IN THE BEGINNING

அன்புள்ள  ஆசிரியருக்கு,

உங்களது 2015 ஆம் ஆண்டு அமெரிக்க பயணத்திற்கு ஆறு மாதங்கள் முன்பு போர்ட்லாண்ட் பல்கலைக் கழகத்திற்கு வந்த போது இரு மனதாகத் தான் இருந்தது. பொறியியல் பயில ஆர்வம் இல்லை. உடன் வந்த நண்பன் படிப்பை பாதியில் நிறுத்தி நம் ஊருக்கு திரும்பி விட்டிருந்தான். இளங்கலை பயில்களில் அவன் தான் உங்கள் படைப்பை எனக்கு அறிமுகம் செய்தது.  அவனுக்கு தக்க சூழல் அமையவில்லை.

எழுத்து, இலக்கியம் என்ற கனவுடன் நானும் இந்தியா திரும்பிவிடு வதாகவே இருந்தேன். என்  குடும்ப பொருளாதாரச் சுழல் மட்டுமே தடுத்தது. பிள்ளையார்பட்டிக்கு அருகே உள்ள சிராவயல் எனது கிராமம். விவசாயக் குடும்பம்.  ஊரில் அப்பா சில சிறு தொழில்கள் செய்ய முயற்சித்து  தோல்வி அடைந்திருந்தார். என் படிப்புக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. வட்டியோடு வட்டியாக ஆகட்டும் என அவர் வயலை அடகு வைத்து கந்து வட்டிக்கு நான்கு லட்சம் வாங்கித் தந்திருந்தார். அதை வைத்துக் கொண்டு  ஏதோ ஒரு தைரியத்தில் வந்து விட்டேன். மூன்று மாதங்கள் தான் சமாளிக்க முடிந்தது.

அரங்கா விஷ்ணுபுர நண்பர்கள் விசு, அரவிந்த் இருவருடனும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களது ஆலோசனைகள் உதவியாக இருந்தன. கொஞ்ச நாட்களிலேயே உங்களது பயணமும் உறுதியானது. கலிபோர்னியாவில் உங்களை சந்திக்க வருகையில் வெண்முகில் நகரம் முடித்து இந்திர நீலம் எழுதிக் கொண்டிருந்தீர்கள் என நினைவு. நானும் அது வரை வெண்முரசு வாசித்திருந்தேன்.   என் குழப்பங்களை சொன்னதும் ‘வெண்முரசு, இலக்கியம் எல்லாம் இப்போது வேண்டாம். படிப்பை முடித்து வேலையில் சேருங்கள் பிறகு தொடரலாம்’ என்றீர்கள். அவற்றில் இருந்து கொஞ்ச காலம் நானும் விலகியே இருந்தேன்.

கலைப் படங்கள் பார்க்கத் தொடங்கியது அந்த இடைவெளியில் தான். எதர்சையாக போர்ட்லாண்டில் உள்ள ஹாலிவுட் திரையரங்கில் சத்திய ஜித் ரே யின் ‘பதேர் பாஞ்சாலி’ புதிய 4K  ரெஸ்டோரேஷனில்  திரையிடப்படுவதாக செய்தி கண்டு சென்றவன் அவர்களுது திரையிடல்களுக்கு தொடர்ந்து செல்லத் தொடங்கினேன். பெர்க்மென், குரசோவா, ராபர்ட் ப்ரெஸ்ஸோன் , கிரிஸ்டோப்  கிஎஸ்லோவ்ஸ்கி என பல இயக்குனர்களின் படங்கள் அறிமுகம் ஆகின.

ஒரு சிறந்த இலக்கியப் படைப்பை ஒத்த அழுத்தத்தை எனக்கு முதலில் திரையில் தந்தது தார்காவஸ்கியின் ‘ஆண்ட்ரேய் ரூப்ளாவ்’. ஒரு கலைஞன் தன் வளர்பாதையில் எதிர் கொள்ளும் அறச் சிக்கல்களை, அலைக்களிப்புகளை கடந்து செல்லுதல் என  பல பாகங்களாக விரிந்து செல்லும் படம். ரஷ்ய இலக்கியம் வாசிக்கும் அதே அனுபவத்தை தந்தது. சினிமாவில் டால்ஸ்டாயின், தாஸ்தாவெஸ்கியின்  இலக்கிய  ஆளுமைகளை  ஒத்தது தார்கோவஸ்கியின் ஆளுமை.

அமெரிக்காவில் இருந்து கொண்டு இப்படி ருசியக் கலைஞர்கள் மீது பித்து கொண்டு அலைகிறாய் என எனது  ரூம் மேட் விவேக் மண்டையில் குட்டாத குறையாக அமர வைத்து அமெரிக்க இயக்குனர்களின் படங்களை  அறிமுகப் படுத்தினான். விவேக் சென்னையில் வளர்ந்தவன்.  சினிமா பிரியன். இந்தியாவில் இருந்து வரும் போதே ஒரு ஹார்ட் டிஸ்க் முழுதும் படங்கள் தரவிறக்கி கொண்டு வந்திருந்தான்.  நூறு படங்களாவது இருக்கும்.

ஸ்டான்லி குபிரிக்கின் ‘2001, ஏ ஸ்பேஸ்  ஒடிசி’, மார்ட்டின் ஸ்கோர்ஸிஸே,  ஹிட்ச் காக்கின் ‘birds’ என நீண்ட வரிசை. வாரம் இரண்டு படங்களாவது பார்த்துவிடுவோம். அந்தப்  படங்கள் பிடித்திருந்தன ஆனால் ‘ஆண்ட்ரேய்  ரூப்ளாவ் ‘ போன்ற தாக்கத்தைத் தரவில்லை என்றேன்.

‘அதிகம் பேசாதே! இந்த வாரம் பரீட்சை முடியட்டும் உனக்கு  டெரன்ஸ் மாலிக்கின் படம் ஒன்றை காண்பிக்கிறேன், அதன் பின்னும் நீ ருஷ்ய துதி பாடுகிறாயா என பார்ப்போம்’ என்றான்.

டெரன்ஸ் மாலிக் என்ற பெயர் மட்டும் உங்கள் வழியே அஜிதன் குறித்து நீங்கள் பேசும் போது அறிமுகமாகி இருந்தது. அதே பெயரை விவேக் சொன்னது மேலும் ஆர்வத்தை  தூண்டியது. அவனும்   ‘ட்ரீ ஆப் லைப்’  தான் போட்டுக் காண்பித்தான்.  முதல் முறை பார்த்ததுமே டெரன்ஸ் மாலிக்கின் படங்கள் என்னுடன் என்றும் இருக்கும் என உணர்ந்து கொண்டேன்.

விவேக் ‘நீ அடிமையாகி விடுவாய் என எனக்குத் தெரியும் அதனால் தான் இந்தப் படத்தில் இருந்து தொடங்க வில்லை’,  என்றான். அவனுக்கும் ‘ஆண்ட்ரேய் ருப்ளேவ்’ பிடிக்கும் என்னைச் சீண்டுவதற்காகவே அதை வெளிக் காட்டவில்லை. மாலிக் படங்களுக்கும், தார்காவ்ஸ்கியின் படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை  Grace vs Nature போன்ற தத்துவ முரண்களை அவை காட்சியாக்குகின்றன என்பதில் தான்.  சில மாதங்களிலே விவேக்கும் இந்தியா திரும்பி விட்டான்.

அஜிதனுடன் உரையாட தோன்றியது. அவரை 2012ல் விஷ்ணுபுர விருது விழாவின் போது ஓரே ஒரு முறை சந்தித்தது. பெங்களூரில் படிப்பை முடித்ததும் வந்திருந்தார். அதன்பின் அவரை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. அடுத்த முறை நான்  இந்தியா  வந்த போது கடலூர் சீனுவிடம் அஜிதனையும் இமையப்  பயணத்திற்கு அழைத்துப் பாருங்கள் என கேட்டேன். அவர் தத்துவம் பயில சென்று விட்டதாகச் சொன்னார். அதன் பிறகு சென்ற வருடம் தான் அவரை நாகர் கோவிலிலும் , வெள்ளி மலையிலும் சந்திக்க முடிந்தது. அவருடன் உரையாட தொடங்கியதுமே நெடுநாள் பழகிய தோழன் போல உணர முடிந்தது.  நேரடி தொடர்பில் இல்லை என்றாலும் உங்கள் தளத்தின் வழியாகவும், சீனுவின் வழியாகவும் அவர் என்னுடன் ஒரு தொடர் உரையாடலில் இருந்துள்ளார்.

ஜனவரியில் மீண்டும் சென்னையில் சந்தித்தோம். புத்தகக் கண்காட்சியின் போது.  என் குறும்படம் IN THE BEGINNING  ஐ அவருக்கு காட்டினேன்.  அமெரிக்க சிறையில் இருந்து வெளிவரும் ஒருவன் சந்திக்கும் இடர்கள் குறித்த படம். டெரன்ஸ் மாலிக்கின் சாயலில் உள்ளது. வாழ்த்துக்கள் என்றார். சீனுவும், கே பி வினோத்தும் பார்த்ததும்  நிச்சயம் திரைத் திருவிழாக்களுக்கு அனுப்பச் சொன்னார்கள். அந்த முயற்சிகளை தொடங்கி உள்ளேன்.

நண்பர்கள் படத்தின் ட்ரைலரை இங்கு பார்க்கலாம் 

போர்ட்லாண்டில் உள்ள ஹாலிவுட் திரையரங்கில் மார்ச் 26 மதியம் இரண்டு மணிக்கு படத்தின் முதல் திரையிடல் நிகழ உள்ளது.  படத்தில் நடித்துள்ள பெரும்பாலானவர்கள் சிறைக்குச் சென்று  விட்டு திரும்பியவர்கள். சிலர் சிறை தண்டனையின் போது நாடங்களில் பங்கேற்பதன் வாயிலாக நடிக்க கற்றுக் கொண்டவர்கள். திரையிடலைத் தொடர்ந்து அவர்களுடனான ஒரு உரையாடலையும் ஒருங்கிணைப்பதற்காக ஓரிகான் மாநிலத்தின் humanities fund ல் இருந்து நிதி அளித்திருக்கிறார்கள். நம் விஷ்ணுபுர நண்பர்கள் விசுவும், சுஜாதாவும் வருகிறார்கள். சௌந்தர்  தொடர்ந்து உதவுகிறார். அவர்களுக்கு நன்றி.  பிற நண்பர்கள் வாய்ப்பிருந்தால் வரவும்.

படம் குறித்து இங்குள்ள KXRW எனும் வானொலியில் நேர்காணலும்,  ஓரிகான் மாநிலத்தின் கலை சார்ந்த இனைய இதழில் அறிமுகக் கட்டுரையும் வந்துள்ளது.

எனக்கு கல்லூரியிலோ அல்லது சினிமாவில் வேலை பார்த்தோ கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை.  உங்கள் வழியாகவும், சீனு, சுனில், அரங்கா, அஜிதன், மணிகண்டன் என விஷ்ணுபுர நாண்பர்கள் பலரிடத்தும் நான் பயின்றதன் வாயிலாகத் தான் இது போன்ற ஒரு முயற்சியை அமெரிக்காவில் முன்னெடுக்க முடிந்திருக்கின்றது. இன்றும் நான் அதிகம் பயில்வது ஸ்ரீனிவாஸ், பார்கவி தொடர்ந்து ஒருங்கிணைக்கும் கம்பராமாயண வகுப்புகளிலும், விவாத அரங்குகளிலும் தான். விஷ்ணுபுர நண்பர்களுக்கும், இம்பர் வாரி நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

இது ஒரு நல்ல தொடக்கமாக அமைய உங்கள் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வேண்டுகிறேன்!

-பிரபு முருகானந்தம்

முந்தைய கட்டுரைதிருமாவும் விடுதலை சினிமாவும்
அடுத்த கட்டுரைமழித்தலும் நீட்டலும் -கடிதம்