தியானமுகாம், தில்லை – கடிதம்

அன்புள்ள ஜெ,

2020ல் பெரியநாயக்கன்பாளையத்தில்  புதிய வாசகர்  சந்திப்பு நடந்தது. நான் வெகு நாட்களாக எதிர்பார்த்து நடந்த சந்திப்பு. அதில் பல பேர் கலந்து கொண்டார்கள்.  இன்று யோசித்துப் பார்த்தால் அந்த வகுப்பில் கலந்து கொண்ட  பலர் இலக்கியத்திலும் பிற துறைகளிலும் பெரிய பெரிய  செயல்களை முன்னெடுத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

உதாரணமாக ஸ்ரீனிவாஸ் மற்றும் பார்கவி இருவரும் இம்பர்வாரி என்ற அமைப்பை உருவாக்கி  அதில் கம்பராமாயணம் தொடர்ந்து பயின்று வருகிறார்கள். இதுவரையில் சுமார் 3500 பாடல்களை முழுமையாக முடித்துள்ளார்கள்.  இன்னும் சில வருடங்களில் பத்தாயிரம் பாடல்களையும் பயின்று முடித்து விடுவார்கள்.

அதே வகுப்பில் எழுத்தாளர் ரம்யாவும் கலந்து கொண்டிருக்கிறார்.  அவர் தமிழ் விக்கிக்கு ஆற்றி வரும் பணிகள் நாம் அறிந்ததே. அவர் ஆரம்பித்த நீலி இதழ் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.  மேலும் சில சிறுகதைகள் எழுதியுள்ளார். வெகு விரைவில் அது தொகுப்பாக வரும் என்று நினைக்கிறேன்.

வகுப்பில் எங்களுடன் கலந்து கொண்ட மற்றொருவர் ராஜேஷ் கண்ணன்.  அவர் புகைப்படம் எடுப்பதில் வல்லுனராக உருவாகியுள்ளார்.  இப்படி பலர்  அந்த புதிய வாசகர் சந்திப்பிற்கு பிறகு சொல்லத் தகுந்த ஆளுமைகளாக உருவாகி கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆதார ஊக்கத்தை அந்த வகுப்பில் இருந்து நாங்கள் அனைவரும் பெற்றுக் கொண்டோம்.

இதில் நான் முக்கியமாக கூற விரும்புவது தில்லை அவர்களைப் பற்றி. அவர் எனது யோக ஆசிரியர்.  பத்து வருடங்களுக்கு முன்பே அவரிடம் நான் யோகம் பயின்று உள்ளேன். புதிய வாசக சந்திப்பின் மூலம் அவரை மீண்டும் நான் அறிமுகம் செய்து கொண்டது எனது நல்லூழ் என்றே நினைக்கிறேன். அந்த  வகுப்பிற்கு பிறகு தில்லை அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளேன் அவர் எனக்கு ஆசிரியராகவும் நண்பராகவும் இருக்கிறார்.  நாங்கள் இருவரும் சொல்முகம்  மாதாந்திர கூடுகைக்கு இணைந்து சென்று வருவோம். மேலும் தங்களின் அனைத்து படைப்புகளையும் அவர் வாசித்துள்ளார்.  வெண்முரசை முழுமையாக  படித்தவர்.  வெண்முரசு பற்றி என்னிடம் மணிக்கணக்கில் ஆர்வமாக பேசக் கூடியவர்.  அவர் பேசுவதை கேட்கவே  பிரதிவாரம் அவரை சந்திக்கும் வழக்கம் எனக்கு உண்டு.

கடந்த 20 வருடங்களாக பல்வேறு யோக வகுப்புகளை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.  இதற்காக பிரத்தியேக கட்டணம் ஏதும் அவர் பெறுவதாக எனக்குத் தெரியவில்லை.  பல்வேறு இலவச வகுப்புகள் அவர் எடுப்பது எனக்கு தெரியும். இதெல்லாம் அவர் சொந்த ஆர்வத்தின் காரணமாக செய்து கொண்டு வருகிறார்.  தனக்கு கிடைத்ததை மற்றோருவருக்கு பகிரும் அவரது ஆர்வமும் அர்ப்பணிப்போம் வணங்கத் தக்கதாக நான் கருதுகிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று மணி நேரமாவது இதற்காக அவர் உழைக்கிறார். இதனால் கிடைக்கின்ற அகநிறைவையே இதற்கான ஊதியமாக அவர் கருதுகிறார் என்பதை நான் அருகில் இருந்து கண்டிருக்கிறேன்.

ஆனந்த சைதன்யம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து  தனிப்பட்ட முறையில் யோகம் பயிற்றுவித்து வருகிறார். மேலும் அந்த அமைப்பின் மூலம் பல ஏழை கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்திற்காக நிதியுதவி செய்து வருகிறார். அதற்கான நிதியை அவரும் அவருடைய நண்பர்களும் தங்களுடைய தனிப்பட்ட சேமிப்பிலிருந்தே செய்து வருகிறார்கள். தங்களது வருமானத்தில் ஒரு பெரும் தொகையை இதற்காகவே செலவிடுகிறார்கள். தன்னலமற்ற இந்த செயலை வெளியே இவர் சொல்வதே இல்லை.

இதை அனைத்தும் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்துகொண்டே செய்கிறார். நாளொன்றுக்கு சராசரியாக பனிரெண்டு முதல் பதினைந்து மணி நேரம் அவர் எதேனும் ஆக்கப்பூர்வ செயலுக்காகவே செலவிடுகிறார் என்பதை நான் அருகில் இருந்து கண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் நான் நேரமின்மை என்று குறைபட்டுக் கொள்வதே இல்லை.

ஒரு தகுதியுடைய மாணவனை தேர்வு செய்ய இவர் எடுத்துக்கொள்ளும் அவகாசமும் உழைப்பும் பெறுமதிப்பிற்குரியது. அந்த குழந்தை தமிழகத்தில் எங்கு இருந்தாலும்  சென்று கண்டு வருகிறார். நல்ல மதிப்பெண் உடைய பல குழந்தைகள் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்விக்கட்டணம் இல்லாமையால் நின்று விடுகிறார்கள். தில்லை கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் விடுத்திக்கட்டணம், புத்தகங்கள், உடைகள் என்று  ஏற்பாடு செய்கிறார்.

வருடம் இரண்டு முறை நடக்கும் இந்த ‘கற்கை நன்றே’ என்ற நிதியுதவி ஒரு நிகழ்ச்சியாக அல்லாமல் ஒரு விழாவாக கோவையில் நடைபெறுகிறது. அதற்காக மாணவர்களை தங்கள் பெற்றோருடன் கோவை வரவழைத்து அவர்களை சிறப்பாக உபசரித்து கல்விக்கான நிதியை அந்த மாணவர்கள் கையிலோ அல்லது அவர்களது கல்லூரி  வங்கிக்கணக்கிலோ ஒப்படைக்கிறார்.

அவர்கள் உதவி பெறுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றாமல் அது ஒரு பெரும் கொண்டாட்டமாகவே நடைபெறுகிறது. கூட்டு தியானம், கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, வாசிப்புப் போட்டி, எழுத்துப்போட்டி, மதிய உணவு, அனுபவ பகிர்வு, மேற் கல்விக்கான கலந்தாலோசிப்பு என்று அந்த விழா ஒரு ஆக்கபூர்வ நிகழ்வாக இருக்கும். குறிப்பாக அந்த குழந்தைகள் வெளிப்படுத்தும் கல்விக்கான நல்வாழ்வுக்கான விருப்பு அவர்களது விழிகளில் தழலாடும். அன்று அந்தியில் அந்த குழந்தைகள் கண்ணீருடன் விடைபெறுவதை பல முறை கண்டிருக்கிறேன்.

நான் இதுவரை எந்த நிதியுதவியும் செய்ததில்லை. எனது பங்கு இந்த மகத்தான நிகழ்வில் வெறும் கைங்கரியம் என்ற அளவிலேயே இதுவரை இருந்து வந்துள்ளது. எனக்கு தில்லை அவர்கள் இந்த கைங்கரியத்தையே கர்ம யோகமாக சொல்லாமல் சொல்லிக் கொடுத்துள்ளார். இதனாலேயே அவர் எனக்கு ஆசிரியராக மாறிப்போனார்.

கல்விக்கான நிதியுதவி செய்யும் இவருக்கு கல்லூரி படிக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மூளையில் என்னதான் நடக்கிறது என்று நான் நினைப்பதுண்டு.  நீங்கள் ஏன் இப்படி இருந்து என்னை போன்றோரை தொந்தரவு செய்கிறீர்கள்? பேசாமல் எங்களைப் போல் இருந்துவிட்டு போனால் என்ன? என்று நான் அடிக்கடி மனதிற்குள்ளேயே கேட்டுக்கொள்வேன். அவரிடம் ஏதேனும் குறை கண்டுபிடிக்க முடியுமா என்று நான் நினைப்பதுண்டு. முடியாமல் என்ன, கண்டிப்பாக முடியும். பூத்துக்குலுங்கும் மலர் தோட்டத்தில் முற்செடியை தேடிச்சென்றால் கிடைக்காமல் போகுமா என்ன?

வியாழனன்று மதியம் நான் தில்லை அவளின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றேன். சிறிது நேரத்திலேயே கதிர்  மற்றும் ஹரி வந்து சேர்ந்தார்கள். ஹரியைப் பற்றி பிறகு கூறுகிறேன். யாருடைய காரில் செல்வதென்று சின்ன வாக்குவாதத்திற்கு பிறகு தில்லை அவர்களின் பழைய காரில் செல்லலாம் என்று முடிவானது. பூஜை சாமான்கள் , முப்பது பேர் அமர்ந்து செய்ய தகுந்த பெரிய ஜமுக்காளம், மைக், ஸ்பீக்கர் என்று எல்லாம் உள்ளே ஏற்றி அகல்யாவுக்கு டாட்டா காட்டி விட்டு புறப்பட்டோம். கதிருடன் சண்டையிடக்கூடாது என்ற சங்கல்பம் முப்பது கிலோமீட்டருக்குள்ளாகவே காலாவதியாகிப் போனது. ஆசிரியர் அருகில் இருக்கிறார் என்ற எண்ணமே எங்களை அடக்கி வாசிக்க வைத்தது. அவர் பெரும்பாலும் எங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் மட்டுப் படுத்திக்கொண்டும் வந்தார். ஹரி அமைதியாக கவனித்த வண்ணம் வந்தார்.

நிகழ்விடத்திற்கு அருகில் வரும்போதே நகரின் ஒழுங்கை கைவிட்டு வேறொரு ஒழுங்கிற்கு மனம் தயாராவதை உணர்ந்தேன். வந்து சேர்ந்ததும் அந்தியூரார் எங்களை வரவேற்றார். எனக்கும் கதிருக்கும் ஒரே அறை  தான் வாய்த்தது. ஆசிரியரும் ஹரியும் ஒரு அறை எடுத்துக்கொண்டனர். பயணக் களைப்பை நீக்கியவுடன்  நிகழ்வரங்கிற்கு நாங்கள் கொண்டு வந்த ஜாமானங்களை எடுத்து சென்றோம். ஆசிரியர் மைக் மற்றும் ஸ்பீக்கரை பொருத்தி சோதித்தார். ஹரி மேடையை சுத்தம் செய்து வெண்வஸ்த்திரம் விரித்து அதன் மீது விளக்கு பொருத்தி ஒரு சிறிய சந்நிதியை உருவாக்கினார். நானும் கதிரும் அரங்கை கூட்டி சுத்தம் செய்து, நாற்காலிகளை துடைத்து மூன்று வரிசைகளாக வைத்து, நிகழ்விற்கு தேவையில்லாத பொருட்களை அகற்றி வைத்தோம். வகுப்பிற்கு தேவையான ஒரு புறச்சூழல் இன்னும் இன்னும் மெருகேறி வருவதைக் கண்டோம்.

அறைக்கு சென்றதும் அன்றைய பயிற்சியை முடித்து விடுவோம் என்றார் ஹரி. ஆசிரியரும் ஹரியும் பாயை விரித்து அதில் வஜ்ராசனத்தில் அமர்ந்தனர். நானும் சேர்ந்து கொண்டேன். அன்று ஆசிரியருடன் எனது யோக பயிற்சியை சேர்ந்து செய்தேன். முடித்தவுடன் நான் செய்யும் சில தவறுகளை சரி செய்தார். எல்லாம் முடித்தவுடன் தான் தெரிந்தது அன்று சமையல் செய்பவர் வரவில்லை என்றும் வகுப்பிற்கு வந்திருந்த பாண்டுரங்கன் அவர்கள் சமையல் செய்து முடித்திருந்தார் என்றும். பாண்டுரங்கன் அன்று எங்களுக்கு அன்னமிட்டார்.

இரவுணவு முடித்து எல்லோரும் அவரவர் அறைக்கு சென்றார்கள். நாங்கள் ஆசிரியர் அறைக்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம், அவ்வப்போது நானும் கதிரும் வாக்குவாதம் செய்தோம். ஆசிரியர் முறைத்ததால் அமைதியானோம். அந்தியூரார் வந்தார். சுவாரசியமாகவும் சிரிப்பாகவும் பேசிக்கொண்டே சென்றோம். எப்படியோ சைவ சித்தாந்த மூல நூல் விவாதம் வந்தது. ஆசிரியருக்கு சைவ சித்தாந்தத்தின் மீது இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நான் இதுவரை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று. அந்தியூராரும் ஆசிரியரும் சேர்ந்து ஒரு சிறிய வகுப்பையே அன்று எடுத்து முடித்தார்கள். நான் கதிர் ஹரி அன்று வாய்பொத்தி கவனித்துக்கொண்டிருந்தோம். அது நல்ல பாடம்.

நானும் கதிரும் எங்கள் அறைக்கு வந்து சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கினோம். இருவர் சண்டையிடுவதற்கு ஒரு பார்வையாளராவது தேவையல்லவா?

அடுத்தநாள் பத்து மணிக்கு வகுப்பு ஆரம்பித்தது. நாங்கள் இருபது பேர் இருந்தோம். ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். ஆசிரியர் யோகத்தைப் பற்றி சிறிய அறிமுகம் செய்து வைத்தார். எளிய முறை உடற்பயிற்சியில் ஆரம்பித்து, பிராணாயாமம், மற்றும் சில யோகா கருவிகள் எங்களுக்கு பயிற்றுவித்தார். கூட்டு தியானம், நுண்ணோக்கு பயிற்சி என்று முதல் நாள் சென்றதே தெரியவில்லை.

அடுத்த நாள் சில அகக்கருவிகள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்து அதில் பயிற்சி கொடுத்தார். முறையாக தியானம் நடப்பதற்கான கருவியை பயிற்றுவித்தார். நாங்கள் அனைவரும் அன்று தியானத்தில் அமர்ந்திருந்தோம். அது ஒரு பொண்ணனான அனுபவம். நான் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் ஆசிரியரால் பயிற்றுவிக்கப் பட்டுள்ளேன். பல ஆண்டுகள் யோகக் கருவிகளை பயன்படுத்தியும் வந்துள்ளேன். கண்கள் மூடி பல முறை அமர்ந்துள்ளேன். என் வாழ்நாளில் மொத்தமாக தியானம் இரண்டு முறை தான் நடந்துள்ளது. அதுவும் ஒரு சில வினாடிகள் மட்டும்தான். ஆனால் அது ஒரு தரிசனம். அது மட்டும் தான் நான் உண்மையில் அடைந்த தரிசனம். இனி யார் எத்தனை கோடி வார்த்தைகளில் தியானம் என்பது பொய் என்று சொன்னாலும் எனக்கு தெரியும் தியானம் என்பது என்னவென்று. அந்த ஒரு சில வினாடிகள் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

தியான வகுப்பில் தியானம் நடந்ததா என்று கேட்டால், உறுதியாகச் சொல்ல முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இருக்கும் நிலையில் இருந்து மேலான நிலையில் கண்டிப்பாக இருந்தேன். இந்த தியான கருவிகள் தொடர்ந்து பயிற்சி செய்தால் இது வேலை செய்யும் என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்.

அமைதியாக இருந்த ஹரிக்கு அன்று தியானம் நடந்தது என்று என்னால் சொல்ல முடியும். அவருடைய பொலிவு அதை காட்டிக்கொடுத்தது.

இதற்கிடையில் பல கூட்டுத் தியானம் நடந்ததும். ஓஷோவின் டைனமிக் தியானத்தைப் பற்றி  படிக்கையில், என்ன பைத்தியக்காரத்தனம் இது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் ஆசிரியர் அதை சரியான முறையில் எங்களை அதில் ஈடுபடுத்தினார். எத்தனை சொற்களினாலும் சொல்லிவிட முடியாத அனுபவம் தான். அதை சிறிய அனுபவம் என்றார் ஆசிரியர்.

கடைசி நாள் தியான கருவிகளை மீண்டும் பயிற்சி செய்து அதை எங்கள் மனதில் எழுதினார். ஒரு கூட்டு தியானத்திற்கு பிறகு குருபூஜை நடந்தது. இறுதியில் அவரது குரு பரம்பரைக்கு ஆசான்களுக்கு உங்களுக்கு, எங்களுக்கு என்று எல்லோருக்கும் நன்றி தெரிவித்து வகுப்பை முடித்தார். அனைவரும் பொலிவுடன் காணப்பட்டார்கள். மனித முகம் உண்மையிலேயே அழகானதுதான்.

மொத்தத்தில் இந்த மூன்று என்ன நடந்தது?மனதால் மனம் பார்க்க வைத்தார். மனதிற்கு அப்பால் உள்ள ஒரு வெளியை அடையாளம் காட்டினார். ஆசை காட்டினார். அது அங்கிருக்கிறது என்று இனி எங்கள் எல்லோருக்கும் தெரியும்.புகைப்படம் எடுத்து உணவுண்டு  பிரியாவிடை பெற்றோம்.

ஏற்கனேவே ஹரியைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அவர் யோக சாதகர். இப்படியான ஒரு வகுப்பு நடக்கிறது என்பதை அறிந்து உதவிலாளராக தொண்டு செய்ய வந்தார். இந்த வகுப்புப்பிற்கு அவருடைய தொண்டு முக்கியமானதாக தெரிகிறது. பெரும்பாலான நேரம் அனைவரும் கண்மூடி அமர்ந்திருக்கும் நிலையில் எந்த இடையூறும் வராமல் இருக்க வேண்டும். பெரும்பாலானோர் முதல் முறை தியானம் செய்பவர்களாதலால் அவர்கள் எந்த அசௌகர்யமும் வந்துவிடாமல் பார்க்க வேண்டும். புறத்தில் நடக்கும் சிறு சத்தமோ தொந்தரவோ அவர்கள் அகவெளியில் இருந்து வெளியே வந்து விழுந்துவிடுவார்கள். அது நடக்காமல் பார்ததுக்கொள்ள வேண்டும்.

எங்களுக்கும் முன்னமே வந்து அரங்கை சுத்தம் செய்து விளக்கேற்றி சம்புராணி போட்டு காத்திருப்பார். வகுப்பு முடிந்து அனைவரும் சென்ற பிறகு அடுத்த நாளுக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வருவார். பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். அவரது அமைதியும் அமைந்த நிலையம் அவரோடு இருக்கையில் எங்களுக்கும் பற்றிக்கொள்ளும். அந்த மலை வாசஸ்த்தலம் அவருக்கு மிகவும் பிடித்த விட்டது. எல்லோரை விடவும் அவ்விடத்தில் மகிழ்திருந்தவர் அவரே.

அமைதியாகவே இருக்கிறார், அவருள் அவர் ஆழ்ந்திருக்கிறார், ஆகையால் நாங்கள் பேசுவது எதுவும் அவர் வரை சென்று சேர்வதில்லை என்று நினைத்திருந்தோம். திரும்பி வரும் வழியில் ‘கருத்து, எண்ணம் எண்ணங்களுக்கு இடையில் உருவாகும் இடைவெளி’ என்று ஏதோ விவாதித்துக் கொண்டு வந்தோம். அப்போது ஹரி தனது அவதானிப்பை சொன்னார். கதிர் பரவசத்தில் துள்ளி எழுந்துவிட்டார். அகவெளி அனுபவங்களில் நிரூபணவாதம் சாத்தியமே அதற்கான அடிப்படை விதிகளின் ஏற்புடைத்தன்மைதான் இங்கு பிரச்சனை. இங்குள்ள இன்றைய நிரூபணவாதம் வெகு சமீபத்தியது என்றார்.

நான் ஆசிரியரைப் பார்த்து “உங்கள் மாணவன் மீது உங்களுக்கு பெருமையாக இருக்கிறதா?” என்று கேட்டேன். அவர் “பெருமைதான், ஹரி இப்படி ஏதாவது பேசுவதினால் அல்ல அவர் தொடர்ந்து செய்துவரும் யோக சாதகத்தினால் நான் பெருமை கொள்கிறேன்” என்றார். புறவெளி அகவெளியை எப்படி மாற்றி அமைக்க முடியுமோ, அதேபோல் அகவெளி புறவெளியை மாற்றியமைக்கும் என்பதை ஹரி எங்களுக்கு அன்று சொல்லாமல்  நிரூபித்தார்.

கோவை வந்து எல்லோரும் சொல்லிக்கொண்டு பிரிந்து சென்றோம். இதோடு வகுப்பு முடிந்ததா என்றால் இல்லை. பயிற்சியை சரிபார்த்துக்கொள்ள மேலும் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல மாதம் ஒருமுறை நேரிலும் ஆன்லைனிலும் சத்சங்கம் கூட்டுகிறார். அதற்கான அட்டவணை அனுப்பி வைத்தார். ஆர்வமுள்ளவர்களுக்கு மேல்நிலை வகுப்பு அவரிடம் செய்யலாம்.

ஒரு சொல் கூடாமலும் குறையாமலும் தன் எல்லைக்குள் நின்று ஆசிரியர் எங்களுக்கு சிறப்பாக பயிற்றுவித்தார். அவர்க்கு எங்கள் நன்றிகள். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த உங்களுக்கும் எங்கள் நன்றிகள்.

ஒவ்வொருவருக்குள்ளும் திரிசிரன் இருக்கிறான். முத்தலையன். ஒரு தலையன் ஓயாது செயல்  புரிகிறான். இன்னொரு தலையன் ஓயாது போகத்தில் மயங்குகிறான். மூன்றாவது தலையன் இவர்கள் இருவரையும் ஓயாது பார்த்துக்கொண்டிருக்கிறான். இந்த மூன்று நாட்களிலும் இந்த மூன்றாவது தலையனை சிறிது அறிமுகம் செய்துகொண்டோம்.  அறிந்துகொண்டோம்.

விஜயகுமார் சம்மங்கரை

முந்தைய கட்டுரைவிடுதலை, இடதுசாரிகள் – கடிதம்
அடுத்த கட்டுரைமனோன்மணியம் சுந்தரம் பிள்ளை