ஒரு பிறந்தநாள் வாழ்த்து

நாளை 22 ஏப்ரல் 2023 அன்று என்னுடைய பிறந்தநாள்.61 ஆம் அகவையை கடக்கிறேன். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஏதுமில்லை. சென்ற ஆண்டு இந்த நாளில் அமெரிக்கப் பயணத்தின் பரபரப்பு. இம்முறை அருண்மொழியுடன் கேரளத்தில் எர்ணாகுளம் பக்கமாக ஒரு பயணம். ஒரு குட்டி தேனிலவுப்பயணம் என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

நண்பர் ஒருவர் 17 ஏப்ரல் 2023 அன்று அனுப்பிய மின்னஞ்சலில் இந்த போஸ்டரின் புகைப்படம் இருந்தது,. நிலக்கோட்டை மு.வ.மாணிக்கம் அண்ட் கோ தங்க நகை விற்பனையாளர்கள் என் பிறந்தநாளை ஒட்டி வாழ்த்துச் சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டியிருக்கிறார்கள். அறம், கொற்றவை நூல்களின் படங்கள் உள்ளன. நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, மதுரை முழுக்க ஒட்டப்பட்டுள்ளது.

19 ஏப்ரல் 2023 அன்று வத்தலக்குண்டு பத்மலதா விளம்பர நிறுவனம்  நடத்தும் சிவா அவர்கள் என்னை வந்து சந்தித்து அந்த போஸ்டரை வழங்கினார். நான் வசிக்கும் ஊர் என்பதனால் நாகர்கோயிலிலும் ஒட்டுவதாகச் சொன்னார்கள்.

இந்தச் செயல் உண்மையிலேயே மகிழ்வளிக்கிறது. எனக்கான வாழ்த்துக்கள் என்பதனால் மட்டுமல்ல. இத்தகைய செயல்பாடுகள் வழியாக இலக்கியம் சமூக ஏற்பு பெறுகிறது. இலக்கியவாதிகள் மேல் சமூக மதிப்பு உருவாகிறது. கர்நாடகத்திலும் கேரளத்திலும் மட்டுமே கண்டுவந்த ஒரு வழக்கம் இது.

முந்தைய கட்டுரைபரிவின் கடல்
அடுத்த கட்டுரைஜெயகாந்தன் இசைவட்டு – வெளியீட்டு விழா