வாழ்ந்து தீர்வது – நாராயணன் மெய்யப்பன்

நா. சுகுமாரன் தமிழ் விக்கி

கவிதை வடிவம் இல்லாதபட்சத்தில் ஒரு நொடிப்பொழுதை பற்றி அதிகம் பேசுவது காதலாகத்தான் இருக்கிறது அதுவம் வெகுஜன ஊடகங்களில் பிரச்சாரமாகி நம்மிடம் சேருகிறது.

சற்று நிதானித்து கவனித்தால் சில மலையாள படங்களில் ஒன்றரை மணி நேர படத்தினை ஒரே வசனம் தாங்கி நிற்கும், ‘டிரைவிங் லைசன்ஸ’ல் கடைசியாக நடிகர் ஹரிதரன் வாகன அலுவலக அதிகாரி குருவில்லா ஜோசப் காப்பாற்றி அழைத்துக்கொண்டு செல்கையில் ஒரிடத்தில் குருவில்லா சொல்வார் ‘….நீங்கள் நாடறிந்த கதாநாயகன் ஆனால் என் பிள்ளைகளுக்கு நான் தான் நாயகன்’ மொத்த படமுமே இந்த வரி தான் அதற்கான கூடுதல் சம்பவங்கள் தான். அதே போல் ‘ஹேளன்’ படத்தில் கடைசியாக காவல் அதிகாரி அந்த காவல்கார தாத்தாவிடம் கேட்பார் ‘…இத்தனை நபர்கள் வந்த போகும் இடத்தில் எப்படி குறிப்பாக அந்த பெண் இன்று மாலை இந்த வளாகத்தை விட்டு திரும்பி செல்லவில்லை என்பதை உறுதியாக சொல்கிறீர்கள்?’, அதற்கு அவர் தினமும் கூட்டம் வருவது தான் ஆனால் இந்த பெண் வரும் போதும் செல்லும் போதும் நலம் விசாரிச்சிட்டு போகும் என்று.

மனம் படைத்ததால் மனிதன் என்கிறோம். ஜேம்ஸ் ஆலன் அவர்களின் ‘மேன் திங்கத்’ என்ற புத்தகத்தில் மனம் சுற்றத்தையும் சூழலையும் எப்படி எதிர்கொள்கிறது கையாளுகிறது என்ற ஆளுமையினாலேயே மனிதன் ஆகலாம் என்றார். அப்படியென்றால், ஒரு மனம் பல சூழல்களையும் பல மனங்கள் ஒரே சூழலையும் நித்தம் நித்தம் சந்திக்கிறது. எத்தனை எத்தனை நொடிப்பொழுதுகள் அதில் எத்தனை இந்த வாழ்வை அர்த்தப்படுத்துகிறது. இந்த புரிதலுக்கு பிறகு ஒருவர் மிதான அபிப்பிராயம் என்பது அவசியமற்றதாகிறது, அதலால் ஏற்றுக்கொள்ளும் பக்குவும் வருகிறது அத்துடன் புரிந்து கொள்ளும் ஆற்றலும் வளர்கிறது.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் கவனிக்க தவறிய நமக்கான கனங்களை அப்போதே எதிர்க்கொண்டிருக்கவேண்டிய கனங்களை செய்யாமல் தவறியதிலிருந்து கிடைத்த அனுபவம் வரப்போகும் சூழல்களில் நமக்கான அந்த கனங்களை உணர்ந்து உள்வாங்கிக்கொள்வது என்பது கேள்வியாகவே இருந்து தேடல்கள் நோக்கி நகர்த்துகிறது.

சில வருடங்களுக்கு முன், ஊரில் பேருந்திற்காக காத்திருந்த நேரத்தில் சாலையை கடக்க முயன்ற பாட்டியை ஒரு பைக் திருப்ப தெரியாமல் திருப்பி பாட்டியை இடிக்க பயந்து கீழே விழந்தவர் எந்த சேதாரமில்லாமல் இறந்து போனார். இடித்த அந்த நொடி கீழே விழுவதற்கு முன்பாக ஏதாவது செய்திருக்கலாமே ஓடி பிடிக்க முயற்சித்திருந்திருக்கலாம் என்று பல நாட்கள் நினைத்து உண்டு, குற்றவுணர்ச்சி அல்ல ஆனால் ஏன் முன் வரவில்லை.? அதே போல் பல பல சந்தர்ப்பங்கள் பல காரணங்கள்.

ஆயுள் கணம்

சொற்பப் பொழுதே ஜீவிதமென்றறியாமலா
கொல்லென்று பூத்துக் சிரிக்கிறது பொற்கொன்றை?

ஒற்றைப் பருவத்தின் களிப்பென்றுணராமலா
வேர்களில் உறைந்த காலம் வெளிவந்து சிலிர்க்கிறது?

சிலசமயம் ஒரு நொடிக்குள்ளேயே
வாழ்ந்து தீர்வதில்லையா பிறவியின் மொத்த ஆயுள்?

–      சுகுமாரன்

’மேன் திங்கத்’ கொடுத்த புரிதலை இந்த கவிதை மீண்டும் நினைவுபடுத்தியது. கடைசி வரியில் வாழ்ந்து என்பதை தொடர்ந்து ‘தீர்வதில்லையா’ என்ற சொல் தான் இந்த கவிதையின் பிறவி பயண் என்று பட்டது. வாழ்ந்து என்றால் ஒரு தொடர்ச்சி அதனை அடுத்த வார்த்தை கொண்டு இந்திய ஆன்மீகம் உபதேசிக்கும் விடுதலை நோக்கி நகர்த்துகிறது. மனிதன் கண்ட மாயம் இந்த காலம் அதன் ஒவ்வொரு நொடிகளும் அந்த மாயத்தை கடந்த புரிதலை உணர்த்த அத்தனை வாய்ப்புகளை தந்துக்கொண்டே தான் இருக்கிறது. நேற்று காலை இந்த கவிதையை வாசித்தம் ஒரு சிலிர்ப்பு.

ஒரு புழுவின் ஓளியை கண்ட அந்த ஒரு நொடிக்குள் வாழ்ந்து தீர்த்ததால் ஒரு குருவின் ஆற்றல் எல்லைகள் அற்று பிரபஞ்சமாக விரிந்துக்கொண்டே இருக்க அதில் தனக்கான சரணாகதியை கண்டடையும் அந்த நொடிப்பொழுதை, கவனிக்க, ஏற்றுக்கொள்ள, கற்று தெளிய, சரணம்!

நாராயணன் மெய்யப்பன்

முந்தைய கட்டுரைஅம்மா இங்கே வா வா யார் எழுதிய பாடல்?
அடுத்த கட்டுரைஅருணாச்சல புராணம்