றில் மிகச்சிலவே இன்றும் கோயில் வடிவுக்கு வந்துள்ளன.

இவ்வளவு சொல்லும்போதே நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள், சாஸ்தா ஒரு பௌத்த தெய்வம் என்றே ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. போதிசத்வ வழிபாட்டின் மருவியவடிவம் அது. போதிசத்வர்களே சாஸ்தாக்களானார்கள். சாஸ்தாக்களின் அணிகள், மணிமுடிகளை நாம் பௌத்த சிற்பக்கலையில் தெளிவாகவே காணமுடிகிறது. பல சாஸ்தாக்களைப் போதிசத்வ பத்மபாணி என்றும் போதிசத்வ வஜ்ரபாணி என்றும் கஜாரூட போதிசத்வர் என்றும் திட்டவட்டமாகவே நிறுவமுடியும். சபரிமலை அய்யப்பனை யோகாரூட போதிசத்வர் என்றும்.

அப்படியானால் போதிசத்வர் எப்படி சாஸ்தா ஆனார்? விளக்கம் இது. பழந்தமிழ்ப் பண்பாட்டில் சாத்தன் என்ற கடவுள் உண்டு. அது தமிழர்களின் பல குலங்களுக்குக் குலதெய்வம். அந்த தெய்வம் பௌத்ததுக்குள் புகுந்து போதிசத்வ வழிபாட்டுடன் கலந்திருக்கலாம். பௌத்தத்தில் இருந்து சாஸ்தாவாகத் திரும்பி வந்திருக்கலாம்.

அதைப் பேசிக்கொண்டிருந்தபோது எம்.கங்காதரன் அந்த அடிப்படைக் கேள்வியைக் கேட்டார். பௌத்தம் ஒரு அறிவார்ந்த தத்துவ மதம். அது எப்படி அடித்தள மக்களின் மதமாக ஆகியது. அப்படி ஆகிய மதம் எப்படி அவர்களால் தடயங்களே இல்லாமல் கைவிடப்பட்டது? பலகோடிப்பேரால் அப்படி ஒரு மதம் கைவிடப்பட முடியுமா?

அந்த வினாவுக்கு எளிய பதிலைச் சொல்லிவிட முடியாது. அதில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கு நாம் நம்முடைய சூழலில் இருந்தே பதில் தேடவேண்டியிருக்கிறது. உண்மையில் அந்த பயணத்திலேயே நான் அயோத்திதாசரின் வரலாற்றாய்வு முறைமையின் வாய்ப்புகளைக் கண்டுகொண்டேன்.

அயோத்திதாசர் கூறும் ஒரு விஷயத்தில் இருந்து அதற்குள் நுழைகிறேன். அயோத்திதாசர் தன்னுடைய கட்டுரைகளில் பௌத்தமும் சமணமும் வேறுவேறல்ல என்கிறார். கேட்டதுமே இது தவறு என நாம் சொல்கிறோம். உண்மையில் அவ்விரு மதங்களும் வேறுவேறு என நாம் அறிவோம்.  ஆனால் பண்டிதர்  ஏன் அப்படிச் சொல்கிறார்? அதற்கு அவருக்குத் தனித்த நோக்கமேதும் இல்லை. அவர் அறிந்த ஓர் உண்மையாக அது இருந்திருக்கிறது. ஆம், தமிழகவரலாற்றின் ஏதோ ஒரு காலகட்டத்தில் இவ்விரு மதங்களும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. இன்று இப்படிச் சொல்வதற்கான மேலதிக ஆதாரங்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.

அதெப்படி இருந்திருக்க முடியும்? ஒருவர் ஒரேசமயம் இரண்டு மதங்களில் இருக்கமுடியுமா என்ன? அங்கே நாம் மதம் என்ற சொல்லுக்கான விளக்க்த்துக்குச் சென்று சேர்கிறோம். இந்தியாவுக்கு வந்த செமிட்டிக் தீர்க்கதரிசன மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் போன்றவற்றைப்பொறுத்தவரை மதம் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. ஒரு மையத்தரிசனம், அதை முன்வைக்கும் நூல், அதை உருவாக்கிய தீர்க்கதரிசி, அதை ஒட்டி உருவாக்கப்பட்ட திட்டவட்டமான நம்பிக்கைகள் மற்றும் ஆசாரங்கள், அந்த ஆசாரங்களைக் கடைப்பிடிக்கச்செய்யும் ஒரு அமைப்பு, அவ்வமைப்புக்கான அதிகாரங்கள் என இம்மதங்கள் தெளிவாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தமதங்களின் கொள்கைப்படி அவர்கள் மதம் சொல்லும் தரிசனமே உண்மை, ஆகவே பிற அனைத்துமே பொய். ஆகவே அவர்களின் மதத்தைத் தழுவும் ஒருவர் இன்னொரு மதத்தில் இருக்கமுடியாது. அது தண்டனைக்குரிய குற்றம். மொத்த மக்கள்தொகையையும் தங்கள் மதத்தின் அமைப்புக்குள் கொண்டுவருவதும் அவர்களின் வழிமுறை.

இந்த வரையறையின்படி இந்தியமதங்களைப் பார்க்கும் மேலைநாட்டினருக்குத்தான் உண்மையில் மேலே சொன்ன கேள்வி பெரிதாகத் தெரியும். உண்மையில் இங்கே அதற்கு முன்னர் இருந்த மதங்கள் அப்படி அல்ல. அவற்றுக்கு ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களையும் உள்ளே அடக்கும் அமைப்பு ஏதும் இல்லை. அவை எவரையும் மதமாற்றம் செய்யவும் இல்லை.

பௌத்தம் சமணம் போன்ற மதங்களில் அம்மதங்களின் மையமாகச் செயல்பட்டவர்கள் துறவிகளே. அவர்களுக்குத்தான் அமைப்புகள் இருந்தன.  உண்மையில் சமணர்கள் அல்லது பௌத்தர்கள் என்று சொன்னால் அவர்களையே சொல்லவேண்டும்.  அவர்களுக்குத் திட்டவட்டமான நடத்தைநெறிகள் உண்டு, கட்டுப்பாடுகள் உண்டு. பிற பொதுமக்களுக்கு அப்படி எந்த அமைப்பும்,கட்டுப்பாடும் கிடையாது.

உதாரணமாக சமணம் சொல்லும் ஐந்து நெறிகளையும் ஐந்து ஆசாரங்களையும் ஒருவர் கடைப்பிடித்தால் அவர் சமணத் துறவிகளுக்குப் பிச்சையிடும் தகுதிகொண்டவர் ஆகிறார். சமணம் அவர்களிடம் எதிர்பார்த்தது அதுவே. அவர் தன்னுடைய பிற மதநம்பிக்கைகளைத் துறந்து சமணத்துக்கு மதம் மாறவேண்டிய தேவை இல்லை. இதுவே பௌத்தர்களுக்கும் வழிமுறையாக இருந்தது.

அதாவது சமண பௌத்த மதங்களால் தமிழ்மக்கள் அந்த மதங்களுக்கு மாற்றம் செய்யப்படவில்லை. அவர்களின் அடிப்படை நெறிகளையும் ஆசாரங்களையும் தத்துவங்களையும் மற்றும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.  கூடவே அவர்கள் தங்கள் தொன்மையான குலதெய்வ வழிபாடு, மூதாதையர் வழிபாடு ஆகியவற்றை அப்படியே நீடித்துக்கொண்டனர்.  ஒருவர் சமணராகவும் பௌத்தராகவும் ஒரேசமயம் இருந்து அதேசமயம் தன் குலதெய்வங்களையும் தக்கவைத்துக்கொள்ளமுடிந்தது. காலப்போக்கில் இந்த சிறுதெய்வங்கள் சமண பௌத்த மதங்களுடன் இணைந்து வளர்ந்தன.

[போதிசத்வர்]

சிறுதெய்வங்கள் சமண பௌத்த தெய்வங்களால் தத்துவார்த்தமாக விரிவாக்கம்செய்யப்பட்டன, கலைப்பூர்வமாக மறுஆக்கம் செய்யப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால் செவ்வியலாக்கம் செய்யப்பட்டன. சங்க இலக்கியங்களில் பேசப்படும் சாத்தன்,அன்றைய முக்கியமான சிறுதெய்வம். அது பௌத்தத்துக்குள் சென்று போதிசத்வ வழிபாட்டுடன் இணைந்தது. பௌத்தம் மறைந்தபோது மீண்டும் சாத்தனாகியது.  இந்து பெருமதங்களுக்குள் சென்றபோது புதிய புராணங்களை அடைந்தது.  சமஸ்கிருதத்தில் சாஸ்தா என்றாகியது.

இப்படி உருவகிக்கலாம். ஒரு பெரிய நதி புதியதாக உருவாகி ஊருக்குள் புகுந்ததுபோலத்தான் இது நடந்தது. அது பலநூறு கைவழிகளாக ஓடைகளாகப் பிரிந்து நிலமெங்கும் பரவியது. ஆயிரக்கணக்கான குளங்களை நிரப்பியது. கிணறுகளில் ஊறியது. பின் அது நின்று வற்றிப்போனபின்னும் அதன் தண்ணீர் இங்கே குளங்களில் கிணறுகளில் நீடித்தது. நிலத்தடி நீராக இருந்துகொண்டிருக்கிறது.

அயோத்திதாசர் சொல்வது போலச் சமணமும் பௌத்தமும் ஒன்றெனக் கருதப்பட்ட ஒரு காலம் இங்கே இருந்திருக்கலாம். அதிகமும் பத்து பன்னிரண்டாம் நூற்றாண்டுகளுக்குப்பின்னர். பக்தி இயக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்தழிக்கப்பட்ட பௌத்தமும் சமணமும் சில தீவுகளாக எஞ்சியபோது அங்கே இவையிரண்டும் ஒன்றாகவே நீடித்திருக்கலாம். காரணம் இரண்டுக்கும் ஏராளமான பொதுத்தன்மைகள் உண்டு. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகள்  உயர்தத்துவத்தளம் சார்ந்தவை. நடைமுறையில் மக்களுக்கான நெறிகளும் ஆசாரங்களும் கிட்டத்தட்ட சமம். மேலும் அவை இரண்டுமே அடிப்படையில் அவைதிக மதங்கள்.வைதிகமதங்களுக்கு எதிரான ஒருமைப்பாடு அவற்றுக்குள் நீடித்திருக்கலாம்.

இந்த விளக்கம் எளிதானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது. ஆனால் ஏன் இது நமக்குத்தோன்றவில்லை? அங்கேதான் நமது பண்பாட்டாய்விலும்,வரலாற்றாய்விலும் உள்ள எல்லைகளை நாம் காண்கிறோம். நாம் பௌத்தத்தையும் சமணத்தையும் இந்துமதப்பிரிவுகளையும் மேலைநாட்டினர் கண்களாலேயே பார்க்கிறோம். ஏன், நம்முடைய பண்பாட்டுக்கூறுகள் பலவற்றையே அப்படித்தான் நாம் நோக்குகிறோம்.

இந்தியாவில் ஐரோப்பியர் ஆதிக்கம் உருவான பதினேழாம் நூற்றாண்டு முதல் மெல்லமெல்ல உருவாகி இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய அறிவுத்துறையாக வளர்ந்துள்ள இந்தியவியல் [Indology] நம் அரசியலுக்கும் பண்பாட்டுக்கும் அளித்துள்ள கொடை மிக அதிகம். பௌத்தத்தையும் சமணத்தையும் மட்டுமல்ல இந்துமரபையும் கண்டெடுத்துத் தொகுத்து, மறுகட்டமைத்து நமக்களித்தது அதுவே.  இந்து மறுமலர்ச்சிநாயகர்களான தயானந்தசரஸ்வதி [ஆரியசமாஜம்] ராஜா ராம்மோகன் ராய் [ பிரம்மசமாஜம்] விவேகானந்தர் [ராமகிருஷ்ண இயக்கம்] ஆகியோரின் சிந்தனைகளில் இந்தியவியலே இந்துஞானமரபைக் கட்டமைத்திருப்பதைக் காணலாம்.

ஆனால் அது ஓர் ஐரோப்பிய நோக்கு. ஐரோப்பாவை உருவாக்கிய சிந்தனைக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டது அது. ஐரோப்பிய வரலாற்று நோக்கின் அடிப்படையில் அமைந்தது.ஐரோப்பாவின் அரசியல்தேவைகளால் செலுத்தப்பட்டது. ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளிகளால் கட்டுப்படுத்தப்பட்டது.

நம்முடைய சிந்தனைகளின் அடித்தளமே இப்படி அன்னியமாக அமைந்து விட்டதென்பது கடந்த நூறாண்டுகளாக நம்முடைய பண்பாட்டு ஆய்வுகளில் மிகப்பெரிய சிக்கல்களை உண்டுபண்ணியிருக்கிறது.சென்ற நூறு வருடங்களில் நம் பண்பாட்டாய்வின் மிகப்பெரிய ஆளுமைகளாக நாம் முன்வைப்பவர்கள் அனைவருமே ஐரோப்பிய பார்வையின் இந்திய விரிவாக்கத்தையே நமக்களித்திருக்கிறார்கள். எம்.என்.ராய் முதல் ஏ.எல்.பாஷாம் வரை அதைச்சொல்லலாம்.

இதற்கு எதிராக இருக்கும் தரப்பு என்பது அரசியல்ரீதியாக இந்தியப் பழமைவாதம்சார்ந்த நிலைப்பாடு கொண்டவர்களின் குரலே. அவர்கள் பெரும்பாலும் ஆய்வுகளையே நிராகரிப்பார்கள். ஆய்வுமுடிவுகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆய்வை ஆரம்பிப்பார்கள். ராமர்பாலத்தை இரண்டரைலட்சம் வருடம் முன்னர் ராமரே கட்டினார் என்பார்கள். அல்லது தென்குமரியும் தென்னமெரிக்காவும் இணைந்திருந்த லெமூரியா கண்டத்தில் உலவிய டைனோசர்களை தமிழர்கள் வெற்றிகொண்ட கதைகளைச் சொல்வார்கள். இது உண்மையில் சிந்தனை அல்ல, எதிர்வினை மட்டுமே.

இந்த இரு போக்குகளுக்கு அப்பால் நமக்கென ஒரு போக்கு இருக்கலாகாதா? நம்முடைய முன்னோர் எப்படி தங்கள் பண்பாட்டைப் பார்த்தார்களோ அதன் தொடர்ச்சியாக ஆராயும் ஒரு கோணம்? அவர்கள் கண்களுக்கு ஒட்டி நின்று நம்மை நாமே பார்க்கும் ஓர் அணுகுமுறை? அதைத்தான் நான் அயோத்திதாசரின் அணுகுமுறை என்று ஏற்கனவே சொன்னேன். அதை வேருள்ள ஓர் அறிதல் முறை என்பேன்.


[ஹென்றி ஸ்டீல் ஆல்காட்]

அயோத்திதாசரின் பௌத்த சிந்தனைகளின் சமகாலப்பின்னணி

க.அயோத்திதாசர் ஆய்வுகள் நூலில் ராஜ்கௌதமன் ஒரு விரிவான அத்தியாயத்தை- பௌத்தம் எப்படி மேலைநாட்டினரால் கண்டெடுக்கப்பட்டது என்பதை விளக்க செலவிட்டிருக்கிறார்.’19,20 ஆம் நூற்றாண்டுகளில் பௌத்த மறுமலர்ச்சி என்ற இந்த அத்தியாயம், தமிழில் பௌத்தம் பற்றி எழுதப்ப்பட்ட முக்கியமான கட்டுரை.

அதில் ராஜ்கௌதமன்,நாம் இன்று அறியும் பௌத்தம் என்பதே ஐரோப்பியர்களால் கட்டமைக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார். ஏறத்தாழ உண்மை. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கீழையுலகைச் சந்தித்தகாலகட்டத்தில் இங்கே பௌத்தம் எப்படியெல்லாம் இருந்திருக்கும்? இலங்கையிலும் தாய்லாந்தில் சில இடங்களிலும் தேரவாத பௌத்தம். திபெத்தில் வஜ்ராயனம். பர்மாவிலும் இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் மகாயானபௌத்தமும் அந்தப்பகுதியின் பழங்குடி வழிபாடுகளும் கலந்த பௌத்தம். ஜப்பானில் ஜென். ஷிண்டோ மதத்துடன் கலந்த இன்னொரு நடைமுறை பௌத்தம்.

உண்மையில் இவற்றையெல்லாம் ஒரேமதமாகக் காண்பதற்கே கொஞ்சம் கற்பனை தேவை. தியானத்தில் அமர்ந்த இலங்கையின் புத்தர் ஒருபக்கம் என்றால் ஆயிரம் தலைகளும் ஆயிரம் கைகளும் கொண்டு உக்கிரமான பேய்த்தோற்றத்துடன் பெண்ணை எதிரே நிறுத்திப் புணர்ந்த நிலையில் நிற்கும் வஜ்ராயன புத்தர் மறுஎல்லை. ஊடாக ஓடும் தத்துவத்தளமே கூட மையத்துக்குப்பதிலாக ஒரு விவாதக்களமாகவே இருந்தது. அந்த பெரும் பண்பாட்டுப்பரப்பிலிருந்து பௌத்தத்தை மெல்லமெல்லக் கட்டமைத்தனர் ஐரோப்பியர்.

பௌத்தம் கட்டமைக்கப்பட்ட விதத்தில் மூன்று வழிகள் உள்ளன. அதைப் பொதுவாக மறைஞானநோக்கு [Esoteric] , நற்செய்திநோக்கு [gospel] , நவீனத்துவ நோக்கு [Modernist ] என்று சொல்லலாம். இந்த மூன்று நோக்குகளிலும் பௌத்தத்தை ஐரோப்பியர் கண்டடைந்திருக்கிறார்கள், கட்டமைத்திருக்கிறார்கள்.

ஆரம்பம் முதலே ஐரோப்பியர்களுக்கு, குறிப்பாக ஜெர்மானியர்களுக்கு, இந்திய மறைஞானம் மீது ஓர் ஆர்வம் இருந்துவந்தது. அதற்குக் காரணம் நீண்டகால கிறித்தவ திருச்சபை ஆதிக்கம்,ஐரோப்பிய மறைஞான மரபுகளை அழித்துவிட்டிருந்தது. நவீனகாலகட்டத்தின் தொடக்கத்தில ஐரோப்பா அவற்றை மீட்க ஆர்வம் காட்டியது . ரசவாதம் [அல்கெமி] போன்றவற்றை மீட்கவும் அவற்றில் இருந்து நவீன வேதியியலை உருவாக்கவும் அவர்களால் முடிந்தது. ஆகவே மறைஞானம் என்பது,தடுக்கப்பட்ட அறிதல்களின் ஒரு பெரும்தொகை என்ற எண்ணம் அவர்களிடம் வலுவாக இருந்தது

ஐரோப்பிய மறைஞானத்தைக் கண்டடைந்தபின் கீழை மறைஞானம் மீது ஐரோப்பியர் பார்வை திரும்பியது.  சர் ஜான் வுட்ரோஃப் [ஆர்தர் ஆவலோன்]  மேடம் பிளவாட்ஸ்கி முதல் அகேகானந்த பாரதி வரை பல்வேறு இந்தியவியலாளர்கள் இந்திய மறைஞான சிந்தனைகளையும் ஆசாரங்களையும் குறியீடுகளையும் கண்டடையவும் மீட்டெடுக்கவும் கடுமையாக உழைத்தனர். இன்றுவரை இந்த ஆர்வம் ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் நீடிக்கிறது. அவர்களுடைய உழைப்பாலேயே பக்தி இயக்கத்தால் கிட்டத்தட்ட இல்லாமலாகிவிட்டிருந்த தாந்த்ரீகம் இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

திபெத் இந்த மறைஞான ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியமான கவர்ச்சி. நெடுங்காலமாகத் தன் வாசல்களை வெளியுலகுக்கு முன் மூடிவிட்டிருந்த திபெத்தின் வஜ்ராயனம்,உண்மையிலேயே வசீகரமான மர்மங்கள் கொண்டதாக இருந்தது. இந்த மறைஞான ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டதே பிரம்மஞான சங்கம்[தியோசஃபிகல் சொசைட்டி].அதன் முன்னோடிகளில் ஒருவரான கர்னல் ஆல்காட் இந்தியாவிலும்,இலங்கையிலும்,பர்மாவிலும் உள்ள பௌத்தம் மறுமலர்ச்சியடைய முக்கியமான தூண்டுகோலாக இருந்தார்

கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் [Henry S. Olcott ] அவர்கள்  1881 ல் எழுதி 1908ல் வெளிவந்த பௌத்தஞானச்சுருக்கம் [ The Buddhist Catechism] என்ற நூல் இன்றும் பௌத்ததை பௌத்தர்களே ஆராய்வதற்கு உதவக்கூடிய நூலாக உள்ளது. மிகவிரிவான பயணங்கள் மூலம் பல்வேறு பௌத்தப் பழக்கவழக்கங்களைச் சந்தித்த ஆல்காட் அவற்றுக்கிடையே ஒரு ஒருமைப்பாட்டைக் கண்டு அதை பௌத்த ஞானமையமாக உருவகித்து பௌத்தசிந்தனையை அதனடிப்படையில் மறுகட்டமைப்பு செய்கிறார்.ஐரோப்பாவில் பௌத்தத்தை அறிவுத்துறையில் அறிமுகம்செய்த மாபெரும் மூலநூல் இது.

இன்னொருபக்கம் கீழை நாட்டை எதிர்கொண்ட ஐரோப்பியர்களில் கிறித்தவ மெய்யியலில் ஆர்வம் கொண்டவர்கள் பௌத்ததில் ஒரு கீழைக் கிறித்தவத்தைக் கண்டுகொண்டார்கள். அவர்களில் பலர் கிறித்தவத்தில் இருந்த திருச்சபை ஆதிக்கத்தை விலக்கித் தூய கிறித்துவம் ஒன்றைக் கற்பனைசெய்துகொண்டவர்கள். அதாவது கிறித்தவத்தை அதன் மெய்யியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மறு கட்டமைப்பு செய்ய விழைந்தவர்கள். அவர்கள் கண்டுகொண்ட பௌத்தம் ஒன்று இருந்தது.

[பால் காரஸ்]

அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அமையும் நூல் என பால் காரஸ் [Paul Carus ] 1894 ல் எழுதிய எழுதிய ‘புத்தரின் நற்செய்தி’ [The Gospel of the Buddha]யைச் சுட்டிக்காட்டலாம். புதிய ஏற்பாடு பைபிளின் அதே கட்டமைப்பில்,அதே மொழியில் புத்தரின் வரலாற்றையும்,புத்தரின்  நல்லுபதேசங்களையும் தொகுத்தளிக்கிறது. பௌத்தம் பற்றிய நூல்களில் இந்த நூலளவுக்கு மேலைநாட்டில் மிக அதிகமாக விற்ற வேறெந்த நூலும் இல்லை. இன்றும் மேலைநாட்டுக் கல்விநிலையங்களில் அறிமுக நூலாகப் பெரும்செல்வாக்குடன் இருக்கிறது இந்நூல்.

மூன்றாவதாக நவீனத்துவ பௌத்ததைச்சொல்லலாம். நம்பிக்கையின் அடிப்படையிலான கிறித்தவத்தின் மீது நவீனத்துவ காலகட்டத்தில் ஐரோப்பாவில் பெரும் சலிப்பு உருவானது. அதன் மையம் கட்டுக்கதைகளால் ஆனது, அதில் தர்க்கத்துக்கு இடமில்லை என்று கூறப்பட்டது. அதற்குக் காரணம் நவீன அறிவியலின் செல்வாக்கு.  கிறித்தவமும் முடிந்த அளவு பரிணாம வாதம் முதல் நியூட்டனிய அறிவியல் வரை எல்லாவற்றையும் எதிர்த்து நின்றது

ஆகவே தர்க்கத்துக்கு ஒத்துப்போகக்கூடிய, நவீன அறிவியல் சிந்தனைகளை எதிர்க்காத ஒரு நவீன மதத்துக்கான தேடல் ஐரோப்பாவில் உருவானது. இவர்கள் அறிவார்ந்த, தத்துவார்த்தமான பௌத்தம் ஒன்றைக் கட்டமைக்க முயன்றனர். இவர்களுக்குப் பொதுவாக தேரவாதம் முக்கியமானதாகப் பட்டது. மகாயானம் அதன் திரிபாகவும் தோன்றியது. முக்கியமான அறிஞர் என ரய்ஸ் டேவிட்ஸை [Thomas William Rhys Davids] குறிப்பிடலாம். இவரது நூல்களில் பௌத்த இந்தியா [Buddhist India] முதன்மையானது.

ரய்ஸ் டேவிட்ஸ் பௌத்தத்தை இந்தியாவில் உருவான பிராமண மையமற்ற மதமாக உருவகித்தார். அடிப்படையில் பௌத்தத்தை ஷத்ரிய,வைசிய மதமாகவே அவர் கண்டார். பிராமண மதம் உருவாக்கிய எல்லாத் தத்துவார்த்த தளத்தையும் வெற்றிகரமாகத் தாண்டிச்சென்ற ஒன்றாக அவர் பௌத்ததை முன்வைத்தார்.  அவரது நோக்கில் பௌத்தம்,தர்க்கம்,உள்ளுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆன்மீக நிறைவை உருவாக்கும் ஒரு மதம்.நவீன அறிவியலுக்கும் நவீன ஐரோப்பிய தத்துவயியலுக்கும் மிக இணக்கமானது. ஆகவே நவீன ஐரோப்பாவால் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுக் கற்கப்படவேண்டியது.

ஆச்சரியமான ஒரு விஷயமுண்டு. இந்த மூன்றுகோணத்துக்குமே மைய இடமாக சென்னை இருந்துள்ளது.  ஆல்காட் சென்னையில் பிரம்மஞானசபைக்குத் தலைவராக இருந்தார். சென்னையில் மிக விரிவான மக்கள்பணிகளை மேற்கொண்டார்.  அவரது பணிக்களம் சென்னைக்கும் இலங்கைக்குமாக மாறி மாறி இருந்தது. ஆங்கில இந்திய அரசின் சிவில்பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டு வந்த ரய்ஸ் டேவிட்ஸ் தென்னிந்தியாவிலும் பின்னர் இலங்கையிலும் அதிகாரியாக இருந்தார். அவரது ஆய்வும் பணியும் அதிகமும் பொலனருவா, அநுராதபுரம் சார்ந்தது.

பால் காரஸ் தன் பௌத்த ஆய்வுகளுக்காகப் பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார்.இலங்கைக்கும் சென்றிருக்கிறார். சென்னையிலும் இலங்கையிலும் நிகழ்ந்த பௌத்தம்சார்ந்த விவாதங்களிலும் களப்பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இவர்கள் கிட்டத்தட்ட சமமான காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். சமமான காலகட்டத்தில்தான் இவர்களின் நூல்களும் வெளிவந்திருக்கின்றன. இவர்கள் நடுவே கடுமையான கருத்து முரண்பாடு இருந்தமை இயல்பே. ஆய்வேடுகளில் இவர்கள் முரண்பட்டு விவாதித்தார்கள்.

ஆக, நவீன ஐரோப்பா பௌத்தத்தைக் கண்டெடுத்த விவாதங்களின் களமையமாக சென்னை இருந்திருக்கிறது. ஆனால் அன்றைய தமிழ் அறிவுலகில் அது பெரிய பாதிப்பைச் செலுத்தவில்லை. காரணம் இங்கே அந்த அளவுக்கு ஓர் நவீன அறிவுச்சூழல் நிலவவில்லை. இங்கே அன்றிருந்த அறிவியக்கம் என்பது ,அச்சு ஊடகத்துக்கு ஏட்டில் இருந்த பண்டைய இலக்கியங்களைப் பதிப்பித்தல்தான். அதில் உ.வே.சா போன்றவர்கள் தீவிரமாக இருந்தார்கள்.


[ரய்ஸ் டேவிட்ஸ்]

அவ்வாறு நூல்களைப் பதிப்பித்தல் ஒரு பெரிய கலாச்சார மீட்பும் ஆகும். ஏனென்றால் இந்தியவியலின் ஆரம்பநாட்களில் அது சமஸ்கிருதமொழிக்கும் வைதிகமரபுக்குமே அதிக கவனத்தைக்கொடுத்தது. இந்திய மறுமலர்ச்சியின் ஒருபகுதியாக உருவாகி வந்த நவபிராமணவாதம் அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டது. மொத்த இந்தியப்பண்பாடும் இந்தியஞானமும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டதே என அது சொல்லி கிட்டத்தட்ட நிறுவியும் வைத்திருந்தது.

இந்நிலையில் பழந்தமிழ்நூல்கள் அச்சில் வந்ததும் அனைவருக்கும் படிக்கக் கிடைத்ததும் சமஸ்கிருத மைய வாதத்துக்கு எதிரான பெரும்உற்சாகத்தை உருவாக்கின. ஓர் எதிர்விளைவாகத் தமிழ்த்தொன்மை கட்டமைக்கப்பட்டது. குமரிக்கண்டம் லெமூரியாவாகியது. ஆச்சரியமென்னவென்றால் இவர்களும் அதே பிரம்மஞான சங்கத்தினரைத்தான் ஆதாரமாகக் கொண்டார்கள்.

தமிழ் மீட்பின் ஒரு பக்க விளைவாக சைவம் மீட்பு பெற்றது. அன்றுவரை தமிழில் சைவம் ஓர் ஒற்றைமதமாக இருக்கவில்லை என்பதை நினைவுகூரவேண்டும். வீரசைவைத்துக்கும் சைவசித்தாந்த மரபுக்கும் இடையே பெரும்பூசல்கள் இருந்து வந்தன. சட்டென்று சைவம் ஒருங்கிணைவு கொண்டது. பாம்பன் சுவாமிகள், ஞானியார் அடிகள்  எனப் பலர் உருவாகி சைவத்தை ஒருங்கிணைத்தனர்.  பின்னர் ஆங்கிலமறிந்த ஆறுமுகநாவலர் ,மறைமலை அடிகள் போன்றவர்கள் உருவானார்கள்.

இவர்களெல்லாருமே மாபெரும் பேச்சாளர்கள். அனேகமாக ஒவ்வொரு ஊரிலும் சைவப்பிரகாச சபை போன்ற சொற்பொழிவுமையங்கள் இக்காலகட்டத்தில் உருவாயின. இன்று பழைய நூலகங்களில் இக்காலகட்டத்தில் எழுதிக்குவிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேலான சைவவிளக்க நூல்கள் மறு அச்சு காணாமல் குவிந்து கிடக்கின்றன. கணிசமானவை பல்லை உடைக்கும் தமிழ் கொண்டவையாதலால் மறு அச்சு போடப்பட்டாலும் பயனில்லை.

ராஜ்கௌதமனே அவரது நூலில் இந்த சைவ மீட்பு எப்படி தமிழும் சைவமும் ஒன்றே என்ற கோஷத்தை உருவாக்கி நிலைநிறுத்தியது , இன்றும் வாதிடுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.உண்மையில் இது அன்றைய பிராமணரல்லாத உயர்சாதியினரின் ஓர் எழுச்சியும்கூட. வேளாளர்,செட்டியார்,முதலியார் சாதியினரே அத்தனை வேகத்துடன் சைவத்தை முன்வைத்தார்கள்.

ஒரு சிறப்பு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம், ஞானியாரடிகளைச் சந்தித்த ஈவேரா அவர் காலில் விழுந்து ஆசி பெற்றதாகவும் ஒரு சைவர், தமிழர் சிறப்புற்று விளங்குவதனாலேயே அப்படிச் செய்ததாகவும் அவரது வரலாற்றாசிரியர் சொல்கிறார்.  [ஞானியார் அடிகள்- வெளியாம்பட்டு சுந்தரம்] ஈவேரா அவர்கள் ஞானியரடிகளைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்

இவர்களில் அன்றைய ஐரோப்பிய அறிவுலகுடன் உரையாடியவர் என ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை அவர்களை மட்டுமே சொல்லமுடியும்.  ஐரோப்பா அன்று சடங்காசாரங்களைத் தாண்டிய தூய தத்துவமாக அமையக்கூடிய மதக்கருத்துக்களுக்கான தேடலில் இருந்தது. சைவசித்தாந்தத்தை அவ்வாறு அவர்களுக்காக விளக்கினார் நல்லுசாமிப்பிள்ளை. ஆனால் பொதுவாக சைவர்கள் ஆசாரமீட்பிலேயே அதிகமும் கவனம் செலுத்தினர்.

இச்சூழலில் சென்னையை மையமாக்கி நிகழ்ந்த பௌத்தமீட்பைத் தமிழகம் எப்படி எதிர்கொண்டிருக்கும்? ராஜ்கௌதமன் ஒரு சித்திரத்தை அளிக்கிறார். ஆரம்பத்தில் பௌத்தம்மீது சைவர்களுக்கு ஓர் அச்சமும் விலக்கமும் இருந்தது. ஏனென்றால் வரலாற்றில் தமிழகத்தில் பௌத்ததுக்கு எதிர்ச்சக்தியாக விளங்கியது சைவமே. சைவநாயன்மார்கள் பௌத்தம் சமணம் இரண்டுக்குமே எதிரிகள். அந்த ஐயம் இன்றும் நீடிக்கிறது.

ஆனால் பின்னர் ஐரோப்பா முன்வைத்த பௌத்தத்தில் தங்களுக்கு உகந்த பௌத்தத்தைத் தமிழறிஞர்கள் ஏற்றுக்கொண்டார்கள். முதன்மையானவர் உ.வே.சாமிநாதய்யர். மணிமேகலையை 1898ல் அவர் பதிப்பித்தபோது அதை புரிந்துகொள்ளுவதற்காக பௌத்த தத்துவங்களைக் கற்று விரிவாகவே அறிமுகம் செய்தார்.  திருவிக தமிழ் நூல்களில் பௌத்தம் [ 1929 ] என்ற நூலை எழுதினார். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை எட்வின் ஆர்னால்டு எழுதிய. Light of Asiaவை ஆசியஜோதி என மொழியாக்கம் செய்தார்.  அ.மாதவையா 1918ல் சித்தார்த்தன் என்ற நூலை எழுதினார். இதெல்லாம் அன்று சென்னையை மையமாக்கி நிகழ்ந்த பௌத்த மீட்பியக்கத்தின் பாதிப்பினால் உருவான எதிர்வினைகள் என்று சொல்லலாம்.

தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பௌத்த நூல் எனப்படும் மயிலை சீனி வெங்கடசாமியின் ‘பௌத்தமும் தமிழும்’  1940ல் வெளிவந்தது. அதன் பின் பௌத்தம் பற்றிப் பலநூல்கள் எழுதப்பட்டன. பல நூல்களைச் சொல்லமுடியும். சோ.ந.கந்தசாமியின் பௌத்தம் [1977] குறிப்பிடத்தக்க நூல். சமீபகால வரவுகளில் முனைவர் சு.மாதவனின் ஆய்வேடான ‘தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும்’  எல்லாத் தகவல்களையும் ஒட்டுமொத்தமாக அளிக்கும் ஒரு முக்கியமான நூலாகும்.

தமிழில் பௌத்தத்தை வாங்கிக்கொண்டவர்கள் மேலே சொன்ன மூன்று வகைமாதிரிகளில் பால்காரஸ் போன்றவர்கள் முன்வைத்த நற்செய்தி பௌத்தத்தையே அதிகமும் விரும்பியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. கவிமணியின் ஆசியஜோதியும் திருவிகவின் பௌத்தம் பற்றிய குறிப்புகளுமே சான்று. ஏனென்றால் இங்கே சைவர்கள் சைவத்தையே மேலைநாட்டுக் கிறித்தவ மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையில் மறுகட்டமைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். திருமூலரின் அன்பே சிவம் போன்ற வரிகள் புதிய உத்வேகத்துடன் முன்வைக்கப்பட்டன.

ஆகவே திருச்சபைநீக்கம் செய்யப்பட்ட கிறிஸ்துவின் பாணியில் மீட்டமைக்கப்பட்ட புத்தர் இங்கே மிகுந்த உற்சாகத்துடன் கண்டடையப்பட்டார். அத்துடன் பௌத்தத்தின் பிராமண எதிர்ப்புத்தன்மையும் வைதீக மறுப்பும் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சைவத்தையும் அதே பாணியில் ஒரு அவைதிக மதமாக ஆக்குவதற்கான முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த ஒட்டுமொத்தச்சூழலில் வைத்து நாம் அயோத்திதாசரின் பௌத்தம் சார்ந்த செயல்பாடுகளை புரிந்துகொள்ளவேண்டும். அயோத்திதாசர் சென்னையை மையமாக்கி நிகழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான அறிவியக்கம் ஒன்றுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தவர். சிறப்பான ஆங்கில அறிவு இருந்தமையால் சமகாலத்தின் பிற சிந்தனையாளர்களைவிடவும் அவர் அதில் ஈடுபட்டிருந்தார். அந்த முன்னோடிகளுடன் நேரடியாக விவாதிக்கவும் அவரால் முடிந்தது. ஆல்காட், பால் காரஸ் இருவரிடமும் அவருக்கு நேரடியான தொடர்பும் உரையாடலும் இருந்தது.

அதாவது வழக்கமாகச் சொல்லப்படும் பாடத்தை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டும். அயோத்திதாசர் ஒரு ‘வெறும்’ தலித் போராளி அல்ல. அவர் தலித் உரிமைப்போரின் ஒரு பகுதியாக ஒரு போர்த் தந்திரமாக பௌத்தத்தை முன்வைக்கவுமில்லை. அவர் அந்த பௌத்த மீட்பியக்கத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாக இருந்தார்.

பண்டிதரின் வாழ்க்கைவரலாற்றுத் தகவல்கள் இன்று மிக மிகக் குறைவாகவே கிடைப்பதனால் அவரது பங்களிப்பென்ன என்பது அனேகமாக மறைந்தே போய்விட்டது. 2002ல் நான் ஆல்காட் போன்றவர்களின் கடிதங்கள் குறிப்புகளில் ஏதேனும் மேலதிகமான தகவல்கள் உள்ளனவா என்று பார்ப்பதற்காக பிரம்மஞான சங்கத்து நூலகத்துக்குச் சென்றபோது அனுமதி மிகக்கறாராகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டேன். எதிர்காலத்தில் ஞான அலாய்சியஸ் போன்ற முதல்தரமான ஆய்வாளர்கள் வந்து அந்தத் தளத்தைத் தெளிவுபடுத்தக்கூடும்.

கண்டிப்பாக அயோத்திதாச பண்டிதரை பௌத்த மீட்பியக்கத்தின் விளைவு என நான் எண்ணவில்லை. ஏனென்றால் அவரது பௌத்தம் முற்றிலும் வேறாக இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்ன மூன்றுவகையான பௌத்த முன்மாதிரிகளுக்குள்ளும் அது அடங்கவில்லை. அதன் வேர்கள் அயோத்திதாசரின் குடும்பப்பின்னணியிலேயே உள்ளன,  ஆல்காட்டிடமோ பால்காரஸிடமோ அல்ல. ஆகவே அது அந்த பௌத்த மீட்பியக்கத்துக்குக் கொடுக்கக்கூடிய தரப்பாகவே இருந்தது, வாங்கியதாக அல்ல.

[மேலும்]

முந்தைய கட்டுரைகுடி ஒருகடிதம்
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் -கடிதம்