துணைவன்: மின்னூல் வாங்க
துணைவன் நூல் வாங்க
“தம்பி காலம்பூரா மக்களை அடிமையா வச்சிருக்கிறது எது? அடியா, உதையா, சாவா என்ன? இல்லை. எத்தனை பேர அடிக்க முடியும்?எல்லோரையும் கொன்னா அடிமையே இருக்கமாட்டானா என்ன? அடிமைய கட்டி வைக்கிற சங்கிலின்னா அது பயம்தான். என்னமோ நடந்துரும்கிற பயம்.. அந்த பயத்த அறுத்தா போதும் விடுதலை தானா வரும். இப்ப அந்த பயத்தை அறுத்துட்டோம்ல. இன்னிக்கு ஒரு ஊருக்குள்ள நுழைஞ்சுருவீங்களா? என்ன? இன்னிக்கு உங்க எலும்புல குளிர் வருதுல்ல. அதை அவன் பார்க்கிறான். அப்ப நாம அடிச்சாலும் வலிக்கும்னு தெரிஞ்சுக்கிறான். நம்மளை பார்த்து அவனும் பயப்படுவானு தெரிஞ்சுகிட்டான்.”
விடுதலை சினிமாவுக்கு ஆதாரமான துணைவன் கதையில் வரும் வரிகள் இவை. 1992ல் இந்தக் கதை எழுதும்போது திருமாவளவன் ’அடங்கமறு, அத்துமீறு’ என்னும் கோஷத்துடன் தலித் மக்களை திரட்ட களமிறங்கியிருந்தார். நீங்கள் எழுதிய வாத்தியார் அல்லது கோனார் கதாபாத்திரத்தில் திருமா சாயல் உண்டா?
தமிழ்க்குமார்
அன்புள்ள தமிழ்க்குமார்,
விடுதலை சினிமா நேரடியான யதார்த்தச் சித்தரிப்பு அல்ல. கலைக்கு நேரடி யதார்த்தம் தேவை இல்லை. நேரடி வரலாறும் தேவை இல்லை. நேரடியான யதார்த்தம், நேரடியான வரலாறு ஆகியவற்றை கலையில் தேடுபவர்களுக்கு கலை என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் எப்போதும் அதை எளிய அரசியல்வாதிகள் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
நேரடி யதார்த்தம், நேரடி வரலாறு ஆகியவை கலைக்கு ஒருவகையில் எதிரானதும்கூட. அதற்கு ஆவணமதிப்பு மட்டுமே உண்டு. கலை மதிப்பு இல்லை. ஏன்? நேரடியான வரலாற்றில் நிகழ்வுகளுக்கு ஓர் ஒழுங்கு உள்ளது. அந்நிகழ்வுகளை ஒட்டி பொதுவான ஒரு மனப்பதிவு அனைவரிடமும் இருக்கும். அந்த நிகழ்வுகளின் ஒழுங்கையும், அந்த மனப்பதிவுகளையும் மீறி எவராலும் நேரடி வரலாற்றையோ செய்தியையோ கதையாக எழுதவோ சினிமாவாக எடுக்கவோ முடியாது. அவ்வாறு எழுதினாலோ, சினிமாவாக எடுத்தாலோ அந்தப் படைப்பில் எந்த நாளிதழிலும் கிடைக்கும் செய்திகளே இருக்கும். விக்கிப்பீடியாவை சினிமாவாக எடுத்ததுபோல் இருக்கும்.
கலைப்படைப்பில் அதைப் படைப்பவனின் பார்வையும், அவன் முன்வைக்கும் கருத்துமே முக்கியமானவை. அவற்றை முன்வைக்கவே அவன் ஒரு கலைப்படைப்பை உருவாக்குகிறான். அதிலுள்ள புறவாழ்க்கைச் சித்தரிப்பு என்பது அதை உருவாக்கும் கலைஞனின் அகத்திலுள்ள பார்வையையும் கருத்தையும் முன்வைப்பதற்காக அவன் உருவாக்குவது மட்டுமே. ஆகவேதான் அதை புனைவு என்கிறோம். புனைவெழுத்தின் முதல் அடிப்படையே அதிலுள்ள உலகச்சித்தரிப்பும் சரி அதிலுள்ள வாழ்க்கைச் சித்தரிப்பும் சரி அந்த கலைஞனால் புனையப்பட்டவை என்பதுதான். அவன் உருவாக்கிய உலகம் அது.
அந்த உலகை உருவாக்க அவன் வெளியே நிகழ்ந்த வரலாற்றையும், செய்திகளையும் எடுத்துக் கொள்கிறான். அவற்றை தன் போக்கில் கலந்து, தனக்கு தேவையானவற்றை முன்வைத்து, தனக்கு தேவையானபடி சிலவற்றை மாற்றி தன் உலகை உருவாக்குகிறான். அந்த படைப்பின் நோக்கத்திற்கு ஏற்ப அவன் நிகழ்வுகளை அடுக்குகிறான். நிகழ்வுகளுக்கு ஒரு மையத்தை அளிக்கிறான்.
நிஜ வாழ்க்கையிலோ, நிஜ வரலாற்றிலோ நிகழ்வுகளுக்கு அப்படி ஒரு தர்க்கபூர்வமான ஒழுங்கு இருக்காது. அவற்றுக்கு மையம் என ஒன்று இருக்காது. அவற்றில் இருந்து எந்தக் கருத்தையும் நாம் அடைய முடியாது. அவற்றில் மையம் என்றும் கருத்து என்றும் தென்படுபவை முழுக்க நிஜவாழ்க்கையையோ வரலாற்றையோ விளக்குபவர்கள் சொல்வதுதான். அவர்கள் வாழ்க்கை மேலும் வரலாற்றின்மேலும் ஏற்றுவதுதான்.
அவ்வாறு வாழ்க்கையையும் வரலாற்றையும் விளக்குபவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப வாழ்க்கையையும் வரலாற்றையும் புனைந்துதான் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் சொல்வது ‘உண்மை’ என்று வாதிடுவார்கள். அதை ஏற்காதவர்களை வசைபாடுவார்கள். அந்த அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் எளிய தொண்டர்கள் வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் அவர்கள் சொன்னபடி அர்த்தமும் மையமும் உண்டு என நம்பி கூச்சலிடுவார்கள்.
ஆனால் கலைஞன் வாழ்க்கையையும் வரலாற்றையும் புனைந்து முன்வைப்பதாக அவனே சொல்கிறான். இது வரலாறு அல்ல, நான் புனைந்த வரலாறு என்றே அவன் சொல்கிறான். இதில் நான் முன்வைக்கும் பார்வை உள்ளது, அந்தப் பார்வையை நீங்கள் பரிசீலித்துப் பாருங்கள் என்று மட்டும்தான் அவன் சொல்கிறான். ஆனால் அரசியல்வாதி சொல்லுவதெல்லாம் ‘உண்மை’ என்று நம்பும் எளிய மனம் கொண்ட கும்பல்கள் கலைஞன் அதே ‘உண்மையை’ அப்படியே தானும் சொல்லாவிட்டால் வசைபாடுகின்றன.
*
விடுதலை சினிமாவுக்கு வருகிறேன்.
1967ல் வங்காளத்தில் நக்சல்பாரி என்னும் ஊரில் ஒரு ஆயுதம் தாங்கிய பழங்குடியினரின் கிளர்ச்சி நிகழ்ந்தது. அதை ஒருங்கிணைத்தவர்கள் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆகிய இரண்டில் இருந்தும் கருத்துமாறுபாடு கொண்டு பிரிந்து சென்ற ஒரு குழுவினர். அவர்கள் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்) என தங்களை அழைத்துக் கொண்டனர். 1969ல் அதை ஒரு கட்சியாக தொடங்கினர்.
அவர்களுக்கும் முந்தைய இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கும் என்ன முரண்பாடு? அதற்கு ஒரு வரலாற்றுச் சித்திரம் உண்டு. 1925 ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தொடங்கப்பட்டது. உலகம் முழுக்க கம்யூனிஸ்டு இயக்கங்கள் மக்களை ஆயுதமேந்தச் செய்து, வன்முறைப்புரட்சி வழியாக அரசை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றி, கம்யூனிச அமைப்பை கொண்டுவருவதையே ஒரே செயல்முறையாக கொண்டிருந்தார்கள். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் அந்த வழியையே பின்பற்றியது.
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்று காந்தியின் வழிகாட்டலில் நேருவும் பட்டேலும் காபந்து அரசை அமைத்தனர். அந்த அரசு இன்னும் வலுவாக நிலைகொள்ளவில்லை, ஆகவே அந்த அரசை எளிதில் வீழ்த்தலாம் என கணக்கிட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி 1948 ல் கல்கத்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்திய அரசின்மேல் ஆயுதப்போரை அறிவித்தது. அப்போரை பட்டேல் போலீஸ் நடவடிக்கை வழியாக ஒடுக்கினார்.
விளைவாக இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி ஆயுதப்போராட்ட வழியை கைவிட்டு ஜனநாயக வழிமுறையை தேர்ந்தெடுத்துக் கொண்டது. 1957ல் கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி தேர்தல் வழியாக ஆட்சியைப் பிடித்தது. உலக அளவிலேயே ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டு, தேர்தல் வழியாக ஆட்சியை அடைந்த முதல் கம்யூனிஸ்டுக் கட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சிதான்.
இந்நிலையில் 1961 முதல் சோவியத் ருஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எல்லைத் தகராறு மூண்டது. இரண்டு கம்யூனிஸ்டு நாடுகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. விளைவாக இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் இரண்டாகியது. கடுமையான மோதல்களுக்குப்பின் சீன ஆதரவு கொண்டவர்கள் 1964ல் பிரிந்து இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)ஐ தொடங்கினர். ரஷ்ய ஆதரவு கொண்டவர்கள் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியாக நீடித்தனர். சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ. என இரு கட்சிகளாக இன்றும் நீடிக்கின்றனர்.
இப்பிரிவினையின் போது கேரளத்திலும் வங்காளத்திலும் இவ்விரு பிரிவுகளும் கடுமையான ஆயுதம்தாங்கிய பூசல்களில் ஈடுபட்டனர். ஏராளமான கொலைகள் நிகழ்ந்தன. சி.பி.ஐ கட்சி கம்யூனிஸ்டுகளின் நேர் எதிரியான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இச்சூழலில்தான் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சிக்குச் சென்றவர்கள் 1967ல் அதிலிருந்தும் விலகிச் சென்றனர். அந்த விலகலுக்கு ஓர் அமைப்பு உருவாக்கியளித்தவர் சாரு மஜூம்தார். அவருக்கு உதவியவர் பழங்குடித் தலைவரான கனு சன்யால்.
எம்.எல் கட்சிக்கும் மற்ற கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்குமான முரண்பாடு இதுதான். மார்க்ஸின் கொள்கைப்படி முதலாளித்துவம் அதன் உள்முரண்பாடுகளால் தானாகவே வீழ்ச்சி அடையும். ஒரு பெரிய மரம் பட்டுப்போகும்போது அந்த இடத்தை புதிய மரம் வளர்ந்து நிரப்புவதுபோல கம்யூனிசம் உருவாகி புதிய உலகை உருவாக்கும். முதலாளித்துவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தி, அதை மேலும் பலவீனப்படுத்தி, தொழிலாளர்களை திரட்டி, அமைப்பாக்கி, முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ளச் செய்வதே கம்யூனிஸ்டுகள் செய்யவேண்டியது.
மார்க்ஸின் இந்த பார்வையில் இருந்து லெனின் முரண்பட்டார். முதலாளித்துவம் முதிர்ந்து முரண்பாடுகளால் சிதையும்வரை காத்திருக்கவேண்டியதில்லை என்றார். மொத்த சமூகமும் மாறவேண்டிய தேவையும் இல்லை. ஆயுதமேந்திய ‘மக்கள் ராணுவங்களை’ உருவாக்கி, அவற்றைக்கொண்டு முதலாளித்துவ அரசை தாக்கி, அதை அழித்து, புரட்சி அரசை நிறுவலாம் என்றார். அதற்கு ஆதரவாக உள்ள எல்லா சக்திகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த முதலாளித்துவ அரசின் ராணுவத்தின் ஒரு பிரிவு உதவிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளலாம். அவ்வாறு அங்கே ஒரு புரட்சி 1917ல் வந்தது.
தேர்தல்பாதையை ஏற்றுக்கொண்ட இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி அதுவே மார்க்ஸின் வழிகாட்டல் என்றது. முதலாளித்துவம் தன் முரண்பாடுகளால் பலவீனமுறுவதற்கு முன் ஆயுதப்போர் செய்தால் பயனிருக்காது என்றும், படிப்படியாக மக்களை தயார்ப்படுத்துவதே செய்யக்கூடுவது என்றும் சொன்னது. ஆனால் லெனினின் பாதையே சரியானது என்றும், ஆயுதக்கிளர்ச்சி வழியாக இந்திய அரசை வீழ்த்தலாம் என்றும் நம்பியவர்களே தங்களை மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட் என்று சொல்லிக்கொண்டனர்.
அவர்களின் அந்த நம்பிக்கைக்குக் காரணம் சீனா. சீனாவில் மாவோ சே துங் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்திருந்தார். ஆனால் அவருடைய கனவு ஒரு ‘மகாசீனா’ என்ற பேரரசுதான். அதில் வடகிழக்கு இந்தியா முழுமையாக அடங்கும். அப்படியே வங்காள விரிகுடா வரை வந்து டாக்காவை கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. சீனா. ஆகவே சீனா எம்.எல் குழுக்களுக்கு உதவியது. இன்று எம்.எல் குழுக்கள் தங்களை ‘மாவோயிஸ்டுகள்’ என சொல்லிக்கொள்கின்றன.
இந்திய அரசு நக்சலைட் கிளர்ச்சியை போலீஸ் நடவடிக்கை வழியாக ஒடுக்கியது. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நக்சலைட் இயக்கத்தை ஒடுக்குவதில் மிகப்பெரும் பங்கு வகித்தது இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிதான். 1975ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமலாகியது. வங்கத்தில் கவர்னர் சித்தார்த்த சங்கர் ரே நக்சலைட்டுகளை வேட்டையாடியபோது இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி அவரை ஆதரித்து நக்சலைட் வேட்டையை முன்னின்று நடத்தியது. கேரளத்தில் சி.அச்சுதமேனன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் கூட்டணி அரசு இருந்தது. அதன் உள்துறையை ஆட்சி செய்தவர் காங்கிரஸ்காரரான கே.கருணாகரன். அந்த அரசுதான் நக்சலைட் வேட்டையை ஆடியது.
இந்த பின்னணிச் சித்திரம் மிக அடிப்படையானது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த எளிய புரிதல்கூட இல்லாமல்தான் இங்கே விடுதலை சினிமாவை ஒட்டி அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
*
வங்காளம், பிகார், ஆந்திரா, கேரளம் ஆகிய மாநிலங்களுடன் ஒப்புநோக்க தமிழகத்தில் எம்.எல் குழுக்களின் அரசியல் நடவடிக்கைகள் மிகமிக குறைவானவையே. வன்முறையை பொறுத்தவரை ஒரு தொடக்கம் மட்டுமே இருந்தது. அதன்பின் அவர்கள் வெறுமே பிரச்சார அரசியலே செய்தார்கள். அவர்கள் அனேகமாக நேரடி வன்முறை எதிலும் பெரிதாக ஈடுபடவில்லை. மிகச்சில இடங்களில் மிக மெல்லிய எதிர்ப்புகளே நிகழ்ந்தன. திருப்பத்தூரில் ஒரு காவலர் கொல்லப்பட்டிருக்கிறார்.
1987 ல் அரியலூர் மருதையாற்றுப் பாலத்தில் நடைபெற்ற ஒரு ரயில்கவிழ்ப்பு எம்.எல்.குழுக்களில் ஒன்றான தமிழர் விடுதலைப் படையின் நாசவேலையால் நிகழ்ந்தது. அது கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது என்று குற்றம்சாட்டி கர்நாடகத்தை எச்சரிப்பதற்காக நடத்தப்பட்டது. கவிழ்க்கப்பட்டது சென்னையில் இருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில். செத்தவர்கள் எல்லாமே தமிழர்கள். அதில் தண்டிக்கப்பட்ட தடா பெரியசாமி தூக்குத்தண்டனை பெற்று, பின்னர் விடுதலையானார். திருமாவளவனுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடங்கினார். இன்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான தலைவராக திகழ்கிறார்.
1980 களின் இறுதியிலேயே நக்சலைட் (எம்.எல்) குழுக்கள் அரசுடன் மோதமுடியாமல் தேக்கமுற்றுவிட்டன. பல பிரிவுகளாக உடைந்தும் விட்டன. பின்னர் அவர்கள் குறிப்பிடத்தக்க எந்த வன்முறையையும் அதன்பின் நிகழ்த்தவில்லை. சில ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் மட்டுமே அவர்களின் செயல்பாடுகளாகச் சொல்லப்படுகின்றன.
1988 முதல் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி தொடங்கியது. அது எம்.எல். குழுவினர்கள் நடுவே அவநம்பிக்கையை உருவாக்கியது. ‘தேசிய இனப்பிரச்சினை’ சார்ந்த விவாதங்கள் உருவாயின. அதை தொடர்ந்து எம்.எல். இயக்கங்கள் உடைந்துகொண்டே இருந்தன. அதாவது இந்தியா என்பது ஒரு தேசிய இனமா, அல்லது தமிழர் தனி தேசிய இனமா என்னும் விவாதம். இந்தியாவில் கம்யூனிசத்திற்காக போராடவேண்டுமா, அல்லது தமிழகத்தில் கம்யூனிசத்துக்காகப் போராடவேண்டுமா என்ற விவாதம். ஆனால் இந்த விவாதத்தை ஒட்டி கடும் வசைபாடல்கள் நிகழ்ந்தன. பக்கம் பக்கமாக வசைகள் எழுதி குவிக்கப்பட்டன.
இத்தகைய விவாதங்கள் கம்யூனிஸ்டுகளின் மேலோட்டமான பாவனைகள் என்றே தோன்றும். உதாரணமாக, முன்பு டிராட்ஸ்கி உலகை முழுக்க கைப்பற்றியபின் ஒட்டுமொத்தமாகவே கம்யூனிஸத்தை கொண்டுவர முடியும் என்று சொன்னார். இல்லை, கைப்பற்றிய நாடுகளில் கம்யூனிசத்தை கொண்டுவந்தபின் படிப்படியாக உலகை கைப்பற்றலாம் என்றார் ஸ்டாலின். ஏராளமான விவாதங்கள் உலகமெங்கும் நிகழ்ந்தன. ஆனால் அது டிராட்ஸ்கிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான ஆணவப்போர் அல்லது அதிகாரப்போர்தான். அதில் டிராட்ஸ்கி தரப்பு தோற்கடிக்கப்பட்டது. டிராட்ஸ்கி தென்னமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். ஸ்டாலினின் உளவாளி அவரை தொடர்ந்து சென்று தேடிப்பிடித்து பனிக்கோடாரியால் மண்டையை அடித்து உடைத்து கொன்றார். டிராட்ஸ்கியின் மகனும் கொல்லப்பட்டார்.
இந்த விவாதங்களே இன்று மறக்கப்பட்டுவிட்டன. உதாரணமாக ஒன்று சொல்கிறேன். இன்று பொன்பரப்பி தமிழரசனை ஒரு எம்.எல். திருவுருவாக வழிபடுகிறார்கள். அவர் எம்.எல் குழுவைச் சேர்ந்தவர். வங்கி ஒன்றை கொள்ளையிட முயன்றபோது பொதுமக்களால் கொல்லப்பட்டார். அவரை இன்று வழிபடுபவர்களில் தமிழ்த்தேசியர்கள், தலித் செயல்பாட்டாளர்கள், பெரியாரியர்கள் எல்லாம் உண்டு. ஆனால் அவர் உழைப்பாளர் விடுதலைக்கு நிலப்பிரபுக்களையும் தரகுமுதலாளித்துவத்தையும் வெல்வதே முக்கியம் என்று சொன்னார்.
பார்ப்பனர்களுக்கு முன்னரே சாதிமுறை இருந்தது என்று சொல்லும் தமிழரசன் பார்ப்பனியம்தான் எதிரி என்று சுட்டிக்காட்டுபவர்கள் உள்ளூர் தரகுமுதலாளித்துவத்திற்கு ஆதரவாக பிரச்சினையை திசை திருப்புபவர்கள் என்கிறார். அம்பேத்கர், பெரியார் இருவருமே வர்க்க சமரசவாதிகள், உழைப்பவர்களை சுரண்டல்காரர்களிடம் காட்டிக்கொடுத்தவர்கள், வாய்ப்பேச்சு மன்னர்கள் என்கிறார். தமிழரசனின் ‘மீன்சுருட்டி ஜாதி ஒழிப்பு அறிக்கை’யிலேயே இவை தெளிவாக உள்ளன.
இது அன்றைய எம்.எல் இயக்கங்களின் பழைய நிலைபாடு. ஒரு சாரார் பிரிந்து தமிழ்த்தேசியம் பக்கம் சென்றனர். அவர்களுக்கு பெரியார் தமிழ் எதிரி. இன்னொரு சாரார் சாதியொழிப்பாளர்கள் ஆனார்கள். அவர்கள்தான் பெரியார், அம்பேத்கர் என பேசியவர்கள். அவர்கள் மாறி மாறி கடுமையாக தாக்கிக் கொண்டனர். தமிழரசன் வங்கிக்கொள்ளைக்கு முயன்று மக்களால் கொல்லப்பட்டபோது எதிர்முகாம் எம்.எல் குழுவினர் அது ‘தவறான கொள்கையின் விளைவான சாவு’ என்றுதான் சொன்னார்கள்.
1992 ஜூன் மாதம் வாச்சாத்தி என்னும் சிற்றூரில் வனத்துறையினரும் காவலர்களும் இணைந்து கூட்டுவன்முறையை நிகழ்த்தினர். வாச்சாத்தி ஒரு மலைக்கிராமம். அங்கே சில குற்றம்சாட்டப்பட்டவர்களை தேடி போலீஸ் சென்றது (அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் என்பது போலீஸின் தரப்பு) போலீஸை அந்த ஊரில் சிலர் சுற்றி வளைத்து பிடித்து அடித்தனர். அது போலீஸின் ஆணவத்தைச் சீண்டியது. போலீஸ் எப்போதுமே அந்த ஆணவம் கொண்டதுதான். போலீஸ்படை வாச்சாத்தியைச் சுற்றி வளைத்து பெரும் கூட்டுவன்முறையை நிகழ்த்தியது என செய்திகளும், பின்னர் விசாரணை அறிக்கையும் சொல்கின்றன.
வாச்சாத்திக்கும் எம்.எல்.குழுவினருக்கும் சம்பந்தமில்லை. அந்த கொடுமையை மக்கள் மத்தியில்கொண்டுவந்து அரசுடன் போராடியவர் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு அன்று எம்.எ.ஏ ஆக இருந்த மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியை சேர்ந்த அண்ணாமலை. பொதுவாக வாச்சாத்தி நிகழ்வுக்கு நீதிகேட்டு நடந்த போராட்டமே சி.பி.எம் நடத்தியதுதான். அன்று தருமபுரி மாவட்டத்தில் அரசூழியராகவும், சி.பி.எம் தொழிற்சங்க உறுப்பினராகவும் நான் இருந்தேன்.
வாச்சாத்தி வன்முறை, வீரப்பன் வேட்டை தொடர்பான வன்முறை ஆகியவை ஏறத்தாழ ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவை. அவற்றிற்கான எதிர்ப்பில் எம்.எல் குழுக்கள் ஆற்றிய பங்களிப்பென ஏதுமில்லை. அவர்களின் அமைப்பு வல்லமை இல்லாமலாகி பத்தாண்டுகள் கடந்துவிட்டிருந்தன. அவர்களின் உதிரிக்குழுக்கள் வழக்கமான ’ஜனநாயக பூர்வ’ எதிர்ப்பை சிறு அளவில் பதிவுசெய்தனர். அவ்வளவுதான்.
ஆகவே விடுதலை படம் காட்டும் யதார்த்தம் என்பது அதன் இயக்குநர் 1992ல் நிகழ்ந்த வாச்சாத்தி நிகழ்வையும், அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த எம்.எல் குழுக்களின் செயல்பாட்டையும் புனைவுச்சுதந்திரத்தைப் பயன்படுத்தி இணைத்துக்கொண்டு உருவாக்கியதுதான்.
வாச்சாத்தி சம்பந்தமான நிகழ்வுகளை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான விசாரணைக் குழுவினரின் அறிக்கையில் இருந்து எடுத்து கொஞ்சம் நாடகீயமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். கூடவே வீரப்பன் வேட்டைக்குச் சென்ற போலீஸார் நிகழ்த்திய கொடுமைகள் பற்றிய சதாசிவம் கமிஷன் அறிக்கையை ஒட்டியும் நிகழ்வுகளை அமைத்துக் கொண்டதாகச் சொன்னார்கள். விரிவான செய்திப் பதிவுகளும் உள்ளன.
விடுதலை சினிமா கார்ப்பரேட் அமைப்புகளின் நில அபகரிப்பை எம்.எல். குழுக்களின் தலைவர் ‘வாத்தியார்’ எதிர்ப்பதாகக் காட்டுகிறது. கார்ப்பரேட் நில அபகரிப்பு என்பது 2000த்துக்குப் பிந்தைய பேசுபொருள். எம்.எல் அமைப்பினர் போராடியது நிலவுடைமையாளர்களுக்கு எதிராகத்தான். கார்ப்பரேட் நிலக் கொள்முதல் செயல்பாடுகளை எம்.எல். அமைப்புகள் எதிர்ப்பது சட்டீஸ்கர், உத்தராகண்ட் பகுதியின் யதார்த்தமே ஒழிய தமிழக யதார்த்தம் அல்ல.
நான் எழுதிய துணைவன் கதையில் எம்.எல். அமைப்புகள் சிதைந்து தலைவர்கள் ஆளுமைப் படுகொலைக்கு ஆளாக்கப்படும் சூழலே காட்டப்படுகிறது. அது 1992ல் இருந்த நிலைமை. கோனார் என்ற பேரில் தலைமறைவாக இருந்து கைதான தோழர் ஒரு தனிமனித வன்முறையைச் செய்துவிட்டு அது ஏன் தவிர்க்கமுடியாதது என்றுதான் கதையில் சொல்கிறார். தன் செயலின் பயனாக எளியமக்கள் மேல் தாக்குதல் நடத்த அரசு அஞ்சும் என்று சொல்கிறார்.
உண்மையில் அப்படி எதிர்வன்முறை ஏதும் நிகழவில்லை. (ஆனால் அப்படி ஒரு செயல் திட்டமிடப்பட்டது என கேள்விப்பட்டேன்). கதையில் கோனார் என்ற பெயரில் போலீஸ் ஆவணங்களில் உள்ள தோழர் இயக்கத்தின் உள்சண்டை மற்றும் தலைமைமேல் நிகழும் ஆளுமைக்கொலைகளால் கசப்புற்றிருக்கிறார். அந்தக்கசப்பையே நையாண்டியாகவும் விரக்தியாகவும் வெளிப்படுத்துகிறார். சாவுதான் தனக்கு சிறப்பு என அவர் கருதுவது அதனாலேயே.
(2020 ல் எம்.எல். அமைப்புகளின் தலைமைச் சிந்தனையாளரும், எம்.எல் அமைப்புகளையே நிறுவியவருமான மருதையன் அவதூறு செய்யப்பட்டு, ஆளுமைக்கொலை செய்யப்பட்டு இன்று உளமொடுங்கி அமர்ந்திருப்பதை நினைவுகூருங்கள். மருதையன், வினவு, பின்தொடரும் நிழலின் குரல், அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு)
துணைவன் கதை எம்.எல். குழுக்கள் தங்களைப் பற்றி புனையும் கதைகளை திரும்பச் சொல்லும் ஒன்று அல்ல. அது இரு துருவங்களின் முரண்பாட்டைப் பேசுவது. ஓர் எளிய இளைஞன் எப்படி போலீஸ் மனநிலைக்குச் செல்கிறான், ஒரு புரட்சியாளர் எப்படி தன்னுள் இருக்கும் எளிய மனிதனை கண்டடைகிறார் என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.
இலக்கியம் எல்லா மொக்கைகளும் வாயலம்பிக்கொண்டிருக்கும் சில்லறை அரசியல் கருத்துக்களைச் சொல்வது அல்ல. அது போலீஸ், புரட்சியாளர் என இரு கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாக உள்ளே நுழைந்து அங்கிருக்கும் மனிதர்களை கண்டடைவது. கொஞ்சம் இலக்கியம் வாசிப்பவர்களுக்கு அது தெரியும். அது அவர்களுக்காகவே எழுதப்பட்டுள்ளது. அரசியல் முச்சந்திக் கோஷங்களைப்போடும் அசடுகளுக்காக அல்ல.
*
இடதுசாரிகள், எம்.எல். குழுக்கள் எதைச் செய்ய நினைத்தார்களோ அதைச் செய்தவர் திருமாவளவன். வன்முறை இல்லாமல், தன் மக்களை போலீசுக்குக் காவுகொடுக்காமல், அனைத்து சட்டபூர்வ வழிகளையும் பயன்படுத்தி, ஜனநாயக பூர்வமாக தன் மக்களுக்கு அதிகாரத்தை எதிர்ப்பதென்றால் என்ன என்று கற்றுக்கொடுத்தார். ஒற்றுமையின் ஆற்றலைக் காட்டினார். தமிழ்ச்சமூகத்தின் அடித்தளம் அவரால்தான் மாறியது.
நான் ஏன் திருமாவை ஆதரிக்கிறேன் என பலர் கேட்கிறார்கள். துணைவன் கதையில் என் கசப்பும் அவநம்பிக்கையும் கோனார் வழியாக வெளிப்படுகின்றன. வாச்சாத்திக்கு தடியுடன் சென்ற போலீஸ்காரரும் எளியகுடியில் பிறந்தவர் அல்லவா, என்ன நிகழ்ந்தது அவருக்குள் என்பதே அந்தக்கதை. அந்தக் கசப்பும் அவநம்பிக்கையும் திருமா வந்தபின், அவர் செய்து காட்டிய மாற்றத்தைக் கண்டபின்புதான் மாறியது. அவ்வளவுதான் என் அரசியல். மற்றபடி நான் எந்த அரசியலும் பேச விரும்பவில்லை.
கோனார் மக்களின் நலம்நாடிய புரட்சியாளர். மக்களுக்காக வாழ்ந்து மடிந்தவர். ஆனால் மக்கள் தலைவர் அல்ல. திருமா மக்கள் தலைவர். கோனார் எண்ணியதை நிறைவேற்றியவர் திருமாதான்.
ஜெ