தொழிற்சங்கம், ஒரு கடிதம்

உலகத்தொழிலாளர்களே!

அன்பின் ஜெ

ஒருவனுக்கு நிறைவான சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததற்கு காரணம் அவனது திறமையின்மையே என்று நம்பியிருந்த எனக்கு உங்களது உலகத்தொழிலாளர்களே கட்டுரை கம்யூனிசத்தின் தேவையும் இன்றைய சவால்களையும் தெளிவுபடுத்தியது.

தங்களது சமீபித்திய காணொளியில் கம்யூனிசம் மற்றும் தொழிலாளர் உரிமை பற்றி பேசியிருந்திர்கள். அதில் உலகின் மாபெரும் கார்பொரேட் நிறுவனங்களுக்கு எதிராக தொழிலாளர் சார்பில் பேச ஒரு அமைப்பு உலகளவில் தேவை என்பதை சொல்லியிருந்திர்கள். ஜெர்மனியில் பணியாற்றுபவன் என்ற முறையில் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பொதுவாக ஐரோப்பாவில் ஒர்க் கவுன்சில் மற்றும் தொழிலார் அமைப்பு பலம் பொருந்தியதாகவே உள்ளது. ஒர்க் கவுன்சில் என்பது ஒரு நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களால் நடத்தப்படுவது, தொழிலாளர் அமைப்பு ஒரு நாடு தழுவிய கட்சி சாராத அமைப்பு. இது மட்டுமல்லாமல் தொழிலாளர் சட்டங்களும் வலுவாக உள்ளது, கவனிக்கவேண்டிய விஷயங்கள்

  1. அமெரிக்காவில் ஒரு ஈமெயில் அனுப்பி வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லுவது போல் இங்கு வேலையை விட்டு நிறுத்த முடியாது. முதலில் ஆள் குறைப்பு பற்றி ஒர்க் கவுன்சிலிடம் பேசி அதற்கான தேவைகள், பாதிக்கப்படும் தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான வேலை இழப்பீட்டு தொகை தெளிவு படுத்த வேண்டும். ஒர்க் கவுன்சில் இதற்கு ஒப்பு கொண்ட பின்னரே இது பற்றி தொழிலார்களிடம் பேச முடியும்.
  2. ஒர்க் கவுன்சில் கண்முடித்தனமாக ஆள் குறைப்பையோ, ஒருவரை வேலையை விட்டு நிறுத்துவதையோ எதிர்ப்பது கிடையாது. அவர்கள் நோக்கமெல்லாம் தொழிலாளி கண்ணியமாக நடத்த படுகிறாரா?, சட்ட விதிகள் பின்பற்ற படுகிறதா?, உரிய இழப்பீடு வழங்க படுகிறதா என்பதுதான்.
  3. திறமையை வளர்த்து கொள்ளாதவர்கள், வேகமான ப்ராஜெக்ட் செயல்படுத்துவதற்கு தடையாக இருப்பவர்கள், அணியில் சேர்ந்து வேலை செய்யாமல் வெறும் தொல்லை கொடுப்பவர்கள் ஆகியோரை உயர் தொழிநுட்ப கம்பெனிகள் வெளியேற்ற பார்க்கும். இதிலும் இந்த கடைசி வகை ஆட்களை பாரபட்சம் பார்க்காமல் வெளியேற்றுகிறார்கள்.
  4. கம்பெனிகள் முடித்தவரை தொழிலாளியிடம் பேசி இழப்பீட்டு தொகையை அதிகப்படுத்தி ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள்.
  5. தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு காப்பீடு உள்ளது, அது மூன்றில் இரண்டு பங்கு ஊதியத்தை ஒரு வருடத்திற்கு வழங்கும்.
  6. இங்கு தொழிலாளி என்று சொல்வது வருடத்திற்கு 150000 யூரோவுக்கு கீழ் சம்பாதிப்பவர்கள்.
  7. அரசாங்கம் நிர்ணயித்து உள்ள குறைந்த பட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 12 யூரோ
  8. என்ன நடந்தாலும் தொழிலாளியை  வேலையை விட்டு அனுப்ப மாட்டேன் என்று அடம்பிடித்த நல்ல (!) கம்பெனிகள், நிறைய திறமையற்றவர்கள் அதிகமானதால் அழியும் நிலையில் உள்ளன. அதனால், இந்த நவீன பொருளியலில் வேலை இழப்பு என்பது ஏற்றுக்கொள்ள படவேண்டியது, இல்லையென்றால் அதிக திறனற்றவர்களை உருவாக்கிவிடுவோம்.
  9. இது சம்பந்தமான செய்தி சுட்டியை இணைத்துள்ளேன் (மொபைல் போனில் லிங்க் நேரடியாக திறக்கும்).
  10. இதில் முக்கியமான விஷயம், ஐரோப்பா ஒர்க் கவுன்சில்கள் நாடு கடந்து இனைய போகிறது, முதல் கட்டமாக சுவிஸ் மற்றும் பிரிட்டன் தொழிலாளர் அமைப்புகளுடன். நீங்கள் கூறியது போல், இது ஒரு உலக அமைப்பாக மாறும் என்று நம்புவோம்.

உங்கள் படைப்புகளுக்கு என்றும் நன்றியுடன்

வடிவேல்
முனிச், ஜெர்மனி

https://www.bloomberg.com/news/articles/2023-04-06/google-and-amazon-struggle-to-lay-off-workers-in-europe

முந்தைய கட்டுரைமதுத்துளிகளின் கனவு- கடிதம்
அடுத்த கட்டுரைகல்வி, விடுதலை- ஒரு பாதை