மதுமஞ்சரி – கடிதம்

அன்பு ஜெ,

மதுமஞ்சரிக்கு விகடன் நம்பிக்கை விருது வாங்கும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். விருதுகள் அங்கீகாரங்களின் மீது ஒவ்வாமை ஏற்படும் ஒரு பருவத்தில் இருக்கிறேன். மிக இளமையில் அப்படியில்லை. அதை நோக்கிய பயணத்தில் தான் இருந்திருக்கிறேன். இன்று அப்படியில்லை. குறிப்பாக தமிழ்விக்கி பயணம் பலருடைய வாழ்வையும் சுருக்கி பார்க்கும் வாய்ப்பை அளித்திருக்கிறது. மிகவும் குறிப்பாக நான் இன்று என்னுடையது என நினைக்கும் எழுத்துக்கலை சார்ந்த துறையில் உள்ள கலைஞர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறேன். மிக முக்கியமான பணிகளைச் செய்தவர்கள் யாருக்கும் தெரியாமல் மிகச்சில சுவடுகளை மட்டுமே எச்சமாக விட்டு விட்டு மாண்டு போயிருக்கிறார்கள். சிலர் இருக்கும் காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். சிலர் வாழ்ந்த காலத்திலேயே தங்களுக்கான அங்கீகாரங்களுடன் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு நேர் எதிர் தளத்தில் மிகச் சிறியவர்கள் (தன் கலைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பொறுத்து) தன் தகுதிக்கு மீறிய புகழையும் பேரையும் அதிகாரத்தால் பணபலத்தால் மன்றாட்டுகளால் பெறுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் விருதுப்பட்டியல் அவர்கள் எழுதிய புத்தகத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அடையும் புகழும் பேரும் அருவருப்பையே அளித்திருக்கிறது. இதற்கு மத்தியில் எல்லா விருதுகள், விருது வழங்கும் நிகழ்வுகளிலும் உள்ள அரசியல் கணக்குகள் சோர்வடையச் செய்கின்றன.

ஆனால் இன்று மஞ்சரி மேடையில் நின்று பேசும்போது ஏற்பட்ட உளப்பொங்கல் என்ன என சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது விருதின் மூலம் அவள் பெருமை அடைகிறாள் என நினைத்ததால் வந்ததல்ல. அவள் எங்கோ மூலையில் இருந்து கொண்டு எந்தவித எதிர்பார்ப்புமின்றி பல விதமான தடங்களுக்கு மத்தியில் நிமிர்வுடன் நின்று பேசியது தந்த உவகை அது. நீங்கள் உவக்கும் பெண்(நீலி) தன்மையும் கூட.

மஞ்சரிக்கு இந்த மேடை அவசியமானது. ஒவ்வொரு கிணறுக்கும் பொருளாதார ரீதியாக எத்தனை சிரமத்திற்கு ஆளாகிறாள் எனத்தெரியும் எனக்கு. அதற்கு இம்மேடை பயன்படும். நீலியில் முதல் நேர்காணல் மஞ்சரியினுடையது. ஏன் எவ்வாறு நிகழ்ந்தது என யோசித்துக் கொண்டிருக்கிறேன். உள்ளுணர்வின் மொழி தான் மனிதர்களை ஒன்றிணைக்கிறது என்பதை தீர்க்கமாக நம்புகிறேன். ஒன்றில் முரண்படுவதும் கூட அத்தகைய உள்ளுணர்வினால் தான். அதற்கு அருகில் எப்போதும் செவிசாய்த்து கவனமாக நின்று கொள்கிறேன்.

மஞ்சரி என் தங்கை என்று சொல்லும் வாய்ப்பை அவள் எனக்கு அளித்ததற்கு இறைவனுக்கு நன்றி. இம்மனிதர்களெல்லாம் என் வாழ்வில் உங்களால் தான் சாத்தியம் ஜெ. இந்தப் பயணங்களில் அவ்வபோது சோர்வு ஏற்படுகிறது. வழி தவறிவிடுகிறேன். நீங்கள் சொல்வது போல ஒரு இடைவெளிக்குள் ஆசிரியரை சந்திக்காமலிருந்தால் மனதில் கரை படிந்து விடுகிறது. நம் பாதைக்கு சற்றும் அவசியமல்லாத மனிதர்களும் விடயங்களும் நம்மை அழுத்த ஆரம்பித்து விடுகின்றன. தேவையற்ற அலைக்கழிப்புகள் ஆசிரியரை சந்தித்த கணமே சிறிய விடயமாக மாறிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். மிகப்பெரிய மானுட துக்கத்தை கண்ணோக்காதவரை மிகச்சிறிய விஷயங்களின் மேல் கவனத்தைக் குவித்து தன்வயமாக தன்னை குறுக்கிக் கொண்டு ஒடுங்கி முடங்கிவிடுகிறோம். இத்தகைய சமயத்தில் மஞ்சரியின் வரிகள் எனக்கு ஒளியானவை. என்னிடமிருக்கும் துன்பங்கள் எல்லாம் எத்தனை சிறியவை என காட்டிய ஒளியது.

அவளுக்கு கேள்விகளை அனுப்பி தொலைபேசி வழியாக ரெக்கார்ட் செய்து வாய்ஸ் நோட் பெற்று என நேர்காணலை அச்சடித்துக் கொண்டிருந்தேன் சென்ற ஆண்டு. யாருமற்ற ஒரு அறையின் நிசப்தத்தில் அவள் முதல் முதலில் கிணற்றிலிருந்து சுரந்த நீரை ”கரண்டிக்குள்ள சின்ன தண்ணி மாதிரி” என்று சொன்னபோது கண் கலங்கும் குரலைக் கேட்டேன். அதற்கு மேல் அச்சிட முடியாத படிக்கு அனைத்தையும் மூடி வைத்து விட்டு அன்று அழுது கொண்டிருந்தேன். பகிர்ந்து கொள்ள முடியாத விவரிக்க முடியாத எத்தனை உணர்வுகளால் இந்த தெய்வம் என்னை அலைக்கழிக்கிறது. துக்கமும் மகிழ்வும் என பிரித்தறியவியலாத பலவகை உணர்வுகளுக்குள் ஆளாகிறேன். இது இன்னது என்று உங்களிடம் சொல்லிப் பிரித்துக் கொள்ள முடிந்தவற்றையெல்லாம் சொல்லிவிடுகிறேன்.

சோர்ந்து போகும் போது தேவையற்ற துக்கங்களுக்குள் மண்டையை நுழைத்துக் கொள்ளும் போது மஞ்சரியை அவள் குரலை நான் நினைத்துக் கொள்வதுண்டு. தனி மானுட பிரச்சனைக்கான மன்றாட்டுகளை இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கும் போது ஒட்டுமொத்த மானுடனுக்கான பிரச்சனைக்கான தீர்வுக்காக ஒருத்தி கலங்கும் போது நம்மைச் சுற்றியிருக்கும் சிக்கல்கள் யாவும் சிறுமையாகிவிடுகிறது.

இந்த மேடையின் மூலம் வரும் புகழோ வெளிச்சமோ அவளுக்கு பொருட்டல்ல. மாறாக ஊர்க்கிணறு புனரமைப்புக்கு பொருளாதார ரீதியாக உதவி கிட்ட வேண்டும். அதே போல மைவிழி முத்தண்ணன் சிவராஜ் அண்ணா ஸ்டாலின் அண்ணா என பலரும் செய்யும் செயல்களுக்கு பொருளாதார ரீதியாக உதவியே தேவைப்படுகிறது. அவர்கள் யாவரும் ஒருவகையில் மானுட துக்கத்திற்கான தீர்வுக்காக மன்றாடுபவர்களாகவே பார்க்கிறேன்.

காந்தியவாத செயல்களுக்காக காந்தி அனைவரிடமும் சென்று கை நீட்டினார். அவர் கை ஏந்தாத இடமில்லை எனுமளவு சென்ற இடங்களிலெல்லாம் அதைச் செய்தார். விடுதலைக்கு முந்தைய பல பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் காந்தியவாதிகள். சரோஜா தன் கையிலிருந்த வளையலைக் களற்றிப் போட்டவர். எத்தனை நாடக நடிகர்கள் கலைஞர்கள் இசைவாணர்கள் நடித்து பாடி எழுதி என காந்தியவாதத்திற்கு உதவியிருக்கிறார்கள் என்பது தமிழ்விக்கி வழியாக பார்க்கையில் மலைப்பாக உள்ளது.

இன்று அப்படிச்சென்று கை ஏந்துவது சந்தேகக் கண்ணோடு பார்க்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். சக மனிதருக்கு இன்னொருவர் மேல் நம்பிக்கையில்லை. அன்பு இல்லை. சுயத்தின் முன்னேற்றத்தைவிட வேறொன்றும் பொருட்டல்ல. இன்றும் அவர்கள் மேல் நம்பிக்கை இழந்துவிடாமல் கையேந்தும் காந்தியவாதிகளாக இவர்களைப் பார்க்கிறேன். இம்மேடை அதை அடையாளப்படுத்தும் ஒன்றாக அமையட்டும். பாரதி, சத்யா, மைவிழி, முத்தமிழ்ச்செல்வி, முத்தண்ணன் என யாவரும் காந்தியின் முகங்கள் தான்.

இந்த மேடை மூலமாக அவர்கள் தங்கள் செயலுக்கான பொருளாதார உதவியைப் பெற வேண்டும் என மனதார விரும்புகிறேன். ஆகஸ்டில் நீலியில் அவளின் நேர்காணல் வந்தபோது நண்பர் விஜயபாரதி அந்த நேர்காணலை வாசித்து மஞ்சரியை முழுமையாக அறிந்த கொண்டதாகவும் தன்னால் பணமாக இயன்றதை கொடுத்ததாகச் சொன்னபோது மகிழ்வாக இருந்தது. அந்த பேட்டி வந்தபோது இருபதாயிரம் கிணறு புனரமைப்பிற்கான உதவியாக வந்ததாகச் சொன்னாள். நம் நண்பர்கள் அப்படிப்பட்டவர்கள் தான். மிகவும் பணம் வைத்திருப்பவர்கள் அல்ல அன்றாடங்களில் உழன்று கொண்டிருந்தும் நல்ல மனம் பெற்றவர்களே உதவுகிறார்கள். நீலியுடன் தொடர்பு கொள்ளும் சொற்பமானவர்களும் இத்தகைய தீவிரமானவர்கள். அந்த நிறைவு உள்ளது.

இரண்டாயிரம் சிமெண்ட் மூடைக்கான பணம் இல்லாமல் ஒரு நாள் தள்ளிப்போகும் செயல் மஞ்சரியை சோர்வடையச் செய்யலாம். ஆனால் அவள் தொடர்ந்து உதவுங்கள் என அங்கே சன்னமான குரலில் கேட்டுக் கொண்டேயிருப்பாள். அந்தக் குரலை உரியவர்கள் கண்டுகொள்வதற்கான மேடையாக இதைப்பார்க்கிறேன். அவள் நின்று அங்கே பேசியது மகிழ்வையும் நிறைவையும் அளிக்கிறது ஜெ. இந்த நாளை அவளின் காணொளி நிறைத்தது. ”ஒரு குழந்தை பிறக்கறப்போ எப்படி தாய்ப்பால் சுரக்குதோ அப்படி நமக்காக எப்பவும் சுரந்துக்கிட்டு இருக்கிற அந்த கிணறுகள நாம எப்படியாவது காப்பாத்தனும். அவ்ளோதாங்க வேற ஒன்னும் இல்லிங்க” என அவள் சொல்லி முடித்தபோது அவள் முகத்தில் குடி கொள்ளும் தெய்வத்தை தரிசிக்க முடிந்தது. அந்த அருளையும் கள்ளமின்மையையும் தக்கவைத்துக்கொள்ள இந்த இயற்கையும் மனிதர்களும் அனுமதிக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

பிரேமையுடன்

ரம்யா

***

முந்தைய கட்டுரைபொய்க்குற்றச்சாட்டுகள், பெண்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைஇரா.முத்தரசன்