அனந்தமூர்த்தியின் ‘பிறப்பு’

அன்பின் ஜெ,

வணக்கம்.

யு.ஆர்.அனந்தமூர்த்தியின் “பிறப்பு” குறுநாவல் வாசித்தேன். கன்னடத்தில் முதன்முதலாக வெளிவந்த போது, “பிறப்பு”, அக்காலகட்டச் சமூகத்தில் எத்தகைய அதிர்வுகளையும், சலசலப்புகளையும், விவாதங்களையும் உருவாக்கியிருக்கும் என்று இப்போது வாசித்தபின் புரிந்துகொள்ள முடிகிறது.

“பிறப்பு” நாவல், பழங்கால கேரள நாயர்/நம்பூதிரி தரவாடுகளில் நாம் உணரும், தொன்மையின் ஒருவித பூடக/மந்திரத் தன்மையைக் கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது (லோகியின் “தனியாவர்தனம்” ஞாபகம் வந்தது). திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்புகளை நாவலின் சில பாத்திரங்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. காமத்தின் அலைதலும், பிறப்பின் கேள்வித் தத்தளிப்புகளும், சென்றமர்வதற்கான நிம்மதியான இலக்கின் தேடலும் கொண்டு கதையின் முக்கிய மாந்தர்கள் வாழ்வில் பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அழுத்தத்தின் மூச்சு முட்டலிலிருந்து, சுவாசம் பெற, தப்பிக்கும் ஜன்னலாகவே, ஆன்மீகத்தை அவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் சரியான, பொருத்தமான தலைப்பை நாவலுக்கு இட்டிருக்கிறார் (கன்னடத்தில் “Bhava”). அவரின் மொழிபெயர்ப்பில் வாசிப்பனுபவம் செம்மையாக அமைந்தது. நிதானமாக, ஒரு ரயில் பயணத்தில் துவங்குகிறது நாவல். செல்லச் செல்ல, சாஸ்திரியின், தந்திரியின், தினகரின் இறந்த கால நினைவோடைகளாக விரியும்போது படு வேகமெடுக்கிறது. வாசிப்பனுபவத்திற்காக எழுதிப்பார்த்து மனதில் தொகுத்துக்கொண்டேன்.

தொடர்ந்து, அம்மா, அப்பா, சித்தி, அண்ணி… என்று ஒருவர் பின் ஒருவராக இறந்து போகிறார்கள்; அண்ணனும் ஆஸ்துமாவினால் அவதிகொண்டு படுத்த படுக்கையாகி விட, வீடே வெறுத்துப் போகிறது விஸ்வநாத சாஸ்திரிக்கு. வீடு உடுப்பி அருகில், கிராமத்தில் நட்டநடுக் காட்டில் இருக்கிறது. வீட்டில், முன்காலத்தில், மூதாதையர் பெற்ற சாபத்தினால், எதிர்மறை சக்திகள் சிலவற்றின் நடமாட்டம் உணரப்படுகிறது. சாஸ்திரி, தன் இருபதாவது வயதில் சொத்தைப் பிரித்து, பணத்தை எடுத்துக்கொண்டு பம்பாய் வந்து “பகவதி கிருபா” ஹோட்டல் துவங்குகிறார். இளமைத் துடிப்பு, கையில் பணம்…சாஸ்திரி, குடி, புகை, பெண் சகவாசம் என்று திசைமாறுகிறார்.

தன் இருபத்தைந்தாவது வயதில், ஒரு விலைமாதுவின் வீட்டில், தான் சந்தித்த, துளுவில் பேசிய 17 வயது கன்னடப் பெண் ராதாவை சாஸ்திரிக்குப் பிடித்துப் போகிறது. ஊரிலிருந்து அண்ணன் இறந்துவிட்டதாகத் தகவல் வர, ஹோட்டலை மூடிவிட்டு, ராதாவையும் கூட்டிக்கொண்டு ஊருக்கு வருகிறார். உடுப்பியிலிருந்து பத்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் (தன் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில்) வீடு வாங்கி ராதாவைக் குடியமர்த்தி, அடிக்கடி வந்து போய்க்கொண்டிருக்கிறார்.

வாரிசுக்காக, ஒரு திருமணம் செய்துகொள்ள ராதா சொல்ல, பெண் தேடுகிறார். சாஸ்திரியின் வீட்டின் சாபறிந்த யாவரும் அவருக்குப் பெண் கொடுக்கத் தயங்குகிறார்கள். தன் குடும்பத்தின் ஏழ்மை நிலையினால், சரோஜா, நானூறு ஏக்கர் தோட்டம் வைத்திருக்கும் சாஸ்திரிக்கு மனைவியாகிறாள்.சரோஜாவிற்கு சாஸ்திரியின் மேல் சிறிதும் அன்பில்லை. சரோஜாவின் அலட்சிய சுபாவம் சாஸ்திரிக்கு மிகுந்த கோபம் தருகிறது. திருமணம் நடந்து ஐந்து வருடங்களாகியும் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. உடுப்பியில் ஆயுர்வேத மருந்துக்கடை நடத்தும், கன்னடம் பேசும் மலையாளப் பண்டிதன் கருணாகரன் பரிச்சயமாக, அவனை ஒருநாள் வீட்டிற்கு, சாப்பிடக் கூட்டிக்கொண்டு வருகிறார்.

சாஸ்திரியின் வீட்டிற்கு வரும் கருணாகரப் பண்டிதன், வீட்டில் துர்சக்திகள் இருப்பதாகவும், அவைகளை விரட்ட, 30 நாட்கள் சில மாந்திரீகப் பூஜைகள் செய்யவேண்டும் என்றும் சொல்கிறான். சாஸ்திரி சம்மதிக்கிறார். சரோஜா, பண்டிதனுக்கு நட்பாகிறாள். சரோஜாவிற்கு பண்டிதன் பாட்டு சொல்லிக் கொடுக்கிறான். சரோஜா தாய்மையுறுகிறாள். சாஸ்திரியின் மனதில், குழந்தைக்குத் தகப்பன் தானா, பண்டிதனா என்ற சந்தேகப் பேய் புகுந்து கொள்கிறது.

ஒரு புதன்கிழமை அமாவாசை நாளன்று இரவில் சாஸ்திரியின் உடலிலும், மனத்திலும் முழு ஆதிக்கம் கொள்ளும் தீய சக்தியினால், உக்கிரமாகிறார் சாஸ்திரி. சில கொடூரமான சம்பவங்கள் நடந்தேறுகின்றன.

சாஸ்திரி இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்துகொண்டது மகாதேவியை. அவர்களுக்கு ஒரு மகள், மங்களா. மங்களா, தன் உடன் படிக்கும், கம்யூனிஸ்ட் சிந்தனைகள் கொண்ட, திம்மையா என்ற சார்வாகனை வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறாள். எழுபது வயதாகும் விஸ்வநாத சாஸ்திரி, இப்போது ஒரு பிரபலமான “ஹரிகதா” பாகவதர்.

டில்லியிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் மத்திம வயதிலிருக்கும் தினகரைச் சந்திக்கிறார் சாஸ்திரி. தினகர் அய்யப்பனுக்கு மாலை போட்டு கேரளாவிற்குச் செல்லும் பயணத்திட்டத்தில் இருக்கிறான்.தினகர் டில்லியில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பிரபலம். அவன் ஐந்து வயது சிறுவனாயிருக்கும்போது, அவனின் அம்மா, ஹரித்துவாரில் கங்கையில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார். அம்மா தினகரை, பால்யத்தில் செல்லமாக “புட்டாணி” என்று கூப்பிடுவது இன்னும் அவன் நினைவில் பசுமையாக இருக்கிறது. ஹரித்துவாரில் ஏழை யாத்திரிகர்களுக்கு இலவச தங்கும் சத்திரம் நடத்தும் செல்வந்தரான திரிபாதிதான் தினகரின் வளர்ப்புத் தந்தை.

கேரளா செல்லுமுன், மங்களூர் அட்வகேட் நாராயண தந்திரியையும், அவரின் அம்மா சீதம்மாவையும் சந்திப்பதற்குத்தான் இப்போதுமங்களூர் சென்றுகொண்டிருக்கிறான் தினகர். ஒருமுறை ஹரித்துவாருக்கு யாத்திரை வந்தபோது தந்திரியும், அவரது அம்மா சீதம்மாவும், தந்திரியின் மகன் (தந்திரியின் மனைவி காலமாகி விட்டார்) குழந்தை கோபாலைப் பார்த்துக்கொள்ளும் பணிப்பெண் கங்குவும் (கங்கு தாசி குலத்தைச் சேர்ந்தவள்), தினகர் வீட்டில் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்திருக்கிறார்கள். அப்போது தினகருக்கு இளம் வயது; தந்திரிக்கும் சம வயதுதான். சீதம்மாவிற்கு தினகர் மேல் மிகுந்த அன்பு. தன் ஐந்து வயதில், கங்கையில் மூழ்கி இறந்து போன தன் அம்மாவை சீதம்மாவின் உருவில் காண்கிறான் தினகர்.

தந்திரியின் மகன் கோபாலும் இப்போது லாயர்;உள்ளூர் முனிசிபாலிட்டியின் பிரெஸிடெண்டாக இருக்கிறான். அவனுக்கு அரசியலில் மேலே செல்ல விருப்பம். கங்குவிற்கும் திருமணமாகிவிட்டது; கணவன் சந்திரப்பா. இப்போது கங்குவிற்கும் ஒரு பையன்; பெயர் பிரசாத்.  இளைஞனான பிரசாத் நல்ல பாடகன், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவன். கங்கு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இப்போது ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாள். தினகரின் மனைவியின் பெயர் ரஞ்சனா. தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்வதால், தினகருக்கும் வெவ்வேறு ஊர்களில் (டில்லியில், லக்னோவில், அலகாபாத்தில், லண்டனில்…என்று) பல பெண் தோழிகள் உண்டு (சுதர்ஷனி, ப்ரீதி, மமதா). சென்னை அருகே ஆசிரமம் நடத்தும், சாமியாரிணி மகாமாதா, தினருக்கு முன்பொரு காலத்தில் ரயிலில் அறிமுகமானவர்.

ரயிலில் தினகரை முதன்முதலாகச் சந்திக்கும் சாஸ்திரி, அவனுக்கு தன் முதல் மனைவி சரோஜாவின் சாயல் இருப்பதைக் கண்டுஅதிர்கிறார்; தினகரின் கழுத்திலும், ஸ்ரீசக்ரம் பதித்த சரோஜாவின் தாயத்தைப் பார்க்கிறார். பிரசாத்தின் உண்மையான அப்பா யாரென்றும் நாவலின் இறுதியில் தெரியவருகிறது.

வெங்கி

“பிறப்பு” (குறுநாவல்) – யு.ஆர். அனந்தமூர்த்தி (1994)

கன்னட மூலம்: “Bhava”

ஆங்கில மொழிபெயர்ப்பு: Judith Kroll

தமிழில்: நஞ்சுண்டன்

காலச்சுவடு பதிப்பகம்

முந்தைய கட்டுரைநீதியின் காதல்
அடுத்த கட்டுரைஇரு முகில்களின் கதை, கடிதம்