பாகதர்ப்பணம் – ஒரு வாசிப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

வழக்கம் போலவே வெண்முரசு மீள் வாசிப்பில் இருக்கிறேன். வரிசைக்கிரமமாக  நூல் நிரைகளை வாசிப்பதும், ஏதோ ஒரு சொல்லை தொடர்ந்து சென்று வாசிப்பதும் உண்டு. ஆனால் எல்லா நாட்களுமே வெண்முரசால் அருளப்பட்டவைகள்தான். வெறும் வாசிப்பு என்னும் சொல்லில் மட்டும் வெண்முரசுக்கும் எனக்குமான நெருக்கத்தை வரையறுத்துவிட முடியாது

அன்று வாசித்த அத்தியாயம் அன்றைய நாளை வடிவமைத்து விடும். எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொருமுறையும் புத்தம் புதிதாக என்முன்னே விரியும் வெண்முரசின் கதை என்பதுதான் புதிர்.  50 first dates என்னும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகிக்கு அன்றாடம் நடந்தவைகள் மறந்து ஒவ்வொரு நாளையும் புதிதாக துவக்குவாள். அதுபோல ஒவ்வொரு மீள் வாசிப்பும் விதம் விதமான உணர்வெழுச்சிகளுடன் புத்தம் புதிதாக அமைந்துவிடும்,

சென்ற வாரம் பன்னிரு படைக்களத்தில் பீமனும் மாயையும் சூளுரைக்கும் அத்தியாயம் வாசித்துவிட்டு புதிதாக அதை வாசிப்பதுபோல  உணர்வெழுச்சியில் கதறி அழுது கொண்டிருந்தேன்.வெண்முரசில் பீம பாகம் குறித்து சொல்லும் ஒரு அத்தியாயத்தில்  ’ஒவ்வொரு நாளும் தெய்வமெழும் அடுமனைத்தொழில்’ என்று சொல்லபட்டிருக்கும், அப்படி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தெய்வமெழும்  வாசிப்பு எனக்கு.

மாணவர்களுக்கு எப்படியும் வெண்முரசின் சில துளிகளையாவது கொண்டு சேர்க்க எப்போதும் பிரியப்படுவேன் சமயம் கிடைக்கையில் எதனோடாவது வெண்முரசை இணைத்து சொல்லுவேன். வெண்முரசில் சொல்லப்படாதவைகள் இல்லை என்பதால் எப்படியும் வாரமொரு முறையாவது அதன் ஏதோ ஒரு பகுதியைப்பற்றி வகுப்பில் பேசிவிடுவேன்.

தாவரவியல் பாடங்களில்  பல்துறைகளின் பங்களிப்பும் இருக்கும். ஒரு பாடம்  ஆயுர்வேத, சித்த, யுனானி போன்ற மூலிகைத்தாவரங்களை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைக ளை பற்றியது. அந்த பாடத்தை பல வருடங்களாக கற்றுக் கொடுக்கிறேன்.  எனக்கு பிடித்தமான பாடங்களில் அதுவுமொன்று.

ஆயுர்வேத பாடத்தில் தினசரி அனுசரிக்க வேண்டியவைகளை  குறித்த தினச்சரியம், பருவகால வாழ்வு முறைகளுக்கான பரிந்துரைகளை சொல்லும்  ருதுச்சரியம் ஆகியவற்றை குறித்து விரிவாக சொல்லப்பட்டிருக்கும், அவற்றை சொல்லுகையில், நீர்க்கோலத்தின் அன்னநிறைவு பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் நளபாகம் குறித்த விவரணைகள், நளரசனா, நளபதார்த்தமாலிகா போன்ற நூல்கள், உணவு சமைக்கையில் கடைக்கொள்ளப்படும் முதன்மை ,இரண்டாம் நெறிகள்,

//நளபாகம் என்பதே குறைவாக சமைப்பதன் நுட்பம்தான். அச்சமையலை பல மடங்காக்கலாம். ஆயினும் அது குறைவான அளவுகளால் கற்பனை செய்யப்பட்டதே//ஆகியவற்றில் நுழைந்து ஆயுர்வேதம் சொல்லும் பத்தியம், அபத்தியம் என நீண்டு நேரம் போனதும் அந்த வகுப்பு முடிந்த மணி அடித்ததும் தெரியாமல் வகுப்பிலிருந்த நாட்களும் உண்டு.

நீர்க்கோலத்தின் அன்னநிறைவு பகுதி வாசிப்பு அளிக்கும் நிறைவு தனிப்பட்டதுட, அதை வாசிப்பென்றே கூட என்னால் எண்ன முடியாது, கருணையும் கனிவுமான உணர்வுக்கலவையுடனே அதை அணுகமுடிந்திருக்கிறது.

இந்தியப் பயணத்தில் கடும்பசியுடன் இருந்த உங்களுக்கு குருத்வாராவில் உணவளிக்கப்பட்டது அப்போது நினைவுக்கு வரும். சரண் சென்ற வாரம் அவன் பல்கலை கழகத்திற்கருகிலிருந்த குருத்வாராவுக்கு நண்பர்களுடன் சென்றிருந்த போது அவர்களனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து சென்ற பின்னர் அவன்  உண்ட முதல் முழு நிறைவான உணவு அது என்றும் அப்படி அள்ளி அள்ளி அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கையில் தொடந்து சாப்பிட குற்ற உணர்வு வந்துவிடும் போலிருந்தது ’எப்படிம்மா இப்படி கொடுக்கறாங்க? என்றான்.

அப்போதும் நான் வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும்//ஆற்றலாகும் உணவு நிறைவடைகிறது. அறிவென்றாகும் உணவு மேன்மையடைகிறது. கருணையென்றாகும் உணவே முழுமைகொள்கிறது// என்பதையே உதாரணம் காட்டினேன்.அவர்கள் அளிப்பதில் நிறைவு கொள்பவர்கள்

அந்த அத்தியாயத்தில் மரத்தாலத்தில் குரங்குகளுக்கு உணவை கலந்து எடுத்துச்செலும் பீமனின் விழிகளை பூரணர் சந்திக்கும் கணத்தில் ஒவ்வொரு முறையும் எனக்கு உடல் மெய்ப்புக்கொண்டு கண்கள் நனையும். அன்னநிறைவில் துவங்கி, புஷ்கரனின் மணவுறவை கொண்டாடும் உண்டாட்டும் அதில் அன்னத்தை உதைத்த சீர்ஷரின் தலையை நளன் சீவியெறிவது வரையும் தொடர்ந்து வாசிக்காமல் நூலை கீழே ஒருமுறை கூட வைத்ததில்லை.

வெண்முரசு உண்டாட்டுகளில் பலவகையான உணவுகளின் செய்முறைகளும், உண்ணுகையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒடுக்கு நெறிகள், செலுத்து நெறிகளும் உள்ளன. அவற்றை குறித்து கல்லூரியில் தமிழ்த்துறை ஏற்பாடு செய்து நடத்திய சர்வதேச கருத்தரங்கில் உங்கள் அனுமதியுடன் ’அன்னம் பிரம்மம்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றியிருக்கிறேன்.

பன்னிரு படைக்களத்தில் ஒரு உண்டாட்டில் அனல்தொடா உணவுகள், உயிர்கொல்லப்படா உணவுகள், பாலை நில அரசர்களுக்கு , குளிர்நிலத்து அரசர்களுக்கு, கோதுமை உணவு,மீன் உணவு, அரிசி உணவு, எரியெழும் தென்னகத்து உணவு,பீதர் யவன நாட்டு உணவுகள் என தனித்தனியே பல வகை பந்திகள் விவரிக்கப்பட்டிருக்கும்.

வெண்முரசில் நளபாகம் குறித்தவை மிக அதிகம் இல்லை. வியாசமாகாபாரத்தை  தன் ஆய்வின் பொருட்டு வாசிக்கும் சம்ஸ்கிருத ஆய்வில் ஈடுபட்டிருக்கும் எனக்கு வேண்டிய ஒருபெண் அதிலும் நள பாகம் விரிவாக சொல்லப்படவில்லை என்றாள். எனக்கு நளபாகம் குறித்த விரிவாக வாசிக்க விருப்பம் இருந்தது .

டாக்டர் எல்.மகாதேவனின் உணவே மருந்து நூல் குறித்து மருத்துவர் சுனில் தனது மரணமின்மை என்னும் மானுடக்கனவு நூலில் எழுதியிருப்பார்.  இந்திய சமையல் மற்றும் ஆயுர்வேதம் தொடர்பான ஒரு நூல் குறித்து சந்தேகம் கேட்க சுனிலின் தொடர்பு எண்ணை கேட்க என்னை அணுகிய ஒரு பெண் மூலமாக ’’பாக தர்ப்பணம்-  நளா’’ என்னும்  நளன் எழுதிய ஒரு நூல் குறித்து அறிந்தேன், உடனே அதன் ஆங்கிலப்பதிப்பை  வாங்கினேன்.

இந்திய சமையலை குறித்த விரிவான பண்டைய நூல்கள் பல உள்ளன. ரகுநாத பண்டிதரின் போஜனகுதூகலம்,ஷேமசர்மரின் ஷேமகுதூகலம், பாக சந்திரிகை மற்றும் சிவத்துவ ரத்னாகாரம் ஆகியவை அவற்றில் முக்கியமானவைகள்.  நள மகாராஜனின் இந்த பாகதர்பணமும் பண்டைய இந்திய சமையலை ஆயுர்வேதத்துடன் இணைத்து  மிக சுவாரஸ்யமாக விரிவாக சொல்கிறது,

பாக தர்ப்பணம்  ’’சமையல்கலையின் கண்ணாடி’’ என்று பொருள் படும் இந்நூல், 11 ப்ரஹரணங்களாக பிரிக்கபட்ட அத்தியாயங்களில் பலவகையான உணவு வகைகள், அதை உருவாக்க தேவையானவைகள், அவற்றை எப்படி உணவுக்கேற்ப தயாரிப்பது, அரைப்பது அவற்றினால் விளையவிருக்கும்  உடல்நலன்கள் என் மிக விரிவாக சொல்கிறது.

சாஸ்திரம், சம்ஸ்காரம், வர்க்கம், சரகம் என ஒவ்வொரு தலைப்பாக பிரித்து விஷயங்கள் அலசி ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. எந்த காலத்தில் மூல நூல் எழுதப்பட்டது என்று அறிந்து கொள்ள முடியவில்லை எனினும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தாவரங்களை கொண்டு இந்நூலின் காலத்தை சிலர் 13ம் நூற்றாண்டு என கணிக்கிறார்கள். பாக தர்ப்பணத்தில் எங்குமே மிளகாய்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் அவை அறிமுகமான 16-17ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்நூல் உருவாகி இருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் உள்ள உபசம்ஹாரத்தில் தானே அவற்றை எழுதியதாகக் நளன் குறிப்பிட்டிருக்கிறார்.

சமஸ்கிருத மூல நூலான இது இந்தியிலும் ஆங்கிலத்திலும்  மொழிபெயர்க்கப்பட்டு வரணாசியில் வெளியானது. முழு நூலும் பாகுகனான நளனும் ருதுபர்ணனும் உரையாடுவதாக அமைந்திருக்கிறது.

முதல் அத்தியாயமான கிரந்தோபகர்மம் ஒரு நல்ல அடுமனையாளர் மற்றும் பரிவேஷகனின் இயல்புகளை விவரிக்கிறது, 16 வகையான அசைவ சைவ உணவுகளை மிக விரிவாக விளக்கும் இந்த பகுதியில் வேகவைக்கப்பட்ட அரிசி சோறு, தோல் நீக்கப்பட்ட சமைக்கப்பட்ட பருப்பு வகைகள்,நெய், தொடு கறிகள், இறைச்சி, காய்கறிகள், மென்று தின்னப்படும் இலைகள் போன்ற    உணவுப் பொருட்கள், பல வகை பானங்கள், கிச்சடி வகைகள், பாயசங்கள், உடலுக்கு ஊட்டம் கொடுக்கும் உணவு (ரசாயனா) வகைகள், நக்கி உண்ணும் லேகிய வகைகள், நீர்ம உணவுகள்,பால் மற்றும் மோர் உணவுகள் மற்றும் தயிர் சாதம் நெய் சாதம் ஆகியவற்றின் தயாரிப்புக்களை விளக்குகிறது. இதே பகுதி அன்னம் எனப்படும் வேகவைக்கப்பட்ட அரிசிச் சோற்றின் 63 வகையான  சுவைகளையும்  8 அன்னக் குற்றங்களையும் விவரிக்கிறது.

அன்னக்குற்றங்களில் அந்த பருவத்திற்கேற்றதல்லாத, இயல்பு மாறி கெட்டுவிடும்  அஸ்திரன்னம், அதிகமாக வேகவைக்கப்பட்ட பசைத்தன்மை அதிகமான பைச்சில்லியன்னம்,  மிக குறைவான அளவில் அரிசி  எடுத்து வேகவைக்கப்படும் க்வாதிதன்னம், மிக காய்ந்துபோன சுஸ்கன்னம், கருகிப்போன தக்தன்னம், ஒத்த அளவுகளில் இல்லாத அரிசியில் சமைக்கப்பட்ட  விருப்பன்னம், பருவம் தவறிய அரிசியில்  சமைக்கப்பட்ட அல்லது கெட்டுப்போன அனர்துஜன்னம் தவறான பருவத்தில் விளைந்த நெல்லில் இருந்து உண்டாக்கப்பட்ட  நர்துஜன்னம் ஆகியவை சொல்லப்பட்டிருக்கின்றன.

மேலும் அரிசியை எப்படி சமைப்பதென்னும் வழிமுறைகளும் உள்ளன நன்கு உலர்ந்த பழைய அரிசியை கொதி நீரில் கழுவி. ஒரு பங்கு அரிசிக்கு மூன்று பங்கு நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை அடுப்பில் ஏற்றி லேசாக நீர் சூடானதும் கழுவிய அரிசியை அதில்கொட்டி, நன்கு அரிசி நீரில் கொதிக்கையில் கரண்டியால் திரும்ப திரும்ப கலக்கிக்கொண்டே மோர், பால் அல்லது நீரை தேவையான அளவு கொஞ்சமாக சேர்க்க வேண்டும்.பின்னர் அரிசி மென்மையாக வேகும் வரை சமைக்கப்பட்டால் அந்த சோறு நீளாயுளுக்கான உணவாகும் என்கிறது இந்த பகுதி

இதே பகுதியில் நமது பிரியாணி என்கிற  இறைச்சி கலந்த உணவை தயாரிப்பது சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றிற்கு மூன்று பங்கு நீர் சேர்த்த அரிசி வேக துவங்குகையில் அரிசி அளவுக்கே நறுக்கபட்ட, முன்பே வேகவைத்த அல்லது வேகவைக்கப்படாத இறைச்சியை நெய், கல்உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நீர் வற்றும் வரை வேக வைத்து  தயாரிக்கப்படும் அந்த ஊனுணவில் தாழை மலர். பற்பாடகம், புத்துருக்கு நெய் மற்றும் தேங்காய்ப்பால்  சிறு பச்சைக்கற்பூரம் ஆகியவைகளும் சேர்க்கப்படுகையில் மேலும் அதன் சுவை கூடுகின்றது என்னும் குறிப்பும் இருக்கிறது,  மேலே ஒரு தட்டு வைத்து மூடி சிறிது நேரம் சூடாக்கப்பட்ட அந்த  அன்னத்தை சூடாக இருக்கும் போதே பரிமாற வேண்டும் என்று விரிவான ஏறக்குறைய நாம் இப்போது தம் பிரியாணி செய்யும் முறையைபோலவே செய்முறை விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாம்ஸோதனா என்னும் அசைவ பிரியாணி சுவையானது, பாலுணர்வை தூண்டுவது, முழுமையான உணவு மற்றும் எளிதில் ஜீரணமாகும் என்னும் குறிப்பும் உள்ளது. இதே அசைவ உணவு பகுதியில் சிட்டுக்குருவி பிரியாணி பச்சைப்பயிறு அரிசி இறைச்சி பிரியாணி மற்றும் கோழி பிரியாணி செய்யும் முறைகள் உள்ளன.’

இந்த பகுதியிலேயே சரியாக தயாரிக்கப்படாத,  தவறான இடுபொருட்களை சேர்த்து சமைக்கப்பட்ட உணவுகள் எவ்வாறு நஞ்சாக மாறும் என்னும் விளக்கங்களும் உள்ளது. உதாரணமாக தனித்து மருந்தாக செயல்படும் நல்லெண்ணெய் மற்றும் கற்பூரம் இவை இரண்டும் கலந்தால் அந்த உணவு நஞ்சாகும், சரியாக அமைக்கப்படாத அமுதும் நஞ்சாகும், முறையாக தயாரித்தால் நஞ்சும் அமுதாகும் என்னும் குறிப்பும் உள்ளது. ஊட்டி குரு நித்யா ஆசிரமத்தில் ஒரு காவிய முகாமில் திரு நாஞ்சில் நாடன் மண்டோதரி சீதையை ’நஞ்சென்னும் அமுது அவளால் இலங்கை பஞ்சு எரி உற்றதென அழியும்’ என்பதாய் ஒரு கம்பராமாயணப்பாடலை விளக்கியது நினைவுக்கு  வந்தது.

தோல் நீக்கிய பயிறு வகை உணவுகளை சமைப்பது குறித்தும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. பச்சை பயறு, கொள்ளு, கருப்பு உளுந்து மற்றும் கொண்டை கடலை ஆகியவற்றை சல்லடைகளில் சலித்து கல் குப்பைகளை நீக்கி உபயோகிக்கவேண்டும் என்னும் குறிப்புடன் இந்த பகுதி துவங்குகிறது ஒரு பங்கு பச்சை பயறுடன் சமஅளவு நீர் சேர்த்து வேகவைத்து உப்பிட்டு மஞ்சள்,  கற்பூரம், பெருங்காயம் சேர்த்து கடைந்து  தயாரிக்கப்படும் பருப்புக்குழம்பு பசி உணர்வை தூண்டி பித்த தோஷத்தை சமன் செய்யும் எனச்சொல்லப்பட்டிருக்கிறது.

அதுபோலவே  திரிகடுகங்களான கடுக்காய், தான்றிக்காய் நெல்லிக்காய் ஆகியவற்றையும் மேலும் சில மூலிகைகளையும் பொடித்துப்போட்டு தயாரிக்கப்படும் பலவிதமன மோர் வகைகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.

வெண்ணெய் தயாரிப்பை சொல்லும் பகுதி அரைப்பங்காக சுண்டக்காய்ச்சிய பாலை தயிராக்கி அதை கடைந்து எடுக்கப்படும் வெண்ணெயை பத்து முறை நீரில் கழுவி நுண்துளைகள் கொண்ட துணியால் வடிகட்டி மீண்டும் கழுவி நறுமண மலர்களிடப்பட்ட நீர் கொண்ட பாத்திரத்தில் சேர்த்து வைத்து பயன்படுத்தினால் அது உடல் பொலிவை அதிகரித்து, ஆற்றலை அளித்து, பாலுணர்வை தூண்டி ஐம்புலன்களில் ஆற்றலையும் மேம்படுத்தும் என்கிறது

நெய் தயாரிப்பை சொல்லும் பகுதி வெண்ணிற வெண்ணெய் மஞ்சளாகும் வரை நீரில் கழுவி மிதமான தீயில் நுரை அடங்கும் வரை காய்ச்சி வடிகட்டி மீண்டும் செந்நிறமாகும்  வரை உருக்கி  சிறிது கோதுமை மாவும் நறுமண மலர்களும் மோரில் நனைத்த வெற்றிலை, கற்பூரம் ஆகியவற்றையும் சேர்த்து  சேமித்து வைக்கலாம் என்கிறது.

மேலும் வாழைக்காய், தட்டைப்பயிறு, சேனைக்கிழங்கு,முள்ளங்கி, பலா, கொண்டை கலை, கொண்டை கடலை செடியின் இலை போன்ற பல்வேறு தாவர உணவுகளும் அவற்றின் தயாரிப்பு முறை, அவ்வுணவுகளின் உடல்நலப் பயன்கள் ஆகியவற்றையும் பாகற்காய் மூக்கிரட்டை, பலாசம், முருங்கை, ஆடாதொடை ஆகிய பல தாவரங்களின் உணவு பயன்பாடுகளையும் இந்த முதல் பகுதி விரிவாக எடுத்துரைக்கிறது.

இரண்டாவது பகுதி ரிது தர்ம நிரூபணம் ஒவ்வொரு பருவத்திற்குமான முழு உணவுகளை  சொல்கிறது ஒவ்வொரு பருவத்திலும் ஒருநாளின் காலை மாலை இருவேளைகளிலும் மாறும் பருவநிலைக்கேற்ற உணவுகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.இது அப்படியே ஆயுர்வேதம் சொல்லும் ருதுச்சர்யங்கள்தான்.இதில் ஆச்சர்யப்படத்தக்க விதமாக பருவங்களுகேற்ற ஆசைவ உணவுகள் மிக குறிப்பாக சொல்லப்பட்டிருக்கையில் சைவ உணவுகள் அத்தனை குறிப்பாக இல்லாமல் பொதுவாகவே விவரிக்கப்பட்டிருக்கின்றன.

மூன்றாவது பகுதி விபின்ன பாக்‌ஷய பதார்த்தானம் நிர்மான ப்ரகார நிருபணம். இது தேங்காய், கோதுமை, பால் நறுமண மலர்களின் உணவுப் பயன்பாட்டையும் மென்று தின்னக் கூடிய உணவுகளையும் விளக்குகிறது

நான்காவதான பாயஸ ப்ரகார நிரூபணம் பால் பாயஸம், பூண்டு பாயஸம்,கோதுமை பாயஸ தயரிப்புகளை விளக்குகிறது

ஐந்தாவது பகுதி பானக பேத நிரூபணம் பலவிதமான நீர்மை உணவுகளை விவரிக்கிறது மா ,எலுமிச்சை, தடச்சி, புளி, நாவல், வாழை போன்ற கனிகளிலிருந்தும், அரளி புன்னை மற்றும் மகிழ மலர்களிலிருந்து பானகங்கள் தயாரிப்பதையும் இந்த பகுதி விவரிக்கிறது

ஆறாவது பகுதி விவித அன்ன யுச பாக ப்ரஹரனம். அரிசியைக்கொண்டு செய்யப்படும் பல வித கிச்சடி வகைகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் தயிர்கிச்சடி, எலுமிச்சை கிச்சடி போன்ற வகைகளும் இருக்கின்றன

ஏழாவதில் க்ரிதஅன்ன  பாக ப்ரஹரனம்  என்பது நெய் சோறு வகைகளை விவரிக்கிறது அந்த செய்முறைகள் நாம் இப்போது உண்டாக்கும் நெய்ச்சோற்றின் முறைகளை அப்படியே ஒத்திருக்கிறது

எட்டாவதான லேகிய ப்ரஹரனம் சாஸ் போன்ற தயாரிப்புக்களுக்கானது, மாம்பழம் போன்ற சதை கனிகளிலிருந்து சர்க்கரை சேர்த்து காய்ச்சி பிழிந்து செய்யப்படும் இனிப்புக்கூழ்ம வகைகளின் செய்முறையை சொல்லும் பகுதி இது,

ஒன்பதாவது பாகம் மிக சுவாரஸ்யமானது  சைத்ய ஜல நிர்மாண ப்ரஹரனம் என்னும் இப்பகுதி குடிநீரை குளிர்விக்கும் பலவேறு முறைகளை விவரிக்கிறது நீர் நிரம்பிய பாத்திரத்தை வெட்டவெளியில் காற்றில் திறந்து வைப்பது, மணலில் வடிகட்டுவது, பலவித நறுமண மலர்களை கலப்பது, குளிர்ச்சி உண்டாக்கும் மூலிகைகளை கலந்து குளிர்விப்பது, தேற்றாங்கொட்டையை சேர்ப்பது என மிக எளிய, நாம் அனைவரும் கோடைக்காலங்களில் எளிதாக பின்பற்ற முடிந்த செய்முறைகள் இருக்கின்றன.

பத்தாவது பகுதி முழுக்க பால் பொருட்கள் தயாரிப்பதை பற்றியது இதில் எருமைப்பாலை எப்படி காய்ச்சி எடுப்பது என்னும் பலவித வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன,

இறுதிப்பகுதியும் 11 ம் பாகமான தஹி பேத ப்ரஹரனம் தயிர் உருவாக்கும் வகையை சொல்கிறது பேதம் என்று வகைகளை குறிக்கும் சொல் தலைப்பில் இருப்பினும் இதில்  பாலிலிருந்து தயிர் உறைய செய்வதற்கு ஒரே ஒரு வழிமுறையே சொல்லப்பட்டிருக்கிறது. கோவையின் ஒரு பிரபல தொடர் உணவக அடுமனையாளர் உறை ஊற்றப்படும் பாலில் கொஞ்சமாக அரிசிக்கஞ்சியை கலப்பதை  சொல்லித்தந்தார்

இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பலவித உணவுகள் இந்தியக்கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்த, நாம் இப்போதும் தயாரித்து உண்ணும் பலவகை உணவுகளின் செய்முறைகள் கொண்டிருக்கிறது.

உணவை தயாரிப்பது, உண்பது என்னும் அடைப்படையில் ஐந்து வகைகளாக பிரித்து நறுக்கி மென்று உண்ணப்படுபவை, நறுக்காமல் அப்படியே மென்று உண்ணப்படுபவை, உறிஞ்சி உண்ணப்படுபவை, நக்கியுண்ணப்படுபவை மற்றும் அருந்தப்படுபவை என பிரிக்கப்படுகிறது

சைவ வகைகளில் கிழங்குகள், இலைகள், தண்டுகள், மலர்கள்,  கனிகள் என பலவகை தயாரிப்புக்களை விவரிக்கும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊமத்தை இலை தயாரிப்புக்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. ஊமத்தையை நாம் ஒருபோதும் இப்பொது உணவில் சேர்ப்பதே இல்லை.அப்படியே அசைவத்திலும் பலவிதமான விலங்குகளின் இறைச்சி, பறவை இறைச்சி, மீன் உணவுகள் என விரிவான விளக்கங்கள் கொண்டிருக்கும் நூல் இது. இந்த பிரதேசத்தின் பிரதான உணவு அரிசிச்சோறு என்று  இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெண்முரசில்   வஹ்னர் கூற்றாக ‘’இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்’’ என்று சொல்லப்பட்டிருக்கும். பாரம்பரிய மருத்துவ முறைகளும் அந்தந்த பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு அந்த நிலத்தில், அந்த காற்றில், அந்த நீரில் விளையும் தாவரங்களில் இருந்து உருவாகும் உணவே உகந்தது என்கின்றன. பாக தர்ப்பணம் அவ்வகையில் நம்மைச்சுற்றியுள்ள நாம் ஏற்கனவே உணவாக புழக்கத்தில் இருக்கும் பலவற்றின் புதிய உபயோகங்களையும், நாம் அறிந்திருக்காத பல தாவர உணவுகளையும் கற்றுத்தருகிறது.

அமேஸானில் இதன் ஆங்கில மொழியாக்க அச்சுப்பிரதிகள் கிடைக்கின்றன. இலவச  பிடிஎப் வடிவம் ஆங்கிலத்தில் இல்லை இந்தியில் மட்டுமே இருக்கிறது.

முதலாவிண்ணின் பலி நிகழ்வுக்கு பின்னரான உண்டாட்டில் ஏழு வகை கலவைச்சோறுகளும், கைம்பெண்களுக்கான நோன்புணவு, ஊனுணவு, காய் உணவு என தனித்தனியே சமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நீத்தோர் கடன்களை செய்கையிலான உண்டாட்டுகளுக்கென தனி நெறிகளும் சொல்லப்பட்டிருக்கும். அந்த பகுதியில் கைம்பெண்களும் துயருற்றவர்களும், நூல் மறந்து அந்தணர்களும் பலியிட வந்த பிறருமாக உணவை அனைத்து துயர்களையும் மறந்து மகிழ்ந்து  உண்டு கொண்டிருப்பார்கள்.

அன்று திருதராஷ்டிரர் கடும் பசியில் உணவுண்பார்.அந்தப்பகுதியில் “வைஸ்வாநரன்! இப்புவியை ஆளும் மெய்யான தெய்வம்! இங்கு அறம், நெறி, அளி, அறிவு அனைத்தையும் ஆள்பவன்”

“அன்னத்திற்கு மேல் அனைத்தும் சூட்டப்படுகின்றன. காலத்தின் போக்கில் அன்னத்திலிருந்து அனைத்தும் உதிர்ந்துவிடுகின்றன. அன்னம் அன்னத்தை மட்டுமே அறியும்” என்று சொல்லப்பட்டிருக்கும்.

இந்நூல் சமையல்கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும்,  விதம் விதமான உணவுகளை ருசிக்க விருப்பம் கொண்டவர்களுக்கும், வீட்டில் என்ன சமைப்பது என்பதே பெரும் கேள்வியாக தினம் எதிர்கொள்ளும் பெண்களுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும்.பண்டைய இந்தியாவின் ருசியை  அறிந்து கொள்ள நல்ல வழியை இந்நூல் காட்டுகிறது. (சமஸ்கிருத சொற்களின் ஆங்கில உச்சரிப்புக்கள் என்னால் பிழையாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் சாத்தியங்களும் இக்கட்டுரையில் இருக்கலாம் மன்னிக்கவும்)

’’அன்னம் பிரம்மம், அன்னத்திலிருந்தே அனைத்தறங்களும் ’’

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைExploring The Human Condition in the Darkest
அடுத்த கட்டுரைஅதிகார அமைப்பா? -கடிதமும் விளக்கமும்