ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்’ – கடிதம்

பஷீரிய அழகியலைக் கையிலெடுத்த இளம் தலைமுறைப் புனைவு எழுத்தாளர்கள் தமிழில் குறைவே. வாசிப்பதற்கு எளிமையாகத் தோன்றும் அவை எழுதுபவருக்கு அத்தனை எளிமையான ஒன்றாக இல்லாமலிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அஜிதனின் ‘ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்’  பஷீரிய அழகியலில் அமைந்த ஒரு அழகிய குறுநாவல்.

இந்தக் குறுநாவல் முழுக்க வரும் மனிதர்களும், பிராணிகளும் ஒருவர் மற்றொருவருக்கு அளிக்கும் நிபந்தனையற்ற கனிவென்னும் வலைப்பின்னலால் சூழப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கனிவு எந்த பாவனைகளோ நாடகீய உச்சங்களோ இல்லாமல் இயல்பாக மண்ணின் ஈரமென அவர்களில் சுரந்தவண்ணம் இருக்கிறது. கதையின் மொத்த சாரத்தையும் குட்டன் ஒரு கீற்றாய் சொல்லிவிடுகிறது. அதன் அன்பின் புற வெளிப்பாடு இரண்டு இன்ச் வாலசைப்பு மட்டுமே. குழந்தைகளுக்கும் பிராணிகளுக்கும் உணவளித்த வண்ணம் இருக்கும் நிஷா மாமி; இட்லிப் பூவை தங்கையிடம் பகிர்ந்து தேனுண்ணும் போது அவள் முகத்தின் மலர்வை ரசிக்கும் அஜி; அரைக்கண் மூடினாலும்  முழு நோக்கையும் பாப்புவின் மேல் வைத்திருக்கும் குட்டன்; வெள்ளத்தில் மீண்ட குட்டனின் நெற்றியை வருடும் அஜியின் தொடுகை; தேன் சுரப்பதற்காகவே தினமும் பூத்துக் குலுங்கும் இட்லிப் பூச்செடி; அடிக்கும் பாவனையில் மெலிதாய் தொட்டுச் செல்லும் குழந்தை பாப்பு; இனிக்கும் தென்னையின் நுனியை குழந்தைக்கு கொடுத்து மகிழும் முதிய தொழிலாளி; Tree of Life போல சகல உயிர்களுக்கும் இடமளிக்கும் கொய்யா மரம்;  குழந்தையிடத்திலும் ‘கொள்ளாமா’ என்று பரிவுடன் விசாரிக்கும் ஊர் மக்கள்; இவை அனைத்தையும் பத்திரமாக பொதிந்து வைத்திருக்கும் பத்மநாபபுரம் கோட்டை; அன்பின் அரவணைப்புடன் வாழ்வின் நிதர்சனங்களை வாஞ்சையுடன் கற்பிக்கும் அம்மா – அப்பா; இப்படிக் குறுநாவல் நெடுக, கதை மாந்தர்கள் மழை நீரை சேகரித்து கீழேயுள்ள இலைகளுக்குக் கையளிக்கும் அந்த யானைக்காதுச் செடிகளைப் போல் கனிவைக் கைமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

வானம் மழையாய் புரக்க, மண் ஈரமாய் ஊற்றெடுக்க, மனிதர்கள் எந்த அலட்டலுமின்றி அன்பைச் சுரந்தவண்ணம் இருந்தாலும், இவை எதுவும் புனிதப்படுத்தப்படவோ, ‘எல்லாம் இன்பமயம்’ என்று  பீடத்திலேற்றப்படவோ இல்லாமல் நீர் செல்லும் திசையில் ஒழுகிச் செல்லும் அஜியின் கப்பல்கள் போல எந்த எடையுமின்றி வாழ்வெனும் நதியில் ஒழுக்கிச் சென்றவண்ணம் இருக்கின்றன. வாழ்வின் சுழற்சியில் மறைதலும், மரணமும், இழப்புகளும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. கிணற்றில் விழும் பூனை, காயங்களால் மரிக்கும் குட்டன், இடி விழுந்து சரியும் தென்னை, இசையை நிறுத்தி மறையும் கிரீட்டிங் கார்ட், நீர் வற்றிப்போகும் குளமும் கிணறும், கோடையின் வெம்மையில் கருகி மறையும் செடி கொடிகள் என மனதை கனக்க வைக்கும் இழப்புகளும், மரணங்களும் கதை நெடுக வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் எல்லா இழப்புகளையும் கதைமாந்தர்கள் அவர்களின் அன்பின் ஈரத்தில் உதிர்க்கும் சில துளிக் கண்ணீருக்குப் பின் இயல்பாகக் கடந்து செல்கிறார்கள். அது போல் ஸ்ரீதேவி டீச்சர், குட்டனைக் குதறிப் போடும் மற்ற நாய்கள், பரணில் பூசலிடும் பூனைகள் என வாழ்வின் இருண்ட மூலைகளும் இயல்பாகக் காட்டப் பட்டிருக்கின்றன. ஆனாலும் மனிதர்கள் பெரும்பாலும் எந்த எதிர்மறைத்தன்மையோ இருண்மையின் சுவடோ அண்டாமல் நகர்ந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள். எல்லோரும் பாப்புவிடம் சொல்லத் தயங்கும் குட்டனின் மரணத்தை பாப்பு கடந்து செல்வது இக்கதையின் அபாரமான இடம் – “அவள் உலகில் காணாமல் போன ஒவ்வொன்றுக்கும் பதில் புதிய ஒன்று தோன்றியது, செத்துப்போனவை எல்லாம் மேலும் அழகாக மீண்டும் பிறந்தன, தீர்பவை அனைத்தும் ஓயாது நிரப்பப்பட்டன”.

ஒரு வாசகனாக இந்தக் குறுநாவல் என்னை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்வதற்கு முக்கியமான காரணம் இதன் மொழியும் வடிவமும். எழுதப்பட்ட கதையாக இல்லாமல் ஒரு கதைசொல்லியால் சொல்லப்பட்ட கதையாக இருப்பதே இதன் வெற்றி. பஷீர், கி.ராஜநாராயணன் போன்ற மேதைகள் தேர்ந்தெடுத்த வடிவம். குறிப்பாக பஷீரில் அனாயாசமாக நிகழ்ந்த அற்புதமான அழகியல். இந்தக் கதையில் அஜிதன் தன் வாழ்க்கைப் பயணத்தின் வழி அந்த அழகியலைத் தனதாக்கிக் கொண்டு ஒரு தேர்ந்த கதைசொல்லியின் இருக்கையில் இயல்பாக அமர்ந்து கூறிச்செல்கிறார்.

குழந்தைகளின் பார்வையில் உலகையும், வாழ்கையையும் உற்று நோக்கி, அதை எந்தக் செயற்கைத் தன்மையுமின்றி எளிய சிடுக்குகளில்லாத மொழியில் சொல்லிச் செல்வது பஷீரின் மேதமை. பஷீரின் படைப்புகள் மனித வாழ்வின் துயரங்களையும், சுரண்டல்களையும், இழப்புகளையும் அப்பட்டமாகச் சொல்லிச் செல்லும் அதே நேரம், எவரையும் குற்றவாளியாக்கி தண்டிப்பதோ, நியாயத் தீர்ப்பு வழங்குவதோ இல்லை. சுய பகடி, அங்கதம் கொண்ட புன்னகைக்க வைக்கும் சித்தரிப்பால் அவை மீள மீள மன்னிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். குறும்பு செய்யும் பேரனை புன்னகைத்தபடி பார்த்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் தாத்தாவின் மனநிலைதான் எப்போதும். பஷீர் அந்த இடத்தை வந்தடைந்தது அவரின் அனுபவத்தின் மலர்வால். வாழ்க்கையின் அலைக்கழிப்புகளும், பயணங்களும், அவர் செய்த நூற்றுக் கணக்கான வேலைகளும் தந்த பழுத்த அனுபவங்களின் வழி அடைந்த ஞானம் அது. இந்திய ஞான மரபும், சூஃபி ஞானமும்  அவருக்கு கையளித்த கனிவு அது. வாழ்வின் மீது பற்றும், விலக்கமும் ஒரு சேர அமையப்பெற்ற பஷீரின் படைப்புகளில் அந்த மெய்மை கனிவென வெளிப்பட்டவாறே இருக்கிறது.

ஞானத்தின் மூலம் பஷீரின் படைப்புகள் தொட்ட அந்தக் கனிவை, குழந்தை மனங்களின் களங்கமின்மையால் இயல்பாகச் சென்று அடைந்திருக்கிறது ‘ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்’. மழலையரின் உலகம் மிக நேர்த்தியாக காட்டப்பட்டிருக்கிறது. வாசிக்கும் போது புன்னகைக்கவும், வாசிப்புக்குப் பின் வாழ்வின் மீதான ஒட்டுமொத்த அறிதலையும் நிகழ்த்தியவண்ணம் இருக்கிறது. பெரியவர்கள் போல் பேதம் பார்க்காத பாப்புவின் உலகில் ராஜா ராணிக்கு இணையாக டான்ஸ் அக்காவுக்கும் இடமிருக்கிறது – “இங்க பாரு இந்த ஓட்டை வழியாதான் ராஜா ராணிலாம் டேன்ஸ் அக்கா ஆடுறத வேடிக்கை பாப்பாங்க”

வாழ்வின் சாரத்தை தன் சாய்வு நாற்காலியில் புன்னகைத்தபடி அமர்ந்து விரலிடுக்கில் பீடி புகைய பஷீர் தன் அனுபவத்தின் விலக்கம் கொண்டு பார்த்தவாறிருக்கிறார். பஷீர் கண்டடைந்த அந்தப் புள்ளியை குழந்தை அஜி தன் அறிதலுக்கான தனிமையை கொய்யா மரத்தின் மேலமர்ந்து கீழே தெரியும் உலகை விலகியிருந்து பார்ப்பதின் மூலம் அடைகிறான். அஜி சொல்லிச்செல்லும் சம்பவங்களின் வழியே வாழ்வின் மீதான ஒட்டுமொத்த தரிசனம் வாசகருக்குள்ளும் மலரத் தொடங்குகிறது.

அணுக்கமான ஒரு தோழனின் மரணம் போலவே அந்த வாழ்த்து அட்டையின் இசை நின்று போவது கவித்துவமாகக் நிகழ்கிறது. ஆனால், அது ஒரு தரிசனமாக உச்சம் கொள்வது அப்பா அஜியை மடியில் அமரவைத்து “தீராத பேட்டரினு ஒன்னு உலகத்துல உண்டா?…  இதுன்னு இல்ல வாழ்கையில எல்லாமே சின்ன விஷயம் தான்.” என்று சொல்லும் இடம். சொற்களின் எளிமையால், மொழியின் அழகால், படிமத்தின் கூர்மையால் இவ்வரிகள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த தரிசனத்தை இனிய கவிதை வரிகளென ஒளிகொள்ள வைக்கின்றன. லார்ட் டென்னிஸனின் ‘மனிதர் வருவார் மனிதர் போவார்…’ என்ற வரிகளை மனதின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழ வைக்கிறது.  கூடவே ரூமியின் பின்வரும் ஆழமான வரிகளையும்.

Death has nothing to do with going away

The sun sets and the moon sets, but they’re not gone

Death is a coming together

கவிஞர் தேவதேவனின் ‘சிறுகுருவி’ கவிதை சென்றடையும் உச்சமும் இதுதானே!

என் வீட்டுக்குள் வந்து
தனி கூட்டைக் கட்டியது ஏன்?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்து தவ்விப் பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக் கடலை நோக்கி
சுரீரெனத் தொட்டது அக்கடலை, என்னை,
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்தப் பெருமிதத்துடன்.
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன்வீட்டை.
ஒட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர்சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்

இந்தக் கதையைப் படித்தால், சொர்க்கத்தில் தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பொப்பூர் சுல்தான் மென்முறுவலுடன் தன் பேரனை ஆசீர்வதித்திருப்பார். அஜிதனுக்கு வாழ்த்துக்கள்!

பழனி ஜோதி

ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்: அஜிதன்

கதை ஒலி வடிவம்

முந்தைய கட்டுரை’வெயில்’ மூன்று கவிதைகள், சதீஷ்குமார் சீனிவாசன்
அடுத்த கட்டுரைபாலூர் கண்ணப்ப முதலியார்