விடுதலை, திரையரங்கு -கடிதம்

விடுதலை, திரையரங்கில்…

வணக்கம் ஜெயமோகன்.

ஆனைக்கல் மலையேற்றத்தின் போது சந்தித்தது. (ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா )

ஆனைக்கல் மலையின் எதிர்புறம் தெரியும் மலை முகடில் ஏராளமாக சுடுமணல் குதிரைச் சிற்பங்கள் இருப்பதாக சுவாமி சொல்லியிருந்தார். அதற்கான பாதை தெரிந்தவர்களைத் தேடியுள்ள அவைச்சல்  ஐயப்பா கல்லூரிக்கு முன் வசிக்கும் கட்டபொம்மன் என்பவரது வீட்டிற்குச் சென்று நின்றது. வரச் சம்மதித்தார். அவர் சொன்ன தேதிக்கு திருமண சீசன் துவங்கி விட்டது. மீண்டும் போய்ப் பார்த்து, ஒருமுறை ஏறி வந்து, உங்களிடம் தெரிவிக்கிறேன்.

நாகர்கோவில் திரையரங்குகளைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தீர்கள். பராமரிப்பைப் பற்றி உரிமையாளர்கள் யாருமே சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை.போகிற வரைக்கும் போகட்டும் என்ற மனநிலை தான்.கடைசியாக நாகர்கோவிலில் திரையரங்குக்குப் போனது உங்களை முதலில் பார்த்த அன்று இரவுக்காட்சிக்கு அட்டைக்கத்தி படம் பார்க்கப்போனதுதான்.

திருவனந்தபுரம் திரையரங்குகள் படம் பார்ப்பவர்களுக்கு உகந்த நல்ல காட்சி அனுபவம் அளிக்கின்றன.பெரும்பாலான அரங்குகளில் மேற்கு வங்கப் பணியாளர்கள் பராமரிப்பு லேலைகளைக் கச்சிதமாகச் செய்கிறார்கள்.கிட்டத்தட்ட சர்வதேசத் தரத்துக்கு ஒலி ஒளி அமைப்புகள்.நாகர்கோவிலில் இது இனி சாத்தியப்படுமா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஓடிடி வந்த பிறகு, கொஞ்சம் பெரிய டிவியில், நல்ல ஒலி அமைப்புடன் செளகரியமான இரவு நேரத்தில், வேண்டிய புதிய படத்தைப் பார்க்கும் பழக்கம்வாய்த்து விட்டது. திரையரங்க அனுபவத்துக்கு ஈடாகாது தான்.

அன்புடன்
குமார் முல்லைக்கல்

***

அன்புள்ள குமார்

செல்லும்போது சொல்லுங்கள், நானும் வருகிறேன்.

சினிமா அரங்குகளைப் பற்றி சினிமா வினியோகஸ்தர்களும் சினிமாத் தயாரிப்பாளர்களும் கவலைகொண்டே ஆகவேண்டிய நிலை வந்துவிட்டதென நினைக்கிறேன். கேரளத்தில் தொடர்ச்சியாக திரையரங்குக்கு வருபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து படங்கள் தோல்வியடைய தொடங்கியபோது விழித்துக் கொண்டார்கள். அதன்பின்னர் திரையரங்குகள் மேம்படுத்தப்பட்டன. இன்று சிறு படங்களுக்குக் கூட அரங்குக்கு மக்கள் வருகிறார்கள். தமிழகத்தில் பல திரையரங்குகளில் காட்சியனுபவம் பரிதாபமாக உள்ளது. நட்சத்திரங்கள் அளிக்கும் ஈர்ப்பினாலேயே மக்கள் அரங்குக்கு வருகிறார்கள்.

காட்சியூடகம் உச்சகட்டத்திற்குச் சென்றுவிட்ட அமெரிக்காவில் கூட திரையரங்கு அனுபவம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. மக்கள் கூடி ஒன்றை செய்வதிலுள்ள இன்பம் தனியானது. திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தை வீட்டில் மிகமிக உயர்தர ஊடகங்களில் பார்த்தாலும் அடைய முடியாது. பெரிய படங்கள் மட்டுமல்ல, கலைப்படங்களும்கூட அப்படித்தான். திரைவிழாக்களில் சிறிய கலைப்படங்களே அப்படிப்பட்ட அரங்க அனுபவத்தை அளிப்பதைக் காணலாம்.

ஜெ

துணைவன்: மின்னூல் வாங்க

துணைவன் நூல் வாங்க 

முந்தைய கட்டுரைமீள்வது- கடிதம்
அடுத்த கட்டுரைகமலா விருத்தாசலம்