மாதுளை மலர்களின் தோட்டம்

 

மலர்த்துளி வாங்க

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள ‘மலர்த்துளி- 12 காதல்கதைகள்’நூலின் முன்னுரை. இதுவரை வெளிவராத கதைகள் கொண்ட தொகுதி இது) 

அண்மையில் தத்துவ வகுப்பொன்றின் பகுதியாக பைபிளில் ’இனிமைமிகு பாடல்’ (பழைய மொழியாக்கம் உன்னத சங்கீதம்) பகுதியை வாசித்தோம். தொன்மையான யூதக் காதல் கவிதைகளின் தொகுதி அது. யூதர்களின் திருமணநிகழ்வுகளில் பாடப்படுவதாகவும் விளைச்சலுக்காக வயல்களில் பாடப்படுவதாகவும் அது இருந்திருக்கிறது.

விவிலியத்தில் அந்த காதல்பாடல்கள் இடம்பெறுவது பற்றிய விவாதம் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. அதை கடவுளின் மீதான காதலின் குறியீடு என்றும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயான காதலின் அடையாளம் என்றும் விளக்கியிருக்கிறார்கள்.

உண்மையில் அதன் தொன்மையே அதை மகத்தான கவிதையாக ஆக்குகிறது. இந்த உலகை எதிர்கொண்டு போராடி வாழ்ந்த மனிதன் அடைந்த முதல் நுண்ணுணர்வுகள் இரண்டு. ஒன்று இயற்கையின் அழகை அறிதல், இன்னொன்று காதல். இயற்கையை நுகர்வதும், காமமும்தான் இயல்பானவை. நடைமுறை சார்ந்தவை. இயற்கையழகு, காதல் ஆகியவை நடைமுறையில் பயனற்றவை. கற்பனையுலகு சார்ந்தவை. நடைமுறை மனநிலைகளில் இருந்து அந்த நுண்மனநிலைகளை நோக்கி மானுடன் எழுந்தமைக்குச் சான்றாக தொன்மையான பாடல்கள் உள்ளன.

உலகின் எல்லா மொழிகளிலும் இயற்கையும் காதலுமே மிகத்தொன்மையான பேசுபொருட்கள். பசி, காமம் இரண்டும் அவற்றின் மிக உன்னத நிலையை அடைந்திருப்பது இயற்கையழகிலும் காதலிலும்தான். இலக்கியத்தின் தொடக்கம் அங்கிருந்துதான். ஆன்மிகத்தின் தொடக்கமே அதுதான். தெய்வங்கள் உருவான விளைநிலம் அதுவே.

அன்று அந்த விவாதத்திற்குப்பின் சில காதல்கதைகளை எழுதும் எண்ணத்தை அடைந்தேன். வேறெந்த நுண்ணிய அர்த்தங்களும் அற்றவை. ஆழ்பிரதியோ படிமஅடுக்குகளோ இல்லாதவை. எத்தனை முடியுமோ அத்தனை எளிதாக அமைபவை. மலர்களைப்போல அத்தனை மென்மையானவை. மலர்கள் எத்தனை அப்பட்டமானவை. வண்ணங்கள், வடிவங்கள், மணங்கள் எல்லாவற்றையும் முழுமையாக வெளிப்படுத்திக்கொள்கின்றன. வெளிப்படையாகவே கவர முயல்கின்றன.

மலரினும் மெல்லிது என்று காதலைச் சொன்னார் மூதாதை.காதல் என்பது மானுட உள்ளங்கள் தொட்டுக்கொள்ளும் மிக நுட்பமான, மிகப்பூடகமான, மிகத்தற்செயலான ஒரு புள்ளி மட்டும்தான். அந்தப் புள்ளியை வெவ்வேறு வகையில் சொல்லிவிட முயன்றிருக்கும் கதைகள் இவை. அந்த புள்ளியில் இருக்கும் பாவனைகள், கரவுகள், கண்டடைதல்கள், பரவசங்கள். அதைச் சொல்லிவிடவே எல்லா புனைவு உத்திகளும் இவற்றில் கையாளப்பட்டுள்ளன. சொல்லச் சொல்ல அகலும் மாயமும் அதற்குத் தெரியும். ஆகவேதான் கபிலன் சொன்னபின்னரும் நான் சொல்லவேண்டியிருக்கிறது. என்றும் சொல்லப்படும்.

இத்தொகுதியின் கதைகளில் பெருங்கை, கேளாச்சங்கீதம், கல்குருத்து ஆகியவை மட்டுமே இணையத்தில் வெளியாகியுள்ளன. மற்றவை முதல்முறையாக வெளியிடப்படுகின்றன.

தமிழில் பல நுண்ணிய தருணங்களை எழுத்தாக்கிய வண்ணதாசனுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெ

வாதுமைச் சோலைக்குள் சென்றேன்

பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப் பார்க்கச் சென்றேன்

திராட்சை பூத்துவிட்டதா என்றும்

மாதுளைகள் மலர்ந்துள்ளனவா என்றும்

காணச்சென்றேன்

 

என்னவென்றே தெரியவில்லை எனக்கு

மகிழ்ச்சியில் மயங்கினேன்

இளவரசனுடன் தேரில் செல்வதுபோல் உணந்தேன்.

(இனிமைமிகு பாடல் 11. திரு விவிலியம் )

 

பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்

இன்னொரு பிறந்தநாள்

மலர்த்துளி வாங்க

முந்தைய கட்டுரைரெவெ. ஸ்வார்ட்ஸ்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு