வழி, பயணத்துக்கான ஓர் இணைய இதழ்

அன்பு நிறை ஜெ,

எனக்கு என் மூன்று வயதிலியே சாலை மார்கமாக செல்லும் நெடுந்தூர பயணங்கள் அறிமுகமாகி விட்டது. என் நினைவில் நிறைந்த என் முதல் பயணம் என்பது 1996இல் எங்கள் பெரியப்பாவின் அம்பாசிடர் காரில் முன் இருக்கையில் அப்பாவின் மடியில் அமர்ந்து சென்னையிலிருந்து திருப்பதி வரை சென்றது. 1998 இல் அப்பாவின் புல்லட் வண்டியில் டேங்கின் மீது அமர்ந்து, ஆங்காங்கே ஆலமரங்கள் நிறைந்த சாலையில் அறுபது கிலோமீட்டர் தூரம் பயணித்து, என் தம்பியை கருவுற்றிருந்த அம்மாவை காண சென்றது. குடும்பத்தில் நிலவிய வன்முறை சூழல் காரணமாக ஆறுமாத கை குழந்தையாக இருந்த என் தம்பியையும், ஆறு வயதான என்னையும் அழைத்துக்கொண்டு அப்பாவும் அம்மாவும் சில மாதங்கள் தலைமறைவு வாழ்வை சந்திக்க வேண்டி இருந்தது. சென்னையிலிருந்து  திருவள்ளூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் அங்கிருந்து கோவை பின்னர் ஊட்டி, கூடலூர், மைசூரு என சுற்றி அலைந்த நாட்கள் அவை.

பின்னர் நான் பள்ளி, கல்லூரி படிக்கையில் என்னை அதிகம் பயணம்  செய்ய ஊக்கப்படுத்தியவர் என் அப்பா, தொழ்ற்சாங்க போராட்டங்களுக்காக முழக்கங்கள் எழுதப்பட்ட வெள்ளை பதாதைகளை தூக்கி இரவும் பகலும் தமிழகம் எங்கும் அலைத்தவர் எப்போது பயணம் போகிறேன் என்று வந்து நின்றாலும் அதற்கு தேவையான பொருளும் ஊக்கமும் தந்தவர், என் கல்லூரி முடித்து நன் பூட்டான் வரை தனியாக பேக் பேக்கிங் பயணம் செய்ய தயாராகி கிளம்பும் தருவாயில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார். நான் அவராகி விடுவேன் என அவர் அஞ்சி இருக்கலாம், அது என்னை மிகவும் சீண்டியது. மிச்சமில்லாமல் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை சுற்றி அலையவேண்டும் என்று எனக்கு நானே கட்டளை இட்டு கொண்டேன். யார் தடுத்தாலும், உணவோ பொருளோ இல்லாமல் போனாலும் பயணிப்பேன். வருடத்தில் மூன்று மாதமாவது பயணம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்துவேன் என தீர்மானித்து கொண்டேன்.

போட்டி தேர்வுகளுக்காக தயாராகி கொண்டிருந்த நாட்களில் இந்திய நிலப்பரப்பின் வரலாறும், நிலவியலும்  டி.டி கோசாம்பி, எ.எல் பாஷம், பிபின் சந்திரா ஆகியோரின் மூலம் அறிமுகம் ஆகின. அதுவரை நான் கற்றிருந்த பொறியியல் படிப்பு இந்திய பெருநிலத்தின் தோற்றத்தை என் அக விழிகள் எட்டும் தூரத்திலிருந்து மறைத்து விட்டிருந்ததை அறிந்தேன், அன்று என் நினைவில் நான் சென்று குடியேற வேண்டும் என்று திட்டமிட்டிருந்த டப்ளின் நகரின் நிலவியலும், சூழியலும் பதிந்திருந்தன. மாமல்லையும் காஞ்சியும் எங்கோ புதைந்து அழிந்த நகரங்களாக என்னுள் பதிவாகி இருந்தது, ஆய்வாளர் நாகசுவாமி, பேராசிரியர் பாலுச்சாமி ஆகியோரின் உரைகளும் எழுத்துக்களும் கேமரா லென்ஸில் போகஸ் அட்ஜஸ்ட் செய்வதை போல் என் சிந்தனையும், நான் பயணிக்கும் நோக்கையும், நுண்ணோக்கி இயங்கும் அக விழிகளை அளித்தன.

என்னுள் உருவாகி வந்த அறிவு ஜீவி  சிந்தனைகளை அடித்து நொறுக்கியது சமஸின் எழுத்துக்கள் “யாருடைய எலிகள் நாம்”. அன்று நான் சமஸின் என்னும் அலையில் மிதந்தேன் குடும்பமாக சமஸ் உரையாற்றும் கல்லூரி, மேடை பேச்சுகளுக்கு சென்றேன். சமஸின் இந்திய வண்ணங்கள், சாப்பாட்டு புராணம் ஆகிய நூல்கள் தமிழகத்தை பற்றியும் இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் பற்றியும் அறிமுகம் செய்தன. சுஜாதா, மதன், இறையன்பு ஆகியோர் பயணம் சார்ந்து எழுதியவற்றை வாசிக்க தொடங்கி, எஸ்.ரா வை கண்டுகொண்டேன், மீள மீள எஸ்.ரா வின் எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்திய, பிற பயண நூல்களை வாசித்து தள்ளினேன், இந்திய தீபகற்பத்தின் அக வரைபடம் என் சிந்தனையுள் பதிவாக தொடங்கியது, பயணம் என்னும் கலை வடிவத்தின் பிடி கிட்டியது.

இந்த ஐந்து ஆண்டுகளில் ஐம்பதாயிரம் கிலோமீட்டருக்கு மேல் பயணித்து விட்டேன், என் வாழ்வில் முக்கிய திருப்பங்களும், சந்திப்புகளும் பயணத்தின் வழியே எனக்கு கிடைத்தவை. ஒரு வருடம் நண்பர்களாக இருந்த நிக்கிதாவும் நானும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது மே மத உச்சி வெயிலில் மாமல்லை சென்று, அர்ஜுனன் தபசு முன் வேர்வை சொட்ட சொட்ட நின்று ஒரு மணி நேரம் சிற்பத்தை பற்றி அவளுக்கு விளக்கிய பின்பே. கல்லூரி முடித்து ஆறுவருடங்கள் கழித்து முதல் முறை வேலைக்கான நேர்காணலில் நான் தேர்வாக உதவியதும் நேர்காணல் செய்தவரிடம் நான் கூறிய பயண கதைகளே. எல்லோரும் இசை புயல் ரகுமானை இசைக்கும் போது ரசித்ததுண்டு, அவர் கானக பரப்பில் தென்றல் வீச, இயற்கையில் தன்னை மூழ்க்கி கொண்டிருக்கும் ஒரு பயணத்தில் நான் அவரை கண்டேன். ஹிப்பிகளின் உலகில் சில நாட்கள், ஒட்டகம் மேய்ப்பவருடன் ஓர் இரவு, கயிற்றின் மேல் நடந்து, பாம்பை போல் சுருண்டு வளையும் கல்பேலியா ஜிப்சிகளுடன் சந்திப்பு, மான்களுக்கும் தாய்ப்பாலூட்டும் பிஷனாய் பழங்குடியுடன் ஒரு வன உலா என சிலருக்கு முயன்றும் கிடைக்காத புது அனுபவங்கள் பலவற்றை பயணங்கள் எனக்கு கையளித்தன.

எனக்கு பயணம் செய்யும் ஊக்கம் என் வாழ்க்கை சுழலில் இருந்தும் பல நூல்களின் மூலமும் வந்திருந்தாலும், என் ஆற்றலும், பயணத்தின் ஜீவனும் உங்களின் ஒவ்வொரு சொற்களிலிருந்து பிறக்கிறது. புறப்பாடு, முகங்களின் தேசம் தொடங்கி உங்களின் படைப்பு எதுவானாலும் என்னை மேலும் பயணிக்க கட்டளை இடுகின்றன. வண்ணக்கடல் எனக்கு வாசித்து முடிக்கையில் பயண காப்பியம் என்ற அனுபவத்தை தந்தது , இளநகன் என்னும் வழிகாட்டி இட்டுச்சென்ற பாரத வெளி அந்த படைப்பு.  என்றுமே உங்கள் அடிச்சுவட்டை பின்தொடரும் பயண சீடனாகவே இருக்க விழைகின்றேன். பயணத்தை சொற்களாக மாற்றி கதை சொல்லும் உத்தியை உங்களிடமிருந்தே பயின்று வருகிறேன். பயண கட்டுரையின் வடிவு உங்களின் ஆக்கங்களிலேயே மிக தெளிவாக அமைகின்றது. இயல்பான நிகழ்வுகளையும், பயண துணைவர்களையும் அறிமுகம் செய்து பயணத்தின் களத்தை அமைத்து கடந்து செல்லும் ஒவ்வொரு இடத்தின் வரலாற்றையும் உங்கள் அவதானிப்புகளையும் ஒரு சேர பதிவு செய்து அதனுடன் நீங்கள் அந்த தருணங்களில் அடைந்த தரிசனங்களையும் உங்கள் பயண கட்டுரைகள் பதிவு செய்கின்றன. நான் தொகுத்து கொண்டிருக்கும்  150 வருட பயண இலக்கிய ஆக்கங்களின் அடிப்படையில் தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் பயணித்து அதை பதிவு செய்த ஒரே எழுத்தாளர் நீங்கள் மட்டுமே, பதிப்பில் வந்த பயண கட்டுரைகள் மட்டுமே ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும் என எண்ணுகின்றேன். உங்கள் பயணக்கட்டுரையின் வடிவம் தமிழ் இலக்கிய சூழலில் தனித்துவமான ஒன்று, அதை அடிப்படையாக கொண்டே என் பயண அனுபவங்களை எழுத தொடங்கியுள்ளேன். காட்சி மொழி மலிந்து ஒவ்வொரு பயணியின் விரல் தீண்டும் தூரத்தில் புகைப்பட கருவிகள் இருக்கும் போதிலும் எழுத்தின் வழியே வாசகனை பயணிக்க செய்ய  மொழியால் மட்டுமே இயலும் என நிரூபணம் ஆகியுள்ளது.  நீங்கள் பகிரும் உங்கள் பயண படங்களுக்கும், காணொளிகளுக்கும் உங்கள் எழுத்தை நம்பியே பிழைக்கின்றன.

இன்றைய பயண சூழலில் நிலவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த அறுபது ஆண்டுகளில் பயணம் செய்பவர்கள் அதிகமாகி உள்ளனர், பயணத்திற்கான வழிகளும் இலகுவாகி உள்ளது, ஆனால் பயணம் சார்ந்து பதிவு செய்யப்படும் எழுத்துக்கள் குறைந்து வருகின்றது. இன்று பயணிப்போர் பெரும்பாலோனோர் பயணத்தை அகத்தில் நிகழ்த்தி கொள்ளாதவர்களாக உள்ளனர், அலைபேசியில் எடுக்கும் புகைப்படத்தையோ, காணொளியையோ எடுக்கும் ஆர்வம் கூட அந்த பயணத்தை ரசிப்பதில் இல்லை என்றே தோன்றுகின்றது. இவர்கள் ஒரு லிஸ்ட் போட்டு சும்மா டிக் அடிப்பதற்காக செய்யும் பயணம் ஒரு வகை பாழ் செயல் மட்டுமே என எண்ணத்தோன்றுகிறது .

இருபது ஆண்டுகளுக்கு முன் பயணம் செய்தவர்கள் மொழியின் மூலம் மட்டுமே அவர்கள் கண்ட நிலப்பரப்பையும், மனிதர்களையும், அனுபவங்களையும் நினைவில் சேகரித்துக்கொண்டனர். இன்று கைலாய யாத்திரையே முப்பது வினாடி காணொளியில் சுருங்கி விழுகின்றது. பயண வழிகளிலும், பயணத்தை பதிவு செய்யும் முறைகளிலும் கடந்த இருபது ஆண்டுகளில் பல மாற்றம் வந்துள்ள  போதிலும் பயணத்தை பதிவு செய்வதில் மொழியின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்று என நான் எண்ணுகிறேன்.

உதாரனாமாக, எங்கள் திருமணம் முடிந்து நானும் நிக்கிதாவும் திருவரங்கம் சென்றோம் அதற்கு முன் தினம் அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை புத்தகத்திலிருந்து எதேர்ச்சியாக “கண் மலர்தல்” என்னும் பதிவை படித்திருந்தேன், அன்று காலை விஷ்வரூப தரிசனம் செய்வதற்காக காலை நான்கு மணி வாக்கில் பிரகாரத்தை அடைந்திருந்தோம், ஆட்டோவில் காவேரியை கடந்து வரும் வழி எங்கும் ரங்கபுரத்தை எண்ணிகொண்டே பின்வரும் பாடலை கேட்டு கேட்டு கரைந்துருகி  வந்தோம் –

“பச்சை மா மலை போல் மேனி

பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே

ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச் சுவை தவிர யான் போய்

இந்திரலோகம் ஆளும்

அச் சுவை பெறினும் வேண்டேன்

அரங்க மா நகருளானே”

கும்பமும், வேழமும், பாரியும், பசுவும் தொழுது அகன்றதும், நாங்கள் இருவரும் அரங்கனை காண கண் கோடி வேண்டி உள்ளே சென்றோம் எங்கள் முன்  ஒரு வைணவ முதியவரும், பட்டு பாவாடை சட்டை அணிந்து ரெட்டை ஜடை பின்னலிட்ட  வளரிளம் கன்னி ஒருத்தியும் நின்றிருந்தனர் . நாங்கள் கடந்துவந்த ஆறும், ஏழு நிலை பிரகாரமும், செவி கேட்ட இன்மொழியும், புலனறிந்த உணர்வும், ஆட்டுவிக்கும் அறிவும், இந்த புவி மிதக்கும் பிரபஞ்சமும் ஒன்று திரண்டு கருவறை நிறைத்து கால் நீட்டி சயனித்திருந்தது, ஆயர் கள்வன் அச்சுதன் அங்கே எங்கோ மறைந்திருந்திருப்பான். தொண்டரடிப்பொடியாழ்வாரும், அருள்மொழி நங்கையும், நிக்கிதாவும், நானும் ஒரு சேர கண்ணீர் மல்கி கை தொழுதோம். யுக யுகமாக ரங்கபுரம் என்னும் பயணம் அங்கே சென்று வந்தவர்களுக்குள் நிகழவேண்டும் அதுவே பயணமாக இருக்க முடியும் என உணர்ந்து கொண்டேன். இந்த வகை முடிவிலா பயன அனுபவம் கைகூட பயணத்தை பற்றி எழுதுவதும், பயணத்தை பற்றி வாசிப்பதும்  மிகவும் உதவுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு வரை நான் சென்ற பயணங்களை பற்றி ஒற்றை வரி பதிவை கூட எழுத முடியவில்லை. முயற்சித்து கொண்டே இருந்தேன், நீங்கள் என்னிடம் ஏற்கனவே சொல்லிய துண்டு என்றோ ஒரு நாள் அவை உங்களிலிருந்து வெளிப்படும் அதுவரை காத்திருங்கள் என்று. நான் என் தொடர் அலைந்தழியும் பயணங்களை முடித்து, ஐந்து வருடம் கழித்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நான் பயணங்களை பற்றி எழுதுவதற்கு மொழி திரண்டு வர தொடங்கி உள்ளது, என்னிலிருந்து மீள இன்று ஒரு வழி கிடைத்துள்ளது.

பயணத்தை பற்றி எழுதுகையில் நான் மீண்டும் ஒரு முறை பயணிக்கிறேன், விட்டுவந்த பொக்கிஷங்களை கொண்டுவந்த நினைவுகளுடன் முடிந்து வைத்துக் கொள்ள புதிதாய் என் முன் ஒரு பாதை தெரிகின்றது, அந்த தடத்திலேயே சென்று சென்று மேலும் புதிய வழிகளை கண்டடைகிறேன், பயணத்தை பற்றி எழுதுவதே நான் சென்று வந்த பயணத்தை முழுமை செய்கின்றது என்பதை எழுத எழுத தெரிந்து கொள்கின்றேன். பயணத்திற்கு முன் பயணம் செய்யும் இடத்தை பற்றி குறைந்தபட்ச வாசிப்புடனாவது செல்வது எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் எழுத்துக்களும், என் அனுபவமும் எனக்கு கற்பித்துள்ளன.

சென்ற மாதம் உங்களை சந்தித்த போது மனிதனை மகிழ்வுடன் வைத்திருப்பது புதிதாய் எதையாவது அறிந்து கொள்வதும் (Knowing) அதை செயல்படுத்துவதும் (Making it into action) தான் என்று கூறினீர்கள். ஆம் உண்மைதான், நான் பயணத்தில் புதிதாய் எதோ ஒன்றை காண்கிறேன், அல்லது புதிதாய் காண கற்றுக்கொள்கிறேன். கற்றுக்கொண்டதை நான் எழுதுவது மூலமே நான் தெளிவையும் மகிழ்வையும் அடைகிறேன். அதற்காகவே பயணம் சார்த்த எழுத்துக்களை பதிவு செய்வதற்கு “வழி” என்ற பெயரில் புதிய இணையதளம் ஒன்றை தொடங்க இருக்கின்றேன்.  அந்த தளத்தில் இதுவரை நான் செய்த பயணத்தையும் அனுபவத்தையும் பதிவுசெய்வது என் முதல் இலக்கு, என்னை போல் பலர் பயணம் செய்துள்ளனர் அவர்களையும் பயணம் சார்ந்து எழுதவைப்பது மற்று மோர் இலக்கு. இந்த தளத்தின் தொலைநோக்கு இலக்கு ஒன்று உண்டு, அது உலகில் உள்ள அத்தனை நிலப்பரப்பை பற்றியும் தமிழில் ஒரு கட்டுரையாவது அங்கே பயணித்தவர்கள் இந்த தளத்தின் வழியே எழுதவேண்டும் என்பது.

இந்த தளம் வழக்காமான பயணம் சார்ந்த வலைப்பூக்கலிருந்து சற்று வித்யசமானது, இதன்  அடைப்படை செயல்படுகளாக சிலவற்றை திட்டமிட்டுள்ளேன்

1)  சிறந்த பயண அனுபவங்களை தமிழில் ஆவண படுத்துதல்.

2)  பிற தளங்களில் வெளியாகி கவனம் பெறாமல் போன பயண பதிவுகளை மறுபிரசுரம் செய்தல்.

3)  அச்சில் இல்லாத பழைய பயண நூல்களை தொகுத்து இந்த தளத்தில் பகிர்ந்து வாசகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.

3) ஆங்கிலத்தில் வந்த சுவாரசியமான பயண நூல்களை, கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுதல்.

4) அணைத்து தரப்பு பயணிகளும் பயன் பெரும் வகையில் ஊர், இடம் சார்ந்து வழிகாட்டி நூல்களை தயாரித்து இலவசமாக அளித்தல்.

5) ஊடக வெளிச்சம் பெறாத பயணிகளை பற்றியும் அவர்களின் கதைகளையும் பதிவு செய்தல்.

6) பயண இலக்கியத்திற்கான சரியான அமைப்பையும், நெறிமுறைகளையும் வகுத்தல்.

7) ஆங்கிலத்தில் இருப்பது போன்று சர்வதேச தரத்தில் பயண எழுத்தாளர்களை உருவாக்குதல்.

தற்போது வரை 160கும் மேற்பட்ட தமிழில் வெளியான பயண நூல்களின் பட்டியலை தயாரித்துள்ளேன், ஈழ பயணிகளின் நூல்களும் அதில் உள்ளது. நூல்களை இலவசமாக வாசிக்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் சுட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாத வெளியீடாக 1926ல் திரு.வி.க எழுதிய எனது இலங்கை பயண செலவு என்ற பயண கட்டுரையும், நான் எழுதியுள்ள “கானகமும் கயமுனியும்” என்ற ஊட்டி, மசினகுடி பயண அனுபவமும் தலத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

நானும் நிக்கிதாவும் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம், ஆர்வம் உள்ள நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.

வரும் ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு அன்று தளத்தை வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.  அமைந்தவர்கள் அலைய துவங்கவும், அலைந்தவர்கள் அமைந்து கொள்ளவும் இந்த வழி என்றும் திறந்து இருக்கும்.

உங்கள் ஆசிகளையும், வழிகாட்டுதலையும் வேண்டுகிறேன்.

வழி இணையதளம் https://www.vazhi.net/ 

பணிவன்புடன்,

இளம்பரிதி.

முந்தைய கட்டுரைExploitative World Hidden in Plain Sight
அடுத்த கட்டுரைவ.வெ.சுப்ரமணிய ஐயர்