சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?
சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களிலே முதல் கருணை அடிப்படையில் விடுதலை கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. அது காந்தி இந்தியா வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. சிறை சென்ற சில மாதங்களிலே சட்டத்தில் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வெளியே வர நினைத்து இருக்கிறார். அதனால் அவர் காந்தி வருகைக்கு பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களை வைத்து தன்னுடைய வேண்டுதலுக்கு வலு சேர்த்திருக்கலாமே தவிர ஜனநாயக போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு கருணை விடுதலை கோரியிருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். மேலும் தனிமை சிறையில் இருந்த அவருக்கு புற சூழலை அறிந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டதா?
வீரத்தையும், வன்முறையையும் பிரித்து அறிய தெரியாமல் இருக்கும் மக்கள் முன் ஒரு அரசியல் தலைவர் உயிர் வாழும் உரிமையின் பொருட்டே சாவர்க்கர் கருணை கோரி இருந்தாலும், அவரை கோழை என்று சொல்வதை அரசியல் நுட்பம் கொண்டு தவிர்க்கலாம். ஆனால் ஆயுதம் எடுக்காத பேரன்பும் பெரும் கருணை கொண்ட ஒருவரை ஆயுதத்தால் அகற்றட்டும் என்று நினைக்கும் ஒருவர் வரலாற்றில் தேசபக்தராக இருக்கலாம், தியாகியாக இருக்கலாம் ஆனால் ஒரு வீரனாக எப்படி இருக்க முடியும்?. இதன் பொருட்டு அவரை பயம் கொண்ட கோழை என்று அழைக்கலாமே?
அம்பேத்கர் பிரிட்டிஷ் அரசை சுதந்திர போராட்டத்தின் கடைசி காலம் வரை ஆதரித்ததற்கு பிரதான காரணம் அவர்களின் ஆட்சி மீது இருந்த நம்பிக்கையா இல்லை காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்கள் மீது இருந்த அவநம்பிக்கையா?
அரசியல் சட்டத்தை வரையறை செய்யும் வாய்ப்பு அவருக்கு கொடுத்த பிறகு காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்கள் மீது இருந்த அவருடைய பார்வை மாறி இருந்ததா?
பொருளாதார அறிஞரான அவர் பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளாதார சுரண்டலை அறியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படியிருந்தும் அவர் பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரிக்க சாதிய பாகுபாடு தான் பிரதான காரணமா? பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளாதார சுரண்டல் ஏற்படுத்திய அழிவுகள் அம்பேத்கர் அவர்களை ஆதரித்த காலத்திலேயே ஆராயப்பட்டு அறிவு தளத்தில் இருந்ததா?
பின்குறிப்பு: நான் உங்களுடைய நீண்ட நாள் வாசகன். நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் வசித்து தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்த 2010 ஆம் ஆண்டு ஓர் இரவில் நண்பர் மூலமாக இன்றைய காந்தி வாசிக்க கிடைத்தது. வரலாற்றில் ஆர்வமும் காந்தியின் மீது ஈர்ப்பு கொண்ட என்னை அந்த புத்தகம் இயல்பாக உள்ளிழுத்துக் கொண்டது. இருப்பினும் இலக்கியம், வாசிப்பு, அறிவுதளம் பற்றியெல்லாம் எந்த அறிமுகமும் இல்லாத எனக்கு உங்களை பின்தொடர சில ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 2014 லில் இருந்து தினமும் உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களில் நானும் ஒருவன்.
தர்க்கமும் பகுப்பாய்வு மனநிலை கொண்ட எனக்கு உங்களுடைய பெரும் நாவல்களை தீவிரத்துடன் படிக்கும் மனநிலை அமையவில்லை ஆனால் கட்டுரைகள், கடிதங்கள், சிறுகதைகள் மிகுந்த உற்சாகமும் தீவிரமும் தரக்கூடியது. வெண்முரசு முதல் பாகம் இணையத்தில் படித்து புத்தகத்தில் படிக்க வேண்டும் என்று நிறுத்தி விட்டேன் ஆனால் கனடாவில் இருக்கும் எனக்கு இப்போது அந்த வாய்ப்பு இல்லை. வெண்முரசின் மொழியும் அது உருவாக்கும் தர்க்கமும் என்னை வேறு உலகிற்கு இழுத்துச் செல்கிறது.
இந்தியா, இந்துமதம், இந்திய மற்றும் தமிழ் பண்பாடு கலாச்சாரம் பற்றிய குறைந்த பட்ச தெளிவும் புரிதலும் அது சார்ந்த பார்வையும் உங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். திருவிழா மற்றும் மக்கள் கூட்டங்களில் சிறுவயதில் திளைத்த எனக்கு இருபதுகளில் ஒரு விளக்கம் ஏற்பட்டது. உங்களுடைய வாசிப்பின் மூலம் முப்பதுகளில் அதை மீட்டுக் கொண்டேன். எல்லாவற்றிக்கும் மேலாக என்னுடைய அறவுணர்வு மேம்பட்டிருக்கிறது.
அடிக்கடி எனக்குள் ஒரு எண்ணம் தோன்றுவது உண்டு. உங்களை என் பள்ளி இறுதி கலங்களிலோ, ஆறு ஆண்டுகள் கல்லூரி காலங்களிலோ கண்டடைந்தது இருந்தால் என் வாழ்க்கையை வேறு மாதிரி அர்த்தப்படுத்தி அமைத்துக்கொண்டு இருந்துருப்பேன். அந்த காலங்களில் பெரும் ஆற்றல் வீணடிக்க பட்டதாகவே சில நேரங்களில் உணர்கிறேன். அனாலும் தஞ்சை கிராமமும், இளமை வறுமையும், அரசு பள்ளியும், அரசு கல்லூரியும் என்னை உருவாக்கியதில் பெரும் பங்கு கொண்டது.
அன்புடன்,
முத்துக்குமார்
டொரோண்டோ
*
அன்புள்ள முத்துக்குமார்
காந்தி கொலை என்பது கோழைத்தனம் அல்லது ஆத்திரத்தால் செய்யப்பட்டது அல்ல. அதற்குப்பின்னால் தெளிவான அரசியல் கணக்குகள் இருந்தன. பிரிட்டிஷ் ஆதரவுமனநிலை, இந்து அடிப்படைவாதமனநிலை இரண்டும் கொண்டிருந்தவர்களின் செயல் அது. இரண்டுவகைகளில் அவர்களின் அரசியல்கணக்குகள் தவறாயின. ஒன்று, அவர்கள் நினைத்ததைவிட இந்தியர் நெஞ்சில் காந்தி ஆழப்பதிந்திருந்தார். இரண்டு, அவர்கள் எண்ணியதுபோல பட்டேல் நேருவை விட்டு விலகவில்லை.
ஜெ