நாத்திக,உலகியல்வாத – சரி. ஆனால் அவைதிக? சாங்கிய யோக நியாய வைசேஷிக தரிசனங்கள் அவைதிகம் அல்ல. அவை சுருதியை ஏற்கின்றன. இந்து சிந்தனை மரபில் எதுவுமே அவைதிகம் என்று கூற முடியாது அல்லவா? நான்கு வேதங்கள், ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள் சேர்ந்தது தான் இந்து மரபு என்று நீங்களே பலமுறை எழுதியிருக்கிறீர்கள். இதனுடன் ஆசிவக, ஜைன, பௌத்த தரிசனங்களையும் சேர்த்தால் அது இந்திய சிந்தனை மரபாக ஆகும் என்றும் மிகத் தெளிவாக வரையறுத்திருக்கிறீர்கள்.
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜடாயு
இந்த விஷயம் இந்திய தத்துவத்துறையில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதை என் நூலிலும் பேசியிருக்கிறேன். விஷ்ணுபுரத்திலும்.
இந்து ஞான மரபுகள் அனைத்துக்கும் வேதம் முதனூல் அல்ல. தத்துவார்த்தப்படி வேதங்களை சுருதிப்பிரமாணமாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது வைதிகம். ஆகவே சார்வாகம் அவைதிக மதமே. ஆறு தரிசனங்களில் சாங்கியம், யோகம் , நியாயம், வைசேஷிகம் ஆகிய நான்கும் அவைதிகங்களே. பூர்வ உத்தர மீமாம்சங்களே வைதிக தரிசனங்கள்.
இந்நான்கு தரிசனங்களுக்கும் இரு காலகட்டங்கள் உண்டு. அவை ஆரம்பத்தில் முழுக்கமுழுக்க பௌதிகவாதங்களாக இருந்தன. அப்போது அவை சுருதிப்பிரமாணங்கள் என வேதங்களைச் சொல்லவில்லை. முன்னறிவு அல்லது மொழியில் உள்ள அறிவை மட்டுமே சுருதி எனச் சொல்லின.அவை வைதிக சட்டகத்துக்குள் கொண்டுவரப்பட்டது பின்புதான். எப்படியோ பிரம்மவாதம் உள்ளே சென்றது. அனேகமாக சங்கரருக்குப்பின்னர்.
இந்த தரிசனங்களில் பிரம்மம் என்ற கருதுகோளுக்கான இடைவெளி -தர்க்கப்போதாமை- ஏற்கனவே இருந்தது. சாங்கியம் புருஷன் என்ற கருதுகோளைப் பின்னர் வந்தடைந்தது. உடனே அது பரமபுருஷன் என்று மாறியது. அப்படி உருமாறும் தருணத்தையே விஷ்ணுபுரத்தில் காணலாம். இதை ஸேஸ்வர [ஸ+ ஈஸ்வர] சாங்கியம் என்பர். இதன் பின்னரே அதற்கு வேதம் சுருதிப்பிரமாணமாகியது.
அதேபோல வைசேஷிகத்தில் தன்மாத்ரை என்ற கருதுகோள் மட்டும் கருத்துமுதல்வாதத் தன்மை கொண்டது. அதைக்கொண்டு வைசேஷிகத்தின் பௌதிகவாதம் உடைக்கப்பட்டது. அதன் பின் அதற்கு வேதம் சுருதிப்பிரமாணமாக உள்ளே கொண்டுசெல்லப்பட்டது.
இதெல்லாம் பௌத்தகாலகட்டத்திற்குப் பின் நிகழ்ந்தவை. இதற்கு முன்னரே சாங்கியம் ,நியாயம், யோகம், வைசேடிகம் ஆகியவை பௌத்ததால் உள்ளெடுக்கப்பட்டு விட்டன. பௌத்ததுக்குள் உள்ள இந்நான்கு தரிசனங்களும் அவைதிக தர்க்கம் கொண்டவை.
இன்றும் கிடைக்கும் தரிசன மூலநூல்களில் உள்ள மூலச்செய்யுட்களில் வேதமென்னும் சுருதிப்பிரமாணம் இல்லை. பிரம்மமும் இல்லை. அவற்றின் பௌத்த வடிவங்களிலும் அப்படியே உள்ளது.
இந்து ஞான மரபு கண்டிப்பாக வைதிகம், அவைதிகம் என்ற இரு பெரும் பிரிவைத் தன்னுள் கொண்டதுதான். நாத்திகம் ,ஆத்திகம் இரண்டையும் உள்ளடக்கியதே. கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் இரண்டையும் உள்ளடக்கியதே. அப்படி இருப்பதே அதன் அழகு, தனித்தன்மை ,சிறப்பு.
இந்தியாவெங்கும் அலையெனப்பரவிய பக்தி இயக்கம்தான் உண்மையில் வேதத்தை இந்துஞான மரபு முழுக்கவும் பரப்பி ஒற்றை அடித்தளத்தை உருவாக்க முயன்றது. பக்தியை அடிப்படையாகக் கொண்ட பெருமதங்களில் வேதம் முதனூலாகவே உள்ளது.
நாம் பக்தி இயக்கத்தின் பார்வையிலேயே இந்துஞானமரபை ஆயிரம் வருடங்களாகப் பார்க்கப் பழகியிருக்கிறோம். ஆகவே இந்து ஞானமரபின் சாரம் பக்தியே என்ற பிரமைக்கு ஆளாகியிருக்கிறோம். இந்துசிந்தனைக்கு வேதமே ஆதாரம் என்றும் நினைக்கப் பழகியிருக்கிறோம்
இந்த மரபிலேயே டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோர் இந்துஞானமரபின் மையம் ஆன்மீகமே என எழுதினார்கள்.ஆனால் பின்னர் வந்த இந்தியசிந்தனை வல்லுநர்கள் அதை நிராகரித்திருக்கிறார்கள். ஷெர்பாட்ஸ்கி, எஸ்.என்.தாஸ்குப்தா, கெ.தாமோதரன், தேபிபிரசாத் சட்டோபாத்யாய போன்றவர்கள் வெவ்வேறு கோணங்களில் இதை ஆராய்ந்திருக்கிறார்கள்.
பக்தி இயக்கத்திற்கு எதிராக இருந்த தாந்த்ரீக மதங்களுக்கு வேதங்கள் கடைசிவரை ஏற்புடையனவாக இருக்கவில்லை.அவற்றில் பல சாக்த,சைவ உபமதங்கள். இன்றும் அவை பல்வேறு வகையில் நீடிக்கின்றன. அவையும் இந்து சிந்தனைக்குள் வருபவையே.
இந்த விவாதம் விரிவாக நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே வைதிகமே இந்துஞானமரபு என கூறும் ஒரு போக்கும் இருந்துகொண்டிருக்கிறது. அதன் ஆதார நோக்கம் கடைசியில் பிராமணியமே இந்துஞானம் என்று வரையறைசெய்வது.
இந்துசிந்தனை என்பது பல்வேறு தேடல்களுக்கு ஒரேசமயம் இடமளிக்கும் ஒரு பெரும் ஞானப்பிரவாகமாகவே இருந்தது, இருந்தாகவேண்டும். ஒன்றை ஒன்று மறுக்கும் சிந்தனைகளுக்கு அதில் இடமிருந்தது. வைதிகமும் அவைதிகமும் இணையான முக்கியத்துவத்துடன் இருக்கையிலேயே அதன் செயலூக்கம் உண்மையானதாக இருக்கும். இல்லையேல் அது அதிகாரக் கட்டமைப்புகளை மட்டுமே உருவாக்கும் என்பது என் எண்ணம்.
ஜெ
அன்புள்ள ஜெ,
விளக்கத்திற்கு நன்றி.
நான் வைதீக என்பதை, ”வேதத்தை முதனூலாக அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்ட” என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. வேதத்தின் சிந்தனை இழைகளைப் பின்பற்றி வளர்ந்த என்ற பொருளில் கூறினேன். சாங்கியம் உள்ளிட்ட நாஸ்திக தரிசனங்கள் சுருதியின் தத்துவப் பகுதியை (ஆரண்யகங்கள், உபநிஷத்) பௌத்தமும் ஜைனமும் போல வலிந்து எதிர்க்கவும் இல்லை, பூர்வ/உத்தர மீமாம்சம் போல முக்கியப் பிரமாணமாகக் கொள்ளவும் இல்லை என்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது..
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்திய தத்துவவியலாளர்களின் வரிசைக்குப் பிறகு அவற்றுடன் மோதி, முரண்படும் அளவு புலமை கொண்ட தத்துவ சிந்தனையாளர்கள் இன்று வரை உருவாகவும் இல்லை என்பதும் வருத்தத்திற்குரிய ஒரு உண்மை..
// வைதிகமே இந்துஞானமரபு என கூறும் ஒரு போக்கும் இருந்துகொண்டிருக்கிறது. அதன் ஆதார நோக்கம் கடைசியில் பிராமணியமே இந்துஞானம் என்று வரையறைசெய்வது. //
நான் கூற வரும் தரப்பு அதுவல்ல. வேத இலக்கியங்களில் பிரம்மவாதம் மட்டுமல்ல, சாங்கியம் உள்ளிட்ட தரிசனங்களுக்கான வேர்களும் உள்ளன. அவற்றை மறுக்கவோ, மறைக்கவோ திரிக்கவோ கூடாது என்பது தான்.
ஆனால், இன்றைய நவீன இந்து “சிந்தனையாளர்கள்” படைப்புவாதத்திற்கு எதிரான கருத்துக்களே கூட இந்து சிந்தனையில், குறிப்பாக வேதங்களிலேயே உள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கீறார்கள். கட்வுள் கொள்கை என்பதை I believe in God, God created the world என்பது போன்ற தட்டையான கோஷங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பரிணாம அறிவியலுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிறார்கள். இவர்களை மனதில் கொண்டே நான் கூறியது.
கீழ்க்கண்ட கட்டுரையை நல்ல தத்துவப் புலமை கொண்ட ஒருவர் எழுதியிருக்கிறார்.. கட்டுரையே மேற்சொன்னதை முகாந்திரமாகக் கொண்டு தான் ஆரம்பிக்கிறது..
http://manasataramgini.
ஜடாயு
அன்புள்ள ஜடாயு,
நன்றி
வைதிக-அவைதிக என்ற சொற்கள் ஏற்கனவே வரையறை செய்யப்பட்டவை. ‘உண்மையை அறியும் வழிகளில் பிரத்யட்சம் அனுமானம் இரண்டுக்கும் நிகராகவும் பிரச்சினை எழும்போது முதன்மையாகவும் வேதங்களை [சுருதி] பிரமாணங்களாக ஏற்றுக்கொள்ளும் மதங்களும் தரிசனங்களுமே’ வைதிகங்கள்.
பிரச்சினை நீங்கள் சொல்வதே. இந்த அவைதிக மதங்களுக்கும் ரிக்வேதத்தில் அடிப்படை உள்ளது. சார்வாகர்களின் முதல்குரு பிரகஸ்பதி. அவர் ஒரு ரிக்வேத ரிஷி. சார்வாகர்கள் ஆன்மீகஞானத்தைத் துவைத்துக் கந்தலாக்குபவர்கள்.
அதாவது இங்கே [வைதிக விவாதத்தில் ] வேதம் என்னும்போது வைதிகர்களால் எடுத்தாளப்பட்டதும், நெடுங்காலம் பிராமணியத்தின் மூலநூலாக முன்னிறுத்தப்பட்டதுமான வேதப்பகுதிகள் என்றே அர்த்தம் வருகிறது.
வேதங்கள் ஒற்றைப்படையான ஒரு நூல் அல்ல. அவை ஆதி ஞானத்தேடலின் பதிவுகள். ஆகவே அவை பன்மைத்தன்மை கொண்டவை. வைதிகத்துக்கு எதிரான உபநிடதங்களுக்கும் மரபுகளுக்கும்கூட வேதமே பிறப்பிடம் என்று சொல்லலாம்
ஜெ