நீங்கள் தொடர்ந்து இசை கேட்பதாகத் தெரிகிறது. ஆனால் இசை தெரியாதென்றும் சொல்லி வருகிறீர்கள். ஓரளவு கவனித்தாலே முறையாக ராகங்களைத் தெரிந்துகொண்டு இசை கேட்கலாமே. அதில் ஏதேனும் மனத்தடை இருக்கிறதா உங்களுக்கு?
அருண்
[கெ.பி.வினோத்]
அன்புள்ள அருண்,
தொடர்ந்து இசைகேட்பதில்லை. ஒரு புனைகதை எழுத்து உருவாக்கிய வேகத்தை இறக்குவதற்காக, இளைப்பாறலுக்காக மட்டும். நேற்று,கழு என்ற ஒரு நாவலின் குரூரமான ஒரு பகுதியைக் கடந்துசென்றேன். பிறகு இசை தேவைப்பட்டது. அவ்வளவுதான்
முறையாகக் கவனித்து இசையைத் தெரிந்துகொள்ளவேண்டாமென்றே இருக்கிறேன். இசை தெரியத்தெரிய அதன் நுட்பங்கள் சார்ந்து மனம் ஓடும். அது ஒரு தேடலாக ஆகும். அது நேரத்தை உறிஞ்சும். எனக்கு இலக்கியம்,வரலாறு , தத்துவம் சார்ந்த தேடல்களுக்கே இடமில்லை. சமீபமாகப் புனைகதைகளேகூட படிக்காமலாகிவிட்டேன்.
நான் முயன்றாலும் அவ்வளவு சாதாரணமாக இசை கேட்டு அறிய முடியாது. என் நண்பர் கெ.பி.வினோத் மூன்றே மாதங்களில் ராகங்களின் நுட்பங்களுக்குள் சென்று விட்டார். என்னால் முடியாது. அதை இப்படி விளக்குகிறேன். செவிநுண்ணுணர்வு, விழிநுண்ணுணர்வு, மொழிநுண்ணுணர்வு என்பதெல்லாம் வெவ்வேறானவை. மூளை நரம்பியலின் அடிப்படையில் அவற்றை விளக்க முடியலாம். அது பெரும்பாலும் பிறப்பால் வருவது. எனக்கு செவிநுண்ணுணர்வு மிகமிகக் குறைவு.
கெ.பி.வினோத் புத்தகங்களைவிட ஒலிநூல்களை விரும்புவதைக் கண்டிருக்கிறேன். என்னால் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக ஒரு நூலைக் கேட்கமுடியாது. மனம் குவியாது. ஏன் மேடைப்பேச்சுகளிலேயே கவனம் நிற்பதில்லை. செவி வழியாக எதுவுமே எனக்கு வருவதில்லை. நம் கல்விமுறை செவியில் போதனை செய்யும் வழிமுறையை முக்கியமாகக் கொண்டிருப்பதனால் என் கல்விநாட்கள் முழுக்க வீணாகின. ஒரு வகுப்பில்கூட நான் கவனித்ததில்லை. இப்போது என் பையனும் அப்படித்தான். எந்தப் பெரிய நூலையும் ஒரே மூச்சில்வாசிப்பான், வகுப்பில் கவனிக்கமுடியாது.
செவிநுண்ணுணர்வு கொண்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விழிநுண்ணுணர்வு மிகப்பலவீனமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். உதாரணம் யுவன் சந்திரசேகர். அவனுடைய செவியுணர்வு அபாரமானது. ஒலிகள் ,பேச்சுக்களின் உச்சரிப்பு மாறுபாடுகள், பல்வேறு வழக்காறுகளை அவனால் நுட்பமாகப் பிடிக்கமுடியும்- பேசிக்காட்டவும் முடியும். அவன் புனைவுலகின் வண்ணங்கள் அவையே.
ஆனால் காட்சியுணர்வு பரிதாபம். ஒருகாட்சியையும் காட்டமாட்டான். கதைகள் பேசிக்கொண்டே இருக்கும். இயற்கைவர்ணனை வெறும் தகவலாக இருக்கும். இயற்கை போகட்டும், பெண்கள்கூடத் தகவல்களாகவே இருப்பார்கள். இயற்கை அவனைப் பெரிதாகக் கவர்வதில்லை. காட்சிகளை மொழியாக்கவும் முடிவதில்லை. இது ஒரு இயல்பு, தனித்தன்மை என்றும் சொல்லலாம்.
தமிழில் பல இலக்கிய முன்னோடிகளை இந்த அளவுகோலால் அளந்து பார்க்கலாம். நவீன தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை நூலில் இதைப்பற்றிப் பேசியிருக்கிறேன்.
என்னுடைய இசை ரசனையை நானே மதிப்பிட்டுக் கொள்கையில் இசையை விடவும் வரிகள் முக்கியமாக இருப்பதைக் காண்கிறேன். இந்தப் பாடலிலேயே ‘நாளை என்றால் யாரே கண்டார்?’ என்ற வரி, அதற்கு சஞ்சய் கொடுத்திருக்கும் உக்கிரமான எடுப்பு, ‘என்ன செய்வாய் துணை யார் வருவார் ?’ என்ற வரியிலுள்ள துயரம் ஆகியவையே அந்த இரவில் நெஞ்சை ஆட்டுவித்திருக்கின்றன.
ஆகவே சங்கீதத்துக்குள் நுழைய இப்போது முடியாது, அடுத்த பிறவியில் முயற்சி செய்கிறேன்
ஜெ