என் தாய்மாமன் மணி என்கிற காளிப் பிள்ளை மறைந்தார். என் அம்மாவின் தம்பி. என் அம்மாவுடன் பிறந்தவர்கள் ஏழுபேர். மூத்தவர் வேலப்பன் பிள்ளை. அதன்பின் கேசவ பிள்ளை. அடுத்து தாட்சாயணி. இன்னொருவர் மீனாட்சி. அடுத்தவர் கங்காதரன், பிரபாகரன், அடுத்து என் அம்மா விசாலாட்சி. கடைசியாக காளிப்பிள்ளை.
மணி மாமாவுக்கு போடப்பட்ட பெயர் மணிகண்டன். அப்படித்தான் ஆறுவயது வரை வாழ்ந்தார். பள்ளிக்கூடத்தில் போட கூட்டிச்சென்றவர் ஒரு வயதான தாய்மாமன். அவருக்கு பையனின் பெயர் மறந்துவிட்டது. அதென்ன சின்னப்பையனிடம் போய் அவன் பெயரைக் கேட்பது. அவருடைய தாத்தா பெயர் காளிப் பிள்ளை. அதை போட்டுவிட்டார். மணிகண்டன் காளிப் பிள்ளை ஆக மாறினார்.
ஆனால் மாறவில்லை. எண்பது வயதிலும் மாமாவுக்கு அவர் உண்மையில் மணிகண்டன் என்பவர்தான் என்னும் எண்ணமும், அவரை அநியாயமாக காளிப் பிள்ளை என வேறு எவரோ ஆக மாற்றிவிட்டார்கள் என்ற ஆவலாதியும் இருந்தது. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மேற்படி காளிப் பிள்ளைக்கு இந்த நூற்றாண்டில் இத்தனை வசையை அந்தக்கிழவர் வாங்கிக்கொடுத்துவிட்டார்.
மணி மாமா தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் ஆக பணியாற்றினார். சி.ஐ.டி.யூ இயக்கத்தின் அதியதிதீவிரச் செயல்பாட்டாளர். அவருடைய மூத்த அண்ணா கேசவபிள்ளை வழியாக வந்த கம்யூனிசம். காளிப் பிள்ளை மாமா ஜே.ஹேமச்சந்திரனுக்கு நெருக்கம். தோழர் திவாகரனுக்கு அதைவிட அணுக்கம். பாதிநாள் வாழ்ந்ததே கட்சி அலுவலகத்தில்தான். தலைமாட்டில் செங்கொடி சுருட்டி வைத்திருந்தால்தான் நல்ல தூக்கமே வரும் நிலை.
அவர் திருமணம் செய்துகொண்டது நெடுமங்காடு அருகே வேங்கவிளை என்னும் ஊரில். மாமி அங்கே ஒரு பெரிய குடும்பத்தில் ஒரே மகள். திருமணமாகி கொஞ்சநாளில் மாமா வேங்கவிளை சென்று குடியேறினார்.
என் அப்பா அம்மாவின் குடும்பத்துடன் கொண்ட பூசலால் எங்களை அம்மாவின் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ அனுப்பியதில்லை. நான் கல்லூரி செல்ல ஆரம்பித்தபோது நானே முடிவுசெய்து நட்டாலத்தில் அம்மா வீட்டுக்கும், வேங்கவிளையில் மாமாவீட்டுக்கும் செல்ல ஆரம்பித்தேன். முதல்முறை சென்றபோது என்னை தழுவிக்கொண்டு அழுதார். மாமா பையன்களுடன் அருகிலிருந்த பெரிய பாறைமேல் ஏறிச்சென்றது நினைவிருக்கிறது. வெள்ளையில் நீலக்கோடு போட்ட ஒரு சட்டையும் நீல பாண்டும் வாங்கித்தந்தார்.
1985 வாக்கில் மணி மாமா திருவனந்தபுரம் பஸ்ஸில் இருந்து விழுந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகராகியிருந்தார். காலில் நல்ல அடி. நாலைந்து அறுவைசிகிழ்ச்சை. அவர் இறுதிவரை இயல்பாக நடக்கும்நிலை உருவாகவில்லை. அதன்பின் வேலையை விட்டுவிட்டு வேங்கவிளையிலேயே இருந்தார். அங்கே ஒரு கடை வைத்திருந்தார்.
நான் பார்க்கச்செல்லும்போதெல்லாம் மாமா கண்கலங்குவது வழக்கம். முதலில் கண்டபோது இருந்த அதே உணர்வு. அதன்பின் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என் அம்மா நினைவு வந்துவிடும். அடிக்கடி வராமைக்காக கொஞ்சம் வசை. அதன் பின் உபசரிப்பு. அவர் ஒரு பழைய மனிதர். பழையபாணி கம்யூனிஸ்டு. டிவி வந்தாலும் அதில் நம்பிக்கை இல்லை. இடதுசாரி நாளிதழ்களில் அச்சிடுவதே வரலாற்றுண்மை என்னும் நம்பிக்கை கொண்டவர்.
சென்ற மார்ச் 26 அன்று அவர் மறைந்தார். 84 வயது. சர்க்கரை நோய் இருந்தது. அவருக்கு பஞ்சபாண்டவர்கள் என பிறரால் அழைக்கப்பட்ட ஐந்து மகன்கள். அவர்களில் மூத்தவனாகிய விஜயன் ராணுவத்தில் பணியாற்றினான், மூன்றாண்டுகளுக்கு முன் மறைந்தான். பஞ்சபாண்டவர்களின் வீடுகளும் மாமாவின் நிலத்திலேயே அருகருகே வரிசையாக உள்ளன.
மாமாவின் ‘குழிமூடல் அடியந்திரம்’ என்னும் சடங்குக்கு நான் அண்ணாவுடன் சென்றேன். மாமாவின் ஐந்து மகன்களின் பெண்வீட்டார், முதல்மகனின் மகளின் கணவன்வீட்டார் என மொத்தக்கூட்டமே அருகருகேதான் குடியிருக்கிறது. ஆகவே நல்ல நெரிசல்.
என் அம்மாவின் அக்காக்களின் மகன்களில் ரவி அண்ணா மறைந்துவிட்டார். பிரசாத் அண்ணா ஓர் அறுவைசிகிழ்ச்சைக்குப் பின் ஓய்விலிருக்கிறார். மற்ற அனைவரும் வந்திருந்தனர். அண்ணாக்கள் முன் அறுபது கடந்தாலும் நான் சிறுவனாகிவிடுவேன். “எந்தெடே?” என ஓர் அதட்டல். அதற்கு பம்மிக்கொண்டு சிரிக்கவேண்டும்.
வீட்டுக்கு வந்து அம்மாவின் ‘குடும்ப மரத்தின்’ சித்திரத்தை அஜிதனுக்கு அதன் அத்தனை கிளைகளுடன், சல்லிகளுடன் சொன்னேன். அவனுக்கு மிக ஆர்வமூட்டும் பேசுபொருள் அது. அது ஒரு நாவல் போல விரிந்து விரிந்து செல்வது. பிறப்பு, வாழ்வு, மரணம், மீண்டும் பிறப்பு… தலைமுறைத்தொடர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை. வந்து திகழ்ந்து மறையும் முகங்களின் பெரும் பரப்பு. எல்லாமே கதைகள்தானா என்ற ஐயம் எழும்.
மாமாவின் உடல் கேரள வழக்கப்படி வீட்டுத் தோட்டத்திலேயே எரியூட்டப்பட்டிருந்தது. அங்கிருந்து எலும்பு எடுத்துவந்து வணங்கி வீட்டுமுன் சிலகாலம் வைத்து விளக்கேற்றுவார்கள். பின்னர் ஏதேனும் புனித நீரில் கரைப்பார்கள்.
எலும்பு எடுத்தபின் மூடப்பட்ட குழியில் ஒரு தென்னைமரம், ஒரு சேம்பங்கிழங்குச் செடி, ஒரு மஞ்சள்செடி ஆகியவை நடப்பட்டன. நல்ல வளமான தென்னங்கன்று. நீரூற்றப்பட்டபோது உற்சாகமடைவது தெரிந்தது. இன்னும் நாலைந்தாண்டுகளில் தலைமேல் சிறகு பரப்பி எழும், மேலும் இரண்டு ஆண்டுகளில் காய்கள் தரத்தொடங்கும்.
சொந்தக்காரர் ஒருவர் கம்யூனிஸ்டு. அவர் சிலகாலம் முன்பு இன்னொரு உறவினரின் இதேபோன்ற சடங்கின்போது “இந்தமாதிரி மூடச்சடங்குகள் எல்லாம் இன்னும் கொஞ்சநாள்தான்” என்றார்
“சரி, அறிவார்ந்த சடங்குகள் எவை?” என்று நான் கேட்டேன்.
அவர் தடுமாறியபோது நானே தொடர்ந்தேன். “படத்திறப்பு, மாலை அணிவித்தல், பத்திரிகைகளில் விளம்பரம் அளித்தல், இரங்கல்கூட்டம் நடத்துதல், இரங்கல் கட்டுரைகள் எழுதுதல், மலர்வெளியிடுதல், நினைவு மண்டபம் கட்டுதல்… இல்லையா?”
“ஆமாம்” என்றார்.
”ஆனால் அவை அனைத்தையும் விட அறிவார்ந்ததும் ஆன்மிகமானதும் இப்படி ஒரு மரம் நடுதல். ஒரு மனிதன் சென்றான், அவன் இடத்தில் ஒரு மரம் நின்றிருக்கிறது என்பதே ஓர் உச்சகட்ட கவித்துவம். அதிலுள்ள தரிசனம் பல்லாயிரமாண்டுக்கால தொன்மை உள்ளது” என்றேன். “ஒரு மனிதனுக்கு நிகராக இங்கே வைக்கப்படத்தக்கது ஒரு மரம் மட்டுமே”
இந்தத் தென்னை இங்கே நிற்கும். இனியும் வேங்கவிளை வரவேண்டியிருக்கும். சொந்தங்கள் பாதி இங்கேதான். அப்போது இந்த மரத்தை வந்து பார்ப்பேன். ஒருவேளை இதிலிருந்து ஓர் இளநீரையும் நான் குடிக்கக்கூடும். மணிமாமாவின் பனித்த கண்கள் பற்றிய நினைவுடன்.