தொடுதிரையின் மேல் விரல்கள்

தொடுதிரை நூல் வாங்க

(கல்பற்றா நாராயணனின் கவிதைகளின் தொகுதியான தொடுதிரைக்கு எழுதிய பின்னுரை)

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு குற்றாலத்தில் ஒரு கவிதைக்கூடலில் கல்பற்றா நாராயணனின் கவிதைகளை வாசித்து விவாதித்தபோது அன்று கவிதைகள் எழுதத்தொடங்கியிருந்த ஒரு பெண் கவிஞர் என்னிடம் வந்து “இவையெல்லாம் எப்படி கவிதையாகின்றன என்று சொல்லமுடியுமா?” என்று கேட்டார்.

உண்மையில் கவிதைகளைப் பற்றி அப்படி ஒரு விளக்கத்தை அளித்துவிடமுடியாது. ஒரு வரி ஏன் கவிதை, இன்னொன்று ஏன் கவிதையல்ல என்பதற்கு கவிதையை உணராதவரும் ஏற்கும்படி ஒரு புறவய விளக்கம் இயல்வதே அல்ல.

இருந்தாலும் நான் சொன்னேன். ”அவற்றில் ஒரு விளையாட்டுத்தன்மை உள்ளது. முரண்நகை வெளிப்படுகிறது. ஆனால் ஆழத்தில் அவை வாழ்க்கைநோக்கி விரிகின்றன. வாழ்வின் பொருளையும் பொருளின்மையையும் நம்மில் உணர்த்தி நிற்கின்றன. ஆகவே அவை கவிதை. கவிதை என்பது வரையறுக்க முடியாதவற்றைச் சொல்லாமல் உணர்த்தும் ஒரு கலை”

அவருக்கு அந்த விளக்கம் பிடிகிடைக்கவில்லை. ’இவற்றில் கவித்துவமே இல்லையே.நேரடியான பேச்சு போலிருக்கின்றன’ என்றார்

நான் மீண்டும் “இந்தவகையான கவிதைகள் இன்று உலகமெங்கும் உருவாகி வந்துகொண்டிருக்கின்றன. படிமச்செறிவோ உருவகத்தன்மையோ கொண்ட கவிதைகள் பின்னடைகின்றன. இவை நுண்சித்தரிப்புகள், அல்லது சற்றே முரண் ஏற்றப்பட்ட கூற்றுக்கள். இவற்றை plain poetry என்கிறார்கள். தமிழிலும் இவை வரும்” என்றேன்.

மீண்டும் அதே கேள்வி. “இவற்றை வெறும் பத்திகளாகவே வாசிக்கமுடிகிறது”

நான் “சரி, விட்டுவிடுங்கள்” என்றேன். “என்றாவது உங்களுக்கு புரியலாம். புரியாவிட்டால் இவை உங்களுக்கானவை அல்ல என்று பொருள். அவ்வளவுதான்”

ஆனால் வெறும் பத்தாண்டுகளுக்குள் இவ்வகை கவிதைகள் தமிழில் உருவாகி தமிழின் மையப்போக்காகவே மாறின. படிமங்களையும் உருவகமொழியையும் நம்பாத கவிதைகள் எனலாம்.  அன்றைய அந்த புரிதலின்மையை விளக்குவது எளிது. அன்று தமிழில் வரிக்குவரி படிமங்களை அடுக்குவதும், படிமங்கள் வழியாகவே பேசுவதும்தான் கவிதை என்றே கொள்ளப்பட்டன. மலையாளத்தில் அந்தப் படிமமொழிக்கு ஓர் இசைத்தன்மையும் தேவை என்னும் நம்பிக்கை இருந்தது.

அச்சூழலில் கல்பற்றா நாராயணன் கவிஞராகவே ஏற்கப்படாமை புரிந்துகொள்ளத் தக்கதே. கல்பற்றாவின் குரு என சொல்லத்தக்க ஆற்றூர் ரவிவர்மாவுக்கே அந்த இடர் இருந்தது. அவர் தொகுத்த புதுமொழிவழிகள் என்னும் நூல் மிக முக்கியமான ஒன்று. மலையாளத்தில் உருவாகி வந்த புதிய கவிதையை அடையாளப்படுத்தி தொகுத்தது அந்நூல். பி.ராமன், பி.பி.ராமச்சந்திரன், அன்வர் அலி உள்ளிட்ட அன்றைய அடுத்த தலைமுறையை சுட்டிக்காட்டியது. அதில் கல்பற்றா நாராயணன் கவிதைகள் இடம்பெறவில்லை.

நான் அதைப்பற்றி ஆற்றூரிடம் கேட்டேன். “அவை கவிதையின் சொற்சுவை கைகூடாதவை” என்று அவர் சொன்னார்.

“கவிதைக்குரிய சொற்சுவை பாவியல்பு (Lyricism) மட்டுமாக இருக்கவேண்டிய தேவை இல்லை. நகைமுரண் கவிதைக்குரிய சொற்சுவைகளில் முக்கியமானது. இசைத்தன்மை நேரடியான உணர்ச்சிகள் நோக்கி கொண்டுசெல்கிறது. நுட்பமான பூடகமான சொல்வெளிப்பாட்டுக்கு எளிய உரைநடையே வாய்ப்பளிப்பது” என்றேன்.

ஆற்றூர் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் என் கருத்தை அன்றே மலையாளத்தில் எழுதினேன். கல்பற்றா மலையாளம் உருவாக்கிய மாபெரும் கவிஞர்களில் ஒருவர் என்று சொன்னேன். அதன்மேல் எழுந்த விவாதங்களை எதிர்கொண்டேன்.

உண்மையில் கல்பற்றா நாராயணனுக்கே அவர் ஒரு கவிஞர் என்னும் நம்பிக்கை இருக்கவில்லை. 1980 முதல் கல்பற்றா இலக்கிய விமர்சனங்கள்தான் எழுதிக்கொண்டிருந்தார். 1986 ல் அவர் அன்று கோழிக்கோட்டில் இருந்து தாஸ் என்பவர் நடத்திக்கொண்டிருந்த வைத்யசஸ்த்ரம் (சாஸ்திரம் அல்ல) என்னும் இதழில் ‘ஒழிஞ்ஞ விருக்ஷசாயயில்’ (தனித்த மரநிழலில்) என்னும் தொடரை எழுதிக்கொண்டிருந்தார். அதில்தான் அவர் கவிஞராக மாறினார், தன்னையறியாமலேயே.

வைத்யசஸ்த்ரம் ஒரு வைத்திய இதழாக நடந்தது. நின்றுபோன அவ்விதழின் பதிவுஎண்ணை  வாங்கிய தாஸ் அதை சூழியல் இதழாக நடத்திக்கொண்டிருந்தார். அன்று இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட அவ்விதழில் வெளிவந்த அக்கவிதைகளை எவரும் கவிதையாக எண்ணவில்லை. கல்பற்றாவே அவ்வாறு எண்னவில்லை. அதை தனிப்பட்ட குறிப்புகள் என்னும் வடிவிலேயே எழுதினார்.

அதை வாசித்துவிட்டு அவை முதன்மையாகக் கவிதைகள் என நான் அவருக்கு எழுதினேன். எனக்கு அப்போது 24 வயதுதான். ஆனால் வெறிகொண்டு உலகளாவிய நவீனக் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அன்றைய உலகக் கவிதைப்போக்குகளைப் பற்றிய ஒரு புரிதலும், அன்றிருந்த தமிழ் மலையாள கவிதைச்சூழல் பற்றிய விமர்சனமும் என்னிடமிருந்தன. ஆனால் நான் கவிஞனல்ல என்னும் புரிதலும் இருந்தது.

“நீங்கள் எழுதுவது இன்று உலகளாவ எழுதப்படும் நுண்சித்தரிப்பு வகைக் கவிதைகளின் பாணி. நீங்கள் முதன்மையாக ஒரு கவிஞர். உங்கள் கவிதைகளை நோக்கி மலையாளக்கவிதை வந்துசேர தாமதமாகும். ஆனால் கவிதைகள் எழுதிக்கொண்டிருங்கள்” என அவருக்கு எழுதினேன். அவர் எனக்கு பதில் அளித்தார். என் கடிதம் அவருக்கு பெரிய ஊக்கமாக அமைந்தது.

நான் கோழிக்கோடு அருகே கொயிலாண்டியில் அவருடைய பழைய இல்லத்திற்கு அவரைத்தேடிச் சென்றேன். அவருடைய முதல்மகன் அன்று சிறு குழந்தை. அவன் மேட்டில் நின்று “யாரைப் பார்க்கவேண்டும்?” என்றான். “கல்பற்றா நாராயணனை” என்றேன். “அது என் அப்பாதான்” என்று கூட்டிச்சென்றான். அன்று கல்பற்றாவுடன் அருகிலிருக்கும் கடற்கரைக்குச் சென்று அந்தி இருள்வது வரை புதியவகை கவிதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.

இன்று கல்பற்றா மலையாளக் கவிதையின் திசையை மாற்றிய முன்னோடி என அறியப்படுகிறார். அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் முகப்புக்குறிப்பு அப்படித்தான் சொல்கிறது. அவரை மலையாளச்சூழல் ஏற்கவைக்க நான் ஒரு பங்காற்றியிருக்கிறேன். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) அவரைப்பற்றி எழுதியிருக்கிறேன்.

தமிழில் முப்பதாண்டுகளாக கல்பற்றா நாராயணன் பற்றி எழுதி வருகிறேன். அவருடைய கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். தமிழ் இலக்கியக்கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். தமிழ் மலையாளக் கவிதையரங்குகளில் அவர் கவிதைகளை வாசித்திருக்கிறோம். தமிழில் வெளிவந்த மலையாளக் கவிதைத் தொகுதிகளில் அவர் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவருக்காக ஒரு கவிதை உரையாடல் அரங்கையே விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம். (கேரளத்தில் ஆலப்புழா அருகே மங்கொம்பு என்னும் ஊரில் 3 மார்ச் 2013) .

இன்று கல்பற்றா நாராயணனின் கவிதைகளுக்கு தமிழிலேயே பெரிய வாசகர் வட்டம் உள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலை புத்தர் என்னும் அவருடைய கவிதை கவிதைவாசகர் அனைவருமே அறிந்த ஒன்று. இன்னொரு புகழ்பெற்ற கவிதை டச் ஸ்க்ரீன். (தொடுதிரை)

இக்கவிதைகளின் உலகம் தனியானது. ‘ஆறுதல்’ என்னும் கவிதை ஓர் உதாரணம். அம்மா இறந்தபோது நிம்மதி ஆயிற்று’ என ஆரம்பிக்கும் அந்தக் கவிதையில் உள்ளது நகைமுரண் அல்ல. அங்கதம் அல்ல. ஆழ்ந்த துயரம்தான், ஆனால் மொழிதல் அவ்வாறு தன்னை திருகிக்கொண்டு நிலைகொண்டிருக்கிறது. ஆனால் பூதனை கவிதை அதே உணர்வின் மறுபக்கத்தை குரூரமாகவே சித்தரிக்கிறது

உடற்பயிற்சி கவிதை நேரடியாகவே பகடித்தன்மை கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகின் மீதான ஒட்டுமொத்தமான விமர்சனம் அது. வாழ்வதை விட வாழ்வது பற்றிய கொள்கைகளும் பாவனைகளும் மிகுந்துவிட்ட உலகை நோக்கிச் சிரிப்பது.

கல்பற்றா நாராயணனின் கவிதைகள் எளியவை. எளியமொழி, எளியவடிவம். பேசுபொருள் அன்றாடம் சார்ந்தது. உக்கிரமான தருணங்கள் இல்லை. அரிய அல்லது உச்சகட்ட உணர்வுநிலைகளும் இல்லை. ஆனால் அவை மிக இயல்பாக மிக நுணுக்கமான தரிசனநிலைகளை அடைகின்றன. உதாரணம், காலத்தலைவன். அது சாவின் பேரழகு பற்றியது என நான் வாசித்தேன். உறுதியான நிலமல்லவா பயங்கரம் என்னும் கவிதை புன்னகைக்க வைக்கும் அபத்தம் கொண்டது. ஆனால் இவ்வாழ்க்கையின் இரும்புவிதிகளைப் பற்றியது அது.

கல்பற்றா நாராயணனின் அரிய ஒரு கவிதை டச் ஸ்கிரீன் (தொடுதிரை) இன்று அது மலையாளத்தின் ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ ஆகவே மாறிவிட்டிருக்கிறது. இன்றைய வாழ்க்கையின் தாங்கமுடியாத எளிமையை, அல்லது மேலோட்டமான தன்மையை சுட்டும் கவிதை அது. The Unbearable Lightness of Being என மிலன் குந்தேரா சொன்ன அந்நிலை பற்றியது. எல்லாமே எளிமையாகிவிட்ட ஓர் உலகின் பெருந்திகைப்பை வெளிப்படுத்துவது. ஆகவே மேடைதோறும் வெவ்வேறுவகையில் பேசப்படுகிறது.

ஆனால் அக்கவிதை கல்பற்றா நாராயணனின் கவிதையின் அழகியலுக்கும் வேறொருவகையில் பொருந்துவது. அவர் கவிதையின் வாசல்களை முட்டி உடைப்பதில்லை. தட்டுவதுகூட இல்லை. தொடவே இல்லை. அவை திறந்துகொள்கின்றன. தொடுதிரையில் உலவும் விரல்களை நீர்மேல் நடக்கும் ஏசு என சொல்லும் ஒரு நுண்பகடி அக்கவிதையில் உண்டு. அவருடைய கவிதைகளை பொறுத்தவரை அது நேர்ப்பொருளிலேயே கொள்ளத்தக்கது.

கவிதைக்கு எப்போதும் ஒரு தீவிரம் உண்டு. தீவிர்பாவனையும் உண்டு. ஒரு மலர் உதிர்ந்துவிட்டதைக் கண்டு ‘ஓ மலரே மிக உயர்ந்த இடத்தில் எத்தனை சுடர்ந்திருந்தாய் ஒரு பேரரசியைப்போல!” என்று பாடிய குமாரன் ஆசானின் தீவிரம் அது (விழுந்த மலர்) உலகையே நோக்கிப் பேசும் பாவனை, மிகமிக அரிதானவற்றைச் சொல்லும் பாவனை, மிகநுட்பமானவற்றை புரியவைக்க முயலும் பாவனை, உலகை மறுத்து அப்பாலுள்ள ஒன்றைச் சொல்லும் பாவனை எப்போதும் கவிதைக்கு உண்டு.

அந்த அத்தனை பாவனைகளையும் மறுத்து மிக அன்றாடமான, மிக இயல்பான, மிக மேலோட்டமான சிலவற்றைச் சொல்லும் பாவனை கொண்டவை கல்பற்றா நாராயணன் கவிதைகள். அவருக்கு ஒரு நகரமோ ஒரு நாடோ உதிர்ந்தாலும் மெல்லிய தற்கேலி கொண்ட ஒரு சில வரிகளாகவே அதைச் சொல்லமுடியும்  அவருடைய விரல்கள் கவிதையை மிகமிக மென்மையாகவே தொடுகின்றன என்று தோன்றும்.

ஆனால் அது உண்மை அல்ல. வீணையை ஒருவர் மீட்டுவதைக் கண்டால் அவருடைய விரல்கள் வீணைக்கம்பிகள் மேல் மலர்மேல் வண்ணத்துப்பூச்சிகள் போல அமர்ந்தெழுந்து விளையாடுவதாகவே தோன்றும். ஆனால் இழுத்துக்கட்டப்பட்ட வீணையின் கம்பி வாள்முனை போன்று கடினமானது. அதை வாசிப்பவர் அதன்மேல் தன் விரல்களால் அழுத்தமான விசையை அளித்தாகவேண்டும். அவருடைய உள்ளிருந்து அந்த விசை வெளிவந்தாகவேண்டும். அவர் கைகளைப் பார்த்தால் அவை காய்ப்படைந்திருப்பதைக் காணலாம். ஆனால் பார்ப்பவருக்கு தெரியலாகாது. கல்பற்றா நாராயணன் வாசிப்பது வீணை.

தொடுதிரை நூல் வாங்க

முந்தைய கட்டுரைபிஸ்கி, ஒரு கண்டடைதல்.
அடுத்த கட்டுரைசெல்லும் வழிகள், கடிதங்கள்