மழையில் சொல்லப்பட்டது…

முதற்கனலின் வெம்மை தணிந்து, மழையில் நனைந்து இதயம் குளிர்கிறது இரண்டாம் பாகத்தில்!!

இத்தனை பக்கங்களா (1013) என்று வாசிக்கத் தொடங்கும் போது தோன்றி, அதற்குள் முடிந்துவிட்டதா என்று வாசித்து முடித்தத்தபின் தோன்றியது!! அத்தனை விறுவிறுப்பாக கதை நகர்கிறது.

பொதுவாக புத்தக தலைப்பின் பெயரின் காரணம் கதையில் வருவதை வாசிக்கும் போது ஒரு நெகிழ்வு வரும். “சூழ்ந்திருந்த அனைத்துப் பனிமலைப்பரப்புகளும் ‘வெண்முரசுகளாக’ மாறி அதிர்ந்து ஓய்ந்தன” என்று வாசித்த போது அதே நெகிழ்வு.

நமக்கு நன்கு தெரிந்த மகாபாரதக் கதையையே இத்தனை சுவாரசியமாக வாசிக்க வைத்த ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் எழுத்துநடை, மொழி வளம், கதைக்குள் நம்மை கட்டுண்டு கிடக்க வைக்கும் திறன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை.

ஓவியம்: ஷண்முகவேல்

அம்பையின் அணையா நெருப்பின் வஞ்சம் சுடர்விட்டு முதல் பாகம் எரிய, இரண்டாம் பாகத்தின் கதை இரண்டாம் தலைமுறைக்கு நகர்கிறது.

மழைப்பாடல் என்று கதையின் பெயர் இருப்பதாலோ என்னவோ கதை நெடுக மழையும் பொழிகிறது அனைத்து முக்கிய தருணங்களிலும்.

முதற்கனலில் நாகங்களின் உவமைகள் அதிகம் தோன்ற, மழைப்பாடலில் யானையின் உவமைகள் நிறைய இருப்பதாக தோன்றியது.

நாம் கேட்ட கதைகளில் நல்லவர்கள் தீயவர்கள் என்று மனம் ஏற்கனவே வகுத்து வைத்துவிட்ட கதாப்பாத்திரங்களின் மறுபக்கம் வாசிக்கும் போது, நன்மை தீமையை உருவாக்குவது சந்தர்ப்பங்களும்,அவர்கள் அனுபவங்கள் மட்டுமே என்று உணர முடிகிறது.

காசி நாட்டு இளவரசிகள் அம்பிகை அம்பாலிகைக்கும், சூதப் பெண் சிவைக்கும் வியாசர் மூலமாக அறப்புதல்வர்களாக திருதிராஷ்டன், பாண்டு, விதுரன் பிறக்கிறார்கள் . நான் அறிந்த கதைக்கு நுழையப்போகும் ஆர்வம் வாசிப்பை வேகம் கொள்ளச் செய்தது.அவர்கள் வளர, அவர்கள் வாழ்க்கை ஒருபுறம் நிகழ, மறுபுறம் காந்தாரி, குந்தியின் வாழ்க்கைக் கதை விரிகிறது.

காந்தாரத்தின் சுடுமணல் பாலைகள் ஆசிரியரின் வார்த்தைகளில் கோடையின் வெம்மையாக தகிக்கிறது. நாம் அறிந்த வெறுக்கும் நயவஞ்சகன் சகுனியை, நாம் அறியாத ஒரு திறன் வாய்ந்த மதியூகி சௌபாலராக வாசிக்க முடிந்தது.காந்தாரத்தில் பிறந்ததனால் இளவரசிகள் 11 பேரையும் காந்தாரிகள் என்று பிறந்த ஊரைக் கொண்டு அழைக்கப்படுகிறார்கள் என்பது வசுமதியை மட்டுமே காந்தாரி என்று நினைத்திருந்த எனக்கு, அழகான நான் அறிந்திராத தகவலாக தோன்றியது.

பிருதை என்ற யாதவ குலச் சிறுமியை, குந்திபோஜன் மன்னன் மகள் கொடையாக பெற்றதனாலே குந்தியானாள். அமைதியான, தன் குழந்தைகளுக்காக மட்டும் வாழ்பவள் என்று அறிந்த அவளை ஒரு தலைசிறந்த அரசியல் மதியூகியாக பிருதையாக ஜெ.மோவின் வார்த்தைகளில் காணமுடிந்தது.

திருமணங்கள் என்பவை அரசியல் காரணங்களுக்காக, நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமே. திருதிராஷ்டன் காந்தாரிகள் திருமணம், பாண்டு குந்தி சுயம்வரம் என எல்லாம் நடந்து பின் அரியணை பிரச்சனையும் தொடங்குகிறது.

பிருதைக்கு திருமணத்துக்கு முன் பிறந்த மைந்தன். நல்ல நிமித்தங்கள் கொண்டு வனத்தில் பிறக்கும் பாண்டவர்கள்,தீயநிமித்தங்கள் கொண்டு அஸ்தினாபுரியில் பிறக்கும் கௌரவர்கள் என பாரதப்போர் நிகழ்விடத்தை நிறைக்கும் அனைவரின் பிறப்பும், பாண்டு மாத்திரி மரணமும், அரசியர் வனம் புகுதலுடன் நிறைவு பெறுகிறது புத்தகம்.

மழை வழிந்தோடி இறுதியில் கடலில் சேரும். மழைப்பாடலைத் தொடர்ந்து வண்ணக்கடல் இருப்பது அதனால் தானோ

அனிதா பொன்ராஜ்

(முகநூலில் இருந்து)

மழைப்பாடல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

மழைப்பாடல் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

மழைப்பாடல் மின்னூல் வாங்க

வெண்முரசு மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைகனவுகளின் காலத்தில் வாழ்தல்
அடுத்த கட்டுரைமுழுமையெனும் மாயப்பொன் – கடிதம்