கபர் – கலை கார்ல்மார்க்ஸ்

இந்நாவலை தொடக்கத்தில் இருந்து வாசிக்க வாசிக்க பல்வேறு விதமான உணர்வுகளை மனதிற்குள் எழுப்பிச் செல்கின்றது. படித்து முடித்திடும் பொழுது முற்றிலும் புதிய உணர்வை இட்டுச் செல்கிறது. வாசித்து முடித்த பின்பும் கதை மாந்தர்களும் அவர்களால் மனதிற்குள் எழுந்த உணர்வுகளும் நம்மை வட்டமிடுகின்றன. இதனை முழுதாய் வாசித்து முடித்து பின், எனக்குள் ஏற்பட்ட பலவிதமான உணர்வுகள், மீள்வாசிப்பு செய்திடும் பொழுது புதிய உணர்வாய் எழ வாய்ப்புகள் இருக்குமோ என எண்ணச் செய்கிறது.

இதனை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனையும் முற்றிலும் புதியதாய் ஓர் உணர்வுக்குள் இட்டுச் செல்லும் என்பதை தீர்க்கமாக செல்லலாம்.ஆழ்மனதில் படிந்து கிடக்கும் நினைவுகள் ஒருபோதும் நம்மை விட்டு நீங்காது, அது நம்மையே வட்டமிட்டு வரும், அது தேவையின் போது எழுந்து தனது ஆசையை வெளிப்படுத்திக் கொள்ளும், எவ்வளவு விரட்டி அடித்தாலும் மறக்க நினைத்தாலும் அது நமக்குள்ளேயே அமிழ்து இருக்குமே ஒழிய மறையாது என்ற உணர்வு இந்த நாவல் வாசித்து முடிக்கும் பொழுது எனக்குள் எழுந்தது.

இதனை, ஒரு வகையில் மேலோட்டமாக வாசித்து பார்க்கும் பொழுது, தன்னால் விரும்பி காதலிக்கப்பட்டு வந்த கணவன் தன்னை புரிந்து கொள்ளாமலும், தனது குழந்தையின் திறன் குறைபாட்டை பொருட்படுத்தாமலும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற பின்பு, அந்த குடும்பத்தை எந்த வகையில் மன நெருக்கடியுடனும் தனிமை என்ற பாரத்தை சுமந்து கொண்டும், திறன் குறைபாட்டு குழந்தையை எவ்வகையில் சிரம் கொண்டு வளர்த்து வருகின்றாள் எனவும் ஒரு தாயின் போராட்டத்தை காட்டுவதாக அமைகின்றது.

மற்றொரு கோணத்தில் இந்த நாவல் தனிமையின் கொடுமை, ஒரு பெண்ணுக்குள் இருக்கும் ஆசைகள், காமம், அன்பு இவைகளுக்காக ஏங்கும் மனநிலையை காட்டுகின்றது.

அழைப்பு வராத, மகன் வேண்டாம் என்று சொல்லியும் வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, முன்னாள் கணவனின் திருமணத்திற்கு புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டு செல்லுதல், அவளுக்கு அங்கே கிடைக்கும் மரியாதை போன்றவற்றை முன்னாள் கணவன் காண வேண்டும் என்பதற்காகவே அங்கு சென்றாளோ எனவும், இது அவளது ஆழ்மனதில் உள்ள வக்கிரமோ என்றும் எண்ண தோன்றுகிறது.

தனக்குள் இருக்கும் மன அழுத்தங்களை போக்குவதற்கு கிடைக்கும் ஒரு புதிய உறவை எவ்வகையில் ஒருத்தி எதிர்நோக்குகின்றாள் என்பதையும், திறன் குறைபாடு கொண்ட ஒரு குழந்தையை மகிழ்ச்சியுற செய்திடும் எவன் ஒருவனையும் தாய் என்ற நிலையில் இருந்து ஒருத்தி தவிர்க்க இயலாது என்பதும், கதையின் நாயகியே ஒரு மனக்குறைபாடு கொண்ட நபர் போல சித்தரிக்கப்பட்டும் அவளும் குழந்தை போல சில விடயங்களுக்கு ஏங்குவதாயும் இந்நாவலில் காட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள், கதை மாந்தரை மட்டும் குறிப்பிடாமல், ஒவ்வொரு மனிதனின் இயல்பான குணங்களையும், உளவியல் சார்ந்த உண்மைகளையும் எடுத்துக்காட்டுவதாய் உள்ளது.

இக்கதையில் வரும் கயாலுதீன் தங்ஙள் என்பவர் பாவனாவுடன் உலவுவதும், அவர்களுக்கு இடையே நடத்தப்படும் உரையாடல், பயணம் ஊடல், கூடல் அனைத்தும் பாவனாவின் தனிமைக்கு கிடைத்த ஆதரவாகவும், அவளுக்குள் இருக்கும் மன அழுத்தங்களுக்கு விடையாகவும் இருந்தபோதிலும், ஒரு வாசகனாய் எனக்குள் கயாலுதீன் தங்ஙள் என்பவன், ஒவ்வொரு மனிதனிலும் உள்ள ஆழ்மனதின் சாட்சியோ, விரக்தியோ, ஆசையோ, கனவோ என எண்ண தோன்றுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கயாலுதீன் தங்ஙள் என்பவன் இருந்து கொண்டு உரையாடி கொண்டே தான் இருக்கின்றான் என்பதாய் தோன்றுகின்றது.கபர் எனும் கல்லறையை காப்பாற்ற வேண்டி கயாலுதீன் தங்ஙள், பாவனாவின் மூதாதையர் யோகீஸ்வரன் மாமா என்பவரின் நினைவினை பாவனாவிற்குள் கொண்டு வரும் தருணங்களானது, ஒவ்வொரு நபரின் ஆழ்மனதிலும் கல்லறையாய் புதைந்து போன நினைவுகள், உணர்வுகள் ஒருபோதும் நம்மை விட்டு போகாது என்பதை சுட்டவா? என்ற வினா எழுகின்றது. எனினும் கதையின் படி, பாவனாவின் மூதாதைக்கும் கபர் எனும் கல்லறைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதால் அதை காப்பாற்ற கயாலுதீன் தங்ஙள் என்பவரை மூதாதையரே அனுப்பி வைத்தார்களா? இல்லை யோகேஸ்வரன் மாமா தான் கயாலுதீன் தங்ஙளா? என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றது.

எட்வர்ட் ரோஸ் மலர்களின் மணம் நாவலில் குறியீடாக வருகின்றது. இம்மலர்களின் மணம் போலவே, மனிதர்களில் புதைந்து கிடக்கும் பல உணர்வுகள் அவ்வப்போது மணந்து கொண்டே தான் இருக்கும் என்பதை சொல்லிச் செல்வதாகவே கருத தோன்றுகிறது.

_”வாழ்க்கையில் முதன் முதலாக இன்னொருவரின் இல்லாமையில் நான் பரிபூரணத்தை அனுபவித்தேன்”_ என்பதாய் முடியும் இந்த நாவல், பரிபூரணம் என்பது இல்லாமல் இருப்பவரின் நினைவுகளில் உள்ளதாகவும், அகம் என்பது நினைவுகளை தேக்கியே வைத்திருக்கும் அதை ஒரு போதும் அழித்திடாது எனவும், பரிபூரணம் என்பது நமக்கு நாமே எடுத்துக் கொள்ளும் கயாலுதீன் தங்ஙள் காட்டும் கண்ணாமூச்சி வித்தை தான் எனவும் படுகின்றது.

ஆக, நினைவுகள் ஒருபோதும் அழியாது அது கல்லறையை ( கபர்) போல் படிமமாய் மனிதரின் மனங்களில் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதாகவே இந்நாவல் உணர்த்துவதாய் உணர முடிகின்றது.

பெரும்பாலும் விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் நாவல்கள், சிறுகதைகள் அனைத்தும், ஒரு வாசகனை கதையோடும், கதை மாந்தர்களோடும், கதை களங்களோடும் உலவ விட்டு, அதனோடு ஒர் உரையாடலை நிகழ்த்தும் அளவிற்கு சுவை மிகுந்ததாக இருக்கும் பட்சத்தில், அதை ஒரு சிறந்த படைப்பாக நாம் கொள்ளலாம். அதன்படி, இந்நாவல் (கபர்) ஒவ்வொரு வாசகனையும் தனக்குள் உலவ விட்டு பல்வேறு கேள்விகளையும், எண்ணச் சிதறல்களையும் உண்டாக்கி பலவிதமான விவாதத்திற்கு உட்படுத்துகின்றது. எனவே, இந்த நாவலை ஒரு சிறந்த படைப்பாக கொள்ளலாம்.

கபர், 112 பக்கங்கள் கொண்ட குறுநாவல் எனினும், இந்நாவலில் மனித உணர்வுகளை அதிகமாய் கேள்விக்கு உட்படுத்தும் பல விடயங்கள் இருப்பதாகவே கருதத் தோன்றுகிறது.

நாவலின் மூலம் மலையாளம் _(எழுத்தாளர்: கே ஆர் மீரா)_ எனினும், இதனை மொழி பெயர்ப்பாளர் மோ.செந்தில்குமார் அவர்கள் மொழிபெயர்ப்பு என்ற உணர்வு எட்டாத வகையில் மிகவும் சிறப்பான நடையில் எழுதியுள்ளார்.

மொழி பெயர்ப்பே பல உணர்வுகளை எழுப்புகின்ற சூழலில், நேரடியாக மூலத்தை வாசிப்பவர்களுக்கு என்னென்ன வகையில் உணர்வுகளை இட்டுச் செல்லும் என்று எண்ண தோன்றுகிறது.

கே.ஆர். மீரா மிகச் சிறந்த எழுத்தாளுமையாக புலப்படுகின்றார்.

–கலை கார்ல்மார்க்ஸ்

திருவாரூர்

முந்தைய கட்டுரைஆலயக்கலை, சிற்பக்கூடம்- கடிதம்
அடுத்த கட்டுரைஏ.ஏகாம்பரநாதன்