ஈராறுகால்கொண்டெழும் புரவி வாங்க
ஈராறுகால்கொண்டெழும் புரவி மின்னூல் வாங்க
அன்பின் ஜெ,
கடந்த ஆண்டு நாமக்கல் கட்டண உரைக்கு வந்திருந்தபோது ஈராறு கால்கொண்டெழும் புரவி வாங்கி தங்களிடம் கையொப்பம் பெற்று வீடு வந்து வாசித்து முடிக்கயில் கடைசி நான்கு பக்கங்கள் பிடிகிடைக்காமல் தடுமாறினேன்.
ஆறேழுமாதங்கள் கழித்து மீண்டும் வாசித்தேன். சாஸ்தான்குட்டிபிள்ளையின் உணர்வுகள் யாவையும் என் ரத்தத்தில் நரம்புகளில் மூளையில் ஏற்றி என்னை திடுக்கிட செய்தீர்கள். சில நாட்கள் தூக்கமின்றி கிடந்தேன். நீங்கள் எழுதிய புனைவுகளில் முதன்மையானது என்று இதை கருதுகிறேன். அப்படி அல்ல என்று உங்களுடைய பல புனைவுகளும் என்னைப்பார்த்து சிரிக்கின்றன.
சாஸ்தான்குட்டிபிள்ளை தனது சொத்துக்களை யெல்லாம் விற்றுவிட்டு தனது வேலையாள் ஞானமுத்தனோடு பெட்டி படுக்கைகளை தூக்கிக்கொண்டு மலையேறுகிறார். ஏறும்போது பிள்ளையின் பாத்திர தன்மையை கீழ்கண்டவாறு விளக்கி வருகிறீர்கள்.
“கீரைக்காரி சுப்பம்மை ஒரு நாள் இரவில் அவள் குட்டித்தென்னையருகே மூத்திரம் போக உட்கார்ந்திருந்தபோது அருகே வந்து முகர்ந்த கரிய நாய் சாத்தன்குட்டிப்பிள்ளைதான் என்று சொன்னபோது யாரும் ஆச்சரியப்படவில்லை.
தமிழ்வகுப்பில் மூதுரைக்குப் பதிலாக ரசவாதம் சொல்லிக் கொடுக்கமுற்பட்டு தாமிரப்பாத்திரம் உடைந்து கமறும் புகை கிளம்பியது. கந்தகம் தின்ற நாயின் குசுபோல– பக்கத்துவகுப்பில் இந்தியவரலாறு நடத்திய முதல்சாட்சி சாலமன் ஞானதீபம் எம் ஏ, பி .எட் சொன்னது . புகைத்திரை மறைந்தபோது தாடிபொசுங்கிய பிள்ளையின் கையில் இருந்த சருவமும் சட்டுவமும் காணமலாயின என்று தெரியவந்தது
அவரது மனைவி நாகம்மை தலைப்பிரசவத்தில் பேறெடுக்கும் சின்னம்மை கண்தெரியாமல் தொப்புள்கொடியை தன் முந்தானை என்று பிடித்து இழுத்தமையால் உயிர்துறந்ததுதான் காரணம் என எல்லாரும் நம்பினர்.
கெடந்து துள்ளாதியோ. இப்ப என் தலை சரிஞ்சா பின்ன சாத்தாம்பிள்ள கணக்கா கக்கூஸ் போயிட்டு வந்து வாயைக்கழுவுத சேலுக்குத்தான் ஆவிய” என்று வெள்ள்ளாடிச்சிகள் அவியலில் ஒருபோதும் பதமாக வேகாத சேனைக்கிழங்கு பற்றி ஆன்ம விசாரணை செய்யும் வீட்டுக்காரர்களுக்குச் சொல்வதுண்டு”.
மலையேறி தனது குடிசையில் சாமான்களை இறக்கி வைத்தபின் நீர்நோட்டம் பார்ப்பது பற்றிய சில குறிப்புகளை ஞானமுத்தனுக்கு கூறுகிறார்.ஞானமுத்தனுக்கு அந்த வித்தை ஒரே மூச்சில் பிடிபட்டு விடுகிறது.ஆனால் பிள்ளைக்குத்தான் கதை முடியும் வரை பிடிபடவேயில்லை.
ஞானமுத்தன் சன்னதம் கொண்டவனாய் மலையை விட்டு கீழிறங்கி ஓடுகிறான். “காலுக்குக் கிழே ஓடைகள் சிலுசிலுப்பதை, நீர்வீழ்ச்சிகள் ஓலமிடுவதை, அமைதிஅலையடித்த ஏரிகளை, அழுத்தம் குவிந்த நீராழிக்கிணறுகளை அறிந்தான்.” இதன் பிறகு ஞானமுத்தன் கதையின் இறுதிப்பகுதியில் தான் வருகிறான்.
பிள்ளைக்கு அவ்வப்போது மனைவி நாகம்மையின் நினைவு வருகிறது. திருமணமான நாளிலிருந்து பிள்ளையின் காமவிளையாட்டையும் நகைச்சுவை யோடு எழுதுகிறீர்கள்
“தீராத வயிற்றுவலியால்” இடைவெளியின்றி விடுப்பு எடுத்து ‘கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில் ஆழ நடும்’ கலையறிந்து ஒழுகினார். இரண்டுவருடமாகியும் காய்விடாததைக் கண்டு மூத்தபிள்ளை மனைவியிடம் கேட்க அவள், ”சவம் கெடக்கான். அவன எங்கிணயாம் கெழக்க அடிச்சுவிட்டு மாசத்துக்கொருக்க வாற மாதிரி வச்சாத்தான் எனம் வெளங்கும். நாய் மோண்டதுமாதிரி மூச்சுக்கு முன்னூறுமட்டம் சொட்டுசொட்டா ஊத்திவச்சா என்னாண்ணு முளைக்கும்?” சித்தர்பாடல்களும் திருமந்திரமும் திகட்ட திகட்ட கிடைக்கிறது. எடுத்த புத்தகத்தை வைக்க விடாமல் கதை முடியும் வரை சிக்கச்செய்கிறீர்கள்.
“நாகம்மையின் உடலைப் பார்த்தபோது ”இது ஏம்ளா இப்டி இருக்கு?” என்று கேட்டார். நாகம்மை நொடித்து ”பின்னே எப்டி இருக்கும்ணு நெனக்கியோ? வேறெ கண்டிட்டுண்டோ?” என்றாள் .
அவருக்கு கொஞ்சநேரம் கையும் காலும் எதுவும் ஓடவில்லை. ”நான் எங்க கண்டேன்? ஆனா…”
நாகம்மை வாரிச்சுருட்டி” என்ன ஆனா?” என்றாள்
“இப்பிடி இருக்கு?”
“பின்ன எப்பிடி இருக்கணும்?’
“இல்லே …உறக்கையின் கனி நிகரென இலகிய முலைமேல்- ண்ணாக்குமெ அருணகிரிநாதர் சொன்னது.. இது வலதுகாளை எடக்காளையக்காட்டிலும் மூப்புமாதிரி இருக்கே… “
“அவன் கண்டான்… பெரிசா” என்றாள் நாகம்மை
சாஸ்தான்குட்டிப்பிள்ளை மேலும் தமிழாய்ந்து ”இணைமுலைண்ணு வேற சொல்லுதானே?” என்றார்
“கல்லோ கலயமோ கண்டிருப்பான். இஷ்டமானா பாருங்கோ… சும்மா….” என்றாள் அவள் உடலின் தூலவிசித்திரங்களை மொழி தொட முடியாதென்று அறிந்தார்.”
சாஸ்தான்குட்டிபிள்ளைக்கும் நாகம்மைக்குமான உரையாடலை நாரோயில் பாஷையில் எழுதுகையில் எங்களைப்போன்ற சேலம் மாவட்டகாரர்களுக்கு முக்கனி சுவையளிக்கிறது.
நீர்நோட்டம் பார்க்கும் கலை அறிய பிள்ளை தன்னைத்தானே வருத்திக் கொண்டு மிகவும் சிரமப்படுகிறார். அய்யாவு நாடாரை சந்திக்கிறார். அய்யாவு நாடார் இடம் பார்த்து சொன்னபிறகு அதேயிடத்தில் பிள்ளை வேம்புகுச்சியுடன் நடந்தார். குச்சி கையிலிருந்து எதையோ எதிர்பார்த்து தவித்தது. ஆனால் இணையவில்லை. அதிரவில்லை. குச்சியின் நுனிக்கு மிக அருகில் மறுகுச்சி நின்றது. ஆனால் தொடவில்லை.”
“மண்டை மார்பில் முட்டும்படி நாட்டுச்சாராயம் குடித்தால்தான் பிள்ளையால் தூங்கமுடியும் கரிச்சா இஞ்சி காஞ்சா சுக்கு என்ற பழமொழி பிள்ளையின் நெஞ்சுக்குள் எப்போதோ குடியேறிவிட்டது.” என்றெழுதி பிள்ளையின் இயலா நிலைமையை என் கண் முன் காட்டுகிறீர்கள்.
பிரக்ஞை பிள்ளையைவிட்டு விலகி விலகிச் செல்கிறது.மலையில் சடைமுடி சாமியை பார்க்கிறார் அறிவுரை வழங்கி மாம்பழம் தருகிறார். மாம்பழத்தை தின்று கொட்டையை ஓரிடத்தில் புதைக்கிறார். அது செடியாகி மரமாகி பூவாமால் காய்க்காமல் நிற்கிறது. தானும் குகை சாமியாகிறார். மக்கள் அவரைப் பார்த்து அருள் பெற திரளாக வருகிறார்கள். மனம் அடங்கவில்லை. கீழிறஙகி சமவெளிக்கு வருகிறார். தற்செயலாக ஞானமுத்தன் தோட்டத்துக்கே வருகிறார். ஞானமுத்தனின் மனைவி மரியாள் திண்ணையில் அமரவைத்து பீயேக்காரியான தன் மருமகள் சென்ஸி என்கிற ஜென்சியிடம் பழங்கஞ்சி கொடுக்கச்சொல்கிறாள். பழங்கஞ்சி குடிக்கும் போதே ஜென்சியின் வாளிப்பும் வடிவமும் பிள்ளையின் கவனத்தை ஈர்க்கிறது. சிலநாள் அங்கேயே ஓய்வெடுக்கிறார்.
ஒரு நாள் பிள்ளைக்கு உணவு கொண்டு போன ஜென்சி அவர் மூர்ச்சையாகி கிடப்பதை கண்டு அதிர்ந்து போய் அவரை தன் மடியில் கிடத்தி தண்ணீர் கொடுக்கிறாள். தண்ணீர் குவளையை இடப்புறம் வைக்கும் போது அவள் வலப்புற முலை பிள்ளையின் முகத்தில் அழுத்த, அவரின் பிரக்ஞை சீண்டப்பட்டு மனம் திசையெங்கும் பறக்கிறது. நீங்கள் நர்த்தனமாடிய பலவற்றில் கொஞ்சம் கீழே…
“சுக்கென உடல் நொய்ய சிக்கென எழுந்து மனம் பேருருவம் கொள்ள அகம் மட்டுமே தானாக அவிந்த உடலில் நின்று கொழுந்தாடுவதை கண்டுகொண்டிருந்தார். முத்தி முடிவில்லீதென்று முன்னூலும் பின்னூலும் மற்றநூலெல்லாம் மறந்து மெய்யெனப்படுவதே பொய்யாக இருந்தபோது அப்படி இருப்பது அவராகவும் பிறிதொருவர் வேறெங்கோ அலைவதாகவும் மாயம் காட்டிய மனமெனும் ஒருபாவி மயங்கிச்சிரித்து உடன்வந்தது.
பிள்ளைவாள் தன் உடலெங்கும் எழுந்த உயிரை, அவ்வுயிரின் மையமாக எழுந்த மூலாதாரபிந்துவை, அதில் திகழ்ந்த நாதத்தை உணர்ந்தார். மெல்லிய முனகலுடன் அவர் உடலில் ஒரு இறுக்கமும் வலிப்பும் கூடியது. சொற்களென பெருகிய சித்தத்தில் எங்கெங்கோ சிலம்பொலித்தது, கைவளை சிரித்தது. மணி மின்ன, அணி மின்ன, மலர் வாசமெழ, சாடைகள் ஆயிரம் சாயல்கள் ஆயிரமென எழுந்தெழுந்த அலைகளில் அவர் மீண்டும் மீண்டும் சொற்களையே அள்ளி அள்ளிக் குடித்துக்கொண்டிருந்தார். மங்கல செங்கலசந்திகழ் கொங்கை. நேரிழையாவாள் நிரதிசயானந்தப் பேருடையாள்! மணிகடல்யானை வார்குழல்மேகம் அணிவண்டுதும்பி வளைபேரி கையாழ்… இக்கணம் இக்கணம்….செல்லும் சதகோடிக் கணங்களை உண்டு தான் தானென்று நிற்கும் இக்கணம்.”
வாசகனுக்கு பித்தம் தலைக்கேறி சித்தம் தடுமாறும் கடைசி பக்கங்கள். சாஸ்தான்குட்டிபிள்ளைக்கு அன்னையும் மனைவியும் நினைவுக்கு வந்து பின் அடங்கி மூச்சிழக்கிறார். ஞானமுத்தன் பிள்ளையின் உடலை எரித்து சாம்பலை கொண்டு போய் மலைமேல் அந்த மாமரத்தடியில் புதைக்கிறார். மரம் பூத்துக் காய்த்து கனிகிறது. மெய்மையை தேடி அலைந்த பிள்ளைக்கு மரணத்திற்கு பின் மெய்மை கிடைக்கிறது.
ஒரு நெடுந்தூர பேருந்து பயணத்தில் மூன்றாம் முறையாக வாசித்தபின்பு இதை எழுதுகிறேன். கதை மனதைவிட்டு அகலாமல் நிழலாடிக்கொண்டேயிருக்கிறது.
நன்றி ஜெ.
மூர்த்தி விஸ்வநாதன்
வாழப்பாடி.
***
அன்புள்ள மூர்த்தி
என் கதைகளில் ‘அனைவருக்கும் அல்லாத’ படைப்புகளிலொன்று ஈராறு கால்கொண்டெழும் புரவி. சைவமரபின் படிமங்கள், சொல்லாட்சிகள், திருமறைகளில் பழக்கமுள்ளவர்கள் மட்டும் ரசிக்கத்தக்கது. மிக அரிதாகவே ஒரு கடிதம் வருவது வழக்கம். நன்றி
ஜெ