சவார்க்கர், கடிதம்- கடலூர் சீனு

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?

இனிய ஜெயம்

சவார்க்கர் குறித்த உங்கள் கட்டுரை கண்டேன். பொதுவாக கம்யூனிசமோ இந்துத்துவமோ அதன் ‘அறிவுத் தரப்பு’ க்கு இந்த கட்டுரை மீது,  சில அடிப்படை விஷயங்கள் தவிர பெரிய மாற்றுக்கருத்து ஏதும் இருக்காது. காரணம் நீங்கள் பேசிய விஷயம் குறித்து அந்தந்த இசங்களின் அறிவுத் தரப்பு முன்பே விவாதித்திருக்கும். அந்த விமர்சனங்களை முன்வைத்த ஆளுமைகளில் பலர் அந்தந்த இசங்களால் கல்தா கொடுக்க பட்டு பத்வா அளிக்கப் பட்டு காணாமல் போய் இருப்பார்கள். இருக்கும் சிலர் எல்லாம் அப்டித்தானே வேற என்ன நடக்கும் என்று அமைதி அடைந்திருப்பார்கள். அவர்கள் குரலுக்கான தேவை இருக்கும், ஆனால் அவர்கள் குரல் எழாத அந்த இடைவெளியை இன்று அந்தந்த இசங்களின் அறிவிலித் தரப்புகள் எடுத்துக்கொண்டு கூச்சலிட்டு வருகின்றன.

அப்படி இம்முறை எழுந்த “எப்படி பகத் சிங்கையும், சுபாஷ் சந்திர போசையும், சுவார்கரையும் ஒரே தரத்தில் வைக்கலாம்” எனும் முதல் கேள்வி கொண்டே இந்த அறிவிலித் தரப்பின் அறிவின்மையின் ஆழத்தை அறியலாம்.

கட்டுரையில் நேரடியாகவே ‘அம்மூவரின் சமூக, அரசியல் பார்வை வேறாக இருக்கலாம் ஆனால் இவர்கள் கைகொண்ட வழிமுறை ஒன்றுதான்’ என்று தெளிவாச் சொல்லப்பட்ட பிறகே இந்த கேள்வி எழுகிறது என்பதை கவனிக்கவேண்டும்.

சவார்க்கர் எழுதி அரசியல் ஒடுக்குமுறை காரணங்களுக்காக ஒவ்வொரு மறுஅச்சும் வெவ்வேறு தலைப்புகளில் வெளியான 1857 நூலின் இரண்டாம் அச்சின் முதல் பதிப்பை வெளியிட்டவர் பகத் சிங். மூன்றாம் அச்சின் முதல் பதிப்பை வெளியிட்டவர் சுபாஷ் சந்திர போஸ் என்கிறது அந்த நூலின் பதிப்பு வரலாறு.

மேலும் பகத் சிங் மற்றும் சவார்க்கர் என பரஸ்பரம் இவருவரும் ஒருவர் பற்றி மற்றவர், அவர்கள் வன்முறைப் பாதை குறித்து  எழுதிய நன்மதிப்பு வரிகள் இன்று இணையத்திலேயே வாசிக்கக் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சவார்கர் பேசிய ‘கலாச்சார அடையாளம்’ எனும் கருதுகோள் பகத் சிங்கை அழுத்தமாகவே பாதித்திருக்கிறது.

இதில் பகத் சிங் நான் ஒரு நாத்திகன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் சாவர்க்கர் அப்படி சொல்லிக்கொள்வது என்பது ஒரு நேரடியான அடிப்படைக் கோணல். அன்று அந்த சித்தாந்தம் கொண்ட சாதி, மத சீர்திருத்த, சமூக அரசியல் பார்வை,  இன்று அது அடைந்திருக்கும் அதிகாரம் எல்லாம் இந்த அடிப்படைக் கோணல் மீது எழுந்ததே.

தனது ஆன்மீக அறிதலாக அன்றி சமூக அரசியலின் ஒரு பகுதி என தன்னை வைத்து, தன்னை நாத்திகன் என அறிவித்துக்கொண்டு தேசிய மத மொழி இன்ன பிற கலாச்சார அடையாளத்தைக் காக்க ஒருவர் புறப்பட்டதில் உள்ள அடிப்படைக் கோணல் ஜனநாயக யுகத்துக்கு அளிக்கும் தீங்கையே  நாம் இன்று அரசியல் களத்தில் கண்டுகொண்டிருக்கிறோம்.

சாவர்க்கர் சுதந்திர போராட்ட தியாகியா என்பது அறிவிலிகள் தரப்பின் இரண்டாவது கேள்வி.  பகத் சிங்  இந்திய சுதந்திர போராட்ட தியாகி என்றால், சவார்க்கரும் அதேதான். பகத் சிங் எதன் பொருட்டு கைது செய்யப் பட்டாரோ, அதன் பொருட்டே ( திங்கரா அம்பு மட்டுமே எய்தவர் சவார்க்கர் என்பதே பிரிட்டிஷ் தரப்பு) சவார்க்கரும் கைது செய்யப்பட்டார்.

போதிய ஆதாரங்கள் அற்ற, ஆனால் அரசுக்கு எதிரான குற்றவாளி என்றே சாவர்க்கர் கால் நூற்றாண்டு தீவாந்திர சிறையில் கிடந்தாரே அன்றி குற்றம் செய்யாத, தவறுதலாக சிக்கிய நிரபராதி என்றல்ல. ஆதாரம் வைத்து கொண்டு குற்றம் செய்யும் அளவு எங்கேனும் ஏதேனும் அறிவிலிகள் இருக்கவும் கூடும் ஆனால் சவார்க்கர் அவ்வாறானவர் அல்ல. சுபாஷ் சந்திரபோஸ், புதுச்சேரி அரவிந்தர் எல்லோருமே இத்தகு புத்திசாலிகளே.

இதிலும் அரவிந்தருக்கும் சவார்கருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இருவருமே பிரிட்டனில் குடியமர்ந்து இந்திய சுதந்திரத்துக்காக அமைப்புகளை உருவாக்கி பிரச்சாரம் செய்தவர்கள். உள்ளடியாக சில வெள்ளை அதிகாரிகள் கொலைச் சதிக்கு மூளையாக செயல்பட்டு முன்நின்றவர்கள். இருவருமே போதிய ஆதாரம் இன்றி சிறை கண்டவர்கள். போதிய ஆதாரம் இன்றி விடுதலையும் கண்டவர்கள்.

(காந்தி கொலையில் அன்று சாவர்க்கர் போதிய ஆதாரம் இன்றி விடுவிக்கப்பட்டாலும் சாவர்க்கர் மரணத்துக்கு பிறகு அப்போது எழுந்த இந்துத்துவ அலைக்கு எதிராக அந்த ஆதாரங்ககளை கபூர் கமிஷன்  வெளியிட்டது என்றும் முன்னர் வாசித்திருக்கிறேன்).

அரவிந்தர், சவார்க்கர் இருவருக்குமே ஐரோப்பா கண்ட ஜனநாயகம் குறித்து எந்த அறிவோ கனவோ இருந்ததற்கான தடையமும் அவர்கள் எழுத்தில் காண கிடைப்பதில்லை. ஒரு மாதிரி அந்தக் கால பழமைவாதிகளாக நின்று க்ஷத்ரிய வீரம் என்றெல்லாம் என்னென்னவோ பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். மறுபக்கம் சுபாஷ் ஒரு ராணுவ வெற்றி வழியில், பிரிட்டிஷார் வசமிருந்து சுதந்திரம் பெற்ற  வேறொரு சர்வாதிகார அடிமை நாடாக இந்தியாவை மாற்றும் கனவு கொண்டிருந்தார்.

இவர்கள் கூடி இப்படியும் ஒரு சுதந்திர போராட்டம் நடந்து கொண்டு இருந்தது. ஆகவே சாவர்க்கர் உள்ளிட்ட இவர்களும் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளே.

இத்தகு சதிவேலை வன்முறைப் போராட்டங்கள் அனைத்தும் காந்தி எனும் மைய்யத்தால் கோழைத்தனமான செயல் என்று விமர்சிக்கப்பட்டு விளிம்புக்கு தள்ளப்பட்டது நமது பாரதம் கண்ட நல்லூழ் என்றே கொள்ள வேண்டும். காந்தி 1917 இல் இந்திய காங்கிரஸுக்கு தலைமை கொள்ள இந்தியா வந்த சூழலை சற்றே ஆராய்ந்தால் இந்தியா 1925 குள் ஒரு பெரும் உள்நாட்டு வன்முறைக்குள் சிக்கி பெரும் ரத்த களரி ஆக கூடிய இனி நவீன இந்தியா என்ற ஒன்றே  சாத்தியம் இல்லை என்று ஆக கூடிய நிலையில் இந்தியா இருந்தது புரியும்.

1909 இலேயே முஸ்லீம்கள் தனி வாக்குரிமை பெற்று விட்டனர். அங்கே துவங்கி அதன் எதிர் நிலையாக 1915 இலேயே இந்து மகா சபா துவங்கப்பட்ட்டு விட்டது. காந்தி போன்ற ஒருவர் உள்ளே வராதிருந்தால் நான் மேற்சொன்ன நிலையே நிகழ்ந்திருக்கும். முஸ்லிமாகவும் கிறிஸ்துவராகவும் எல்லாம் சாதகம் செய்து வாழ்ந்து, அந்தந்த மதங்களின் மெய்மை சாரம் உணர்ந்த ஞானியாக ராமகிருஷ்ணர் வாழ்ந்து, அவரும் அவர் போன்றோரும் உருவாக்கிய இந்தியாவின் பிரதிநிதி என அதே ஆத்மசுத்தியுடன் காந்தி எழுந்து வந்தார். நமது மூதாதைகள் அவரால் காப்பாற்ற பட்டனர்.

காந்தி இந்திய அரசியலுக்குள் வந்த போதே அரசியலில் இஸ்லாமிய, இந்துத்துவ விருட்சங்கள் அவரது கைக்கு மீறி வளர்ந்திருந்தாலும், காந்தி அவை உருவாக்கப்போகும் பாதகங்களை மிகுந்த கூர் மதி கொண்டு கையாண்டார். அரசியல் என்று துவங்கி இறுதியில் வன்முறையில் சென்று முடிய போகும் களத்தில் எதிர் எதிர் நிற்கும்  இரண்டு ஈட்டி முனைகளில் ஒன்றான இந்துத்துவ அரசியல் என்பதை முற்றிலும் மழுங்கடித்து அதை களத்திலிருந்தே வெளியேற்றினார். எல்லா தரப்புடனும் தொடர்ந்து உரையாடல்களில் இருந்தார்.

ஆனால் ஒரு போதும் எவ்வித உரையாடலுக்கும் செவி சாய்க்காத முஸ்லீம் லீக் முன்பு தோற்றுப் போனார். நாடு கிழிந்தது. சர்வ அதிகாரம் கொண்ட பிரிட்டன் சட்டத்தை விலக்கி வைத்து விட்டு அமைதி காத்தது. மழுங்காத வன்முறை ஈட்டியை கையில் ஏந்திய முஸ்லீம் லீக். அதற்கு எதிரே எந்த அதிகாரமும் அற்ற, மானுடத்தின் நல்லிச்சை மீது மட்டுமே நம்பிக்கை கொண்டு செயல்படும் ஒரு தனித்த மனிதராக காந்தி நின்றார். வென்றார்.

அன்றைய உலக வரலாறு நெடுக இத்தகு விஷயங்களில்ல் ஓடிய குருதிப் புனலை ஒப்பிட்டால் நாம் எத்தனை குறைவாக குருதி சிந்தி வெகு வேகமாக மீண்டு எழுந்தோம் என்பது மிக்க ஆச்சர்யம் அளிப்பது. அதன் மூல விசை காந்தியே. சுதந்திரம் பெற்றோம். காந்தியை வெல்ல இயலாது ஆனால் கொல்ல முடியும் அதையே இந்துத்துவ கருத்தியலால் இறுதியாக செய்ய முடிந்தது.

இதோ இன்று இந்த ஜனநாயக யுகத்தில், என்றும் நீடித்திருக்க வேண்டும் என்னும் அதிகார வெறியின் பொருட்டு, காந்தியால் மழுங்கடிக்கப்பட்ட அந்த ஈட்டி, அடையாள அரசியல் கலாச்சார அரசியல் மத அடையாள பாதுகாப்பு, அவற்றுக்கு எதிரான செக்கூலரிசம்,  என பரஸ்பரம் அந்தந்த அறிவிலிகள் கூக்குரல் வழியே மீண்டும் கூர் தீட்டப்படும்  சூழல் உருவாகிக்கொண்டு இருக்கிறது.  அதன் ஒரு பகுதியே கட்சிசார் சிறுபான்மையினர் வழியே வெளிப்படையாக இன்று எழுந்து வரும் சவார்க்கர் வழிபாடும், காந்தி துவேஷமும்.

இந்த சூழலில்தான்

சிந்திக்கும் ஒரு நபர் தன் அனைத்துச் சொற்களாலும் நிராகரிக்க வேண்டிய மனிதர் சவார்க்கர். இந்தியாவில் உருவான ஆளுமைகளில் ஹிட்லர் போல உலகமே  வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஆளுமை அவர் ஒருவரே. எங்கும் எந்நிலையிலும் எதற்காகவும் இம்மிகூட மதிக்கப்படவேண்டியவர் அல்ல. இந்த தேசம் சவார்க்கருக்கு அளிக்கும் ஒவ்வொரு மெல்லிய ஏற்பும் காந்திக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது, ஒட்டுமொத்தமாகவே மானுடத்திற்கு எதிரானது. 

இக்கட்டுரை கொண்ட இறுதி வரிகள் மிக மிக மிக முக்கியத்துவம் கொள்கிறது. சவார்கர் என்றல்ல இந்துத்துவ அரசியலின் எந்த கூறுக்கும் எந்த ஒரு விதத்திலும்  அளிக்கப்படும்  ஆதரவும், அப்படி அளிப்பவர் அந்த வகையில் காந்தியின் குருதியில் கை நினைக்கிறார் என்பதே அதன் பொருள்.

கடலூர் சீனு

உரையாடும் காந்தி  வாங்க

முந்தைய கட்டுரைஆலயம் சிற்பம் – கடிதம்
அடுத்த கட்டுரைதி.அ.முத்துசாமிக் கோனார்