மனமே தினமும்…

நேற்றிரவு தற்செயலாக பழைய ஒருபாடல் நினைவுக்கு வர தேடிப்பிடித்தேன்.  ‘ மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்பதமே’ பாபநாசம் சிவன் எழுதிய இசைப்பாடல். சாவித்ரி படம். எம் எஸ் சுப்புலட்சுமி நாரதராக வந்து பாடுகிறார்.

 http://www.youtube.com/watch?v=ZwsgfnfPauE

அதனருகே இணைப்பு வழியாக சஞ்சய் சுப்ரமணியம் அதை வேறு ராகத்தில் பாடும் அரங்க நிகழ்ச்சியின் காணொளிக்குச்  சென்றேன்.

 http://www.youtube.com/watch?v=UAxy8QWnQc4&feature=related

மிகமட்டமான ஒலி, ஒளி தரம். ஆனால் என்னை சட்டென்று ஆட்கொண்டது அது. நம்பமாட்டீர்கள். ஒரு ராத்திரியில் மட்டும் கிட்டத்தட்ட எழுபது தடவை அதைக் கேட்டேன். பார்த்தேன் என்றும் சொல்லலாம். இணையத்தில் வேறு வடிவிலும் அதைப் பலமுறை கேட்டேன். ஆனால் இது அலாதியாகப் பட்டது

என்ன வேறுபாடு? ஆபேரி என்பது ஒன்று. அது உருக்கமும் ஆவேசமும் ததும்பும் ராகம். அதைவிட சஞ்சய் அதைப்பாடும்போது வெளிப்படும் ஆற்றல். ஒரு  கணமும் நிலைக்காது அது பீறிடுகிறது. ஒரு மடை அருகே அமர்ந்து நீர் கொப்பளிப்பதை அல்லது ஒரு தழல் கூத்தாடுவதை எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பார்க்கலாம் .அதைப்போல ஓர் அனுபவம். மிகத் தனிப்பட்டதாகக்கூட இருக்கலாம். நுண்கலைகளில்  அனுபவங்கள் பெரும்பாலும் அந்தரங்கமானவை

நான் கேட்டவரை பாடகிகளில் ஒருபோதும் இந்த ஆற்றலைக் கண்டதில்லை. நளினம், அழகு ,நுட்பம் எல்லாம் கைகூடும். ஆனால் உயிரின் ஆதி ஆற்றல் இசையாக வெளிவருவதைக் கண்டதில்லை. ஆம் நான் பல மேதைகளைக் கேட்டதில்லைதான். இருந்தாலும் படுகிறது

நான் ஒரு ஆணாதிக்க வெறியனோ என்னவோ. ஏற்கனவே நிறைய முத்திரைகள்.

முந்தைய கட்டுரைஉனக்கும் அயோத்திதாசருக்கும் என்ன சம்பந்தம்?
அடுத்த கட்டுரைஅறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?