மகிழ்ச்சிக் கணக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு,

ரம்யாவின் கடிதத்தை படித்தேன். (மதுமஞ்சரி – கடிதம் )

மஞ்சரி பற்றிய அவரின் எண்ணங்கள் என்னை என்ன செய்கிறது என தொகுக்க இயலவில்லை. நான் எண்ணுவதை எழுத்தாக்கும் வலிமை என்னிடம் இல்லை என்றே தோன்றுகிறது.

ஒரு கட்டத்திற்கு பிறகு வாழ்க்கையில் ஆசிரியர் மிகத் தேவை ஆகின்றார். இல்லையேல் அலைக்கழியும் அன்றாடம் தான் எஞ்சும்.

செய்வதற்கு ஏதாவது இருந்தாலே இந்த வாழ்வை கடந்து விடலாம் என்பதே நீங்கள் கற்று தந்தது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என நாம் தானே முடிவெடுக்க இயலும். உள்ளுணர்வு கொண்டு அதை செய்ய வேண்டும் தான்.

என் வாழ்வில் முழுதாக பத்து வருடங்கள் மருத்துவம் சார்ந்தே சென்றன. குழந்தையின்மை சிகிச்சை காலத்தையும் என்னையும் சேர்த்தே கரைத்தது. இன்னும் இன்னும் என நான் எழும்போதெல்லாம் மீண்டும் எழ முடியாத படி செய்தது ஊழ். இப்போது சிகிச்சை முடிந்து மகன் பிறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. மீண்டும் தொடங்கவே எண்ணுகிறேன்.

இம்முறை பின்னிழுக்கும் ஊழ் பற்றிய பயம் இருக்கிறது ஏனோ.எதையாவது செய்யத் தொடங்கினால் நிச்சயம் நிம்மதியாக நிறைவாக உணர்வேன்.ஆனால் என்ன செய்ய எப்படி செய்ய எனத் திட்டமிடவே இயலவில்லை.உள்ளுணர்வு எங்கோ தொலைவில் இருப்பது போலவே உணர்கிறேன். பயத்தினால் என எண்ணுகிறேன்.

எதுவோ சொல்ல வந்து என்னவோ சொல்லிவிட்டேன். மஞ்சரிக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய விருதுகள் விழாவிற்கும், இன்னும் சிலருக்கும் என்னால் ஆன உதவி செய்கிறேன். ஆனால் நான் என் கையால் செய்யும் ஏதேனும் மட்டுமே என் நிறைவு அல்லவா.

நன்றியுடன்

சரண்யா

திண்டுக்கல்

அன்புள்ள சரண்யா

நான் எனக்குநானே சொல்லிக்கொள்வது ஒன்றுண்டு. இதோ இன்று காலையில் எழுந்ததுமே சொல்லிக்கொண்டேன். ”நேரமில்லை. காலம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.”

செய்துமுடிக்கவேண்டிய கடமைகளுக்கான நேரம் அல்ல அது. கடமைகள் செய்யப்படவேண்டியவையே. ஆனால் மனிதன் வாழ்வது கடமைகளுக்காக அல்ல.  மகிழ்ச்சிகளுக்காக.

விரைந்து சென்றுகொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான நேரம்.  மகிழ்ச்சியைத் தேடிக்கொள்வதற்கு அவசியமான பிற செயல்களைச் செய்வதற்கான நேரம். அது இன்னும் சில ஆண்டுகள்தான் எனக்கு.

ஆகவே என் உள்ளத்திற்கு இனியவை அனைத்தையும் ஒத்திப்போடாமல் தயங்காமல் செய்துகொண்டே இருக்கிறேன். பயணங்கள். எழுத்துக்கள். நண்பர் சந்திப்புகள். எல்லா மகிழ்ச்சிகளையும் விடாமல் அடைந்துகொண்டிருக்கிறேன்.

எது எனக்கு உண்மையான மகிழ்ச்சி என கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறேன். வெறும் அகங்காரத்திற்காகச் செய்யப்படுபவை, நாலுபேருக்காகச் செய்யப்படுபவை அனைத்தையும் தவிர்க்க முடிந்தவரை முயல்கிறேன்.

நான் என்னைப் பார்க்கிறேன். எனக்கு உண்மையில் மகிழ்ச்சி அளிப்பவை மூன்று. எழுதுவது, வாசிப்பது, எதையேனும் நேரில் வருபவர்களுக்குக் கற்பிப்பது, பயணங்கள், நண்பர்களுடன் இருப்பது. அவையன்றி எல்லாமே செய்தாகவேண்டியவை மட்டுமே.

ஒரு கணக்குக்காக இந்த ஒருவாரத்தை எடுத்துக்கொண்டேன். (ஏப்ரல் 10 முதல் 16 வரை) 168 மணி நேரம். மணிநேரமாகக் குறுக்கினால் அவ்வளவுதானா என்னும் துணுக்குறல் ஏற்படுகிறது. (இதை அடைய உங்களுக்கும் இன்னும் கொஞ்சம் வயதாகவேண்டும். என் வாழ்க்கையின் சில கொந்தளிப்புகளால் நான் அதை கொஞ்சம் முன்னரே அடைந்தேன்)

எப்போதுமே நாளில் எட்டுமணி நேரம் தூங்குபவன் நான். நல்ல தூக்கமே எஞ்சிய பொழுதை உற்சாகமாக இருக்கச் செய்கிறது. காலையில் அன்றைய நாளை எண்ணியபடி உற்சாகமாகப் படுக்கையிலிருந்து துள்ளி எழுவது வரைத்தான் நான் வாழ்கிறேன். அதில் 56 மணிநேரம் சென்றுவிட்டது.

இந்த வாரத்தில் 4 நாட்கள் வீட்டில் இருந்து எழுதியிருக்கிறேன். ஒருநாளில் 5 மணிநேரம். தினம் 2 மணிநேரம் வாசித்திருக்கிறேன். ஆக, 28 மணிநேரம். வீட்டில் சிறுவேலைகளைச் செய்தது, அருண்மொழியுடன் பேசிக்கொண்டிருந்தது என ஒருநாளில் 3 மணி நேரம். அது மொத்தமாக ஒரு 12 மணிநேரம்.

மூன்றுநாட்கள் ஒரு கற்பித்தல் முகாம். (மேடையுடைப் பயிற்சி, உண்மையில் அது சிந்திப்பதற்கான பயிற்சிதான்). மலைப்பகுதியில் நடை. உரையாடல்கள். ஒருநாளில் 16 மணிநேரமும் முழுமையாகவே உச்ச மனநிலையில் இருந்தேன். 48 மணிநேரம்.

ஆகமொத்தம், 112 மணி நேரத்தில் 88 மணிநேரம் மகிழ்ச்சியாகக் கழிந்துள்ளது. முக்கால்பங்கு நேரம்.  (பயனுள்ளது என்ற சொல்லை நான் பயன்படுத்த மாட்டேன். பயன் என்றால் மகிழ்ச்சி மட்டுமே). எஞ்சிய 24 மணி நேரத்தில் 20 மணிநேரமாவது என் தொழிலுக்காகவே செலவழித்திருப்பேன். அதை வலிந்து செய்யவில்லை. ஆனால் அது மகிழ்ச்சியின் கணக்கிலும் வராது.

இந்தக் கணக்கை 1988 முதல் போட்டிருக்கிறேன். 1992 முதல் பல ஆண்டுகளுக்கு நாட்குறிப்புகள் எழுதி அவை இன்றும் கைவசமுள்ளன. ஒரு நாள் எத்தனை அரியது என்னும் எண்ணமே என்னை இயக்கியிருக்கிறது. அந்நாளில் என்ன செய்தேன் என குறித்திருக்கிறேன். ’இன்று சொல்லும்படி ஒன்றும் செய்யவில்லை’ என எழுதப்பட்ட நாட்கள் மிகமிகக்குறைவு. அலுவலகம் சென்ற நாட்களில் ஒரு நாளில் ஆறு மணிநேரம் வரை வேலைக்குச் செலவிட்டிருக்கிறேன். (என் வேலை அவ்வளவுதான். நான் அலுவலகத்திலேயே இரண்டு மூன்று மணிநேரம் வாசிப்பவனாக இருந்தேன்)

இன்று எண்ணும்போது நிறைவளிப்பது ‘ஆம், வாழ்ந்திருக்கிறோம்’ என்னும் எண்ணம்தான். அதையே திரும்பத் திரும்ப பிறருக்குப் பரிந்துரைக்கிறேன்.

எது சிறந்தது என்றல்ல, எது கடமை என்றல்ல, எது எல்லாரும் மதிப்பது என்றல்ல, எது உங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியானது என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். எல்லாரும் மகிழ்ச்சி என நம்புவது உங்களுக்கு மகிழ்ச்சி அல்லாமல் இருக்கலாம் (அறிவும் நுண்ணுணர்வும் உள்ளவர்களுக்கு அப்படித்தான் பெரும்பாலும் இருக்கும்)

மகிழ்ச்சியாக இருப்பதற்கு உங்கள் வாழ்க்கையை உடனடியாக முற்றிலும் தலைகீழாக மாற்றிக்கொண்டாகவேண்டும் என்பதில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு புதியதாக எதிலாவது இறங்கியாகவேண்டும் என்பதில்லை. அப்படிச் செய்பவர்கள் அசாதாரணமானவர்கள். சாமானியர்களுக்கு அதெல்லாமே ஒருவகை பகற்கனவுகளாகவே எஞ்சுவதற்கே வாய்ப்பு. அது அதீதமானது என்பதனாலேயே ஒத்திப்போட்டுக்கொண்டே இருப்போம்.

மகிழ்ச்சியாக இருப்பதற்கான முதல் வழி மகிழ்ச்சிதான் முக்கியம் என முடிவெடுப்பது. மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சமே என நினைப்பது. வெற்றி, லாபம், சமூகக் கௌரவம் என எதன்பொருட்டேனும் நாம் நமக்கு மகிழ்ச்சியளிக்காதவற்றில் மூழ்கியிருந்தால் கூடுமானவரை அவற்றிலிருந்து விலகுவது. நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றை நோக்கிச் செல்வது. எது மகிழ்ச்சி என கண்டுகொண்டபின் அதை செய்வது. அதைச்செய்ய தடையாக அமையும் தயக்கம், ஆணவம், பிறரின் மதிப்புக்கான ஏக்கம் ஆகியவற்றைக் களைவது.

அந்த தொடக்கத்தை அன்றே அப்போதே நிகழ்த்துவதுதான் முதலில் செய்யவேண்டியது. நமக்கு எது உண்மையான மகிழ்ச்சி அளிப்பது என்பதை எதையேனும் செய்து பார்க்காமல் எவரும் அறியமுடியாது. ஆகவே எல்லாவற்றையும் செய்து பார்க்கலாம். எதையாவது கற்கலாம். எதையாவது செய்ய தொடங்கலாம். அவற்றில் எது மிக அணுக்கமானதோ அதைத் தொடரலாம்.

ஊழ், அது எங்கோ உள்ளது. எப்படியிருந்தாலும் அது நம் அறிதலுக்கு அப்பாற்பட்டது. அதை எண்ணி அஞ்சுவதில் பயனில்லை. துளி ஈரமிருந்தால் எங்கும் கைப்பிடிப் புல் முளைத்துவிடும், அடுத்த துளி நீருக்காக அது நம்பிக்கையும் கொண்டிருக்கும். அதுவே நான் சொல்லும் வழி.

ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியைக் கொண்டே மதிப்பிடுவதே மகிழ்ச்சிக்கான வழி என நான் கண்டடைந்தேன். மகிழ்ச்சிக்கான வழிகளில் முதன்மையானது மகிழ்ச்சியற்றவற்றை விட்டு விலகும் துணிவும் பொறுமையும் என அறிந்தேன். செயலினூடாக மகிழ்ச்சி என்று வாழ்ந்து கற்றேன். திரும்பத் திரும்ப நான் சொல்வது அதையே.

இதுவே என் வாழ்க்கைச்சாதனை. என் வாழ்க்கையை நான் ஒரு பயிற்சியாகவே காண்கிறேன். யோகமுறையில் சாதனா என்பார்களே அது. இது மகிழ்ச்சிப்பயிற்சி. கற்றல், கற்பித்தல், கடந்துசெல்லுதல் என மூன்று நிலைகளில் அதை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

ஜெ

மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க

பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்

முந்தைய கட்டுரைபாலூர் கண்ணப்ப முதலியார்
அடுத்த கட்டுரை‘As a writer I’m apolitical and spiritually free’: Jeyamohan