பொய்க்குற்றச்சாட்டுகள், பெண்கள் -கடிதம்

பெண்கள், சட்டம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நமது நாட்டில் பொய் குற்றச்சாட்டு என்பது மிக அதிகம். சாதாரணமான காசோலை வழக்குகளில் ஆரம்பித்து கற்பழிப்பு வழக்கு வரை அனைத்திலும் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. ஆகவே பெண்கள் சிலர் பொய் வழக்கு தொடுப்பது தவறில்லை அல்லது அதை பெரிதுபடுத்தக் கூடாது என்பது ‘வாதப் பிழை’ என நீங்கள் கற்றுக் கொடுத்துள்ளீர்கள். ஆகவே அப்படிக் கூற மாட்டேன். மாறாக நமது அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளவே இந்த தகவல். மேலை நாடுகளில் பொய் குற்றச்சாட்டுகளுக்கான விளைவுகள் கடுமையாக இருக்கும். இங்கு அவ்வாறில்லை என்பதால் அதிக பொய் குற்றச்சாட்டு வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.

உண்மையில் பெண்களுக்கான சட்டத்தை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்களா? குறிப்பாக படித்த மேல், நடுத்தரவர்க்க பெண்கள் என்ற விவாதத்திற்குள்ளும் நான் செல்ல விரும்பவில்லை, ஏனெனில் அதுவும் முடிவற்ற விவாதமாகவே இருக்கும்.

இன்று இந்தியாவில் பெருமளவில் தவறாக பயன்படுத்தும் சட்டங்களில் ஒன்றாக கருதப்படுவது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சட்டம் (SC & ST Prevention of atrocities Act 1989). நம் சுற்றத்தார் கூற்றின் மூலமும், தனிப்பட்ட அனுபவங்களின் மூலமும் அது உண்மை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவற்றை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவெங்கும் பெரும் விவாதத்திற்கு உட்பட்ட “Dr.சுபாஷ் காசிநாத் மஹாஜன் எதிர் ஸ்டேட் ஆப் மகாராஷ்டிரா” (https://indiankanoon.org/doc/108728085/) வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் U.U லலித் (பின்பு இந்திய தலைமை நீதிபதி ஆனவர்) அமர்வு எவ்வாறு வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் நிருபிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மிக விரிவாக விவாதிக்கிறது.
அதில் கிருஷ்ணன் குறிப்பிட்ட Arnesh kumar vs state of Bihar வழக்கும் மேற்கோள் காட்டப்பட்டு இங்கு கைது என்பது எவ்வளவு முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தியது.

தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில தரவுகளை குறிப்பிட விரும்புகிறேன். (National Crime Records Bureau, Ministry of Home Affairs) 2016-ல் காவல்துறை கையாண்ட பட்டியல் இன, பழங்குடியினர் சார்ந்த வழக்குகளைப் பொறுத்து பட்டியல் இன மக்கள் சார்ந்த வழக்குகளில் 5347 வழக்குகளும் பழங்குடியினர்கள் பொறுத்து 912 வழக்குகளும் பொய் வழக்குகளாக மதிப்பிடப்படுகின்றன. 2015-ல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட 15638 வழக்குகளில் 11024 வழக்குகள் விடுதலை செய்யப்பட்டன. 495 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. 4119 வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்பட்டது. (Reference: Annual Report 2016-2017 published by the Department of Social Justice & Empowerment, Ministry of Social Justice and Empowerment, Government of India)
இவ்வாறு வன்கொடுமை சட்டத்தில் பொய் வழக்குகள் போடப்படுவதும், அதை சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துவதை உறுதி செய்தபின் அவற்றைத் தடுக்கும் விதமாக சில மாற்றங்களை சட்ட விதிகளில் கொண்டுவந்தனர். அதில் முக்கியமானது வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என்ற நிலையை மாற்றியது. மேலும் ஒரு அரசு அலுவலர் இக்குற்றத்தில் ஈடுபட்டால் அவரை கைது செய்ய அவரை நியமிக்க அதிகாரம் உள்ள மேலதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு இன்னும் சில.

இத்தீர்ப்பினால் தேசமெங்கும் பெரும் சர்ச்சையும், போராட்டமும் நிகழ்ந்தது எனவே மத்திய அரசு இத்தீர்ப்பை செயலிழக்கும் வகையில் சில சட்ட திருத்தங்களை கொண்டு வந்து வன்கொடுமை சட்டத்தை பழைய நிலைமையிலே நீடிக்க செய்கிறது.
தலித் மற்றும் பழங்குடியினர் அவர்களின் உரிமைகளை காக்கும் பொருட்டும், ஜாதி என்ற பெயரில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுக்கும் பொருட்டும் கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்தி, பொய் வழக்கு போட்டு, மற்றவர்களை மிரட்டி, தங்கள் சுயநலத்திற்காக செயல்படுகிறார்கள் என்பதை நம் தனிப்பட்ட அனுபவம் மட்டுமன்றி உச்ச நீதிமன்றமே மிக விரிவான தரவுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளது. ஆகவே அந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.

இப்போது நம் முன் உள்ள கேள்வி ஒன்றுதான். இவ்வாறு உண்மை இருக்கையில் நாம் அதை வெளிப்படையாகக் கூறலாமா? விவாதிக்கலாமா? ஒரு தலித் பொய் வழக்கு போடுகிறார் என்று நீங்கள் கூற மாட்டீர்கள் என்று எனக்கு உறுதியாக தெரியும். என்ன காரணம்? அரசியல் சரி என்பதாலா, அப்படி பார்த்து பேசக்கூடிய நபர் நீங்கள் இல்லை. பயமா, நிச்சயமாக இல்லை. பிறகு வேறு என்ன காரணம். உண்மையை சொல்ல ஏன் தயங்க வேண்டும் என்று கேட்போருக்கு, ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட தரப்பினருக்குத்தான் என் ஆதரவு. அவர்களில் சிலர் தவறு இழைத்தாலும், குறைகள் இருந்தாலும் அவர்கள் பக்கம் நிற்பதே அறம் என் உங்கள் பதில் இருக்கும் என உங்களை அறிந்த அனைவருக்கும் தெரியும்.

மேற்சொன்ன அனைத்து குறைகளும் இருந்தாலும், அனைத்து பிழைகளும் நடந்தாலும் உச்சநீதிமன்றம் கூறியது போல் அல்லது இங்கு பெரும்பான்மையோர் விருப்பப்படுவது போல் வன்கொடுமை சட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் ஒடுக்கப்பட்டோர் மேலும் பாதிக்கப்படத்தான் வழிவகுக்கும். இந்த சட்டங்கள் வந்த பிறகுதான் ஓரளவேனும் அவர்கள் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள் குறைந்தபட்சம் பொதுவெளியில். இவ்வளவு கடுமையான சட்ட விதிகள் இருந்தும், அவர்கள் இன்னும் எவ்வளவு ஒடுக்குமுறையை அனுபவிக்கிறார்கள் என்று மனசாட்சி உள்ள அனைவரும் அறிவர்.

நம் சில அனுபவங்களின் மூலம் அல்லது தரவுகளின் மூலம், தலித் சிலர் பொய்வழக்கு போடுகிறார்கள், வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றோ பேசுவது, விவாதிப்பது அவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். உங்கள் வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் “அவர்கள் தவறு இழைத்தாலும் அதற்கான வரலாற்று நியாயங்கள் அவர்களுக்கு உண்டு”.

நான் மேற்சொன்ன அனைத்து வாதங்களும் பெண்கள் உரிமைகளை காக்கும் சட்டங்களுக்கும் அப்படியே பொருந்தும். பல நூறு ஆண்டுகாலமாக கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு சமூகம், இன்றும் பெரிய அநீதிகளையும், கொடுமைகளையும், குடும்ப வன்முறைகளையும் சந்தித்து வரும் ஓர் சமூகம், சிறிது சிறிதாக சட்ட பாதுகாப்பை பயன்படுத்தி தங்கள் சுதந்திரத்தை, உரிமைகளை மீட்டெடுக்கும் சமூகம், பூரண சமத்துவத்திற்கு இன்னும் பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய சமூகம். இன்னும் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
நாம் எதிர்மறையாக சொல்லும் சிறு கருத்துக்களும் அவர்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாகும். உண்மையில் இங்கு பெரும்பான்மையோர் விரும்புவது பெண்களுக்கு அளிக்கப்படும் சட்ட பாதுகாப்பை, சலுகைகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான். எங்கு சென்றாலும் கேட்கலாம், “இந்தியால எல்லா சட்டமும் பொம்பளைக்கு தான் ஆதரவா இருக்கு, அவங்க நினச்சா என்னவேணா பண்ணலாம்.” மிக சிலர் தான் இதற்கு எதிராக உண்மையாக போராடுகிறார்கள் (முகநூல் போராளிகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்).

ஒவ்வொரு நாளும் சந்திக்கும் வழக்குகள்  அதிர்ச்சியையும், சோர்வையும் அளிக்கின்றன. படித்து ஓரளவு பொருளாதார நிறைவு வந்துவிட்டால் பெண்கள் அவர்களுக்கான சுதந்திரத்தை அடையாளம் என்ற நம்பிக்கை அனைவரிடம் உள்ளது ஆனாலும் உண்மை வேறுவிதமாக உள்ளது. ஆனால் வெளியில் மட்டுமல்ல வீட்டுக்குள்ளும் உடல்ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. வரதட்சணைக்காக இன்றும் தற்கொலைகளும் கொலைகளும் நகரத்திலும் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகளை பற்றி சொல்லவே தேவையில்லை. வெளியிடங்களில் மட்டுமல்ல வீட்டிற்குள். இப்போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  ஒரு வழக்கிற்காக (legal aid) தயாராகி கொண்டிருக்கிறேன். முதல் குற்றவாளிக்கு மரணதண்டனை, இரண்டாம் குற்றவாளிக்கு ஆயுள். வழக்கு தொடுத்த பெண்ணின் தந்தை மற்றும்  தாய்தான் குற்றவாளிகள். பெண்ணின் வாக்குமூலத்தை கண்ணீரின்றி யாரும் படிக்க முடியாது.

நீங்கள் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல, இன்றைய முக்கிய சிந்தனையாளர், என்னைப் போன்ற பலருக்கு ஆசிரியர். அனைத்தையும் விட எப்போதும் ஒடுக்கப்பட்டோர் பக்கம் நின்று அறம் போற்றுபவர். உங்கள் ஒவ்வொரு சொல்லும் மிக வலிமை வாய்ந்தது இன்று மட்டுமல்ல என்றும் நின்று வழிகாட்டுவது. எனவே உங்கள் மாணவனாக உங்களிடம் வேண்டுவதெல்லாம் இதை அனைத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதே.

V.S.செந்தில்குமார், வழக்கறிஞர்

சென்னை.

அன்புள்ள செந்தில்குமார்,

நீங்கள் சொல்லும் கோணம் முக்கியமானதே. தவறாகப் பயன்படுத்தப்படுவது என்பது ஒரு சட்டத்தின் குறைபாடல்ல. அச்சட்டத்தை மறுக்க அது காரணமும் அல்ல. நான் பெண்களுக்கு ஆதரவாக உள்ள குடும்ப வன்முறைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றோ, அல்லது அதன் கீழ் வரும் குற்றச்சாட்டுகள் ஐயத்துடன் பார்க்கப்படவேண்டும் என்றோ கூறவில்லை. நீதிமன்றம் கூறுவதுபோல உடனடியான கைதுநடவடிக்கைகள் இன்றி நீதித்துறை நடுவர்கள் அக்குற்றச்சாட்டுகளின் உண்மையை முதல்நோக்கில் சற்று கவனத்தில்கொள்ளவேண்டும் என்று மட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி எனும் உரையாடல் -கடிதம்
அடுத்த கட்டுரைமதுமஞ்சரி – கடிதம்