ரங்கனும் அவருடைய மொழியாக்கங்களும்

தமிழ் விக்கி – விந்தியா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். ஹூஸ்டன் மீனாட்சியம்மன் கோவிலில் 64 நாயன்மார்களின் வரலாறையும், 12 ஆழ்வார்களின் வரலாறையும் சுருக்கமாக ஓவியங்கள் சகிதமாக, சுவற்றில் ஆங்கிலத்தில் எழுதிவைத்திருப்பார்கள். சஹா அதை வாசிக்கட்டும் என்று பிப்ரவரி முதல் வார கோவில்பயணத்தில் உடன் அழைத்துச் சென்றோம். நான் வாசித்தால் நாள் முழுக்க வேண்டும். அவன் அரை மணி நேரத்தில் எல்லாம் வாசித்துவிட்டு, அப்புறம் என்றான்.

அந்தக் கோவில் வளாகத்தில், தமிழ் நூல்கள், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் கிடைக்கும் ஒரு நூலகம் உண்டு. அந்த நூல்களை வாங்கிக்கொள்ளவும் செய்யலாம். கடிதம் எழுதி அணுக்கமாக உங்களை அறியும் முன் உங்களது நூல்களையெல்லாம் அங்கிருந்துதான் வாங்கி வாசித்தேன். அந்த நூலகத்திற்கு அவனை அழைத்துச் சென்றோம். இந்த மொழியாக்கப் புத்தகத்தில் இருக்கிற இராமாயணம் எனக்குத் தெரியும், இந்த மொழியாக்கத்தில் வந்துள்ள  பாண்டவர்கள் / கௌரவர்கள் கதை எனக்குத் தெரியும் என்று சொல்லிக்கொண்டே , ஜெயகாந்தன் என்ற பெயரை பார்த்ததும் அந்த ஆங்கில மொழியாக்க நூலை எடுத்துக் கொஞ்சம் வாசித்துவிட்டு இதை வாங்கலாம் என்றான்.

Trial By Fire And Other Stories என்று தலைப்பிட்ட நூலில் பன்னிரெண்டு கதைகள் இருந்தன. பின்பக்க அட்டையில் ஜெயகாந்தன் கருப்பு மீசையுடன் இருந்தார். ரவிசுப்பிரமணியன் ஆவணப்படத்தில் இருந்த வெள்ளை மீசை ஜெயகாந்தன்தான் அவனது நினைவில் இருப்பதாக சொன்னான். வீட்டிற்கு வந்ததும், அந்தக் கதைகளை மொழியாக்கம் செய்த Andy Sunderasan-ஐத் தேட ஆரம்பித்தேன்.  நண்பர் விசுவிற்கு ஆண்டி சுந்தரேசன், ஜெயகாந்தன் கதைகளை மொழியாக்கம் செய்தது தெரிந்திருந்தது. ஆனால், அவரைத் தொடர்பு கொண்டு பலவருடங்கள் இருக்கும் என்றார். Google-ன் உதவியில் அவரது வலைதளத்தை கண்டுபிடித்து, அவர் இதுவரை மொழியாக்கங்கள் செய்த நூல்களின் பட்டியலைக் கண்டதும், தங்கப்புதையலைக் கண்டவனைப்போல மகிழ்ந்தேன்.

ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்புகள் மூன்று. எழுத்தாளர் விந்தியா அவர்களின் சிறுகதைகள் மற்றும் அவரது நாவலை மொழியாக்கம் செய்திருந்தார்.  ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை , The Show Never Ends என்று மொழியாக்கம் செய்திருந்தார்.  நாஞ்சில் நாடனின் பதினான்கு கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு அவரது தளத்தில் ஆங்கிலத்தில் வாசிக்க கிடைக்கின்றன. ஆங்கிலம் மட்டுமல்லாது தெலுங்கு பேசும்(வாசிக்கும்)  மக்களிடமும் தமிழ்க்கதைகள் சென்றடைய, ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சூடாமணி படைப்புகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்திருந்தார்.

தளத்தில் இருந்த ஒரு அறிவிப்பு (A note from the Surviving KNS family members) எனக்கு வேறு ஒரு விதமான ஆர்வத்தை கொடுத்தது. . தமிழ் விக்கியின் மூலம்  நன்கு அறிமுகமாகிவிட்ட, எழுத்தாளர் விந்தியா அவர்களின், ஒரே ஒரு நாவலான  ராஜேஷ்வரி பற்றிய குறிப்பு அது.   அந்த நாவலை  ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்வதின் அவசியம், சுருக்கமான முன்னுரை உள்ள அந்தக் குறிப்பின் கீழே நால்வரின் பெயர்களை பார்த்ததும், மனதில் நான் கண்டது புதையல்தான் என உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியின் படபடப்பு.. மேற்கொண்டு எதுவும் தாமதிக்காமல் , அமெரிக்க விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் பிரதிநிதியாக. Trial By Fire And Other Stories  பிரதிகளை வாங்க என்ன செய்யவேண்டும் என்று மின்னஞ்சல் செய்தேன். .அவர் தற்போது வேறு எதுவும் பிரதிகள் இல்லை. வேண்டுமெனில் அவரிடம் இருக்கும் போட்டோ காப்பியை அனுப்புகிறேன் என்றார்.

இப்படியே மின்னஞ்சல்கள், முன்னும் பின்னும் செல்ல,  தயங்கி தயங்கி எழுத்தாளர் விந்தியா அவர்கள் உங்களது சகோதரியா என்று கேட்டேன். ஆம், அவர் எனது சகோதரி, அனைவரிலும் மூத்தவர், இயற்பெயர் இந்தியா தேவி என்று பதில் வந்தது. ஆர்வமாகி, கைபேசியில் உங்களை அழைக்கவா என்று கேட்க, அவரது சகோதரர் சீனு ஆஸ்டினில்தான் உள்ளார், அவரை தொடர்புகொள்ளுங்கள் என்று அவரது எண்ணைப் பகிர்ந்தார். தன்னை ரங்கன் என்று அழைத்தால் உரிமையாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார்.

நாஞ்சில் நாடன் கதைகள் பற்றி ரங்கன் எழுதியதை ஆங்கிலத்தில் அப்படியே கொடுக்கிறேன். I admire நாஞ்சில் நாடன் writing. He is brilliant in evoking scenes and images. He’s widely travelled and writes on various topics. He makes facts ‘sit up and breathe’ I liked his piece on the Gujarat Famine in யாம் உண்போம். 2013-ல்  நீல பத்மநாபனின் இலை உதிர் காலம் நாவலை, ரங்கன் Autumn Reveries என ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய சாகித்ய அகாதமி அதை வெளியிட்டுள்ளது. 2016-ல் அதற்கு , நல்லி திசையெட்டும் பரிசு , சிறந்த மொழியாக்கத்திற்கென கிடைத்துள்ளது. 2018-ல் 800 பக்கங்கள் கொண்ட நீல பத்மநாபனின் தேரோடு வீதி  நாவலை மொழியாக்கம் செய்துள்ளார் இது அகாதமியின் மேற்பார்வையில் உள்ளது. இந்தவருடத்தில் வெளிவர சாத்தியங்கள் உள்ளது என ரங்கன் நம்புகிறார்.

சகோதரி விந்தியாவின் அனைத்து நூல்களையும் சென்ற வருடம் தெலுங்கில் மொழியாக்கம் செய்துள்ளார். மூன்று வால்யும்கள் அந்த நூலை Telugu Department of the Emory University, Atlanta-விற்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். ரங்கன் தெலுங்கில் மொழியாக்கம் செய்த தமிழ் படைப்புகள், ஹூஸ்டனிலிருந்து வெளிவரும் Madhuravani, இணையப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

சீனுவை அழைத்து மறு நாள் உரையாட, விந்தியாவின் கதைகள்,  வெளி மாநிலத்தில் வாழ்ந்தாலும், அப்பா சுந்தரேசன், அவர்கள் அனைவரையும் தமிழ் படிக்க வைத்தது, தன் சம்பளத்தைவிட இருமடங்கு விலையில் (ரூ 150) கொடுத்து  வாங்கிய டைப்ரைட்டர், அதை தமிழ் எழுத்துக்களுக்காக மாற்றியமைத்தது,  திருச்சி பக்கத்தில் இருக்கும் கிராமத்து வீட்டில் அப்பா சேமித்துவைத்திருக்கும் புத்தகங்கள், அவற்றை பாதுக்காக்கவேண்டிய முக்கியத்துவம் என சுவாரஷ்யமாக சென்றது.. அவர்களின் தந்தை, மகளின் கதைகள் பத்திரிகைகளில் பிரசுரம் ஆக ஆக , வெட்டி எடுத்து சேகரித்து , பைண்ட் செய்து ஒரு புத்தகம் போல் வைத்துள்ளார். எழுத்தாளர் அம்பை அவர்கள் அதை மின்வடிவமாக்கி தனது SPARROW அமைப்பின் மூலம் சேமித்துவைத்துள்ளார்.

சீனு 1968-ல் அமெரிக்கா வந்துள்ளார். IBM-ல் முப்பது வருடங்கள் பணியாற்றியுள்ளார் தம்பி ரங்கன் 1975-ல் அமெரிக்கா வந்துள்ளார். இப்பொழுது கலிபோர்னியாவில் வசிக்கிறார். சீனுவின் கணினி பின்னனியும், ரங்கனின் எழுதும் திறனும் மற்றும் மொழியாக்கத் திறனும், நாரணன் எனும் சென்னையில் வசித்த சகோதரரின் தட்டச்சுத் திறமையும் ஒருங்கே உதவ விந்தியாவின் நூல்கள் எல்லாம் மின்வடிவங்களாக மாற்ற முடிந்திருக்கிறது (https://vindhiya.com)

ரங்கன் (Andy Sunderasan)- மொழியாக்கம் செய்த நூல்கள் பற்றிய விபரங்கள்  https://www.kurinjipubs.com-ல் கிடைக்கின்றன. சீனுவின் மகள் திவ்யா என்பவர் குழந்தைகளுக்கான நூல்கள் எழுதுபவர். ஆண்டி மொழியாக்கம் செய்த Made in Heaven and Other Stories என்ற ஜெயகாந்தன் நூலுக்கு அட்டைப்படத்தை வடிவமைத்துள்ளார். இந்த தளம் இப்பொழுது, நூல் விற்பனை செய்யும் செயல்பாட்டில் இல்லை. தகவல்களுக்காகவும், ஆன்லைனில் இருக்கும் நூல்களை வாசிக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உரையாடலின் ஊடே, ஜெயமோகனின் தமிழ் விக்கி முன்னெடுப்பு, எழுத்தாளர் விந்தியாவின் கட்டுரை என அறிமுகம் செய்தேன். சீனு அவர்களுக்கு  நான் கூறிய விபரங்கள் எதுவும் புதிதாக இல்லை. பின்னர் எழுதிய ஒரு குறுஞ்செய்தியில், தமிழ் விக்கிப் பதிவில் தனது சகோதரியின் கணவர் பெயர் ஸ்ரீனிவாசன் என்று தவறாக உள்ளதாகவும், சுப்ரமண்யன் என்று மாற்றச் சொல்லியும் கேட்டுக்கொண்டார். ரம்யா, அதை உடனே சரிசெய்துவிட்டார்.

ரம்யா நீலியில் எழுதிய கட்டுரையை அவரிடம் பகிர்ந்தேன். விந்தியாவின் தேர்ந்தெடுத்த கதைகளை ரம்யாவிற்கு மீண்டும் நூலாக கொண்டுவரும் ஆவல் உள்ளது எனத் தெரிவிக்க, சீனு, ஆண்டி சுந்தரேசன், சகோதரி செல்வி (நியூ மெக்ஸிகோ) மூவரும், உரிமை தருகிறோம் என எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.

இந்தப் பாரம்பரியமிக்க குடும்பத்தை அறிந்துகொள்ளும் சூழலில் விந்தியாவின் சகோதரர் நாரணன் 2019-ல் மரணமடைந்துவிட்டார் என்று  அறிய எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டேன். சீனுவையும் அவரது மனைவி சுகந்தாவையும் சென்ற வார இறுதியில், நானும் ராதாவும் , Summer Moon Café-யில் திறந்தவெளி முற்றத்தில் வைத்துச் சந்தித்தோம். அவர்கள் மகள் திவ்யாவின் அறிவுரைப்படி, இப்பொழுதும் Covid-19 protocols கடைப்பிடிக்கிறார்கள்.

ரம்யா, விந்தியாவின் கதைகளை நூலாக கொண்டுவரும் சமயம் கோபுலுவின் படம் கதைகளின் இடையே இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். ரங்கன் மொழியாக்கம் செய்த ஜெயகாந்தனின் Till Death Do us Part, Made in Heaven and Other Stories இரு ஆங்கில நூல்கள், Ganga Thapas (தெலுங்கு) பரிசாக கொடுத்தார்கள். விந்தியாவின் Rajeshwari நாவலை எங்களுக்கு பரிசாகக் கொடுக்கலாம் என்றுதான் சீனு எடுத்து வந்திருந்தார். அவரது சகோதரியின் படத்தை பின் அட்டையில் இருப்பதைப் பார்த்ததும், படித்துவிட்டு திருப்பிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

சீனுவிடம், ஏனோ தெரியவில்லை, விந்தியா அம்மாவின் படத்தை முதல் நாள் பார்த்தபொழுது என் கண்களில் கண்ணீர் கொட்டியது என்றேன். நீங்களும் எங்களில் ஒரு சகோதரர் என்றார். இதனுடன், சீனு, சுகந்தா தம்பதிகளுடன் நானும் ராதாவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், எழுத்தாளர் விந்தியா அவர்களின் தந்தை/தாய் படமும் ரங்கனின் புகைப்படமும் இணைத்துள்ளேன்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைA Conversation with Suchithra 
அடுத்த கட்டுரைதில்லை பேட்டி, கடிதம்