முரண்களின் தொகை – சுப்ரமண்ய ராஜு புனைவுலகம்- ரம்யா

சுப்ரமணிய ராஜூ தமிழ் விக்கி

“அவனது அணுகுமுறைகள் உணர்ச்சிபூர்வமானதா அறிபூர்வமானதா என்பதை இன்றளவும் தீர்மானிக்கமுடியவில்லை; எல்லாவற்றையும் எளிதாக்கிச் சிரித்தாலும் உணர்ச்சிபூர்வமான ஆசாமி ராஜு. உணர்ச்சி பசப்பல் கிடையாது. ஆனால் உணர்ச்சி வசப்படுவது உண்டு” என தேவகோட்டை வா. மூர்த்தியும்; “அவன் மிகைஉணர்ச்சிகள், சென்டிமெண்ட்ஸ் ததும்புகிற மனிதன் இல்லைதான். ஆனால் அவனுள் குடும்பம் எப்போதும் நிரம்பியிருந்தது. ஆனால் அதை விட அதிகமாய் அவன் நண்பர்கள் மனதில் தங்கியிருந்தார்கள், திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் தங்கியிருப்பதைப் போல நெருக்கியடித்துக் கொண்டு.” என மாலனும் சுப்ரமண்ய ராஜு பற்றி குறிப்பிடுகின்றனர்.

தன் அன்னை இறந்த இரண்டாம் நாள் மாலனுக்கு எழுதிய கடிதத்தில் “எனக்கு வாழ்க்கையின் அபத்தம், குரூரம்,irony எல்லாம் புரிந்துவிட்ட மாதிரி இருக்கிறது மாலன். ஆனால் இது அல்ல சாஸ்வதம். எதுவுமே அல்ல” என சுப்ரமண்ய ராஜு எழுதியிருந்தார். உண்மையில் அவரின் கதைகளின் வழி முழுவதுமாக வாழ்க்கையின் முரண்களை, அபத்தத்தை, குரூரத்தை எழுதிப்பார்த்தார் எனலாம்.

ராஜுவுக்கு பாலகுமாரன், தேவக்கோட்டை வா. மூர்த்தி, மாலன், கமல்ஹாசன், அசோகமித்திரன், பிரபஞ்சன் என நண்பர்கள் குழாம் அதிகம். அசோகமித்திரன் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த புதியரக புகைப்படக் கருவியில் எடுத்த குடும்பப் புகைப்படம் தான் இன்றளவும் ராஜு குடும்பத்தில் இருக்கும் குடும்பப்புகைப்படம். முடிந்தவரை தவறாமல் அசோகமித்திரன் மாலைகளில் சந்திக்கும் நபராக ராஜு இருந்தார். டிடிகே நிறுவனங்களில் பணிபுரிந்தார். தன் நண்பர் கமல்ஹாசனை சந்தித்து உரையாடுபவர். தன் நண்பர்களிலேயே தன்னிடம் சினிமா சார்ந்த உதவி கேட்காத நபராக ராஜுவை கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார். காபி கடைகளில் இலக்கிய அரட்டைகளில் எப்போதும் உடனிருக்கும் நண்பர்களாக மாலன், பாலகுமாரன் ஆகியோர் இருந்துள்ளனர்.

ராஜுவின் உதவும் குணத்தை நண்பர்கள் விமாலதித்த மாமல்லன், பிரபஞ்சன் ஆகியோர் சுட்டிக் காட்டியுள்ளனர். ”உதவி கேட்பவர்கள் எழுத்தாளர்களாக இருந்துவிட்டால், ராஜு கிட்டத்தட்ட ஒரு குறு நில மன்னன் தான்” என மூர்த்தி குறிப்பிடுகிறார். ஆனால் அதன் நிமித்தம் அவரைப் புகழும்போது,“இது மாடஸ்டி இல்லை, மூர்த்தி. நீ வக்கீல் வீட்டுப்பிள்ளை. எனவே இளமையில் வறுமை என்பதன் கொடூரம் பற்றி உனக்குத் தெரியாது” என ராஜு அவற்றை மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்.

சுப்ரமண்ய ராஜுவின் படைப்புகள் என நமக்குக் கிடைப்பது 2006-ல் கிழக்கு பதிப்பகம் தொகுத்த சுப்ரமண்ய ராஜுவின் இருபத்தி ஒன்பது சிறுகதைகளும், மூன்று குறு நாவல்களும் அடங்கிய தொகுப்பு மட்டுமே.

ராஜு விடுதலைக்குப்பின்னான காலகட்டத்தில் 1948- பாண்டிச்சேரியில் பிறந்தவர். இயற்பெயர் விஸ்வநாதன். நண்பர்கள் அழைக்கும் பெயரும் அதுவே. அந்தப்பெயரில் அவர் விமர்சனக்கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள் எழுதியுள்ளார். ராஜு என வீட்டில் அழைக்கும் தன் பெயருடன் தன் தந்தையின் பெயரையும் இணைத்து சுப்ரமண்ய ராஜு என்ற பெயரில் புனைவுக்கதைகள் எழுதினார்.

எழுபதுகள், எண்பதுகளில் ராஜு தன் இலக்கியப்பயணத்தை ஆரம்பித்தார். காதலித்து திருமணம் செய்து கொண்டவர். சரோஜா ராமமூர்த்தி, து.ரா என எழுத்தாளர் குடும்பத்தில் மருமகனாக இருந்தவர். சரோஜாவிற்கும் ராஜுவிற்கும் அணுக்கமான உறவு இருந்ததாக அவரின் மனைவி பாரதி குறிப்பிடுகிறார். சென்னையில் தன் இளமைக்காலத்தைக் கழித்தவர். தன் குடும்பம், அலுவலகம், இலக்கியம் என யாவும் சென்னையை மையமாகக் கொண்டே அமைத்துக் கொண்டவர்.

ராஜு தன் கதைகளில் காண்பிப்பது அந்த காலகட்டத்து சென்னையைத்தான். தான் வாழ்ந்த வாழ்க்கையை எழுதுவதையே அவர் இலக்கியமாகக் கருதினார். கற்பனைக் கதைகள், எதார்த்த கதைகள் பற்றிய விவாதத்தை வைக்கும் ’முதல் கதை’ என்ற சிறுகதையை எழுதியுள்ளார். அக்கதையில் எழுத்தாளராக விரும்பும் துருதுருப்பான ஒரு உறவுக்காரப்பெண்ணை எதார்த்தவாதக் கதைகள் எழுதும் ஒருவர் சந்திக்கிறார். அப்பெண் கற்பனைக் கதைகள் எழுதுபவள். ஆவலாக அவனிடம் வந்து காண்பிக்கும் அவளிடம் அக்கதைகள் எவ்வாறெல்லாம் நல்ல கதை இல்லை என்று சொல்லி அவள் வாழ்க்கையிலிருந்து எழுதச் சொல்கிறார். அவள் ’இந்த நான்கு சுவர்கள் தான் என் வாழ்க்கை இதை மட்டும் வைத்து எப்படி கதை எழுதுவது’ என்று கேட்ட போது இந்த நம் சந்திப்பும் கூட புனைவு தான் என்று சொல்கிறான். அவர்களுக்குள் காமம் நிகழ்கிறது. அவன் எந்த ஒரு குற்றவுணர்வுமில்லாமல் தன் அடுத்த பயணத்தை நோக்கிய பாதையில் செல்கிறான். அவள் பால்கனியில் நின்று கொண்டு நீண்ட நேரமாக அவனுக்காக அழுகிறாள். அன்றிரவு அவள் தன் முதல் கதையை எழுதினாள் என்ற வரி கதையின் இறுதியில் வருகிறது.

இதன் வழியும் ராஜுவின் புனைவுலகத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ராஜு தன் காலகட்டம், இடம், தன் வாழ்க்கை, தான் சந்தித்த மனிதர்கள், மனங்கள் யாவற்றையும் புனைவு வழி ஆராய்ந்து பார்த்துள்ளார். அக்காலகட்ட எழுத்தாளனின் நிலைமையை மாலன் சொல்லும்போது ”கடை, ஆஃபீஸ், ஃபாக்டரி என்று அலைந்துவிட்டு, அழுக்கும் பிசுக்குமாக வேலை செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி கவிதை எழுதும் காலம் நமக்குத்தான் வந்திருக்கிறது. ஸ்பானரை எடுத்து மிஷினை முடுக்குகிற கையில்தான் பேனாவையும் எடுத்து கதை, நாவல் எழுதுகிற காலம்.” என்கிறார்.

இந்தக்கால கட்டத்தைச் சேர்ந்த ஒர் படித்த பட்டதாரி இளைஞன், வேலை தேடுபவன், அலுவலகத்தில் அவனைச் சுற்றிய அல்லல்கள், ஆண்-பெண் உறவுச்சிக்கல்கள், இளமை, துள்ளல், காமம், பெண், ஆணின் பெண், ஆண் பார்த்து பரிதாபப்படும் பெண், திருமணமான ஆண், அவன் குடும்பம், கள்ள உறவுகள், பிறழ்வுறவுகள் என தன் புனைவின் பேசுகளத்தை இதைச் சுற்றியே பெரும்பாலும் வைத்திருக்கிறார்.

அவர் எழுதியவை யாவும் இளமைத் துடிப்புள்ள கதைகள். விறுவிறுப்பானவை லாஜிக்கானவை, அறிவார்ந்த உரையாடல்களால் அமைந்தவை. பெண்களும் நண்பர்களும் இக்கதைகளில் தவிர்க்க முடியாதவர்கள். கதையுலகம் சற்றே சிகெரெட்டின் புகையாலும், மதுவின் வாசனையாலும் நிறைந்துள்ளது எனுமளவு ராஜுவின் ஆண்கள் இருக்கிறார்கள்.

ராஜுவின் கதைகளில் சுதந்திரத்திற்கு பின் பிறந்து எழுபது எண்பதுகளில் மத்தியத்தர இளைஞர்களாக இருந்தவர்களின் எதார்த்த வாழ்க்கையே பிரதிபலிக்கிறது. அன்றாடத்தில் மூழ்கி சலிக்கும் வாழ்க்கையை வாழ்பவர்களின் மேல் அவருக்கு இருக்கும் ஒவ்வாமையை கதைகள் பதிவு செய்கின்றன. அவர்களின் ரசனையைச் சாடுகிறார். ராஜுவின் சென்னை என்று சொல்லுமளவு நம்மை அவர் கண்கள் வழியாகத் தெரியக்கூடிய ஒரு புதிய சென்னையை தன் புனைவுப் பிரபஞ்சத்தின் வழி கட்டியெழுப்புகிறார். சென்னை ரயில், திருவல்லிக்கேணி, ராமாவரம், லெவல் க்ராஸிங் கேட், பெசண்ட் நகர், தாம்சன் கம்பெனி என யாவும் சென்னையை மையமாகக் கொண்ட கதைகள். ராஜுவின் கதைகளில் தவிர்க்க முடியாத அம்சமாக ரயில் உள்ளது. காதல் தோல்வி, காதல் நினைவுகளை மீட்ட, அலுவலகத்திற்கு செல்லும் ஒரு வாகனமாக என கதைகளின் ஊடே அதன் சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

*

உரையாடல் வழியாக கதையைக் காட்சிப்படுத்துவது ஒருவகை எழுத்து. உரையாடல் வழியாக கருத்துக்களை முன்வைப்பது இன்னொரு வகை. ராஜு இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். சூழ்நிலை, கதாப்பாத்திரங்கள், பிரச்சனைகள், அறச்சிக்கல்கள் உருவாகிய பின் அவற்றைத் தீர்ப்பதற்காக கதாபாத்திரங்களை அறிவார்ந்து உரையாட விடுபவர். ஆனால் அந்த கதாபாத்திரங்கள் எந்தப்பாதையைத் தேர்வு செய்கிறது என்பது உணர்வு சார்ந்து அமைந்து விடுகிறது.

சரளமான உரையாடல் தன்மையுடன் கூடிய கதைசொல்லல் முறை ராஜுவினுடையது. கதையின் வடிவங்களில் சில பரிசோதனை முயற்சிகள் செய்திருக்கிறார். ’இருட்டில் நின்ற’ சிறுகதையில் கொலையின் காரணமாக ரயில் நிற்க அதிலிருக்கும் நாயகன் எழுந்து வெளியில் வந்து நின்று மெல்ல தன் சொல்லப்படாத காதலையும், காதலியையும் எண்ணிக் கொண்டே இருப்பதும், தொடர்பில்லாமல் அந்த ரயில் பெட்டியிலிருந்த இன்னொரு பெண்ணின் அவனைப் பற்றிய அவதானிப்புகளும், பிற மனிதர்களின் நின்று போன ரயில் பற்றிய பேச்சரவங்களையும் மோதவிடும்படி சிறுகதையை அமைத்திருக்கிறார். அகக்குரல்களும் புறக்குரல்களும் மோதவிடும்படி அமைக்கப்பட்ட கதை.

’இன்னொரு கனவு’ சிறுகதை அதன் கூறுமுறையைக் கொண்டும், பேசுபொருளைக் கொண்டும் வித்தியாசமான சிறுகதை. தான் கனவு கண்டது நிஜத்தில் நடக்கிறது என்ற வியாதியைக் கொண்டவன் மருத்துவரை சந்திப்பதாக வரும் கதையில் அதுவும் கனவாக முடியும் ஒரு நல்ல திருப்பம் அமைந்த கதை. கதை வளர்கிறது.

’தாகம்’ கதை ஒரு லூப் கதை. இரண்டே பக்கங்கள் கொண்ட சிறிய கதை. வாசகர் தங்கள் உள்ளத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்ளக் கூடிய கதை. ராஜுவின் கதைகளில் திடீரென எங்கோ நடுவழியில் பெரிய வயல்களினூடே சிறு குடிசையைக் கொண்ட வீடிருக்கும் இடத்தில் நின்று போகும் ரயில் கொண்ட சித்திரம் வருகிறது. அது ராஜுவின் கனவின் படிமம் என்று சொல்லுமளவு நினைவில் நின்றுவிடுகிறது.

’தூண்டில்’ சிறுகதை ஜனவரியில் ஆரம்பித்து ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர் எனத் தொடர்ந்து மீண்டும் ஜனவரியில் முடியும் கதையாக உள்ளது. ஜனவரியில் ஒரு பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தி, தன்னை தானே அவளை அவனிடம் கொடுக்க வைத்து, அவளாகவே பிரிந்து செல்லும்படி சூழ்நிலையை உருவாக்கி, உதிர்த்துச் சென்று மீண்டும் புதுக்காதலியைத் தேடி தூண்டில் போடும் பெண் விரும்பி பற்றிய கதை. ஏமாற்றும் ஒரு தரப்பின் மனதின் அப்பட்டத்தை துல்லியமாகக் காண்பித்த கதை.

*

எல்லா கதைகளிலும் நாயக பிம்பம் ஆண். ராஜுவின் கதைகளில் வரும் ஆண் படித்த பட்டதாரி இளைஞன், பிழைக்கத் தெரிந்தவன், லாஜிக்காக யோசிப்பவன், அறிவார்ந்தவன், பெண் விரும்பி, சென்னையின் ஏதொவொரு நல்ல கம்பெனியில் வேலை செய்பவன், நண்பர்கள் அதிகம் கொண்டிருப்பவன். புகைப்பழக்கம் கட்டாயம் உள்ளவன், மதுப்பழக்கம் உள்ளவன் ஆனால் குடிகாரன் இல்லை என்ற பதாகையைத் தாங்கிக் கொண்டு.

லட்சியவாதம் ஆன்மீகம் இவற்றையெல்லாம் கடந்து நிதர்சனத்தின் முன் அப்பட்டமாக நின்றால் பெரும்பான்மை ஆண்களின் உலகம் காமத்தை மையமாகக் கொண்டதாக உள்ளது. எந்த அறிவுஜீவி ஆணும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் ஆணுக்கு காமம் துளிர்த்தெழும் பருவம் தொடங்கி அது அடங்கி அமிழும் பருவம் என ஏதும் உண்டானால் அது வரை அவன் உலகின் நடு நாயகமாக அதுவே உள்ளது. காமத்தைப் போக்கிக் கொள்ளும் ஊடகமாக இவர்களுக்குப் பெரும்பாலும் பெண்கள் தான் இருக்கின்றனர்.

பெண்ணை ஓர் ஆண் எவ்வாறு காமத்தை நோக்கி செலுத்துகிறான், ஆணின் ஆழுள்ளம் அவர்களைப் பற்றி நினைப்பதென்ன எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் ஒரு பெண்ணை ஏமாற்ற முடிகிறது என பல வகையான பேசு பொருட்களை ராஜூவின் கதைகள் பேசுகின்றன. ஆண் மனத்தின் அப்பட்டங்களை கதை நெடுக பதிவு செய்துள்ளார். குறிப்பாக ஆணின் கீழ்மைகளை. பெரும்பாலும் ராஜு காண்பித்த ஆண்கள் பெண்ணைக் காதல் வலையில் விழ வைத்து ஏமாற்றுபவர்கள். ஆண்களின் உலகத்தில் உண்மையில் பெண் என்ன பேசுபொருளாக இருக்கிறாள், அவர்கள் மத்தியில் அவளுக்கு என்ன மதிப்பு என அப்பட்டமாகக் காண்பிக்கிறார்.

சில காதல் தோல்விக் கதைகள் வருகின்றன தான். அதில் கிடந்து உழலும் ஆளாக ஆண் இருக்கிறான். மனைவி-ம்மா பிரச்சனையில் அல்லல்படும் குடும்பக் கணவனாக ஆண் வருகிறான். திருமணமான ஆண் எவ்வாறு இரவின் நிமித்தம் மனைவிக்கு அடிமையாகிறான் என்பது பற்றிய சித்திரங்கள். ஒரு குடும்பத்தில் மனைவியின் அழுத்தங்கள் எவ்வளவு தொலைவு ஒரு கணவனின் ஒட்டுமொத்த வாழ்க்கையை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்ற சிந்தனையை பல இடங்களில் பதிவு செய்கிறார்.

‘கொடி’ சிறுகதை வரதட்சிணையை மையமாக வைத்து பேசும் சிறுகதை. அத்தனை வரதட்சிணை கேட்கும் ஒரு ஆளை ஏன் திருமணம் செய்ய வேண்டும் அதற்காக இத்தனை கடன் செய்து திருமணம் செய்ய வேண்டுமா என கேட்கும் முதலாளியிடம் தன் மனைவியின் அழுத்தத்தை பதிவு செய்யும் ஒரு அலுவலக ஆள். அவரின் பண்பின் நிமித்தமும், ஏற்கனவே சந்தித்திருந்த அவரின் மகளைப் பிடித்திருந்ததாலும் அவளை திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் அதன் பின் அவனுடைய அறிவார்ந்த லாஜிக்குகள் அவளின் உணர்வு ரீதியான மிரட்டல்களால் காலம் முழுமைக்கும் எப்படி அடிமையாக்குகிறது என முடித்திருக்கிறார். பொதுவாகவே பெண் சார்ந்த சமூகப் பிரச்சனைகளுக்கு எதிர் தரப்பு ஆண் மட்டுமல்ல. வரதட்சிணை போன்ற கொடுமைகளுக்கு பெண்ணும் ஒரு முக்கியமான காரணம் என்பதை உள்ளார்ந்து உணர்த்தும் ஒரு ஆண் தரப்பு.

அதே போல வீட்டில் பணம் வாங்க வரும் நண்பர், அவர்களை அலட்சியமாகப் பார்க்கும் மனைவி, பொதுவாகவே நண்பர்கள் நிமித்தம் ஏமார்ந்து போகும் கணவன், பிழைக்த் தெரியாத ஆண் வரும் கதைகளும் அதிகம்.

இதிலுள்ள சிக்கல் ராஜு இன்னும் அதை அடுத்த கட்ட தளத்தை நோக்கி எடுத்துச் செல்லாமல் விட்டது தான். ராஜு சொல்லும் ஆணின் உலகம் இன்றளவிலும் மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தலைவனின் பிரிவில் ஏங்கும் தலைவிகளை விட்டுச் சென்ற தலைவன்களின் உலகத்தையே ராஜுவின் கதைகள் காட்டுகின்றன. ஆனால் அவற்றைப் பற்றிய ஆழமான விசாரணையை அவை நிகழ்த்தவில்லை என்பதால் பெரும்பாலும் மேலோட்டமான கதைகளாக உள்ளன.

*

ராஜுவின் பெண்கள் பெரும்பாலும் ஆண்களால் ஏமாற்றப்படும் அபலைகள். ‘கேள்விகள்’ சிறுகதை தன் மனைவியின் கற்பை சந்தேகப்படும் கணவனின் எண்ணவோட்டங்களாகப் பதிவு செய்யப்பட்ட கதை. ஒரு மொட்டைக் கடுதாசியை கையில் கொண்டு அவளின் சொந்த ஊருக்கு அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறியச் சென்றவன் அலைக்கழிப்புடன் இருக்கையில் அவன் தங்கியிருந்த லாட்ஜில் இருந்த வேலை செய்யும் பையன் ”வேற ஏதாவது வேணுமா சார்?” என்கிறான். அந்த இரவு ஒரு ப்ராஸ்டியூட்டுடன் உறவு கொண்ட பின் பல நாட்களாக இருந்த அந்த அலைக்கழிப்பு பற்றிய எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குச் செல்வதாக அமைந்த கதையில் திருமணத்திற்கு முன் தன் மனைவிக்கு இன்னொருவருடன் உறவு இருப்பது சரியா தவறா என லாஜிக்காக விவாதித்துக் கொண்டே இருப்பதாக கதை நகர்கிறது.

பெண்ணை உடல் கொண்டு மதிப்பிடும் ஆண்களே ராஜுவின் கதைகளில் உள்ளனர். ”உடம்பை நன்றாக வைத்துக் கொண்டிருந்தாள். கணவனுடன் இருந்திருந்தால் குழந்தைகளால் வீண் ஆகியிருக்கும்; நல்ல நாட்டுக் கட்டை என மனதிற்குள் அவளைப் படுக்க வைத்தான்.; மாயா –ஹேமாவைவிட உயரம். லதாவைவிட அழகு. பிருந்தா மாதிரி சிவப்பு” என்பன போன்ற விவரணைகளே அதிகம் பெண்ணைப் பற்றி வருகின்றன. உடலைத் தாண்டிய ஒன்றை ராஜுவின் ஆண்கள் பெண்களில் கண்டறிவதேயில்லை எனலாம். ஒருவகையில் அது உண்மையும் கூட.

தன் கணவனால் கண்டுகொள்ளப்படாத அலுவலகம் செல்லும் மனைவி தன் மேலாளருடன் கொள்ளும் உறவு பற்றிய கதை ’நேற்றுவரை’ சிறுகதையில் வருகிறது. உறவுகளின் ஆரம்பத்தில் நிகழும் பித்து நிலையயும் அதை அவள் கடக்கும் விதத்தையும் எடுத்துச் சொல்லும் கதை.

ராஜுவின் கதைகளில் திருமணத்திற்கு பிறகு வரும் பிறழ்வுறவுகள் பற்றிய கதைகள் உள்ளன. ஆண்களுக்கு அப்படி ஏற்படும் உறவுகளை எப்படி மனைவிகள் எதிர்கொள்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் கதைகள் உள்ளன. தீர்வாக முறிவுகள் அமையவில்லை. மாறாக குடும்ப அமைப்புக்குள் கணவன் –மனைவிக்கு பங்கமற்ற தீர்வுகளே முன் வைக்கப்படுகின்றன. படித்த அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்ட பெண்களின் காதல் வாய்ப்புகள், சலனங்களையும் கதைகளில் காண்பிக்கிறார்.

*

ஆண்பெண் உறவுச்சிக்கலைப் பேசும் கதைகளில் உரையாடல்கள் அறிவார்ந்து நிகழ்கின்றன. ஆனால் இயல்பும் முடிவும் உணர்வை நோக்கியே செல்கின்றன.

’இன்னொரு பக்கம்’ சிறுகதை ஓர் அருமையான காதல் தோல்வி கதை.

“டில்லிக்கு தினம் போகும்

நீ போன ரயிலும்”

என்ற கவிதை இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கும் கதை. அறிவார்ந்து எத்தனை உரையாடினாலும் அந்தக் கவிதை மீண்டொலித்துக் கொண்டே நித்தமும் டெல்லிக்குச் செல்லும் அந்த ரயிலை பார்த்துக் கொண்டே இருக்கும் நாயகனைப் பற்றிய கதை.

ஒரு ஆணுக்கு பெண் மேல் ஏன் ஈர்ப்பு வருகிறது? என்ற கேள்வி இந்த மனித இனம் தோன்றியதிலிருந்தே எழும் கேள்வி தான். இந்தக் கதையில் ஆண்களுக்கு இடையே நடக்கும் ஓர் அறிவார்ந்த உரையாடல் மூலம் அதை அணுக முற்படுகிறார்கள். “ஒரு ஆண் எதற்காக ஒரு பெண்ணிடம் போக வேண்டும்? அது அவனுக்கு எல்லாரிடமும் கிடைப்பதில்லை. ஷாவும் ஷேக்ஸ்பியரும் நாம் அவர்களிடம் நெருங்க உபயோகிக்கும் வழிகள்; பொம்பள நமக்கு ஏற்படும் தேவைகளில் ஒன்று. அதுக்கு அவசியம் ஏற்படும்போது வாங்கிக்கறோம்; எந்த ஆணுமே ராத்திரியில் தான் உண்மையான ஆம்பளையா இருக்கான்; நாம் பெண்ணை ஒரு பொருளாகத்தான் நினைக்கிறோம். இந்தக்காதல் என்பது உடம்போட நெருக்கமான ஒன்றுதான்” போன்ற சிந்தனைப் போக்குகள் இந்தக்கதைகளில் உரையாடலாக வருகிறது.

ஆனால் இதை அறிவார்ந்து அணுகும் நாயகன் அந்தக் கவிதை வரிகளை மீள சொல்லிக் கொண்டு மீண்டும் மீண்டும் அந்த ரயிலில் தன்னைப் பிரிந்து சென்ற காதலியையே நினைத்து மருகுகிறான் என்ற முரண் உள்ளது. உணர்வும் அறிவும் ஒன்றுக்கொன்று முரணாகும் கதை. எத்தனை தொகுத்துக் கொண்டாலும் பேசித்தீர்த்தாலும் உணர்வின் கரவுப்பாதையை கட்டுப்படுத்தவியலாத மனிதனின் இயலாமையை பல கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

*

ராஜூவின் பெரும்பானமையான கதைகளில் ஒரு அறச்சிக்கலை முன்வைக்கிறார். அதற்கான தீர்வை வெறும் பரிவுடன் அல்லாமல் தன்னை அந்நிலையில் வைத்து பொருத்திப்பார்க்க ஏதுவான ஓர் எதிர்த்தரப்பை உருவாக்கி ஒரு முடிவை எடுக்கிறார். இப்படியான பல கதைகள் திடமான தீர்வுகளுடன் திட்டவட்டத்தன்மையுடன் முடிந்துவிடுவதால் கதை பெரும்பாலும் வளர்வதில்லை.

’சாமி அலுத்துப்போச்சு’ சிறுகதையில் நோய்வாய்ப்பட்ட மனைவியை விட்டுவிட்டு சலனத்துடன் துறவு மேற்கொள்ள கோயில் நகரத்துக்கு வரும் கணவன் அங்கு சாமி அலுத்துப்போச்சு என்று பூசாரியான தன் கணவனைச் சொல்லும் ஒரு மனைவியைச் சந்திக்கிறான். அவள் வழியாக பெண்கள் நினைத்தால் இந்த குடும்ப அமைப்பை விட்டு இத்தனை விரைவாக அவனைப் போல வெளிவர முடியாது என்பதைப் புரிய வைத்து அவன் வீடு திரும்பும் ஒரு கதையாக முடிக்கிறார்.

கடன் வாங்கி கட்ட முடியாமல் தவிக்கும் வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் வெங்கடேசன். அவர்கள் குடும்பத்தில் ஏழைகளுக்கு அன்னமிடுகையில் அதை தடுத்த அவனின் மனைவியின் சொல் வழியாக தரித்திரம் நுழைந்த கதையை வெளிப்படுத்துகிறார். அந்த பணத்தை வசூல் செய்யச் செல்லும் கதைசொல்லி அவர்கள் வறுமையைக் கண்டு அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்கிறான். வெங்கடேசனின் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ”இவாளாம் ஒட்டுண்ணி மாதிரி. யாராவது கிடைக்கமாட்டாளானு காத்துண்டு இருப்பா. உங்கள மாதிரி ஒருத்தர் கிடைச்சா போரும் ஒட்டிண்டு விடுவா. நாம என்ன சத்திரமா வச்சிருக்கோம்” என கதைசொல்லியின் மனைவி சொல்கிறாள். அப்போது அவளுக்கு ஓர் அறை விழுகிறது. அந்த அறை முன்பு இதே போல் சொன்ன வெங்கடேசனின் மனைவிக்கும் விழுந்த அறை, ஒரு படி மேலே போய் வெங்கடேசனிடம் கடனை வாங்க வர்புறுத்திய கதைசொல்லியின் முதலாளி கோபலனுக்கு விழுந்த அடியாகவும் கொள்ளும்போது அதன் கணம் கூடுகிறது.

”வாழ்க்கையில் பல படிகளைக்கடந்து வந்தவர். அதனாலேயே எல்லாரும் அப்படியே வர வேண்டும் என்று நினைப்பவர்.” என முதலாளி கோபாலனைப் பற்றிய சித்திரம் ஒன்று வருகிறது. நன்கு வாழ்ந்த வெங்கடேசனின் குடும்பத்தைக் கண்டவர். அவர்கள் வழி உதவிகளைப் பெற்றவர். ஆனாலும் அந்த மனித நேயம் இல்லாமல் அவர் பெற்ற கடன்தொகையைக் கேட்டு நித்தமும் நச்சரிப்பவர். ஆனால் கதைசொல்லி வெங்கடேசனின் கதையை அறிந்தபின் அவருடைய கடன்தொகையை அவனே கட்டிவிட்டு பட்டினியால் அவர்கள் இருப்பது கண்டு விருந்தும் வைக்கிறார். இந்த முரண்களின் மனிதர்களை அவர் காட்டத் தவறுவதே இல்லை.

’மீண்டும் ஓர் ஆரம்பம்’ சிறுகதையில் கதைசொல்லி தன் முதலாளியிடம் எப்படியெல்லாம் நடித்து, நல்ல தன்மையாக காட்டிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுகிறான் என்பதைக் காண்பிக்கிறார்.“என்னோடு ஒருமுறை பேசியவர்கள் இன்னொருமுறை பேசும் கவர்ச்சி என்னிடமுண்டு” என தன் பேச்சின் துணைகொண்டு முன்னேறும் கதைசொல்லி ஒருபுறம். அதற்கு இணையாக ”இந்த அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்கிற உறவுகளே நாம் பழகுவதால் ஏற்படுகிற இணைப்புகள் தான்” என்று கூறி தன் சொந்தக் கால்களில் நிற்க ஆசைப்படும் வைராக்கியம் கொண்ட முதலாளியின் பையனையும் காண்பிக்கிறார். அவனைக் கண்டபின் அவன் சொற்களைக் கேட்டபின் தன் வாழ்க்கையை மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கும் கதைசொல்லியைப் பதிவு செய்கிறார்.

”ஜாதகம்” சிறுகதையில் நோய்வாய்ப்பட்ட மாமியார் இனி வைத்தியம் பார்த்தாள் பிழைத்துக் கொள்வாளா என அவளை கவனித்துக் கொள்ளும் மருமகள் தன் கணவனை ஜாதகம் பார்த்து வரச் சொல்கிறாள். செல்லும் இடத்தில் தன் அம்மா அவனை வளர்த்த விதத்தை நினைவு கூறும் சிறு சம்பவம் இன்னொரு அம்மாவின் வழியாக நிகழ்கிறது. இம்முரண்களை ராஜு பல கதைகளில் காண்பித்துள்ளார். இந்த முரண்களின் சமன்தன்மை கதையை ஒரு முழுமைக் கதையாக மாற்றுகிறது. ஆனால் மனதில் வளர ஏதுவான வாசக இடைவெளி இல்லாமல் சாளரத்தைச் சார்த்திவிடுகிறது.

*

“Am I aHypocrite?” இந்தவரி ஒரு சிறுகதையின் முடிவில் வருகிறது. ராஜுவின் பெரும்பானமையான கதைகளை இதற்குள் அடைக்கலாம். இந்த கேள்வி அவருக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. “அப்பாவிகள் ஏமாற்றப்படுகிறார்கள்” என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. எல்லா உயிருக்குள்ளும் ஒரு விழைவு உண்டு. அது வாழ வேண்டும் என்ற விழைவு. மனிதனில் அது பல வகைகளில் உள்ளது. வாழ்வதற்கு தேவையானது பணம், உணவு, உடை, காமம், வேலை, உறவு, மகிழ்ச்சி என சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை அடைய எதை வேண்டுமானாலும் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்று ஒரு தரப்பு. இவை பற்றிய பிரக்ஞையின்றி உண்மையாகவே விழைவுகளின்றி இந்த லாஜிக்காக சிந்திப்பதெல்லாம் இல்லாமல் வாழ்ந்து ஏமாற்றம் கொண்டு மாண்டு போகும் இன்னொரு கூட்டம்.

இதற்கு இடையில் இருக்கும் ஒரு தரப்பு உண்டு,”ஊசலாட்ட தரப்பு”. அவர்களை Hypocrite எனலாம். பாசாங்கு செய்பவர்கள் என எளிதில் எதிர்மறையாக விலக்கிவிட முடியாதவர்கள். ராஜுவின் கதைகளில் இத்தகைய மனிதர்கள் பற்றிய விசாரணை அதிகம் உள்ளது.

*

பொதுவாகவே நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் அறிவார்ந்த விவாதங்களையே ராஜு கையாள்கிறார். ஆனால் அதன் இறுதி பெரும்பாலும் ”ஊழ்” என்பதன் மேல் நம்பிக்கை கொண்டே முடிகிறது. இத்தனை நிகழ்த்தகவுகளை யோசித்த பின்னும் இது இப்படித்தான் நடந்திருக்கும் என்பதோ அல்லது எது நடந்தாலும் அது நன்மைக்கே எனும் படியாகவே கதைகளின் இறுதி அமைந்துள்ளது. ஆண்-ண் உறவுச் சிக்கல் என பல விசாரணைகளுக்குப் பின்னும் விளக்க முடியாத ஒன்றை அவர் உணர்ந்திருப்பது போலவே இறுதிகள் அமைந்துள்ளன.

இலக்கியப் பத்திரிக்கை தொடங்கும் திட்டம் வைத்திருந்து அதை வேலைப்பளுவின் காரணமாக நிறைவேற்றமுடியாமல் போனவர்.“அவனை இன்று ஆஃபீஸ் தின்றுவிட்டது. லேடக்ஸ் பீப்பாய்களுக்கும் கணக்குப் புத்தகங்களுக்கும் ஆஃபீஸ் ஃபைல்களுக்கும் நடுவே அவனுடைய கவிதையும் இலக்கியமும் விழுந்துவிட்டன. அவன் அந்தப் பெரிய ஆஃபீஸின் இன்னொரு இயந்திரம் ஆகிப் போனான்.” என மாலன் சொல்கிறார். ஏதோவகையில் குடும்பமும், அலுவலகமும் மனிதன் தான் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையை கை கொண்டிருக்கும் தத்துவத்தை மறு விசாரணைக்கு ஆளாக்கிக் கொண்டே இருக்கின்றன. எல்லா ஊசாலாட்டத்தையும் மனதின் அப்பட்டத்தையும் உண்மையாக எந்த பாசாங்கும் இல்லாமல் வெளிப்படுத்திய தன்மைக்காகவும், ஒரு காலகட்டத்தின் மனித மனங்களை பிரதிபலித்ததற்காகவும் நினைவுகூறப்பட வேண்டியவர் சுப்ரமண்ய ராஜு.

ரம்யா

முந்தைய கட்டுரைஇமையம், தலித் இலக்கியம் பற்றி மீண்டும்…
அடுத்த கட்டுரைதலித் இலக்கியம், இலக்கிய அளவுகோல்கள்…