அகத்தில் பிறப்பவை

பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும் வாங்க

பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும் மின்னூல் வாங்க

இந்த தொகுதியில் உள்ள கதைகள் அனைத்துமே ஏற்கனவே குமரிமாவட்டம் திருநெல்வேலியின் தெற்குப்பகுதி என்னும் இந்நிலங்களில் வாய்மொழி மரபாகவும் நம்பிக்கையாகவும் நிலைகொள்பவை. அவை அ.கா.பெருமாள், டாக்டர் திரிவிக்ரமன் தம்பி, என் சுகுமாரன் நாயர் போன்ற ஆய்வாளர்களின் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவு முயற்சியின் முன்னோடி என்று ஐதீகிய மாலா என்ற பெருநூலின் ஆசிரியராகிய கொட்டாரத்தில் சங்குண்ணி அவர்களை குறிப்பிடலாம். இந்நூல்  அக்கதைகளை நவீன வாசிப்புக்குரிய மொழியில் திரும்ப சொல்கிறது. அதனூடாக இக்கதைகளை சிறுகதை வடிவத்திற்கு அணுக்கமாகக் கொண்டு செல்கிறது.

ஒரு கதை சிறுகதையாகும்போது அதில் மேலதிகமாக ஒன்று வந்து சேர்கிறது. அதை நவீன அழகியல் பிரக்ஞை என்றும் நவீன வாழ்க்கைப்பார்வை என்றும் சொல்லலாம். இந்தக்கதைகள் அனைத்தும் அவற்றின் உச்சங்களிலிருந்து மேலும் செல்ல வாசகனை தூண்டுபவை என்பதைக் காணலாம். கதைகளின் நிகழ்வுகள் களம் ஆகியவற்றிலிருந்து படிமங்களை விரித்தெடுத்து உட்குறிப்புகளைக் கண்டடைந்து அவற்றை வாசக இடைவெளிகளாக நிலைநிறுத்தி அந்த அழகியலை இக்கதைகள் அடைகின்றன. அவற்றுடன் இந்தக்கதைகள் சென்ற இருபதாண்டுகளில் உருவாகிவந்த சமூகவியல் நாட்டாரியல் பார்வையைத் தாங்கள் கொண்டுள்ளன. இக்கதைகளை ஐம்பதாண்டுகளுக்கு முன் எழுதியிருந்தால் மக்கள் மூடநம்பிக்கைகள் என்றும் காட்டுமிராண்டி நம்பிக்கைகள் என்றும் வரையறை செய்திருப்பார்கள்.

தொடக்க காலத்தில் உலகமெங்கும் சென்று நாட்டார் பழங்குடி தொன்மங்களை சேகரித்த மானுடவியலாளர்கள் அனைவருமே அடிப்படையில் கிறிஸ்தவம் உருவாக்கும் பார்வையின் இறுக்கத்தைக் கொண்டிருந்தார்கள். சேவேஜ் ப்ரிமிட்டிவ் போன்ற வார்த்தைகள் எல்லாம் அவர்கள் சாதாரணமாக பயன்படுத்தினார்கள். அப்பார்வையே இங்கு வந்தது. இங்கு அந்த மேட்டிமைத்தனம் வைதிக மரபு சார்ந்த ஒன்றாகவும் மறுபக்கம் மார்க்சிய மரபு சார்ந்த ஒன்றாகவும் ஆகியது. வைதிக மரபைச்சார்ந்தவர்கள் இவை பண்படாத சிறுதெய்வ வழிபாடு சார்ந்தவை என்றும் கடந்த காலத்தின் நினைவெச்சங்கள் என்றும் மட்டுமே கருதினர். மார்க்சியர்கள் இவை அடித்தள மக்களின் உணர்வுகளை அவர்கள் தங்கள் அறியாமையால் இவ்வண்ணம் வெளிப்படுத்திக்கொண்டார்கள் என்ற அளவில் புரிந்துகொண்டனர். நா வானமாமலை போன்றவர்கள் நாட்டாரியலை திருத்த  தங்களுக்கு உரிமை உண்டு என்று எண்ணிக்கொண்டது இதன் அடிப்படையில் தான்.

இன்று இரு பார்வைகளுமே காலாவதியாகிவிட்டிருக்கின்றன. நாட்டார் பழங்குடி கதைகள் ஒரு சமூகத்தின் ஆழுளம் தன்னியல்பாக வெளிப்படுத்தும் நிகழ்வுகள். ஒரு பண்பட்ட பிரதியில் அந்தப்பண்படுத்துதல் என்பது அறிவார்ந்த பிரக்ஞை. அச்சமூகம் கூட்டாக உருவாக்கிக்கொண்டிருக்கும் விழுமியங்கள் மற்றும் நிலைபாடுகள் அதன் அதிகார அரசியல். நாட்டார் பழங்குடி கதைகள் அந்த வட்டத்திற்கு அப்பால் தன்னியல்பாக வெளிப்பட்டு தன்னியல்பாக பரிமாறப்பட்டு தன்னியல்பாக ஒருங்கிணைந்து நிலைகொள்பவை.

இந்நூலில் உள்ளது நாட்டார் பழங்குடி தெய்வங்களை விலகி நின்று பார்க்கும் கோணம் அல்ல. அவர்களில் ஒருவராக நின்று பார்க்கும் கோணம். ஏனெனில் இவற்றில் பெரும்பாலானவை எனக்கும் தெய்வங்களே நான் வழிபடுபவையே. ஆகவே இவற்றினூடாக நான் என்னை அறியவே முயல்கிறேன். என் ஆழத்திற்குள் பயணம் செய்யும் ஒளிரும் பாதைகளாகவே இத்தொன்ம கதைகளை நான் அணுகுகிறேன். இது ஒரு நவீனத்துவ கால எழுத்தாளனுக்கு அந்நியமானது. நவீனத்துவத்தைக்கடந்து வந்த எழுத்தாளனுடைய இயல்பான அணுகுமுறை. அவ்வணுகுமுறை கொண்ட வாசகர்களுக்கு இந்த நூல் பல தெளிவுகளை அளிக்கக்கூடும்.

இக்கதைகளை தனித்தனியாகவே எழுதினேன். இவற்றை ஒருங்கிணைந்து ஒரே நூலாக ஆக்கும்போது கதைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒன்று இன்னொன்றுக்கு பொருளளித்து ஒற்றைப்பிரதியாகவே மாறுவதைக்காண்கிறேன். ஒரு நாவல் போலவே இதை ஒருவேளை வாசிக்க முடியும். அப்போது ஒவ்வொரு கதையும் பிற அனைத்துக் கதைகளாலும் அர்த்தப்படுத்தப்பட்டு தீவிரமும் வீச்சும் கொள்கிறது. தமிழில் நாட்டுப்புற கதைகள் பல்வேறு வகைகளில் தொகுக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த நவீன புனைவு ஒருமை இந்நூலிலேயே உள்ளது என்று நான் எண்ணுகிறேன். இந்நூலை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் மறுபதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் எனது நன்றிகள்.

(பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும் புதிய பதிப்புக்கான முன்னுரை)

முந்தைய கட்டுரைமேலாண்மை பொன்னுச்சாமி
அடுத்த கட்டுரைஅறிவின் விளைவா உறுதிப்பாடு? -கடிதம்