நீதியின் காதல்

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வள்ளுவர் என்னும் கவிஞர் என்னும் தலைப்பில் ஓர் உரை ஆற்றியிருக்கிறேன். தேர்ந்த ரசனை கொண்டவரான எம். வேதசகாயகுமாரே துணுக்குற்றார். அவருடைய ஆசிரியரான பேராசிரியர் ஜேசுதாசன் என் கருத்தை தீவிரமாக மறுத்தார். “நீதி சொல்றது, அறிவுரை சொல்றது, கருத்துக்களைச் சொல்றது எல்லாம் கவிதைன்னா இண்டியன் பீனல்கோடு கவிதைதானே?” என்றார்.

நான் காமத்துப்பால் பற்றி கேட்டேன். “காமத்துப்பால் கவிதைதான். ஆனா அது ஒரிஜினல் கவிதை இல்லை. அதுக்கு முன்னாடி ஒரு ஐநூறு வருஷமா அகத்துறை பாடல்களை எழுதிட்டிருக்காங்க தமிழிலே. அந்த அகத்துறைப் பாடல்களை ரெஃபெரென்ஸா வைச்சுக்கிட்டு ஒவ்வொரு இமோஷனுக்கும் ஒரு மாடல் மாதிரி காமத்துப்பாலை எழுதியிருக்கார் வள்ளுவர். அது கவிதையா எழுதப்படலை. ஒரு இலக்கண மாடல் மாதிரி எழுதப்பட்டதுதான்…ஒண்ணுமே புதிசா இல்லை”

வள்ளுவர் மேல் ஜேசுதாசனுக்கு மதிப்புண்டு. “அவரு ஒரு ஜெய்ன் முனிவர். அவரு புதிசா நீதிகளை உருவாக்கலை. அதுவரை தமிழ்ச்சமூகத்திலே பேசப்பட்ட நீதிகளையும், ஜெயின் நீதி மரபையும் இணைச்சு ஒரு நீதிநூலை உருவாக்கினார். அது நீதிக்கு இலக்கணம் வகுத்த நூல். அதனாலே ஒரு கிளாஸிக். எதிக்ஸ் நூல்களிலே உலகளவிலேயே ஒரு கிளாஸிக். ஆனா அதுக்கு இரண்டாயிரம் வருஷம் முன்னாடி சாலமோன் நீதிகளும் ஹாமுராமி நீதிகளும் வந்தாச்சுங்கிறதை நாம மறந்திரக்கூடாது”

ஏறத்தாழ பேராசிரியர் சொன்னதை ப.சிங்காரம் அவருடைய புயலிலே ஒரு தோணி நாவலில் ஓர் உரையாடலில் சொல்லியிருப்பார். அது பரவலாக ஏற்கப்பட்ட கருத்தாகவே இருந்திருக்கிறது. புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரை வள்ளுவர் ஒரு நீதிநூலாசிரியராகவே கருதப்பட்டிருக்கிறார்.

நான் அக்கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. வள்ளுவரின் காமத்துப்பால் மட்டுமல்ல, மொத்த நூலே கவிதைதான் என்பதே என் எண்ணம். அதை நீதிக்கவிதை அல்லது கவிதையின் நீதி எனலாம். ’இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றியான்’ என்ற கொதிப்பும் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை’ என்னும் விவேகமும் உயர்கவிதையேதான். அதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன்.

*

கவிஞர் இசை மரபிலக்கியப் படைப்புகளுக்கு நவீனக் கவிதைசார்ந்த ரசனைநிலையில் நின்றபடி எழுதும் உரைகளை நூல்களாக்கியிருக்கிறார். அவை  ரசனைக்குறிப்புகள் என்றும் சொல்லத்தக்கவை. அவ்வரிசையில் குறள் பற்றி அவர் எழுதிய குறிப்பிடத்தக்க நூல் மாலை மலரும் நோய். உயிர்மையில் தொடராக எழுத தொடங்கி பின்னர் தன் வலைப்பூவில் இசை இதை எழுதி முழுமையாக்கியிருக்கிறார்.

‘தமிழ்ச்சூழலில் வள்ளுவர் ஒரு குட்டித் தெய்வமாகத் தோற்றம் அளிக்கிறார். அல்லது ஒரு அரசியல்பாதைக்குத் தலைமை ஏற்கிறார். இந்த இரண்டு பாத்திரங்களையும் விடுத்து தமிழின் ஆகச்சிறந்த கவியாக அவரை முன்னிறுத்துபவை காமத்துப்பால் பாடல்கள்’ என கூறும் இசை ’துவராடை களைந்து அவரை கபிலரோடும் வெள்ளிவீதியாரோடும் சரியாசனத்தில் அமர்த்தும்  முயற்சி இது’ என தன் நூல் பற்றிக் குறிப்பிடுகிறார்.

காமத்துப்பால் கவிதைகளில் வள்ளுவரின் சந்தம் பிற குறள்களில் உள்ளதை விட நோக்கமும் எழிலும் கொள்கிறது.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம் இம்மூன்றும் உடைத்து

(எமனோ, பெண்ணின் கண்ணோ, மான்விழியோ இவள் பார்வை மூன்றுமாகவும் உள்ளது)

என்னும் கவிதையை நான் கவிதை வாசிக்கும் வழக்கப்படி ‘கூற்றமோ கண்ணோ’ என்னும் ஒரு சொல்லாட்சியாக மாற்றி நினைவில் வைத்திருக்கிறேன். சொல்லச் சொல்ல மந்திரம்போலாகி விரிவது அது. ஆனால் இன்று என் நெஞ்சில் அது பெண்ணின் விழிகள் அல்ல. தமிழகத்தின் ஆலயங்களில், அரையிருள் நிறைந்த பிராகாரங்களில், சிலைகளில் அந்த கொல்லும் பார்வை கூடுவதைக் கண்டிருக்கிறேன்.

சிலசமயம் கவிதையில் இருந்து பிரிந்து வேறொரு உணர்வுநிலைக்கான சொல்லிணைவாக கவிதையின் ஒரு துளி உருமாறுவதுமுண்டு.

புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள்வற்றே பசப்பு

தழுவிக்கிடந்தேன். சற்றே பிரிந்தேன். அவ்வளவிலேயே மேனி நிறமழியும் பசலை என்னை தழுவிக்கொண்டது.

என் நினைவில் ‘புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேன்’ என்ற சொல்லாட்சியாக இக்குறள் நீடிக்கிறது. தழுவிக்கிடந்த அனைத்தையும் பிரிந்து நகரும் வாழ்க்கையின் தருணங்கள் தோறும் உடன் வருகிறது.

இசையின் இந்நூல் காமத்துப் பால் கவிதைகள் மீதான சுருக்கமான ரசனையாக மட்டுமே உள்ளது. கவிதையில் இருந்து வாசகன் செல்லத்தக்க தனித்த பயணத்தை பெரும்பாலும் எங்கும் காணமுடியவில்லை. ஆனால் அவருடைய ரசனை ஒவ்வொரு பாடலாக தொட்டுச் செல்வதை வாசிப்பது காமத்துப் பால் கவிதைகளை மீண்டுமொருமுறை ரசிப்பதற்கு வழிவகுக்கிறது.

மாலை மலரும் நோய் – இசை

முந்தைய கட்டுரைகார்த்திகேசு சிவத்தம்பி 
அடுத்த கட்டுரைஅனந்தமூர்த்தியின் ‘பிறப்பு’