உடைவுப்புள்ளிகள்

துணைவன்: மின்னூல் வாங்க

துணைவன் நூல் வாங்க 

துணைவன் கதை என் பிற தொகுப்புகளில் இடம்பெறவில்லை. ஏனென்றால் அக்கதை என்னிடமிருக்கவில்லை. அண்மையில் ஒரு நண்பர் ஆனந்தவிகடன் மற்றும் கல்கியில் வெளியான இரு கதைகளை அனுப்பியிருந்தார். அக்கதைகளில் ஒன்று இது. முதல்முறையாக தொகுதியில் இடம்பெறுகிறது. முன்பு வெளியாகி எத்தொகுதியிலும் இடம்பெறாத தஸ்தாவெஸ்கியின் முகம் என்னும் சிறுகதையும் இதில் உள்ளது.

(அக்காலகட்டக் கதைகளில் தாய் இதழில் வெளியான ஒருகதை, இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றதை விமர்சித்து எழுதியது, உருவகரீதியாக முக்கியமானது என நினைக்கிறேன். எவரிடமாவது இருந்தால் அனுப்பலாம். அதேபோல தீபம் இதழில் வெளியான எலிகள், ரோஜா பயிரிடுகிற ஒருவர் ஆகிய கதைகளும் கிடைக்கவில்லை)

இத்தொகுதியில் புதியதாக எழுதிய, என் தளம் உட்பட எங்கும் வெளியாகாத மூன்று கதைகள் உள்ளன.  ஒரு தனி இடம், பனி, பொருள் ஆகிய கதைகள்.

இத்தொகுதியை என் பிரியத்திற்குரிய நண்பர் இயக்குநர் சுப்ரமணியம் சிவாவுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்

இந்தக் கதைகள் ஏன் இப்படி இருக்கின்றன என என்னை நானே கேட்டுக்கொண்டேன். கோவிட் நோய்த்தொற்றுக் காலகட்டத்தில் நான் எழுதிய எல்லாக் கதைகளுமே நேர்நிலையானவை, இனியவை. அதற்கு முந்தைய பிரதமன் தொகுதி முதலே அந்த மனநிலை தொடங்கிவிட்டது.

ஆனால் இக்கதைகள் அனைத்திலும் ஒரு நுட்பமான கசப்பு அல்லது ஒவ்வாமை உள்ளது. இக்கதைகள் எதையாவது நிகர்செய்கின்றனவா? மேலும் பாயசம் குடிப்பதற்காக கசப்புக்கறியை அள்ளி சாப்பிடுவது எங்களூர் பந்திகளில் வழக்கம்தான்.

துணைவன் கதை பழையது. 1990ல் நான் சந்தித்த ஒரு போலீஸ்காரர் அதன் கதைக்கு தூண்டுதலளித்தார். அவர் பரம ஏழை, வன்னியர். ஆனால் வாச்சாத்தி கற்பழிப்பை, வீரப்பன் வேட்டை என்றபெயரில் சோளகர்கள் வேட்டையாடப்பட்டதை நியாயப்படுத்தினார். எந்த புள்ளியில் அப்படி உருமாறுகிறார்கள். எங்கே அந்த முறிவு நிகழ்கிறது? அது குழுவுணர்வா? அல்லது அதிகாரம் அவர்களை அப்படி மாற்றுகிறதா? எந்த அதிகாரம்? அரசதிகாரம், செல்வத்தின் அதிகாரம், ஆயுத அதிகாரம் என நான் நம்பவில்லை. மனிதனுக்குள் உறையும் ஆதிவேட்டைவிலங்கின் இயல்பு உருவாக்கும் அதிகாரமென நினைத்தேன். வெற்றிமாறன் இயக்கத்தில் அக்கதையின் கதைமாந்தர்கள் விரிவடைந்து விடுதலை என்றபேரில் திரைப்படமாக ஆகிறார்கள்.

இக்கதைகளில் பல இடங்களில் போலீஸ் உலகம் வருகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் எனக்கு அறிமுகமான ஓர் உலகம். ஒவ்வாமையை உருவாக்கிய ஓர் உலகம். ஆனால் அன்னியமானது அல்ல.எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் என்ன நடக்கிறதோ அதுவே அங்கும் நடக்கிறது. வன்முறை நேரடியானது என்பதொன்றே வேறுபாடு. ஒரு போலீஸ்காரரின் மனநிலை எல்லா அரசூழியர்களின் மனநிலையும்தான். அடித்தளத்தில் இருந்து வந்த ஊழியர்தான் அரசு மருத்துவமனையில் சாகக்கிடக்கும் ஏழையை உள்ளே அனுமதிக்க லஞ்சம் கேட்டு கைநீட்டுகிறார். அந்த உடைவு அவருள்ளும் நிகழ்ந்திருக்கிறது.

இந்தக் கதைகளை ஒட்டுமொத்தமாக அந்த உடைவு நிகழும் கணத்தை நோக்கித் திறப்பவை என வகைப்படுத்தலாமென்று தோன்றுகிறது. சிறுகதைதான் அந்தப்புள்ளியைச் சரியாகச் சென்று தொடமுடியும். தொட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்தவகைக் கதைகளுக்கு நான் எவ்வகையிலோ ஹெமிங்வேக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவருடைய நேரடிச்செல்வாக்கு என்னிடமில்லை என்றாலும். For Whom The Bell Tolls நாவலில் ஒரு படுகொலைக்காட்சி நினைவிலெழுகிறது. மிகக் கம்பீரமாக வசனம் பேசி துப்பாக்கிமுனைகளை நோக்கிச் செல்லும் எதிர்ப்புரட்சியாளராகிய பிரபு கடைசி நிமிடத்தில் அஞ்சி அலறி சிறுநீர் கழிக்குமிடம். மனிதனைப் பற்றிய அவநம்பிக்கையும் எழுத்துக்களின் தரிசனமே.

இக்கதைகளை என் பிரியத்திற்குரிய நண்பர் இயக்குநர்- நடிகர் சுப்ரமணிய சிவா அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைதி.அ.முத்துசாமிக் கோனார்
அடுத்த கட்டுரைமுதற்கனலில்…