ஆதிமூலமும் குமரித்துறைவியும்

குமரித்துறைவி நூல் வாங்க 

குமரித்துறைவி மின்னூல் வாங்க 


கே.எம்.ஆதிமூலம் தமிழ் விக்கி

திரு ஜெ, ஓவியர் ஆதிமூலம் அவர்கள் வடிவமைப்பில் தங்கள் நூல் எதுவும் வெளியாகவில்லை என நினைக்கிறன். அவர் வடிவமைப்பில் வந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணத்தில் அவருடைய கையெழுத்தில் இருந்தும், 97 ல் அவர் வரைந்த ஓவியம் ஒன்றையும் இணைத்து செய்ததை தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். Art of adimoolam என்ற அவருடைய புத்தகத்தில் தமிழ் கையெழுத்து ஒரு பக்க அளவில் இருக்கிறது.அதிலிருந்து ஒவ்வொரு எழுத்தாக எடுத்து ஒருங்கிணைத்தேன்.

அன்புடன் சேது வேலுமணி,

சென்னை

அன்புள்ள சேது வேலுமணி

நன்றி

அழகான ஓவியம்.

குமரித்துறைவிக்கு ஒரு சம்பிரதாயமான அட்டை போதுமென முடிவெடுத்தோம். ஒரு நூலின் அட்டை என்ன செய்தியை அளிக்கிறது என்பது முக்கியமானது. நவீன ஓவியம் அந்நூல் பொதுவாசகர்களின் புரிதலுக்குரியதல்ல என்னும் எண்ணத்தை உருவாக்குகிறது. குமரித்துறைவி அப்படி அல்ல. அதை அனைவரும் வாசிக்கலாம். இலக்கிய வாசகர்கள் கண்டடையத்தக்க ஆழங்கள் அதில் பல உண்டு. ஆனால் கதையென, அனுபவம் என நெகிழ்வுடன் எவரும் அதில் தோயலாம். இன்று பல வாசகர்கள் தங்கள் வாழ்க்கையில் வாசித்த முதல் நூலே அதுதான் என்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள். ஒரு வயதான அம்மாவுக்கு வாசித்துக்காட்டத்தக்க ஒரு நூல் அது. ஆகவே அந்த அட்டை. அந்த உத்தி பலித்தது. குமரித்துறைவியின் மிகப்பெரிய ஏற்புக்கு அந்த அட்டை ஒரு காரணம்.

ஆதிமூலம் ஓவியங்கள் நுட்பமானவை, அழகனவை. ஆனால் ஒரு காலகட்டத்தில் அவர் சிற்றிதழ் சார்ந்த எல்லா நூல்களுக்கும் இலவசமாக வரைந்துகொடுத்தார். அவருடைய ஓவியங்களையும் பரவலாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். விளைவாக பொதுவான ஒரு பார்வையில் அவருடைய ஓவியமுறை மிகமிகப் பழகிப்போனதாக, கண்ணுக்கு கலை அளிக்கும் முதற்கண வியப்பு நிகழாததாக ஆகிவிட்டிருக்கிறது. தமிழகக் கல்வெட்டுகளின் எழுத்துவடிவை ஒட்டி அவர் உருவாக்கிய எழுத்துக்களுக்கும் இச்சிக்கல் உண்டு. காலச்சுவடு உட்பட சிற்றிதழ்களின் தலைப்புகள் பெரும்பாலும் இந்த வகையிலானவை. ஏராளமான நூல்கள் இந்த எழுத்துவடிவு கொண்டவை.

ஒரு நூல் கவனம்பெற அதன் அட்டையில் புதுமை என்னும் அம்சம் இருக்கவேண்டும். இல்லையேல் சாதாரணமாக இருக்கலாம், அந்நூலே அதற்கான கவனத்தை உருவாக்கிக் கொள்ளும்.

ஜெ

முந்தைய கட்டுரைதில்லை செந்தில்பிரபு – ஒரு பேட்டி
அடுத்த கட்டுரைபரிதிமாற்கலைஞர் தமிழ்ப்பற்றால் பெயரை மாற்றிக்கொண்டாரா?